ஸ்ரீமன் நாராயணன் தரிசனம்:-
மதுரையில் பசுமலையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் வளாகத்தில் ஸ்ரீமன் நாராயணன் அன்னை லோபமுத்ரா சமேத அகத்தியர் சந்நிதிகள் உள்ளன.
சித்தன் அருள் வலைத்தளத்தில் அன்புடன் அகத்தியர் 1068 பதிவில் விபரமாக முழு வாக்கும் வெளியாகியுள்ள குருநாதர் அகத்தியர் உரைத்த வாக்கில் புரட்டாசி மாதம் நான்கு சனிக்கிழமைகளிலும் கோயிலில் நடைபெறும் அன்னதானத்தில் ஸ்ரீமன் நாராயணனே வந்து அன்னதானத்தில் கலந்து கொண்டு அன்னத்தை உண்டு செல்வான் என்று குருநாதர் வாக்குரைத்திருந்தார்.
அகத்தியர் அடியவரும் மதுரையில் வசிப்பதால் அடிக்கடி அந்த ஆலயத்திற்கு குருநாதர் அகத்தியரை தரிசனம் செய்ய செல்வார். அந்த ஆலயத்தில் நடைபெறும் அனைத்து விதமான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்.
கடந்த புரட்டாசி மாதம் சனிக்கிழமை அன்று அந்த அகத்தியர் அடியவர் ஆலயத்திற்கு சென்று நல் முறையாக தரிசனம் செய்துவிட்டு அன்னதான நிகழ்வுகளில் கலந்துகொண்டு தனக்கான அன்ன பிரசாதத்தை வாங்கி வைத்துக் கொண்டு இருந்த பொழுது, ஒரு மன வளர்ச்சி குன்றிய மனிதர் போல் ஒருவர் வந்து எனக்கும் உணவு வேண்டும் என்று அடியவரை பார்த்து கேட்க,
அடியவரும் வாருங்கள் ஐயா உள்ளே அன்னதானம் நடக்கின்றது. வாங்க! அங்கே சென்று உணவை சாப்பிடுங்கள் என்று கூற,
அந்த மனிதரோ "வேண்டாம் நீ வைத்திருக்கும் உணவைக் கொடு" என்று கேட்க,
என்ன விந்தை இது, உள்ளே அன்னதானம் நடந்து கொண்டிருக்கின்றது அங்கே சென்று உணவு அருந்தாமல் அதை மறுத்து என்னிடம் உள்ளதை கேட்கின்றாரே என்று சிந்தித்துக் கொண்டே தன்னிடம் இருந்த உணவுப் பொட்டலத்தை அவருக்கு கொடுத்தனுப்ப அந்த மனிதரும் புன்சிரிப்புடன் ஏதேதோ வாயில் முணு முணுத்தபடியே சென்றுவிட்டார்.
இந்த நிகழ்வினை பற்றியும் குருநாதர் அகத்தியர் ஜீவ நாடியில் உரைத்த போது "வந்தது ஸ்ரீமன் நாராயணனே!வந்தானப்பா. உன் கையால் உணவை வாங்கி உண்டானப்பா" என்று கருணையுடன் வாக்கு உரைத்திருந்தார்.
கருட வடிவில் சப்தரிஷிகள் தரிசனம்:-
அந்த அகத்தியர் அடியவர் மீது குருநாதர் கொண்ட அன்பினால் முதல் முறையாக வாக்கு உரைக்க பொழுது "அப்பனே என்னுடைய பிரிய மைந்தனப்பா நீ யானே உன்னை தேடி வருவேனப்பா.
ஜீவநாடி வாசிக்கும் என் மகன் உன் இல்லம் வருவான் உன் வீட்டில் ஜீவநாடியை வைத்து உன் விருப்பப்படியே பூசை செய்" என்று வாக்குரைத்திருந்தார்.
அதன்படியே நாடி வாசிக்கும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா ஜீவநாடியை அவரது இல்லத்திற்கு எடுத்துச் சென்று மூன்று நாட்கள் பூஜை செய்து, வழிபாடு நடந்தது.
வழிபாடு நடந்து மூன்றாவது நாள் எதேச்சையாக அந்த அகத்திய அடியவரும் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த பொழுது அவருடைய வீட்டிற்கு மேலே ஏழு கருடன்கள் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தன.
அடியவரும் தன்னுடைய வீட்டில் இருந்த தன் குடும்பத்தினரை அழைத்து மேலே பாருங்கள் நம் வீட்டைச் சுற்றி கருடன்கள் பறக்கின்றன என்று காட்ட கருடன்களும் மும்முறை வலம் வந்து ஆகாயத்தில் மேலும் பறந்து, மறைந்து சென்றுவிட்டன.
ஆச்சரியப்பட்டு அடியவர் குருநாதரிடமே கேட்டுவிடுவோம் என்று தொடர்பு கொள்ள குருநாதர் தன்னுடைய வாக்கில் மேலும் பல ஆச்சரியங்களை அவருக்கு அளித்தார்.
அப்பனே வந்தது நாங்கள் சப்தரிஷிகள் கருட வடிவம் எடுத்து வந்தோமப்பா! மேலிருந்து ஆசிகள் தந்தோமப்பா... இனியும் தேவாதி தேவர்களின் பல ஞானியர்களின் பல ரிஷிகளின் ஆசிகளும் உனக்கு கிட்டிக் கொண்டே இருக்குமப்பா..." என்று வாக்குரைத்து ஆசிர்வாதம் செய்தார்.
தன்னலமற்ற பொது சேவையும், நற்குணங்களும், தான தருமங்களும், எவனொருவன் சரியாக செய்து வருகின்றானோ அவன் எம்மைத் தேடி வரத் தேவையில்லை யாங்களே அவனைத் தேடிச் செல்வோம்
இந்த அதி அற்புத வாக்கு குருநாதர் திருவாய் மலர்ந்து அருளியது...
குருநாதர் தன் வாக்கின்படியே பல திருவிளையாடல்களை அந்த அடியவர் வாழ்க்கையில் இனியும் யான் அடிக்கடி வந்து தரிசனம் தருவேனப்பா என்று குருவே மனமகிழ்ந்து வாக்குகள் உரைத்ததை நாமும் படித்து குருநாதரின் வாக்கை அனுசரணையுடன் கேட்டு நடந்து அவருடைய திருவருள் பெறுவோம்.
*பொதிகைமலை பயணம் கைப்பிடித்து அழைத்துச். சென்ற கருணைத்தெய்வம்*
அந்த அகத்திய அடியவர் வீட்டில் ஜீவ நாடியை வைத்து பூஜை செய்து அருள்வாக்குகள் கேட்டபிறகு . மூன்று மாதங்களாக இடையில் எதுவும் வாக்கு கேட்கவில்லை. இந்த திருவிளையாடல்கள் தரிசனங்கள் கிடைத்த போதும் பொறுமையாக மனதில் எண்ணிக் கொண்டே ஆலயத்திற்குச் செல்வது, தான தர்மங்களை செய்வது, தன் சேவைகளை தொடர்வது, குருநாதரை தரிசனம் செய்வது என்று அவரது அன்றாட வாழ்க்கை முறையிலேயே இருந்துவிட்டார்.
கடந்த வாரம் தான் குருநாதரை காண பொதிகை மலை யாத்திரை சென்று இருந்தார் யாத்திரையில் கடினமான பயணத்தில் ஒரு கட்டத்தில் உடல் சோர்வடைந்து இனி மேலே ஏற முடியாது இங்கிருந்தே குருநாதரை வணங்குவோம் என்று மனதில் எண்ணி விசனம் அடைந்து கண்ணீருடன் மனதில் குருநாதர் எண்ணிப் பிரார்த்தித்துக் பொழுது யாரோ ஒருவர் அருரூபமாக வந்து கையைப் பிடித்து இழுத்துச் செல்வது போல் தோன்ற உடல் சோர்வு எல்லாம் மறைந்து கிடுகிடுவென ஏறி குருநாதர் அகத்தியரை தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பினார். ஊர் திரும்பியவுடன் மனம் முழுவதும் குருநாதரிடம் வாக்கு கேட்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கவே உடனடியாக திரு ஜானகிராமன் ஐயாவை தொடர்பு கொண்டார். ஜீவ நாடியில் வந்த ஒவ்வொரு வாக்கும் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை எதிரில் போனில் கேட்டுக்கொண்டிருந்த அந்த அடியவருக்கு பேச வார்த்தைகள் இல்லை ஆனந்தக் கண்ணீருடன் குருநாதரின் வாக்குகளை அவரின் கருணை மழையை எப்படி தாங்கிப் பிடிப்பது என்று தெரியாமல் பரவசத்துடன் கண்ணீர் மல்க கேட்டார்.
இனி அந்த திருவிளையாடல்கள் கருணை தரிசனங்கள் குறித்து குருநாதர் அகத்தியர் உரைத்த வாக்கினை அடுத்த பதிவில் பார்ப்போம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்...............தொடரும்!
மிக அருமை. அந்த கருணை வாக்கு கேட்க ஆவலுடன் உள்ளேன். அனைவர்க்கும் அகத்தியர் ஆசி கிடைக்கட்டும் என்று அவன் அருளாலே அவன் தாள் பணிந்து அகத்தியரிடம் வேண்டி கொள்கிறேன். வாழ்க வளமுடன்
ReplyDeleteஹர ஹர மகாதேவா
ReplyDeleteஸ்ரீமன் நாராயணா போற்றி போற்றி
கிருஷ்ண அகத்தீசா போற்றி போற்றி
அகத்திய மைந்தர்கள் போற்றி போற்றி
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDelete