​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 21 February 2022

சித்தன் அருள் - 1090 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


சூதமாமுனிவர், நைமிசாரணியவாசிகளை நோக்கிக் கூறலானார்.

"முனிவர்களே! ஸ்ரீவாசுதேவன், கருடனிடத்தில் நரகலோக எண்ணிக்கைகளையும் அந்த லோகத்தில், பாவஞ் செய்தர்வர்கள் அனுபவிக்கின்ற அவஸ்தைகளையும் சொல்லிவிட்டு, பூவுலகில் மரித்தவனைக் குறித்து தினந்தோறும் செய்யப்படும் ஈமச் சடங்குகளாலும்  மாசிக சிரார்த்தங்களாலும், மரித்தவனின்  ஜீவன் பிண்டத்தாலாகிய சரீரத்தோடு, யமபுரி வரை சென்று, அந்த இடத்தில் அந்தப் பிண்ட சரீரத்தைவிடுத்து,  கட்டை விரலளவுடைய ஆகிருதியுடன் ஒரு வன்னி மரத்திலிருப்பான் என்றும் பின்னர் கர்மசரீரம் பெற்ற பிறகே யமபுரிக்கு யமகிங்கரர்களால் அழைத்துச் செல்லப்படுவான் " என்றும் கூறிவிட்டு திருமால் மேலும் தொடர்ந்து கூறலானார்:

"பறவைகளுக்கு அரசே! அங்குஷ்ட பரிமாணமுள்ள ஜீவன், கர்ம சரீரம் பெற்று, வன்னி மரத்தை விட்டு, யமகிங்கரர்களுடன் இருபது கதா தூர வழி விஸ்தாரமுள்ள சித்திரகுப்தனது பட்டினத்தின் வழியாக யமபுரிக்குச் செல்வான்.  அந்த யம பட்டணம் புண்ணியஞ் செய்தோரின் பார்வைக்கு மிகவும் ரம்மியமாகக் காணப்படும்.  எனவே,இறந்தவனைக் குறித்துப் பூவுலத்தில் இரும்பாலாகிய ஊன்று கோல், உப்பு, பருத்தி, எள்ளோடு பாத்திரம் ஆகிய பொருள்களைத் தானம் செய்யவேண்டும். இத்தகைய தானங்களால் யமபுரியிலுள்ள யமபரிசாரகர்கள் மிகவும் மகிழ்ந்து ஜீவன் யம பட்டினத்தை நெருங்கியதுமே,  கால தாமதப்படுத்தாமல் அவன் வந்திருப்பதை யமதர்ம ராஜனுக்குத் தெரிவிப்பார்கள்.  யமனுடைய அரண்மனையில் தர்மத்துவஜன் என்ற ஒருவன் சதாசர்வ காலமும் யமனருகிலேயே இருந்து கொண்டிருப்பான்.  பூமியில், இறந்தவனைக் குறித்து கோதுமை, கடலை, மொச்சை, எள் , கொள்ளு, பயறு, துவரை ஆகிய இந்த ஏழு வகையான தானியங்களைப் பாத்திரங்களில் வைத்துத் தானஞ் செய்தால், அந்தத் தர்மத்துவஜன், திருப்தியடைந்து, யமனிடத்தில் "இந்த ஜீவன் நல்லவன்; புண்ணியஞ் செய்த புனிதன்!" என்று விண்ணப்பஞ் செய்வான்.

கருடா! பாபஞ் செய்த ஜீவனுக்கோ அந்த யமபுரியே பயங்கரமாகத் தோன்றும், அவனுக்கு தர்மராஜனாகிய யமனும் அவனது தூதர்களும் யாவரும் அஞ்சத்தக்கப் பயங்கர ரூபத்தோடு தோற்றமளிப்பார்கள். அந்தப்   பாவஞ் செய்தவனும் அவர்களைக் கண்டு  பயந்து, பயங்கரமாக ஓலமிடுவான்.  புண்ணியஞ் செய்த ஜீவனுக்கு யமதர்ம ராஜன் நல்ல ரூபத்தோடு தோற்றமளிப்பான்.  புண்னணியஞ் செய்த ஜீவன் யமனைக் கண்டு மகிழ்ந்து, இறைவனின் தெய்வீக ஆட்சியை வியப்பான்.   யமதர்ம ராஜன் ஒருவனேதான் என்றாலும் பாபிக்குப் பயங்கர ரூபத்தோடும் புண்ணியஞ் செய்தவனுக்கு நல்ல ரூபத்தோடும் தோன்றுவான்.  புண்ணியஞ் செய்த ஜீவன், யமனருகே தோன்றுவானாயின், "இந்த ஜீவன் புண்ணியஞ் செய்தவனாகையால் சூரிய மண்டல மார்கமாக பிரம்ம லோகம் சேரத் தக்கவன்" என்று கருதும்  யமதர்மராஜன் தான் வீற்றிருக்கும் சிம்மாசனத்திலிருந்து சட்டென்று எழுந்து நின்று மரியாதை செலுத்துவான். யமலோகத்திலுள்ள கிங்கரர்கள் அனைவரும் பாசம்,உலக்கை முதலிய ஆயுதங்களை ஏந்தி வரிசை வரிசையாக அணிவகுத்து நிற்பார்கள்.  மரித்த ஜீவனுக்காக மாசிக சோதக கும்ப முதலியனவற்றையும் பத்தானத்தையும் செய்யவில்லை யென்றால் அத்தகைய ஜீவனை, யமகிங்கரர்கள் பாசத்தால் கட்டிப் பிணைத்து,  உலக்கையால் ஓச்சி , ஆடு மாடுகளை போல இழுத்துக் கொண்டு, காலன் எதிரே நிறுத்துவார்கள். அங்கு பூர்வ ஜென்மத்தில் அந்த ஜீவன் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப வேறு ஜன்மம் அடைவான்.  அதிகப் புண்ணியஞ் செய்திருந்தால், அந்த ஜீவன், யம தூதர்களால் துன்புறுத்தப்படாமல் யமதர்மன் முன்பு சென்று, தேவனாக மாறித் தேவருலகம் செல்வான்.  அந்த ஜீவன் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப வேறு ஜன்மம் அடைவான். அந்த ஜீவன் பாபஞ் செய்தவனாயின், அவன் யமதர்மனைக் காண்பதற்கும் அஞ்சுவான்.  உடல் நடுங்கப் பயப்படுவான். கால தூதர்கள் அவனைக் கட்டிப் பிணைத்து, யமதர்மன் முன்பு கொண்டு சென்றதும், யமதர்மராஜனின் கட்டளையை ஏற்று, நரகத்தில் விழுந்து பிறகு, கிருமி, புழு, முதலியவற்றின் ஜன்மத்தையடைவான்.  அந்த ஜீவனுக்குப் புண்ணியம் மிதமாக இருக்குமானால் முன்பு போல, மனிடப் பிறவியைப் பெறுவான். தான தருமங்களைச் செய்தவன் யாராயினும் அவன்  எக்காரணத்திலேனும் எந்த ஜன்மத்தை அடைந்தாலும், அவன் செய்த தானதர்ம பயன்களை அந்த ஜென்மத்தில் அடைவான்.   மனிதன் வாழுங்காலத்தில், ' நான் ஐஸ்வரியத்தில் தனவந்தன், அறிவிலே பேரறிஞன்,  வலுவிலே மிகவும் பலசாலி. கலைத்துறையில் பெருங் கலைஞன். விஞ்ஞானி.  மதத் தலைவன்.  ஏகபோகச் சக்கரவர்த்தி" என்றெல்லாம் புகழப் பெறுவான்.  அவன் இறந்தவுடனேயே அவன் உடலில் அறைஞ்சாண்  கயிறு கூட அறுத்தெறியப்பட்டு விடும். அவனது ஜீவன் நீங்கியவுடனே அவன் உடலைக் குழியில் புதைப்பான். அது மண்ணோடு மண்ணாகும்.  கண்டம் கண்டமாகத் துண்டு செய்து எறிந்தால், நரி முதலியவை தின்று பவ்விருபமாகும். தகனஞ் செய்யின் சாம்பலாகும். மனித உடலின் தன்மை அத்தகையது.  ஆயினும் ஜீவனுக்கு மானிடப் பிறவி கிடப்பது அரிது. மானிட தேகம் பெறுவது அரிது.  அப்படியே மானிட தேகம் கிடைத்தாலும் கூன், குருடு, செவிடு, மலடு, நீங்கிப் பிறத்தல் அரிது.  அப்படியே பிறந்தாலும் பிரம குலத்தில் ஜனிப்பது அரிது. அதனினும் அரிது பிரமகுலத்தில் ஜனித்து ஒழுக்கத்தால் பெற வேண்டிய முக்தியைப் பெறவில்லையென்றால் தவம் முதலியவற்றைச் செய்து வருத்தித் தன் கரத்தில் அடைந்து அமிர்தம் நிறைந்த பொற்கவசத்தைச் சிந்தி பூமியில் கவிழ்த்தவனுக்கு ஒப்பாவான்!"  என்று திருமால் ஓதியருளினார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........... தொடரும்!

2 comments:

  1. Om Namahshivaya
    Om Namahshivaya
    Om Namahshivaya

    ReplyDelete
  2. ஓம் ஈஸ்வராய நமக 🙏
    ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏
    ஓம் முருகன் துணை 🙏

    ReplyDelete