​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 17 February 2022

சித்தன் அருள் - 1088 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


சுதமாமுனிவர், சௌனகாதி முனிவர்களுக்குப் பன்னிரண்டு சிரவணரின் சரிதத்தைச் சொல்லிய பிறகு மேலும் தொடர்ந்து சொன்னார்:

"முனிவர்களே! திருவிக்கிரமரான திருமால், கருடனை நோக்கி கூறலானார்:

"கருடா ! ஜீவர்கள் பூவுலகில் வாழ்ந்த காலத்தில் செய்த பாப புண்ணியங்களையெல்லாம் சித்திர குப்தன் என்ற யமலோகக் கணக்கன், சிரவணர்களின் மூலமாக அறிந்து யமதர்ம ராஜனுக்கு அறிவித்து, அவனது உத்திரவுப்படியே அவரவரது பாவங்களின் தன்மைக்கேற்ற தண்டனைகளை வாசித்துச் சொல்ல யமதர்மன் தன் கிங்கரர்களைக் கொண்டு அத்தண்டனைகளை அவ்வப்போதே நிறைவேற்றச் செய்துவிடுவான்.  ஜீவனானவன் வாக்கால் செய்த பாப புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்த பாப புண்ணியங்களை உடலாலும், மனத்தால் செய்த பாப புண்ணியங்களை மனத்தாலும், அனுபவிக்க வேண்டியிருக்கும். பெரியோர்களைப் போற்றுதல், வேத சாஸ்திர புராணங்களைப் பக்தி சிரத்தையாகப் படித்தல் முதலிய புண்ணியச் செயல்களைச் செய்தவன், எங்கும் தன் வாக்குத் திறமையால் வெற்றியை அடைவான். பெரியோரை ஏசிப்பேசுதல், இகழ்ந்து பேசுதல், நீச மொழிகளை உச்சரித்தல் முதலிய பாவங்களை செய்தவர்களின் வாயிலிருந்து புழுக்களாகச் சொரியும்!  புண்ணிய நதிகளில் நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள், ஆசாரியர்கள், தெய்வீக விஷயங்களை உலகிற்கு உபதேசிப்பவர்கள், ஞானிகள் இவர்களுக்குத் தண்டம் சமர்ப்பித்தவர்களும் இதுபோன்ற பலவகைப் புண்ணியச் செயல்களைச் செய்தவர்களும் நல்ல இணக்கமுடைய சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். பரஸ்திரீகமனஞ் செய்தவர்கள், பிறவுயிர்களை வாட்டி வதைத்தவர்கள் முதலியவற்றைச் செய்தவர்கள் கொடூரமான சரீரத்தையடைவார்கள்.

ஆதிபகவனுடைய திவ்ய மங்கள விக்கிரகத்தைத் தினசரி பூஜித்தவர்களும் தியானித்தவர்களும்,  எல்லோரும் நல்லவற்றையே செய்தவர்களும், ஊருக்கு உழைத்தவர்களும், உலக நன்மையையே எப்போதும் கருதியவர்களும் எப்போதும் மகிழ்ச்சியுடனிருக்கும் மனத்தைப் பெற்றிருப்பார்கள். எப்போதும் பிறருக்குத் தீமை செய்வதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர்களும், கெடுதலான சிந்தனை செய்பவர்களும் எப்போதும் வருந்தும் மனமுடையவனாவார்கள்.  

"கருடா!  யமபுரியின் தன்மையையும் அந்த யமபுரிக்குச் செல்லும் பாதையிலுள்ள இன்ப துன்பங்களையும் உனக்குச் சொன்னேன். இறந்தவனைக் குறித்து அன்னதானம், கோதானம், திலதானம் முதலியவற்றைச் செய்தல் வேண்டும். அன்னதானம் செய்தால் இறந்து செல்லும் ஜீவன் மார்கத்தில் வருந்தாமற் செல்வான்.  தீபத்தானம் செய்யப்பட்டால், ஜீவன் இருள் மார்கத்தில் வழி தெரிந்து இனிதாகச் செல்வான்.  கார்த்திகை மாதத்தில் சுக்கில பட்சத்தில்சதுர்த்தசியில் தீபத்தானம் செய்தாலும், விருக்ஷோற்சர்க்கம் செய்தாலும் ஜீவனானவன் நல்லுலகில் நற்கதியடைவான்.  பதினோரு நாட்கள் செய்யும் பிண்டங்களால் சிரசு, ரோமம் முதலியவை நன்றாக அமையும். தண்ணீர்க் குடத்தைத் தானம் செய்தால் யமகிங்கரர்கள் திருப்தியடைந்து, அந்த ஜீவனை வருந்தச் செய்ய மாட்டார்கள்.  சையாதானம் செய்யின் ஜீவன் விமானத்தில் ஏறி நல்லுலகை அடைவான்.  இறந்தவனின் ஜீவன், பதினொன்றாம் நாள் முடியும் வரையில், அவன் மனைக்கு முன்னால் பசி தாகத்தோடு நிற்பானாகையால், அவனைக் குறித்துச் செய்யும் தானங்களைப் பதினோராவது நாளிலாவது பன்னிரண்டாம் நாளிலாவது செய்யவேண்டும்" என்று கூறியருளினார்.

கருடன், பக்தவத்சலப் பெருமானை நோக்கி, "ஆபத்பாந்தவா! அநாதரக்ஷகா! முன்பு ஒரு சமயம், பத தானம் செய்யவேண்டும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.  அந்தப் பத தானம் என்பது யாது? அந்தத்  தானத்தை எவ்விதம் செய்யவேண்டும்?" என்று கேட்க, மாலே மணிவண்ணன் கூறலானார்:

"கருடா! குடை, மாரடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், ஆசனப்பலகை, அன்னம், பூஜைத் திரவியம், பூணூல், தாமிரச் சொம்பு , அரிசி ஆகியவற்றை சத்பிராமணருக்குத் தானமாகக் கொடுக்க வேண்டும். குடை தானம் செய்தால், ஜீவன் யமபுரியை நோக்கிச் செல்லும் போது குளிர்ந்த நிழல் நிறைந்த மார்க்கமாகக் கிங்கரர்களால் அழைத்துச் செல்லப்படுவான். மாரடிதானம் செய்தால், குதிரைமேல் ஏறிச் செல்வான். இவ்வாறுசெய்யும் தானங்களில் யமதூதர்கள்  மகிழ்ச்சியடைந்து, ஜீவனை வருந்தச் செய்யாமல் ஆதரவோடு அழைத்துச்செல்வார்கள்" என்று கூறியருளினார்.

ஓ, நைமிசாரணிய வாசிகளே! அதன் பிறகு, பட்சிராஜனான கருடன், திருமகள் கேள்வனைச் சிரம் வணங்கி, "கருணா நிதியே! கார்மேக வண்ணரே! நரகங்கள் என்பவை யாவை? அவை எவ்வாறு இருக்கின்றன? அவற்றில் யார் யார் எவ்வெவ்வாறு தண்டிக்கப் படுகிறார்கள்? அவற்றை அடியேனுக்கு விபரமாக தெரிவிக்க வேண்டும்" என்றுகேட்க பாம்பணைப்பரமன், கருடனை நோக்கி, 

"காசிப புத்திரனே பாவஞ் செய்தர்வர்களுக்குக் கால தேவனால் நிச்சயிக்கப்பட்ட தீவாய் நரகங்கள் ஆயிரம் பதினாயிரமல்ல எண்பத்து நான்கு லட்சமிருக்கின்றன; அவற்றில் தாமிஸ்ரம், சௌகசம், திரௌஞ்சம், மகாபைரவம், சால்மலி, ரௌரவம், குட்மலம், பூதி, மிருதகம், காலசூத்திரகம், சங்காதம், லோக துத்தம், சம்விஷம், சம்ரணம், மகாநரகம், கோகளம், சஞ்ஜீவனம்,  மகாபதம்,  ஆவித்தியம், அந்ததாமிஸ்ரம், கும்பிபாகம், அசிபத்திரவனம்  முதலிய இருபத்தெட்டு நரகங்கள் மிகக் கொடியவனவாகும்.

  • பிறன் மனைவி, குழந்தை, பொருள், இவற்றைக் கொள்ளையடிப்போர் அடையுமிடம் - தாமிஸ்ர நரகம்.
  • கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள் கவிய மூர்ச்சித்து விழும் நரகம் - அந்ததாமிஸ்ரம்.
  • அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப் பொருள் பறிக்கும் சுய நலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும் .
  • ருரு என்ற ஒரு வகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்து துன்புறுத்தும் நரகம்  -மஹா ரௌரவமாகும் .   
  • தன் சுவைக்காக ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில் வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பிபாகம்.     
  • பெரியோரையும் பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும் நரகம் காலசூத்திரம்.
  • தன் தெய்வத்தை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்த அதர்மிகளடையும் நரகம் அசிப்பத்திரமாகும். 
  • அநியாயமாகப் பிறரை தண்டித்து அகந்தையுடன் அநீதிகளும் கொடுமைகளும் புரிந்த அக்கிரமக்காரர்கள் அடையும் நரகம் - பன்றிமுகம். 
  • சித்திரவதை, துரோகம், கொலை, முதலியவற்றைச் செய்தகொடியோர் அடையும் நரகம் அந்தகூபம்.
  • தான் மட்டும் உண்டு பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து பக்தி, நியமம் முதலிய நல்லொழுக்கமில்லாமல் வாழ்ந்த பாவிகள் அடையும் நரகம்  - கிருமிபோஜனம். 
  • பிறர் உரிமைகளையும் உடமைகளையும் தனக்கிருக்கும் வலிமைகளால் அபகரித்துக் கொள்ளும் பாலாத்காரப் பாவிகளடையும் நரகம் அக்கினி குண்டம்.
  • கூடத்தகாத ஆண் அல்லது பெண்ணைக் கட்டித் தழுவிக்கூடி மகிழும் மோஹ வெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம்.
  • நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு இவற்றைப் பாராமல் தரங்கெட்டு, எல்லோருடனும் எவருடனும் கூடி மகிழும் மோகந்த காரப் பாவிகள் அடையும் நரகம் சான்மலியாகும்.
  • அதிகார வெறியாலோ  கபடவேஷத்தாலோ, நய வஞ்சகத்தாலோ நல்வழிகளைக் கெடுத்துத் தர்மத்திற்குக் கேடுபுரியும் அதர்மிகள் அடையும் நரகம்  - வைதரணி.
  • கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி, ஒழுங்கீனங்கள் புரிந்தும், தன் வழியை விட்டு ஓர் இலட்சியமுமில்லாமல்  மிருகங்களைப் போலத் திரியும் கயவர்கள் அடையும் நரகம் - பூயோதம்.
  • பிராணிகளைத் துன்புறுத்திக் கொலைபுரியும் கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் - பிராணரோதம்.
  • டம்பத்திற்காக பசு வதைப்புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும் பித்தலாட்டக்காரர்கள் அடையும் நரகம் விசஸனம்.
  • வாழ்க்கைத் துணைவியை வற்புறுத்தி விபரீத மோக இச்சைக்கு ஆளாக்கி கெடுக்கும் தீயோர்கள் அடையும் நரகம் - லாலாபக்ஷம் .
  • வீடுகளுக்கு தீ வைப்பது, சூறையாடுவது, ஜீவவதை புரிவது, விஷமூட்டுவது, கூட்டங் கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்ற செயல்களைச் செய்த பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம்.
  • பொய் சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச்  செயல்புரியும் அகம்பாவிகள் அடையும் நரகம் அவீசி.
  • எக்குலத்தினராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்தும் குடித்தும் குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடையும் நரகம் பரிபாதனம்.  
  • தன்னை மட்டுமே பெரிதாக மதித்து பெரியோரையும் நல்லோரையும் அவமதித்து, இறுமாப்புடன் தீச்செயல் புரிந்த பாவிகள் அடையும் நரகம் - க்ஷாரகர்த்தமம்.
  • நரமேதயாகம் புரிதல், ஆணாயினும் பெண்ணாயினும் மனித மாமிசம் புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீவினை புரிந்தோரை,அவர்களால் வதைக்கப் பட்டவர்களே, முன்னின்று வதைக்க அவதிப்படும் நரகம் ரக்ஷோகணம் .   
  • எந்தவிதத்தீமையும் புரியாதோரைக் கொல்லுதல் நயவஞ்சகமாகக் கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல், நம்பிக்கைத் துரோகம் புரிதல் முதலிய பாபச் செயல்களைப் புரிந்த பாவிகள் அடையும் நரகம் சசூலரோதம்.
  • தீமையே புரிந்த துரோகிகளைடையும் நரகம் தந்தசூகம்.
  • பிராணிகளைக் கொடூரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் வடாரோதம்.
  • வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த லோபிகளும்,பகிர்ந்துண்ண விரும்பாத சுயநல வாதிகளும் அடையும் நரகம் பர்யாவர்த்தனகம்.   
  • செல்வச் செறுக்காலும் செல்வாக்கினாலும் கர்வங்கொண்டு, பிறரைத் துன்புறுத்துகிறவர்களும், அநீதியாய்ப்  பொருள் சம்பாதித்து அதை நல்ல அறநெறிகளில் செலவிடாமல், கள்ளத் தனமாகப் பதுக்கி வைப்பவர்களும் அடையும் நரகம் சூசீமுகம் என்பதாகும். 
இத்தகைய இருபத்தெட்டு வகை நரகங்கள் ஒவ்வொரு வகையிலும்   ஏராளமானவையாக மிகக்கொடியனவாக அமைந்திருக்கும். 

"இறந்தவனைக் குறித்து நாள்தோறும் கொடுக்கப்படும் உதககும்பதானத்தை, யமதூதர்கள் பெற்றுத் திருப்தியடைவார்கள். மாசிக, வருஷாப்திகம் முதலியவற்றால் ஜீவன் திருப்தியடைவான்.  அவற்றால் யமகிங்கரர்களும் திருப்தியடைவார்கள். 

"வைனதேயா!  ஒருவன் இறந்த ஓராண்டு முடியுந்தருவாயில், அவனது ஜீவன் பிண்டத்தாலாகிய சரீரத்தோடுயமபுரியை அடைவான் என்றோமே!  அந்த ஜீவன்  யமலோகத்தை அடையும் முன்பாக அந்தப் பிண்ட சரீரத்தைத்தவிர்த்து, அங்குஷ்ட பரிமாணமுள்ள ஒரு புதிய வடிவம் பெற்று, ஒரு வன்னிமரத்தில் சிறிது காலம்  தங்கியிருந்துஅதன் பிறகு கர்மத்தாலாகிய சரீரத்தைப் பெறுவான்.  அப்போது யமகின்கிரர்கள்  அந்த ஜீவனை யமபுரிக்குஅழைத்துச் சென்று,தர்மராஜனின் கொலுமண்டபத்திற்குக் கொண்டு செல்வார்கள்" என்று திருமால் கூறியருளினார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........... தொடரும்!

1 comment:

  1. நமது இந்திய அரசு இந்த புராணங்கள் பற்றிய படிப்பில் கட்டாய கல்வி ஆக்கி ,முதல் வகுப்பில் இருந்து கல்லூரி முடியவரைக்கும் இந்து தர்மங்கள் இதிகாசம் பற்றிய படிப்பை போதித்தால் நன்றாக இருக்கும். கருடபுராணம் பற்றி சிறுவயதில் குழந்தைகள் கற்றால் வளரும் போது அவன் தப்பு செய்ய நினைத்தால் கூட செய்ய மாட்டார்கள்... இந்திய அரசு இதை செய்தால் அடுத்த 20 வருடங்களில் மிகப்பெரிய மாற்றம் வரும். தீவிர வாதம் குறையும். மனிதநேயம் வளரும். ஜீவகாருண்யம் மேம்படும்.சித்தர்கள் இந்த மாற்றத்தை கொண்டு வருவார்களா...?ஆரம்பித்து கல்வியில் ஆரம்பித்து கல்லூரிமுடியும் வரை படிக்கும் போது நிச்சயமாக மிகபெரிய மாற்றம் வரும் ...கோவில் பற்றிய தகவல்களும் சித்தர்கள் பற்றியும் ஆரம்ப கல்வி முதலே போதிக்க வேண்டும்.... இது நடைமுறையில் வந்தால் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரமுடியும்..யார் செய்வார்கள்????

    ReplyDelete