"பறவைகளின் அரசே! ஒரு பொருளுமே இல்லாத வறிஞனாகப் பூவுலகில் வாழ்ந்தாலும் கூட தன்னை யாசித்தவர்களுக்கு இல்லை என்று பதில் சொல்லியனுப்பாமல், தன்னால் இயன்றதையோ, தன்னால் செய்யக்கூடிய சிறு உதவியையாவது, தன்னை யாசித்தவனுக்கு கொடுத்தேயாக வேண்டும். அப்படிக் கொடுக்க மறுத்ததவன், யாசகம் கேட்டவனைக் குறை கூறிய ஜீவன், உலகில் மரித்து, இந்த விசித்திரம் என்னும் பட்டினத்திற்கு யமதூதர்களால் இழுத்து வரப்பட்ட சமயத்தில், பூமியில் அவன் புத்திரன் அவன் பொருட்டு கொடுக்கும் மாசிக பிண்டம் அவனுக்குச் சேராமல் பைசாசங்களின் கரங்களிலே தான் சேரும்; பிறகு அந்த ஜீவன் பசியோடுயிருந்து பேய்கள் பறித்த போது தன்கையிலிருந்து சிதறிய பிண்டத்தின் மிச்சத்தை உண்டு, "ஐயகோ ! நான் பூமியில் உண்டு கொழுத்து, உணவுப் பொருள்களைப் பதுக்கி வைத்துக் கொண்டு, என்னிடம் யாசகம் கேட்டவர்களுக்கு, யாசகம் கொடுக்காமல் மறுத்த பாவத்தின் பயனோ இது? கிடைத்தற்கரிய வழியையெல்லாம் கஷ்டமாகக் கடந்து வந்தேனே! அந்த வழியெல்லாம் நடந்து வந்தேனே! வயிறு பசிக்க, நாக்கு வறள இப்போது நான் தவிக்கும் தவிப்பைக் கேட்பவர்கள் இந்த எமகிங்கரர்களையும் பிசாசுகளையும் தவிர, ஓருவரும் இல்லையே! "வயிறு பசிக்கிறது ! ஏதாவது கொடுங்கள் !" என்று என்னைப் போன்ற ஒரு மனிதன் தன் சப்த நாடிகளையும் ஒடுக்கிக் கொண்டு பூமியில் பொருள் மிகுந்தவனாக வாழ்ந்த என்னை நவ்வியபோது, அவனுக்கு அரைவயிற்றுப் பசிதீரவாவது அன்னம் கொடுத்தேனா? சாக்காடு என்று ஒன்று நிச்சயமாக இருக்கிறது என்று புராணங்களில் படித்ததை நம்பினேனா! செத்த பிறகு என்ன கதிவந்தால் என்ன, இருக்கும் போது நமக்கு ஏன் கவலை !" என்று இறுமாந்திருந்தேனே! இப்போது இங்கு நான் படும் தொல்லையை யாரிடம் சொல்வேன் என்னவென்று சொல்வேன்!" என்று துக்கப்படுவான்.
அப்போது அவனருகே இருக்கும் யமகிங்கரர்கள் அவனைப் பார்த்து "முழு மூடனே! பூமியில் பிறக்கும் வாய்ப்பைப் பெற்று மனிதனாகப் பிறந்தவனது மானிட ஜன்மம் அரிது; அது ஜீவனுக்கு வேண்டியவற்றையெல்லாம் அளிக்கவல்ல கற்பகவிருட்சம் என்று சொல்லத்தகும். மானிடப் பிறவியைப் பெற்ற ஜீவனுக்கு அரியது எது? அவன், இம்மைக்கும் மறுமைக்கும், தருமங்களையும், தானங்களையும் , பூஜைகளையும் ஏராளமாக, தான் வாழ்கிற காலமெல்லாம் செய்து, புண்ணியங்களைக் கொள்ளை கொள்ளையாகச் சேர்த்திருக்கலாமே! அதைவிட்டு மறுமைக்குப் பயன்தராத பொருளைச் சேர்ப்பதிலேயே காலங் கழித்த மானிடனை என்னவென்று சொல்வது? மானிடப் பிறவியில் மனிதனாகப் பூமியில் வாழ்கின்ற காலத்திலேயே செய்கிற நல்வினைத் தீவினைப் பயன்களைத்தான், மனிதன் இறந்த பிறகு பிற உலகங்களில் அனுபவிக்கலாமேயல்லாமல், மனித உடலை இழந்து ஆவியுடனே மற்ற உலகங்களில் எதையுமே செய்ய இயலாது! உத்தம உலகத்தையடைந்து இன்பமடைதலும் அதமமான உலகத்தை அடைந்து துன்பத்தை அடைவதும், மண்ணுலகத்தில் வாஹனாதிகளில் ஆடம்பரமாக, அகம்பாவமாக ஆனந்தமாகப் பெரியோரை மதிக்காமல் செல்வதும், அந்த வாகனத்தை ஓட்டுவதும், சீவிகை ஊர்தலும், சீவிகையைச் சுமத்தலும், உலுத்தன் உழைப்பாளியை உதைக்கச் செய்வதும், உழைப்பாளி, உலுத்தனிடம் உழைத்து உழைத்து உருகுலைவதும், அந்தப் பூவுலகில் மனிதர்கள் செய்யும் புண்ணிய பாவங்களின் பயனேயாகும் என்பதை அறிவாயாக! அவற்றை இந்நிலையில் உள்ள நீ அறிந்து இனி என்ன செய்குவை? என்பார்கள்.
"கருடனே! உதக கும்பதானம் என்ற ஒருவகைத் தானமானது செய்யப்பட்டதாயின் ஜீவன், அந்த உதக கும்பத்திலுள்ள நீரைப் பருகியாவது சிறிதளவாவது தாகவிடாய் தீர்ந்து ஏழாம் மாதத்தில் அவ்விடத்தைவிட்டு மீண்டும் நடந்து செல்வான். பறவைகளுக்கு அரசே! ஜீவன் யமபுரிக்குச் செல்லும் வழியில், இதுவரை பாதி தொலைவைக் கடந்து விட்டவனாகையால், அம்மாதத்தில் அவனுக்குரியவர் பூவுலகில் அந்தணர்க்கு அன்னதானம் செய்யவேண்டும். பிறகு அந்த ஜீவன் பக்குவப்பதம் என்ற பட்டினத்தைச் சார்ந்து, எட்டாவது மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து நடந்து துக்கதம் என்ற ஊரையடைந்து, மஹா துக்கமடைந்து, ஒன்பதாவது மாசிக பிண்டத்தை ஆங்கு ஏற்று, அங்கிருந்து நீங்கி, நாதாக்கிராந்தம் என்ற பட்டினத்தை அடைந்து அங்கு தங்கி பத்தாவது மாசிக பிண்டத்தை உண்பான். விருஷோற்சனம் செய்யாமையால், அநேகம் ஜீவர்கள் பிரேத ஜன்மத்தோடு அப்பட்டினத்தில் கூட்டங் கூட்டமாகக் கூடி, "ஓ ஓ" வென்று ஓயாமல் ஓலமிட்டுக் கதறிக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு கதறும் அச்சீவர்களைப் பார்த்து அங்கு வந்த ஜீவனும் கத்திக் கதறிவிட்டு, அப்பால் நடந்து, அதப்தம் என்ற ஊரையடைந்து, பதினொன்றாம் மாசிக பிண்டத்தை அவ்விடத்தில் தங்கியுண்டு, அங்கிருந்து சீதாப்ரம் என்ற நகரத்தை அடைந்து, அங்கு சீதத்தால் வருந்தி, பன்னிரெண்டாவது மாதத்து வருஷாப்தியப் பிண்டத்தை உண்டு, அங்கிருந்து புறப்பட்டு நான்கு திசைகளையும் யமகிங்கரர்களையும் அந்த ஜீவன் பரிதாபமாகப் பார்த்து ஈனக்குரலில் "யமகிங்கரர்களே! என்னோடு எந்நாளும் வாழ்வதாக உறுதியளித்த என் மனைவியைக் காணோமே! என்னைத் தவிர யாரையுமே ஏறிட்டும் பார்க்கமாட்டேன் என்ற காதற்கிழத்தியையும் காணோமே ! உயிர் காப்பான் தோழன் என்று உலகம் புகழ்ந்து பாராட்டும் என் நண்பனைக் காணோமே! என் மனைவி மக்கள் ஒருவரையும் காணோமே! ஏழையேன் என் செய்வேன்?" என்பான்.
அப்போது யமதூதர்கள், அந்த ஜீவனை நோக்கி, "முழுமூடனே! உன் மனைவி மக்கள் இங்குமா இருப்பார்கள்? அவர்கள் மேல் உனக்குள்ள ஆசை இன்னமும் உனக்கு ஒழியவில்லையோ ? நீ செய்த புண்ணிய பாவங்களின் பயன்களைத்தான் இங்கு நீ காண்பாய்!" என்று அறைவார்கள். ஜீவன் எமகிங்கரர்கள் கூறுவதைக் கேட்டு "ஐயோ! முன்னமே நீங்கள் சொன்னதை மறந்தல்லவோ ஏதேதோ பிதற்றுகிறேன்" என்று தனக்குள் தானே துன்பமனுவித்துக் கொண்டு, மனம் புழுங்கி நடந்து வைவஸ்வத பட்டினம் என்ற நகரத்தைச் சேர்வதற்கு முன்பே, ஊனாப்திக பிண்டத்தை அருந்தி, அந்தப் பட்டினத்தை அடைவான். அந்தப் பட்டினமே யமபுரியாகும். அந்த யமபுரி நூற்றி நாற்பத்து நான்கு காதவழி அகலமுள்ளதாய், கந்தர்வ, அப்சரசுகளோடு கூடியதாய், எண்பத்து நான்காயிரம் பிராணிகள் வாழுமிடமாக இருக்கும். ஜீவர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிந்து, யமதர்மனுக்குத் தெரிவிக்கும் பன்னிரண்டு சிரவணர்கள் என்பவர்கள் அந்த நகரில் இருப்பார்கள். ஜீவர்கள் அனைவரும் அந்தப் பன்னிரு சிரவணர்களையும் ஆராதனை செய்ய வேண்டும். அச்சிரவணர்களை ஆராதித்தால், அந்த ஜீவன் யமபுரியை வந்து சேர்ந்தபோது, அவன் செய்த பாபங்களையெல்லாம் எடுத்து யமனுக்குச் சொல்லாமல், அவன் செய்த புண்ணியங்களை சிரவணர்கள் யமதர்மராஜனுக்கு எடுத்துரைப்பார்கள். ஆகையால், பன்னிரு சிரவணர்களை ஆராதித்து வருவது மிகவும் நன்மையை மறுமைக்குத் தரவல்லது" என்று திருமால் கூறியருளினார்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்............ தொடரும்!
No comments:
Post a Comment