​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 23 February 2022

சித்தன் அருள் - 1091 - அன்புடன் அகத்தியர் - தர்மம் உயிர் காக்கும்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே
 
எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்பாரா நிகழ்வுகளையும் இது தான் விதி! என்று எழுதியிருந்தாலும் அவை அத்தனையையும் சித்தர்கள் நினைத்தால் ஒரு நொடிப்பொழுதில் மாற்றி அமைத்துவிட முடியும்.

அதிலும் குருநாதர் அகத்தியப் பெருமான் கருணையோடு அதிவிரைவாக அதி அற்புதங்களை செய்து பல பேருடைய வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்திருக்கின்றார்.

குருநாதர் அகத்தியப் பெருமான்  மனமிறங்கி ஓடோடி வந்து கருணையோடு ஒரு உயிரை காப்பாற்றிய அந்த அற்புதத்தை இந்த தொகுப்பில் காண்போம்.

குருநாதர் அகத்தியர் பெருமான் தன்னுடைய வாக்கில் எனக்காக அதைச் செய்!!! இதைச் செய்!!! என்று எதையுமே கேட்டதில்லை.

தூய உள்ளத்தோடு அன்பு செலுத்தினால் மட்டுமே போதுமானது அப்பனே வேறு ஒன்றும் எமக்குத் தேவையில்லை, என்பார்.

நல் முறையாக புண்ணியங்களை தேடிக்கொள்ளுங்கள் புண்ணியமே உங்களை பாதுகாக்கும் அழகாக இதனால்தானப்பா புண்ணியங்கள் செய் புண்ணியங்கள் செய்  என்று கூறிக் கொண்டே இருக்கின்றோம்.

ஒருவன் முறையாக தான தர்மங்கள் செய்து வந்தாலே போதும்.  அவன் இறைவனை தேடி வர அவசியமில்லை. சித்தர்கள் யாங்கள் ஆசிர்வாதங்கள் செய்வோம். இறைவனும் அவன் மனதில் குடி கொள்வான் என்று தன்னுடைய ஒவ்வொரு வாக்கிலும் எடுத்துரைத்து கொண்டே வந்து கொண்டிருக்கின்றார்.

உண்மையான பக்தியின் மூலம்!!!! செய்யும் நற்செயல்கள் மூலம்!!!!! துவண்டு விடாத நம்பிக்கையின் மூலம்!!!! செய்யும் புண்ணிய செயல்கள் மூலம்!!!!! வாழ்வில் எத்தகைய துன்பம் வந்தாலும் அதிலிருந்து மீண்டு விட முடியும்.

எப்படியென்றால்??? அகத்திய பெருமான் மேற்கூறிய உபதேசங்களை ஒரு மனிதன் ஒழுங்காக கடைபிடித்து வந்தாலே குருநாதர் அகத்தியர் பெருமான் சித்தர்கள் அருளாசி பெற்று விடுவார்கள். அவர்களே நேரடியாக வந்து ஆட்கொண்டு விடுவார்கள்.

குருநாதர் அகத்தியர் பெருமான் எப்பொழுதும் கருணையோடு உரைக்கும் வார்த்தை

"அகத்தியனை நம்பியோரை அகத்தியன் கைவிட்டதாக சரித்திரமே!!! இல்லை."

தன்னை நாடி வந்த, தன்னை நம்பி வந்த ஒரு மைந்தனை மரணத்தில் இருந்து காப்பாற்றி உயிரை மீட்டுக் கொடுத்த கருணை செயலை பார்ப்போம்.

நாடி வாசிக்கும் அகத்திய மைந்தன், திரு ஜானகிராமன் ஐயா அவர்களிடம் தமிழ்நாட்டில் உள்ள அகத்தியர் குடில்கள் நடத்தும் ஆன்மிகப் பெரியவர்கள் குருவிடம் ஜீவநாடி வாக்குகள் உபதேசங்களை கேட்பதுண்டு. 

அப்படி ஒரு அகத்தியர் குடிலில் இருந்து மிக அவசரம் குருநாதரிடம் வாக்கு கேட்க வேண்டும் நாடி படிக்க முடியுமா என்று கேட்க!!!!

திரு ஜானகிராமன் ஐயாவும் என்ன விஷயம்?? என்று கேட்க

மலேசிய நாட்டில் தமிழ் நாட்டை பூர்விகமாகக் கொண்ட அங்கேயே பரம்பரை பரம்பரையாக வசித்து வரும் ஒரு அகத்தியர் அடியவர் இருக்கின்றார். குருநாதரின் பால் மிக மிக அன்பு கொண்டவர் வெளிநாட்டில் இருந்தாலும் இங்கே உள்ள அகத்தியர் குடில்கள் ஆலயங்கள் போன்றவற்றிற்கு மிகுந்த ஈடுபாட்டோடு தன்னாலான உதவிகளை செய்து வருபவர். அவருக்கும் வாக்குகள் குருநாதர் ஜீவநாடியில் உரைத்திருக்கிறார். அவர் தற்போது மலேசிய நாட்டில் ஈசனுக்காக ஒரு ஆலயம் எழுப்பும் அருட் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செய்து வருகின்றார்.

அவருடைய நெருங்கிய உறவினர் ஒரு சில தினங்களுக்கு முன்பு மிகப் பெரிய விபத்து ஒன்றை சந்தித்தார். தற்போது மருத்துவமனையில் சுயநினைவின்றி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு 48 மணி நேரம் கெடு வைத்துள்ளனர்.

எதுவாகினும் சரி 48 மணி நேரம் கழித்து தான் எங்களால் எதையும் சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை குரு அகத்தியரையே நம்பியிருக்கின்றோம் அவரிடம் வாக்கு கேட்டு சொல்லுங்கள் என்று கேட்க,

ஐயாவும் குருவை வணங்கி ஜீவ நாடியை வாசிக்கத் தொடங்கினார்.

"அப்பனே நல்லாசிகள் அவனுடைய விதியில் கூட இப்படித்தான் இருக்கின்றது. ஆனாலும் கவலைகள் இல்லை இதையே தான் யாங்கள் மனிதர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றோம் .

நல் முறையாக தான தருமங்களை செய்து வந்தாலே அது தக்க சமயத்தில் உதவி செய்யும்.

தர்மம் தலைகாக்கும் என்று கூட ஞானியர்கள் உரைத்திருக்கின்றனர்.

என்னையே நம்பிக்கொண்டு பல நற்காரியங்களை செய்து கொண்டிருக்கின்றாய்.

இவ் மைந்தனின் உயிரை யான் காப்பாற்றிக் தருகின்றேன்... ஆனாலும் இவ் மைந்தன் பிழைத்து வந்து இனி கடை நாள் வரை நல் முறையாக தான தர்மங்கள் செய்து கொண்டே வர வேண்டும் இதுவே யான் பதிலுக்கு கேட்பது.

என்னையும் நாடி வந்து விட்டாய் அப்பனே யான் அங்கேயே வந்து நிச்சயமாய் காப்பாற்றி தருவேன்.

எந்தனக்கு அன்பு மட்டுமே போதும் ஆனாலும் இவ்வுலகத்தில் எத்தனையோ பேர் உதவிகள் ஏதும் கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கு நல் விதமாக தான தர்மங்களைச் செய்து கொண்டு வரவேண்டும் என்று குருநாதர் உரைத்திட,

அந்த அகத்திய அடியவரும் கண்டிப்பாக எங்களால் முடிந்தவரை தான தருமங்களை நிச்சயம் செய்வோம் என்று உறுதி அளித்தார்.

உடனடியாக அந்த மைந்தனுடைய பெயரில் அவருடைய குடும்பத்தினர் முடிந்தவரை தான தர்மங்களை செய்யத் துவங்கினர்.

மருத்துவர்கள் விதித்த 48 மணிநேர கெடு நெருங்கிக் கொண்டே இருந்தது.

உடலில் எந்த ஒரு அசைவும் இல்லை உடலில் சீரற்ற மூச்சு... இனி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை பிழைப்பது கஷ்டம் என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.

சரியாக பிப்ரவரி 5 ஆம் தேதி அவருடைய காலில் சிறிது அசைவு ஏற்பட்டது பிறகு கைகளின் அசைவு ஏற்பட்டது.

ஓடோடி வந்த மருத்துவர்கள், பேச சக்தியற்று, திக்பிரமை பிடித்தவர் போல முகம் வெளிறி, இது எப்படி சாத்தியமானது??? என்றும்,

உயிர் பிழைக்க ஒரு துளி அளவு கூட வாய்ப்பில்லை ஆனால் சுய நினைவை இழந்து கோமா நிலையில் இருக்கும் இவரது உடல் ஒத்துழைக்கின்றதே என்று ஆச்சரியப்பட்டு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி அதற்கான ஆயத்தங்கள் செய்யத் துவங்கினர்.

கிட்டத்தட்ட தலையில் மட்டும் ஏழு அறுவை சிகிச்சைகள்... தொடர்ந்து கொண்டே இருந்தது.

மூச்சு சீராகவும், ரத்த அழுத்தமும் இதய துடிப்பும் சரியான முறையில் வழக்கம்போல இயங்கத் துவங்கியது.

பிப்ரவரி 17ஆம் தேதி குரு தினமான வியாழக்கிழமை மாசிமகம் அன்றைய தினத்தில் பாபநாசத்தில் தாய் லோபமுத்திரை அம்மாவின் அம்சமான தாமிரபரணி தாயின் நதிக்கரையில் கும்ப பவுர்ணமி மாசி மகம் மகா ஹோமம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் அங்கே மலேசிய நாட்டில் அந்த மைந்தனும் கண்விழித்தார். 

அந்த அகத்தியர் அடியவர் குரு சொன்ன வாக்கின்படி முடிந்தவரை தானம் தர்மங்களை செய்யத்  பாபநாசத்தில் நடந்த மாசிமகத் திருவிழா அன்னதானத்தில் பெரும் பங்காற்றினார் மலேசிய நாட்டில் இருந்து கொண்டே இங்கு நடைபெற்ற விழாவிற்கு தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

மருத்துவர்களும் இந்த மருத்துவமனையில் இப்படி ஒரு நிகழ்வினை கண்டதே இல்லை 

இப்படிப்பட்ட அதிபயங்கர விபத்து நடந்து அதிலிருந்து மீண்டு இது போல உயிர் பிழைத்த செயல் எங்கள் வாழ்நாள் அனுபவத்தில் பார்த்ததே இல்லை இவர் எப்படி உயிர் பிழைத்தார் என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றது என்று இன்றுவரை வியப்பாக கூறிக்கொண்டு வருகின்றனர்.

அவர் உயிர் பிழைத்த பின் அந்த அகத்தியர் அடியவர் மீண்டும் திரு ஜானகிராமன் அய்யாவை தொடர்பு கொண்டு  குரு அகத்தியரிடம் நன்றி கூறினார். 

குருவும் அப்பனே ஒவ்வொருவரும் இப்பூவுலகில் வரும்பொழுது அவரவர் செய்த கர்ம வினையின் பயன் ஆகவே வாழ்க்கை அமைந்துவிடுகின்றது. முடிந்தவரை பிறருடைய துன்பத்தை நீக்க நல் முறையாக உதவி செய்திட்டு, தான தர்மங்கள் செய்து புண்ணியங்களை தேடிக்கொள்ள வேண்டும் புண்ணியங்களைச் செய்து கொண்டே இருந்தால் இறைவனே தேடி வருவானப்பா.

இதனால்தான் அப்பா சொல்கின்றோம் புண்ணியங்கள் செய் புண்ணியங்கள் செய்ய என்று எவன் ஒருவன் நல் முறையாக தான தர்மங்கள் செய்து புண்ணியங்கள் சம்பாதித்து வைக்கின்றானோ!!! அவந்தனுக்கு தக்க சமயத்தில் அந்த புண்ணியங்களே அவந்தனை காப்பாற்றும். என்று ஆசீர்வதித்து வாக்குகள் உரைத்தார்.

குருநாதர் அகத்தியரின் கருணையே கருணை.

குருநாதர் அகத்திய பெருமானுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் நொடிப்பொழுதில் செய்துவிட்டு போகின்ற விஷயம்.

யுக யுகங்களாக எத்தனை கோடி மனிதர்களை அவர் பார்த்திருப்பார் எத்தனை கோடி இதுபோன்ற  அற்புதங்களை அவர் செய்திருப்பார்!!!! எண்ணிப்பார்க்கையில் பிரமிப்பாக இருக்கின்றது.!!!!!

அவருடைய திருநாமத்தை உச்சரிப்பதற்கும் அவரை வணங்குவதற்கும் சில புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும் .

இன்றைய அளவில் அவருடைய திருநாமத்தை கேட்கவும் பார்க்கவும் படிக்கவும் நமக்கெல்லாம் பாக்கியம் கிடைத்திருக்கிறது இதற்கெல்லாம் நாம் என்றோ செய்த புண்ணியங்கள் ஆக இருக்கலாம்.

ஆனால் இவை மட்டும் போதாது நமக்கு அவருடைய அருட்கருணை அவருடைய தரிசனம் அவர் நடத்திக்காட்டும் அதியற்புத விளையாடல்கள் இவற்றிற்க்கெல்லாம் நாம் மேலும் மேலும் தகுதிகள் படைத்துக்கொள்ள வேண்டும்.

முடிந்தவரை தான தர்மங்கள் செய்து கொண்டே இருப்போம் கருணை தெய்வத்தின் கருணையை நாமும் பெறுவோம்.

தர்மம் தலைகாக்கும்/உயிர் காக்கும் என்பதை குருநாதர் அகத்தியர் தன்னுடைய திருவிளையாடல்கள் மூலம் நமக்கு உணர்த்தியிருக்கிறார்.

அனைவரும் தான தர்மங்கள் செய்து புண்ணியங்களை தேடிக்கொண்டு குருநாதரின் திருவருள் பெறுவோம்!

ஓம் ஸ்ரீ  லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்......... தொடரும்! 

8 comments:

  1. Om Namahshivaya
    Om Namahshivaya
    Om Namahshivaya

    ReplyDelete
  2. அன்னை லோபமுத்ரா சமேத மகரஷி அகத்தியர் திருவடிகள் போற்றி.
    ஐயன் அகத்தியர் கருணையை எண்ணி மெய் சிலிர்க்கிறது.


    ReplyDelete
  3. அகத்தீசாய நம, நன்றி அய்யா

    ReplyDelete
  4. Sri lopamudra samathaAgasthiyar thiruvadisaranam Thayi.

    ReplyDelete
  5. அகஸ்தியர் அரவணைப்பின் படி நானும் சிறிது தர்மம் செய்ய ஆரம்பித்தேன் நேற்று வியாழன் கிழமை மழை பெய்து என்னை தூய்மை செய்ததது எதற்கு மழை என்று நினைத்தேன் மதியம் ஒருவர் வந்து அகஸ்தியர் பெயரில் பிள்ளையார் கோவிலில் அன்ன தானம் செய்ய போகிறோம் உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள் என்றார். நானும் செய்தேன் உடனடியாக அவர் மகிழ்ச்சியுடன் அகஸ்தியர் முருகன் மற்றும் சித்தர்கள் இருக்கும் 2 படங்களை கொடுத்தார். எனக்கு மிகவும் மகிழ்ச்சி. காரணம் இல்லாமல் காரியம் இல்லை. அகஸ்தியர்க்கு நான் நினைப்பது தெரியுமா என்று எண்ணி கொண்டு இருந்தேன். அவர் நானும் உன்னை நினைத்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்று என் இல்லம் தேடி வந்து விட்டார். மகிழ்ச்சி அடைகிறேன்

    ReplyDelete
  6. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  7. சுகமென்பது ஆத்மாவின் சொரூபமே; சுகமும் ஆத்மசொரூபமும் வேறன்று. ஆத்மசுகம் ஒன்றே யுள்ளது; அதுவே ஸத்யம். பிரபஞ்சப்பொருள் ஒன்றிலாவது சுகமென்பது கிடையாது. அவைகளிலிருந்து சுகம் கிடைப்பதாக நாம் நமது அவிவேகத்தால் நினைக்கின்றோம். மனம் வெளியில் வரும்போது துக்கத்தை யனுபவிக்கிறது. உண்மையில் நமது எண்ணங்கள் பூர்த்தியாகும்போதெல்லாம் அது தன்னுடைய யதாஸ்தானத்திற்குத் திரும்பி ஆத்மசுகத்தையே யனுபவிக்கிறது. அப்படியே தூக்கம், சமாதி, மூர்ச்சை காலங்களிலும், இச்சித்த பொருள் கிடைக்கிறபோதும், வெறுத்த பொருளுக்கு கேடுண்டாகும் போதும், மனம் அந்தர்முகமாகி ஆத்மசுகத்தையே யனுபவிக்கிறது. இப்படி மனம் ஆத்மாவை விட்டு வெளியே போவதும், உள்ளே திரும்புவதுமாக ஓய்வின்றி யலைகிறது. மரத்தடியில் நிழல் சுகமா யிருக்கிறது. வெளியில் சூரியவெப்பம் கொடுமையா யிருக்கிறது. வெளியி லலையு மொருவன் நிழலிற் சென்று குளிர்ச்சி யடைகிறான். சிறிது நேரத்திற்குப் பின் வெளிக்கிளம்பி வெப்பத்தின் கொடுமைக் காற்றாது, மறுபடியும் மரத்தடிக்கு வருகின்றான். இவ்வாறு நிழலினின்று வெயிலிற் போவதும், வெயிலினின்று நிழலிற் செல்வதுமாயிருக்கிறான். இப்படிச் செய்கிறவன் அவிவேகி. ஆனால் விவேகியோ நிழலைவிட்டு நீங்கான். அப்படியே ஞானியின் மனமும் பிரம்மத்தை விட்டு நீங்குவ தில்லை. ஆனால் அஞ்ஞானியின் மனமோ பிரபஞ்சத்தி லுழன்று துக்கப்படுவதும், சிறிது நேரம் பிரம்மத்திற்குத் திரும்பி சுக மடைவதுமா யிருக்கிறது. ஜக மென்பது நினைவே. ஜகம் மறையும்போது அதாவது நினைவற்ற போது மனம் ஆனந்தத்தை யனுபவிக்கின்றது; ஜகம் தோன்றும் போது அது துக்கத்தை யனுபவிக்கின்றது.

    ReplyDelete
  8. ஸ்டி பெரும்பத்தூர்ஆதி கேசவ பெருமாள் கோயில் களை பற்றி கூறவும் ஐயா தங்கள் அருள் ஹால் இக்கோயில் மகிமையை அறிய ஆவல் குருநாத

    ReplyDelete