​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 15 March 2022

சித்தன் அருள் - 1096 - அன்புடன் அகத்தியர் - ஜீவநாடி வாசிக்கும் மைந்தனுக்கு அன்னையின் தரிசனமும் உபதேசமும்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே

அன்னை என்றாலே அன்பு, கருணை, பாசம், நேயம், என்றுதான் பொருள்.

அன்னையின் கருணைக்கு எல்லை ஏது????

ஈரேழு பதினான்கு உலகத்தையும் படைத்து காத்தருளும் பரமேஸ்வரனையும் ஆள்பவள் அன்னை பரமேஸ்வரி.

வேத நாயகி சமேத உமாமகேஸ்வரி சமேத பெரியநாயகி சமேத என அப்பன் ஈசனின் திருத்தலங்களில் அன்னையின் பெயரே முதலில் வரும்.

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தந்தையான ஈசனின் கருணையை விட அன்னையின் பாசம் பெரியது.

அன்னையின் கருணையும் சரி, கோபமும் சரி, அன்பும் சரி, ஆதங்கமும் சரி, விரைவில் வெளிப்படும் . அதிவிரைவாக ஓடோடி வந்து காப்பாள் அன்னை உமையவள்.

சமீபத்தில் காசியில் சிவராத்திரியின் போது உலக மாந்தர்கள் நடந்து கொள்ளும் நிலை குறித்து சினமடைந்து வாக்குகள் கூறிய ஈசனிடத்திலே வாக்கினிடையே உட்புகுந்து பரிவுடன் மாந்தர்க்கு பரிந்து பேசி ஆதங்கத்துடன் ஈசனாருடன்,   வழக்காடலும் செய்தாள் அன்னை கற்பகாம்பாள்.

அப்பன் ஈசன் தனக்காக சிறந்ததோர் திருத்தலமாக தில்லை நடராசனாக சிதம்பரம் அமைத்தபோது அன்னையும் எனக்கும் ஓர் திருத்தலம் அமைப்பேன் என்று மதுரையில் மீனாட்சி கோட்டமாக அமைத்தாள்.... இந்த வாக்கு நம் குருநாதர் அகத்தியர் திருவாய் மலந்து அருளிய வாக்கு.

ஈசனே உனக்கு நிகர் நானே!!!! உன்னில் பாதி நானே!!!! உன்னில் சக்தியாக இருப்பவள்.  சகல ஜீவராசிகளுக்கும் அன்னை நானே என்று ஆணித்தரமாக உறுதிபட இருந்து காப்பவள் அன்னை திரிபுரசுந்தரி.

திருவாதிரையின் போதும் திருகார்த்திகை தீபத்தின் போதும் நடராசனோடு நடராணியாய் இணையாக நடனமாடுவாள் மட்டுவார் குழலி.

ஈசனின் மனசாட்சியாக இருப்பாள் அனைத்தையும் ஆட்சி செய்வாள்.
ஈசன் கண்கள் பொத்தி சிறு விளையாட்டும் விளையாடுவாள் .அன்னை பாலாம்பிகை

ஈசனிடம் செல்லமாகப் பிணங்கவும் செய்வாள் தேவி உமையாள்.

மார்க்கண்டேயனை காப்பாற்ற ஈசன் லிங்கத்தை பிளந்து கால சம்ஹார மூர்த்தியாய் தோன்றி எமதர்மராஜனை எட்டி உதைத்து  வதம் செய்து மார்க்கண்டேயருக்குஅருள் புரிந்து அடியவரும் விண்ணோரும் மண்ணோரும் "காலனுக்கும் காலனே" போற்றி !!போற்றி!! கால சம்ஹார மூர்த்தியே!= போற்றி!!! போற்றி என துதித்து பாடியபோது உங்களில் பாதி நானல்லவா இடப்பாகம் என்னுடையதல்லவா எமனை இடது காலால் உதைத்தது நானல்லவா.!!!!

பெயர் மட்டும் நீங்கள் வாங்கி கொண்டீர்களா என்று செல்லமாக ஈசனிடம் கோபிக்கவும் செய்வாள். அன்னை ஆதிபராசக்தி.

சினம் கொண்டு வெகுண்டெழுந்து அசுரர் வதம் செய்து அனைவரையும் காத்தருளினாள் அன்னை காளீஸ்வரி.

மீனாட்சியாக வைஷ்ணவியாக ஆட்சி செய்வாள் காமாட்சியாக கன்னியாகுமரியாக தவமும் செய்வாள்

துர்கா வாக சாமுண்டீஸ்வரியாக அடியவர்களுக்கு அபயமளித்து அசுரர்களை வதமும் செய்வாள்.

கர்ப்பரட்சாம்பிகையாக கருவையும் புவனேஸ்வரியாக புவனத்தையும் மூகாம்பிகையாக லலிதாம்பிகையாக அபிராமியாக அங்காள பரமேஸ்வரியாக அகிலாண்டேஸ்வரியாக அனைத்தையும் காத்து நல்லருள் புரிபவள் அன்னை சிவகாமி .

பாலகன் ஞானசம்பந்தன் பசித்து விசும்பி செய்வதறியாது நின்ற பொழுது அன்னையே கருணையுடன் பாலகனின் மனகிலேசம் மாற்றி தன்னோடு சேர்த்தணைத்து பசியால் வாடிய ஞானசம்பந்தனுக்கு ஞானப்பால் தந்து  திருவமுது செய்வித்தார் அன்னை ஈஸ்வரி.

அதே பிள்ளையாண்டான் ஞானசம்பந்தன் தன்னுடைய விவாகத்தில்  சிவனுடைய திருவிளையாடல் நிகழ்வின்போது

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே

என்ற  பதிகத்தைப் பாடியவுடன் உடனே முதலில் பிரசன்னமாகி அணைத்துக் கொண்டவள் அன்னை வேதநாயகி.

அன்னையின் தனிப்பெருங் கருணையை திருஞானசம்பந்தர் அருளிய பன்னிரு திருமுறைகளில் ஒன்றான தேவார திருவண்ணாமலை பதிகத்தில்
        
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்  பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ   மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்    
    
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.......

என்று உண்ணாமுலை அன்னையை முதல் வார்த்தையாக கொண்டே பதிகம் இயற்றினார்.

அண்ணாமலை நம் தாய் நம் தந்தை ஈசனிடம் தன்னில் சரிபாதியாக பெற்ற இடம்....

அப்பன் ஈசனுக்கு "மாதொருபாகன் "என பெயர் வர காரணமான இடம்.

ஆணும் பெண்ணும் சமமே என்று அர்த்தநாரீஸ்வர தத்துவம் உலகத்திற்கு காட்டி அருளிய இடம்.

"பாகம்பிரியாள்" ஆக முதலில் தோன்றிய இடம்.

உன்னுள் நானே சக்தி!!! என்னுள் நீயே சிவம்!!! என இரண்டறக் கலந்து இரண்டு ஒன்றாகி ஏகமாய் சோதியாய் திகழும் இடம்.

இத்தகைய பெறற்கரிய பேறு பெற்ற அண்ணாமலையில் அகத்திய பெருமான் ஜீவ நாடி வாசிக்கும் மைந்தன் திரு ஜானகிராமன் அவர்களுக்கு கிடைத்த அன்னையின் தரிசனமும் உபதேசமும் பற்றிப் பார்ப்போம்.

திரு ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு காசி ஸ்தல புனித யாத்திரையை முடித்துக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சில புனித ஸ்தலங்களுக்கு செல்ல உத்தரவு கொடுத்தார் அகத்தியர்பெருமான்.

எத்தனை யாத்திரைகள் செய்தாலும் பல புனித ஸ்தலங்களுக்கு குருநாதர் அனுப்பி வைத்தாலும் அடிக்கடி செல்ல சொல்லுவது திருவண்ணாமலை.

வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது ஜீவநாடியை கொண்டு ஜீவநாடியை திருவண்ணாமலை கொண்டு செல்க என்று உத்தரவு வரும் . அண்ணாமலையார் கருவறைக்குள் அவரது மடியில் சிறிது நேரம் வைக்கப்பட்டு பூஜை செய்வித்து வணங்கி வருவது குருநாதர் அகத்தியபெருமான் உத்தரவுப்படி வழக்கமாக நடைபெறும் செயல்.

குருநாதர் உத்தரவுப்படி ஸ்தல யாத்திரைகளை மேற்கொண்டு திரும்பியவரிடம் உடனடியாக திருவண்ணாமலை செல்க அங்கு சாதுக்களுக்கு அன்னதானம் செய்க என்று உத்தரவிட்டார் குருநாதர்.

அதன்படியே இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை வந்து தரிசனம் செய்து சாதுக்களுக்கு முறையாக அன்னதானமும் செய்து ஊர் திரும்பியவரிடம் அடுத்து தீர்த்தமலை ஏகுக என்று குருநாதர் உத்தரவு மீண்டும் வந்தது .

அந்த உத்தரவையும் செயல்படுத்தி விட்டு ஒருநாள் ஓய்வெடுத்துவிட்டு நேற்று ஜீவநாடியை வணங்கி வாசித்த பொழுது குருநாதர் நாளையே திருவண்ணாமலை செல்ல வேண்டும் ஜீவநாடியை கருவறையில் வைத்து பூசிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன்படியே (14/3/2022) திரு ஜானகிராமன் ஐயாவும் திருவண்ணாமலை வந்து ஆலயத்திற்குச் சென்று அண்ணாமலையார் மடியில் வைத்து ஜீவநாடி பூஜை செய்வித்து தீபாராதனை காட்டி தரிசனம் செய்து ஜீவநாடியை வாங்கிக்கொண்டு வெளியே வந்தபொழுது,

ஒரு வயதான அம்மையார் மொட்டையடித்து நெற்றி நிறைய திருநீறு குங்குமம் தரித்து கழுத்தெல்லாம் ருத்ராட்சம் அணிந்தவாறு ஜானகிராமன் அய்யாவிடம்

ஏம்பா, கொஞ்சம் நில் அண்ணாமலையார் மடியில வைத்து வணங்கினாயே உண்ணாமலை அம்மன் மடியிலும் வைத்து வணங்க வேண்டும்.

ஈசன் மடியில் மட்டும் வைத்தால் போதுமா?? அம்மன் மடியில் வைக்க வேண்டாமா??

அம்மன் இடத்திலும் வைத்து வணங்க வேண்டும் அதுதான் முறை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

ஜானகிராமன் ஐயாவும் சரி என்று கூறிவிட்டு உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு சென்று அன்னையின் மடியில் வைத்து பூஜை செய்வித்து தீபாராதனை காட்டி ஜீவ நாடியை வாங்கிக்கொண்டு திரும்பினார்.

அப்போதுதான் அவருக்கு ஒரு விஷயம் மனதில் உரைத்தது.

நாம் யார் என்று அந்த வயதான அம்மாவிற்கு தெரியாது நம் கையில் உள்ளது ஜீவநாடி என்றும் தெரியாது. அண்ணாமலையார் கருவறைக்குள் அவரது மடியில் வைத்து பூஜித்தது எப்படி?? வெளியே வைத்து கண்ட அந்த வயதான அம்மாவிற்கு எப்படி தெரியும்???

யாராக அவர் இருப்பார்கள்???. தெரியவில்லையே சரி நாம் சுவடியை அம்மன் சன்னதியிலும்  வைத்து வணங்கி விட்டோம் இந்த செய்தியை அந்த அம்மையாரிடம் தெரிவித்து விடுவோம் என்று ஆலயத்தில் எங்காவது தென்படுகிறார்களா??  என்று சிறிது நேரம் தேடிப் பார்த்தார் அந்த அம்மையாரை எங்கும் காணவில்லை. மாயமாக மறைந்தது போலவே இருந்தது.

சரி சரி அந்த அம்மாவும் நல்லதுதானே சொன்னார்கள் என்று நினைத்துக்கொண்டே இருப்பிடத்திற்கு வந்து விட்டார்.

நாளை செவ்வாய்க்கிழமை பிரதோஷம்(15/3/2022) சரி இன்றும் இங்கே தங்கி விட்டோம் நாளை பிரதோஷம் நாளையும் சாதுக்களுக்கு  அன்னதானம் செய்துவிட்டு பிரதோஷ வழிபாடும் செய்துவிட்டு வீடு திரும்பலாம் என்று குருநாதரிடம் அனுமதி உத்தரவு கேட்க ஜீவநாடியை பிரித்தபோது...

அப்பனே நாளையும் இவ் மலையிலே தங்கி பிரதோஷ கால பூசையையும் கண்டு வழிபட்டு பின் செல்க என்று உத்தரவிட்டார்.

அதன் பின்னே வந்த வாக்குகள் திரு ஜானகிராமன் ஐயா அவர்களை மெய்யதிர செய்துவிட்டது.

வாக்குகள் படித்து முடித்தவுடன் உடல் முழுவதும் நடுக்கம் சில்லென்ற மனோநிலை.  உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர்ந்த உணர்வு.

பக்திப் பெருக்கில் அண்ணாமலையப்பா உண்ணாமுலையம்மா!!!! அப்பனே அகத்தியா என்று மெய்சிலிர்க்க கூவிவிட்டார்.

குருநாதர் உரைத்த வாக்குகள்

அப்பனே இவையன்றி கூற காலைப் பொழுதிலே வந்தவள் தாய் உண்ணாமுலை என்பேன். உன்னோடு உரையாடினாள். இச்சுவடியையும் அன்போடு அணைத்து ஆசீர்வாதம் செய்தாள் என்பேன்.

மைந்தனுக்கு நல்லாசிகளும் தந்து விட்டுச் சென்றாள் என்பேன். மைந்தனோடு சிறு விளையாட்டு காட்டினாளப்பா. தாய் உண்ணாமுலை. என்று குருநாதர் படபடவென உரைக்க ஜானகிராமன் ஐயாவிற்கு ஒரு நிமிடம் உலகமே மறந்து விட்டது. அன்னை உண்ணாமுலையம்மனின் கருணையை எண்ணி கைகூப்பித் தொழுது மீண்டும் ஆலயத்திற்கு உள்ளே ஓடி மீண்டும் அன்னையைக் காண மாட்டோமா என்ற ஏக்கத்துடன் தேடிப் பார்த்தார் மனம் இருப்புக் கொள்ளாமல்.

அன்னை உண்ணாமலை தாயோ தன் சன்னதியிலிருந்து ஒரு புன்சிரிப்புடன் கவனித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து தாயே சரணம் அம்மா சரணம் என்று பரவசத்தோடு கைகூப்பிவணங்கினார்.

அன்னை உண்ணாமுலை அம்மனின் திருவிளையாடல்களை பார்த்தீர்களா!!!!

தந்தை மடியிலேயே இருக்கும் உரிமையுடன் மழலையை வாங்கி தன் மடியில் வைத்து கொஞ்சும் தாய் போல

சிவபார்வதி மைந்தன் அகத்தியர் சுவடியை அம்மையும் அப்பனும் மாற்றி மாற்றி பங்குபோட்டு அனைத்து ஆசிர்வாதம் செய்து அருள் புரிவது கேட்கும்பொழுது பரவசமாக இருக்கின்றது.

அம்மையின் கண்டிப்பான அன்பை கவனித்தீர்களா

என் மகன் அகத்தியன் சுவடியும் என் மடியில் இருக்க வேண்டும் சுவடி ஓதும் மைந்தனுக்கும் தன் தரிசனம் தந்து உபதேசம் செய்தது அன்னையின் கருணை அளவிட முடியாத ஒன்று.

அன்னையின் செல்ல பிடிவாதம் காணும்பொழுது வியப்பொன்றும் இல்லை ஏனென்றால் இந்தத் திருவிளையாடல் நடந்த அண்ணாமலை புண்ணிய ஸ்தலத்தின் மகிமை அப்படி!!!!!

சரிபாதி உரிமையை வாங்கிய இடம் அண்ணாமலை. எனக்கும் உரிமை இருக்கின்றது நானும் அருள் புரிவேன் என்று அன்னை உண்ணாமலை அம்மன் செய்த திருவிளையாடல் அதியற்புதம்.

மூலமுதல் உண்ணா முலைஎன்றும் அன்பருக்குச்
சாலவரம் ஈந்தருளும் தாய்என்று  நாலுமறை
பேசுமலைப் பாகம் பிரியாச் சிவஞான
வாசமலை அண்ணா மலை

குருநமச்சிவாயர் எழுதிய அண்ணாமலை வெண்பா வை மனதில் எண்ணி துதித்து

அகிலம் ஆளும் அண்ணாமலையாரையும், உடனாளும் உண்ணாமலை அம்மனையும் போற்றி வணங்குவோம்

குருநாதர் அகத்தியர் உரைத்த சில பொதுவான வாக்குகள். இதை அனைவரும் கடைபிடிக்கவேண்டுமென உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

அப்பனே இவ் வெப்பமான காலகட்டத்தில் பறவைகள் கால்நடைகள் உள்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் குளிர்ந்த நீரை வழங்க வேண்டும் தண்ணீர்ப் பந்தல்கள் அமைப்பது மோர் இளநீர் போன்ற குளிர்ச்சியான உணவுபொருள்களை வழங்க வேண்டும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாகத்தைத் தணிக்க உதவிகள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

பெண்கள் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். சாம்பல்(சுத்தமான திருநீறு) பூசிக் கொள்ளுதல் வேண்டும்.

இவ்வுலகத்தில் மறைமுகமான எத்தனையோ சக்திகள் இருக்கின்றன அவையெல்லாம் உள்நுழைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நெற்றியில் குங்குமம் இட வேண்டும் ஆனால் முட்டாள் மனிதன் குங்குமம் என்ற பெயரில் எதை எதையோ பூசிக் கொள்கிறான். ரசாயனத்தை உபயோகிக்கின்றனர் இது தவறான செயல்.

முறையாக குங்குமம் இட்டு சாம்பலைப் பூசிக் கொண்டு வந்தால் எதிர்மறை சக்திகள் ஒன்றும் செய்ய இயலாது. இதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் முக்கியமாக பெண்கள் அனைவரும் சுத்தமான குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும் என்றும் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்திருக்கின்றார்.

பெண்கள் தங்கம் வெள்ளி அணிவது நல்லது கால்களில் கொலுசு காதணிகள் போன்றவை அணிய வேண்டும் எதற்காக என்றால் ஆலயத்திற்குச் செல்லும் பொழுது ஆலயத்தில் உள்ள சக்திகள் இவ் உலோகங்களினால் ஈர்க்கப்பட்டு அணிபவர்களை  வந்தடையும் அதனால் நலன்கள் ஏற்படும். கனகத்திற்கும்(தங்கம்) வெள்ளிக்கும் தெய்வீக அதிர்வலைகளை கிரகிக்கும் சக்திகள் உண்டு. இக்காரணத்தினாலே முன்னோர்கள் அணிந்து வலம் வந்து கொண்டிருந்தனர்.

ஆனால் இன்றோ மனிதன் புதுமை என்று எதை எதையெல்லாம் உட்கலந்து புகுத்தி விட்டான் இதனால் தேவையற்ற நோய்களுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணம் ஆக்கிவிட்டான். இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு உண்மையான அணிகலன்களை அணிய வேண்டும். என்று குருநாதர் அகத்திய பெருமான் வாக்குகள் தந்திருக்கின்றார்.

குருநாதர் அகத்தியர் அன்னை லோபமுத்ரா பற்றி உரைத்தவாறே வாக்கினை அடியொற்றி அன்னை லோபமுத்திரை தேவியை ஓவியமாக வரைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் விபரங்களுக்கு குருநாதரிடம் வாக்குகள் கேட்டபொழுது

அப்பனே காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, மூன்று பேரின் மொத்த உருவம் தான் லோபமுத்திரை தேவியின் உருவம். தலையில் கிரீடம் அணிந்திருப்பாள் நீண்ட சடை முடிகள் கூந்தல் நீளமாக இருக்கும். கையில் தாமரை மலரை வைத்துக் கொண்டிருப்பாள் என்று குருநாதர் அன்னை லோபமுத்ரா தேவியின் ரூபத்தை பற்றி வாக்குகள் கொடுத்திருக்கின்றார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........... தொடரும்!

11 comments:

  1. Om Namashivaya
    Om Namashivaya
    Om Namashivaya

    ReplyDelete
  2. லோபமுத்ரா தாய் மற்றும் அகத்தியர் இருவருமே திருமணம் முன்பு ராஜ கோலத்தில் இருந்தவர்கள் தான். திருமணம் பின்பு லோபமுத்ரா தாயாரை மணந்து சத்தியம் வாங்கி சன்னியாசம் எடுத்தபிறகு தான் நாம் தற்போது பார்க்கும் உருவத்தில் கோலத்தில் உள்ளனர்.

    ReplyDelete
  3. தகவல் முழுமையாக கொடுத்து இருந்தால் இந்த மாதிரி குழப்பம் ஏற்படாது.விக்டோரியா நம் தயாருக்கு சமம் கிடையாது.அந்த வெள்ளைகாரியை போய் ஏன் compare பண்ணி பார்த்தீர்கள். நம் இந்திய பெண்கள் தெய்வ அம்சம் நிறைந்த பெண்கள். எத்தனையோ இந்திய பெண்கள் குலம் தெய்வமாக மாறி உள்ளனர்(நல்ல தங்காள்.இசக்கி அம்மன் etc....)யாரையும் யாரோடு compare பண்ண வேண்டாம்.அகத்தியர் வழியில் செல்பவர்கள் மேன்மை அடைவார்கள். இதுதான் உண்மை. விதியை மாற்றி எழுதி நம்மை அகத்தியர் காப்பாற்றுவார். அகத்தியர் பிரம்மா கிட்ட அவர் பக்தர்களுக்காக முறையிட்டு தலைவிதியை மாற்றி எழுதி வைத்த உண்மைகள் உண்டு. எத்தனை முறை பிரம்மா அகத்தியர் கிட்ட ஏன் இப்படி உன் பக்தர்களுக்காக வந்து என்னை தொல்லை படுத்துகிறார்? என்று பலமுறை கோபித்துக் கொண்டதும் உண்டு. ஒன்று மட்டும் புரிந்தது அகத்தியர் வழிபாடு செய்யும் போது இதுபற்றி எல்லாம் புரிய வரும் .

    ReplyDelete
  4. ஓவியத்தை வரைந்து கொடுங்கள். Chemical use எண்ணாமல் தாயாரை மூலிகைகளை கொண்டு வடிவமைத்து நான் தருகிறேன். ஏற்கனவே 963 article படி அய்யா உருவத்தை மூலிகைகளை கொண்டு வடிவமைத்து பக்தர்கள் இல்லம் சென்று கொண்டு சேர்த்து கொண்டு இருக்கின்றேன். தாயாரை உருவம் தந்தால் வடிவமைத்து தர நான் தயாராக உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. அம்மா அகத்தியர் படம் எனக்கு வேண்டும் .நீங்கள் தருவீர்களா

      Delete
  5. All your products are so good Mam. I have been using Dhoopam and oil..I have no words to express my gratitude Mam. You are so genuine abd very nice person too..Thank you so much for providing best service Mam. I am extremely happy about your products Mam. After I started using oil, Dhoopam and especially agnihotri material entire my home atmosphere has been changed Mam. I bow down to you for providing very good service Mam..God blesse you Mam..

    ReplyDelete
  6. ஓம் அகத்தீசாய வித்மஹே,
    பொதிகை சஞ்ஞாராய தீமஹே,
    தந்னோ ஞானகுரு பிரசோதயாத்.

    ReplyDelete
  7. ஓம் அண்ணாமலை உண்ணாமலை அம்மன் திருவடிகள் போற்றி.
    ஓம் அகத்தியர் பொற்பாதம் போற்றி

    ReplyDelete
  8. Sri lobhamudra thayar samedha agathiya peruman thiruvadigale potri.

    ReplyDelete
  9. உண்ணாமலை தாயே போற்றி போற்றி

    ReplyDelete
  10. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete