கருடன் கேசவனைத் தொழுது "ஸ்வாமி! பாவங்களில் எத்தகைய பாவத்தைச் செய்தவன், பிரேத ஜென்மத்தை அடைகிறான்? அந்தப் பிரேத ஜன்மத்திலிருந்து எப்படி நீங்குகிறான்? அவன் அந்தப் பிரேத ஜன்மத்தோடு பூவுலகில் சஞ்சரிப்பது உண்டா அல்லது யமனுடைய காவலிலேயே கிடப்பானோ? இவற்றையெல்லாம் அடியேனுக்கு விளக்கமாகக் சொல்ல வேண்டும்!" என்று வேண்ட, ஆத்யங் கடவுளான திருமால் கருடனை நோக்கி கூறலானார்.
"வைனதேயனே! பிறருடைய பொருளையும் மனைவியையும் அபகரிப்பவன் யாவனோ, அவனே இறந்த பிறகும் வேறு சரீரத்தியடையாமல் காற்று ரூபமான பிரேத ஜன்மத்தையடைத்து, பசி தாகத்தோடு வருந்தி, யமனுடைய காவலையும் நீங்கி, எங்கும் திரிவான். ஒருவன் மரித்து அவனது சரீரம் அவன் வீட்டில் கிடக்கும் போதே, அவன் இறந்ததைக் குறித்து வருத்தப்படாமல் துக்கமின்றி அவனது உற்றார் உறவினரையெல்லாம் தன் புத்தியால் வஞ்சித்து, இறந்தவனின் பொருள்களை அபகரித்துக் கொள்பவன் யாவனோ அவன்தான் தீவாய் நரகங்களையெல்லாம் அனுபவிப்பான். மரித்தவன் பொருளை அவன் வழியினுள்ளோரை அடைய விடாமல் மோசஞ் செய்து அபகரிக்கும் பாவியினும் கொடும் பாவி வேறு ஒருவன் இருக்கமாட்டான். இத்தகைய பாவஞ் செய்தவனே, பிரேத ஜன்மத்தை அடைந்து தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களையும் பந்துக்களையும், துன்பப்படுத்துவான். அவன் பிரேத ஜன்மத்துடனேயே இருப்பானாகையால், பிதுர்க்களின் தினத்தில், வீட்டிற்கு வருகின்ற பிதுர்க்களை வீட்டுக்குள்ளே போக விடாமல், வாசலில் நின்று தடுத்துத் துரத்துவான். பிதுர்களுக்கு வழங்கும் அவிசுகளை அவனே வாங்கிப் புசிப்பான். வீட்டிலுள்ள பொருள்களை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனுபவிக்க முடியாமலும் பிறருக்கும் கொடுக்கவிடாமலும் வீணாகக் கிடக்கச் செய்வான். தன்னுடைய புத்திரன் முதலியோருக்குச் சந்ததியுண்டாகாமல் வமிசம் நாசமடையும்படிச் செய்வான். ஸீத ஜுரம், தாபஜ்வரம், வைசூரி முதலிய ரோகங்களை அப்பிள்ளைகளுக்கு உண்டாக்கி, வருத்தப் படுத்துவான். தன் புத்திரன் முதலியோர் தம் வாயினின்று உமிழ்ந்த எச்சிலை உண்பான்!" என்று கூறியருளினார்.
அப்போது பறவைவேந்தன் பெருமாளை நோக்கி, " ஆதிமூர்த்தி! பிரேத ஜன்மமடைந்தவன் வேறு என்ன செய்வான்? எவ்விதமாகத் தோற்றமளிப்பான்? ஒரு குலத்தில் ஒருவன் பிரேத ஜன்மத்தையடைந்திருக்கிறான் என்பதை எப்படி அறிய முடியும்? இவற்றை தயவுசெய்து நவின்றருள வேண்டும்" என்று வேண்ட, ஸ்ரீமந்நாராயணர் கூறுகிறார்:
"வைனதேயா ! பிரேதஜன்மம் அடைந்தவன் தான் சார்ந்த குலத்தையே அதிகம் பீடிப்பான். தருமங்கள் தானங்கள் செய்பவருக்கும், ஹரி நாமசங்கீர்த்தனம் செய்தவருக்கும் பிதுர்க்களைக் குறித்து சிரார்த்தாதிகளைச் செய்பவருக்கும், திருவணை, பத்ரி முதலிய ஸ்தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை க்ஷேத்ராடனம் முதலியவற்றைச் செய்பவருக்கும் பிரேத ஜன்மம் அடைந்தவனால் ஒரு துன்பமும் நேராது. நற்கருமம் எதையுஞ் செய்யாதவனுக்கும், பாகவதரை நிந்திப்பவனுக்கும் தெய்வ பக்தி இல்லாதவனுக்கும், புலால் உண்பவனுக்கும், மது அருந்துவோனுக்கும், பொய் சொல்பவனுக்கும் பிரேத ஜன்மம் அடைந்தவனால் அதிகமான துன்பங்கள் உண்டாகும். பாவங்களையே செய்வதும் ஆண் மக்களைப் பெறாமல் பெண்களையே பெறுவதற்கும் ஆண் குழந்தைகள் பிறந்து பிறந்து இழப்பதற்கும் சுற்றத்தாரோடு ஒற்றுமையில்லாமல் மனம் வேறுபட்டு வாழ்வதற்கும், பசுக்களை போஷிக்க முடியாமற் போவதற்கும் துண்ணேனத் துன்பங்கள் தோன்றுவதும், நண்பனோடு விரோதிக்க நேர்தலும், வைதீக உபவாச தினமாகிய ஏகாதசி தினத்தில் உபவாசமில்லாமல் அன்னம் உண்ணுதலும், ஹரி பக்தி செய்ய முடியாமல் வாழ்நாள் வீணாவதற்கும், ஜெப ஓமங்களைச் செய்ய முடியாமற் போவதற்கும், தனக்குக் கீழ்ப்பட்ட குலத்தானை நேசிப்பதற்கும், சுரரையும் பூசுரரையும் தந்தை தாயாரை இகழ்வதற்கும், அயலாரைக் கொல்ல முயற்சிப்பதற்கும், பயிர்கள் நல்விருத்தியடைந்தும் அதற்கான பயனை அடைய முடியாமற் போவதற்கும், தனக்குத் தாழ்ந்த குலத்தில் பெண் ஒருத்தியை மனைவியாக அடைய நேரிடுவதற்கும், இழிந்தோர் செய்யும் தொழிலைச் செய்து பிழைக்க நேரிடுவதற்கும் , எப்போதும் அதர்மங்களையே எண்ணுதலும், என்றும் தைரியம் இல்லாமல் இருத்தலும், அக்கினியாலும் அரசனாலும் பொருள்கள் செல்வங்கள் முதலியன அழிக்கப்படுத்தலும், வழியில் திருடர்களால் துன்பப்படுவதாலும், வயிற்று வலி முதலிய கொடிய நோய்களால் அவதிப்படுதலும் , சுருதி, ஸ்மிருதி, இதிகாச புராணங்களைப் பொய்யென்று சொல்லுதலும், தெய்வபக்தி, பெரியோர் பக்தி செய்யாமலிருத்தலும், பிதுர் கர்மங்களை விக்கினத்தால் தடைப்பட்டு குறைபட்டுப் போதலும், முகத்திலுள்ள நல்ல தோற்றம் போவதற்கும், புத்திரன் பகைவனைப் போல தூஷிப்பதற்கும், மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் நெடு நாட்கள் பிரிந்து வாழ்வதற்கும், அடுத்தடுத்து அவளுடன் சண்டையும் சச்சரவும் செய்வதற்கும் காரணமாக இருப்பதும், இவையெல்லாம் ஒருவனுக்கு அவன் தன் குலத்தில் பிறந்து இறந்து பிரேத ஜன்மத்தை அடைந்தவனாலேயே தோன்றுவனவாகும்.
"கருடா! எந்தக் குலத்திலே பிரேத ஜன்ம தோஷம் நேரிட்டிருக்கிறதோ, அந்த குலத்தில் துக்கமும் துன்பங்களும் சூழ்ந்து கொண்டேயிருக்கும்.
பிரேத ஜன்மத்தையடைந்தவன் பயங்கரமான முகத்தோடும், வாள் போன்ற பற்களோடும் தன் குலத்தோரின் கனவில் தோன்றி, ' ஐயையோ! என்னைக் காப்பாற்றுவோன் ஒருவன் கூட நம் குலத்தில் இல்லையோ? பசி தாகத்தோடு நான் வருந்துகிறேனே! என் பிரேத ஜன்மம் நீங்கவில்லையே! என்று கதறுவான்!" என்றார் திருமால்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்............தொடரும்!
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteOm Namahshivaya
ReplyDelete