சூதமாமுனிவர், சௌனகாதி முனிவர்களை நோக்கி கூறலானார்.
"கேளிர் முனிவர்களே! வேத வடிவினனான பெரிய திருவடி, பரம காருண்யரான திருமாலின் திருவடிகளைத் தொழுது, "பெருமாளே! தேவரீர் முன்பு கூறியருளிய அச்சிரவணர்கள் பன்னிருவரும் யாவர்? அவர்கள் யாருடைய புதல்வர்கள்? வைவஸ்வத நகரத்தில் அவர்கள் இருப்பதற்குக் காரணம் என்ன? மனிதர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அச்சிரவணர்கள் எவ்வாறு அறிகிறார்கள்? இவற்றையெல்லாம் அடியேனுக்கு நவின்றருள வேண்டுகிறேன்" என்று வேண்டினான். அதற்கு திருமால், மகிழ்ந்து கூறலானார்.
"புள்ளரசே! கேட்பாயாக! ஊழிக்காலத்தில் தன்னந் தனியனான ஸ்ரீ மகாவிஷ்ணுவானவர், அயனாராதி தேவரோடு யாவரும் யாவும் தன்னுள்ளே ஒடுக்கிக் கொண்டு நெடும்புனலில் பள்ளி கொண்டிருந்தார். அப்போது அந்த மகா விஷ்ணுவின் உந்திக்கமலத்தில் நான்முகனாகிய பிரம்மா தோன்றி, ஸ்ரீ ஹரியைக்குறித்து, நெடுங்காலம் மாதவம் புரிந்து, வேதங்களையும் படைப்புத் தொழிலையும் அறிந்து யாவரையும் யாவற்றையும் படைத்தருளினார். அவ்வாறு படைத்தவுடனேயே உருத்திரன் முதலிய தேவர்கள் எல்லோரும் அவரவர் தொழில்களைச் செய்யத் துவங்கினார்கள். எல்லோரையும்விட ஆற்றல் மிக்க யமதர்மராஜனும் ஜைமினி என்ற நகரத்தை அடைந்து, சிம்மாசனத்தில் வீற்றிருந்து, ஜீவர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிய வேண்டும் என்று ஆராயத் தொடங்கினான். அவ்வாறு அறியத் தொடங்கிய அவனுக்கு சேதனர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிந்து கொள்ள முடியவில்லை. பலகாலம் முயன்றும் அவனால் அந்தச் செயலில் வெற்றியடைய முடியவில்லை. எனவே, யமதர்மராஜன்,மனம் வருந்தி, நான்முகனைக் கண்டுவணங்கி, " சதுர்முகனே ! மஹாதேவனே ! அடியேன் ஜீவர்களின் பாப புண்ணியங்களையுணர்ந்து அவர்களைத் தண்டிக்கவும் ரக்ஷிக்கவும் வேண்டும் என்று ஜைமினி நகரத்தில் இருந்து நீண்ட நாட்கள் ஆராய்ந்தேன் . எவ்வளவு தான் முயன்றாலும் பூவுலகில் ஜீவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. அவற்றை இன்னதின்னதென்று அறிந்தால் அல்லவோ பாவிகளைச் சிக்ஷிக்கவும் புண்ணியசாலிகளை இரட்க்ஷிக்கவும் முடியும்? ஆகையால் அவற்றை உணர்ந்து கொள்ளவும் அறிந்து தக்கவை செய்யவும் எனக்கு அருள் புரிய வேண்டும்" என்று பிரார்த்தித்தான்.
"அதைக் கேட்டதும் நான்முகன் ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்தெறிந்து நீண்ட கண்களையுடையவர்களும் மிக்க மேனியழகுயுடையவர்களும், மனக்கண்ணால் யாவற்றையும் அறிந்து கொள்ளக் கூடியவர்களான பன்னிரண்டு புதல்வர்களைப் படைத்து, யமதர்மனைப் பார்த்து "தர்மனே!உலகத்தில் பிறந்த ஜீவர்கள் அனைவரும் நினைப்பதையும் பேசுவதையும் செயல் புரிவதையும் அவர்களுடனேயே இருப்பவர்களைப் போல, இப்பன்னிருவரும் உணர்ந்தறிய வல்லவர்கள். இவர்கள் ஜீவர்கள் செய்வதையெல்லாம் அறிந்து உனக்கு அறிவிப்பார்கள். இவர்களைக் கொண்டு ஜீவர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிந்து, சிஷையும் ரக்ஷையும் செய்வாயாக!". என்று சொல்லி, அப்பன்னிருவரையும் யமதர்மனுடன் செல்லும்படிப் பணித்தார். காலனும் பிரமனை வணங்கி விடைபெற்று அந்தப் பன்னிரு சிரவணர்களோடு தென்புலத்தையடைந்து, சேதனர்களுடைய புண்ணியங்களையும் பாவங்களையும் அறிந்து அவற்றுக்குத் தக்கவாறு தண்டித்தும் காத்தும் வருவானாயினன்.
"பக்ஷி ராஜனே! பூவுலகில் வாழ்வின் இறுதிக் காலம் முடிந்தவுடனே, அங்குஷ்டப் பரிமாணமேயுள்ள வாயு வடிவினான ஜீவனை யமகிங்கரர்கள் , யமபுரிக்கு இழுத்துச் செல்வார்கள். அறம் பொருள்,இன்பம்,வீடு என்ற நான்கு வகை புருஷார்த்தங்களில் தர்மஞ்செய்த உத்தமர்கள் யாவரும் தர்ம மார்க்கமாகவே வைவஸ்வத நகரம் என்னும் யமபுரியிக்குச் செல்வார்கள். பொன், பொருள் முதலியவற்றைப் பெரியோர்க்கும் சான்றோர்க்கும் கொடுத்தவர்கள் விமானங்களில் ஏறிச்செல்வார்கள். பெரியோர்கள் விரும்பியவற்றை விரும்பியவாறே கொடுத்தவர்கள் குதிரை மீதேறிச் செல்வார்கள். மோட்சத்தில் இச்சை கொண்டு, வேதசாஸ்திர புராணங்களை அறிந்து, தெய்வபக்தி செய்பவர்கள் தேவவிமானம் ஏறி தேவருலகை அடைவார்கள். இந்த நான்கு வகையிலும் சம்பந்தப்படாத பாவிகள் கால்களால் நடந்தே செல்வார்கள். அவர்கள் செல்லும் வழியில் காடுகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். அந்த வழியிலுள்ள மரங்கள், செடிகள், கொடிகள் முதலியவற்றின் இலைகள் கூரிய உடைவாள் போல அமைந்திருக்கும். மணல்கள் எல்லாம் வறுத்துக் கொட்டிய பறல்களால் நிறைந்திருக்கும். அந்த மார்கத்தில் நடந்து செல்லும் போது மிகவும் வருத்தம் உண்டாகும். பூமியில் வாழுங்காலத்தில், ஜீவன் சிரவணரைப் பூஜித்தவனாக இருந்தால், அச்சிரவணர்கள் அந்த ஜீவனின் பாவங்களைப் பொருட்படுத்தாமல் புண்ணியங்களை மட்டுமே யமதர்ம தேவனிடம் சொல்வார்கள். சிரவணரைப் பூஜிப்பவர்களுக்குப் பாவம் செய்ய அவர்கள் மனமே இடம் தராது. பன்னிரண்டு கலசங்களில் தண்ணீர் நிறைத்து, அன்னம் செய்து, அக்கலசங்களை அந்தந்தச் சிரவணரைக் குறித்து அந்தணருக்குத் தானம் செய்ய வேண்டும். அத்தகைய ஜீவனுக்கு அச்சிரவணர்கள் யமலோகத்தில் சகலவிதமான நன்மைகளையும் செய்வார்கள்.
"கருடா! பன்னிரண்டு சிரவணர்களின் தோற்றம் முதலியவற்றைச் சொல்லும் இந்தப் புண்ணிய சரிதத்தை பக்தியோடு கேட்டவர்கள், பாபம் நீங்கிப் புனிதராவார்கள்" என்று கூறியருளினார்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்............ தொடரும்!
Om Namashivaya
ReplyDeleteOm Namashivaya
Om Namashivaya
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDelete