நைமிசாரணிய வாசிகளே! இவ்வாறு திருமால் கூறியதும் கருடாழ்வார், ஸ்ரீமந் நாராயண மூர்த்தியைத் தொழுது "ஜனார்தனா! பிரேத ஜன்மத்தையடைந்தவன் அந்த ஜன்மத்திலிருந்து எவ்வாறு நீங்குவான்? எவ்வளவு காலம் ஒருவனுக்குப் பிரேத ஜன்மம் பீடித்திருக்கும்? இவற்றைக் கூறவேண்டும்" என்று பிரார்த்தித்தான்.
அதற்கு திருமால் அவனை நோக்கி கூறலானார்:
"பட்சி ராஜனே! பிரேத ஜன்மத்தையடைந்தவன், தன் குலத்தாரின் கனவில் தோன்றினாலும் தோன்றுவான். அவ்விதம் தோன்றாமலேயே தன் குலத்தில் உள்ளவருக்குத் துன்பத்திற்கு மேல் துன்பங்களைச் செய்தாலும் செய்வான். அவன் கனவில் தோன்றினாலும் துன்பங்களைச் செய்தாலும், இந்த விஷயத்தைப் பெரியோரிடம் தெரிவித்து அவர்கள் விதிக்கும் தர்ம விதிகளில் சித்தம் வைத்து மாமரம்; தென்னை மரம், சண்பகம், அரசு முதலிய விருட்சங்களை வைத்துப் பயிர் செய்ய வேண்டும். மலர்ச் செடிகளையுண்டாக்கி, நந்தவனம் அமைக்க வேண்டும். அந்தணருக்குப் பூதானம் முதலியவற்றை வழங்க வேண்டும். பசுக் கூட்டங்கள் வயிறார மேய்வதன் பொருட்டு, பசும்புல் வளர தக்க நிலங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். தண்ணீருக்காகக் குளம் வெட்ட வேண்டும். பகவத் கைங்கரியம், பாகவத கைங்கரியம் முதலியவற்றைச் செய்ய வேண்டும். கங்கை, யமுனை, காவிரி, தாமிரபருணி முதலிய நதிகளில் நீராடித் தான தர்மங்களைச் செய்ய வேண்டும். துன்பங்கள் எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இவற்றையெல்லாம் அவசியமாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், துன்பங்கள் மேலும் மேலும் விருத்தியாகும். பிரேத ஜென்மத் தோஷத்தால் தர்மச் செயல்களில் புத்தி நாடாமல் இருக்கக் கூடும். பக்தியும் ஏற்படாமல் போகலாம். புத்தி நாடாவிட்டாலும் பக்தி வராவிட்டாலும் எவன் ஊக்கத்ததுடன் முயன்று அந்தந்த தர்மச் செயல்களைச் செய்கிறானோ அவன் இன்பமடைவான். அதனால் பிரேத ஜன்மத்தையடைந்தவனும் இன்பமடைந்து பூவுலகத்தையடைந்து, அங்கு தனது பிரேத சரீரத்தை நீக்கிக் கொள்வான். அவன் தனது குலம் விளங்கும் ஒரு புத்திரன் உண்டாக்கவுஞ் செய்வான்!" என்றருளினார்.
அதற்கு கருட பகவான், திருமாலை நோக்கி, " அரவாமுதே! ஒருவனுக்குத் தன் குலத்தில் ஒருவன் பிரேத ஜன்மத்தையடைந்திருக்கிறான் என்பது தெரியவில்லை; அப்பிரேத ஜன்மமடைந்தவன் சொப்பனத்தில் வந்து சொல்லவுமில்லை. அப்படியிருக்க அவனுக்கும் அவன் குலத்தினருக்கும் துன்பம் மட்டுமே உண்டாகிறது. அவன் பெரியோரிடம் அந்த விஷயத்தைச் சொல்லி செய்ய வேண்டியவை யாவை என்று கேட்கிறான். அவர்களும் பிரேத ஜன்ம தோஷத்தால்தான் இத்தகைய துன்பங்கள் நேரிடுகின்றன என்று சொல்லுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவன் செய்யத் தக்கவை யாவை? அவற்றைச் சொல்ல வேண்டும்!" என்று கேட்டான். திருமால் கருடனை நோக்கி கூறலானார்:
"ஓ , புள்ளரசே ! இது போன்ற சமயங்களில் பெரியோர் சொல்வதைச் சத்தியம் என்றே உறுதியாக நம்ப வேண்டும். ஸ்நானம், ஜபம், ஓமம், தானம், தவம் முதலியவைகளால் ஒருவன் தன் பாவங்களை நிவர்த்தி செய்து கொண்டு, நாராயணபலி செய்தல் வேண்டும். பாவங்களை நிவர்த்தி செய்து கொள்ளாமல் நாராயண பலி செய்வதற்கு முயன்றால் அது நிறைவேறாமல் செய்யும் பொருட்டுப் பூதப் பிரேதப் பைசாசங்கள் பெரிய தடைகளை ஏற்படுத்தும். ஆகையால் முதலாவதாக பாவங்களை நிவர்த்தி செய்து கொண்டு, மற்றவைகளைப் பிறகு செய்ய வேண்டும். புண்ணிய காலங்களில் புண்ணிய க்ஷேத்திரங்களில் பிதுர்க்களைக் குறித்து எவன் ஒருவன் தனதர்மங்களைச் செய்கிறானோ அவன் பூதப் பிரேதப் பைசாசன்களால் தொந்திரவும் துன்பமும் அடைய மாட்டான். மனிதனுக்கு, அவனது தந்தை தாய் குரு ஆகிய மூவருமே முதல் தெய்வமாவார்கள். சரீரத்தை உண்டாக்குவதாலும் நல்ல நெறிகளைப் போதிப்பதாலும் அவர்கள் மூவருமே முதன்மையானவர்கள்.எந்தக் காலத்திலும் அவர்களை பூஜிப்பது மனிதனின் கடமை. அவர்களுடைய சொற்படி நடக்க வேண்டும். தாய் தந்தையரைப் பூஜை செய்து வருகின்ற ஒருவன், தேவ ஆராதனை, பிராமண பக்தி, தீர்த்த யாத்திரை, திவ்ய தேச யாத்திரை முதலியவற்றில் எதையுஞ் செய்யாமற் போனாலும் அது பெரிய குற்றமன்று. தாய் தந்தையரைப் பூஜிக்காமல், அவர்கள் சொற்படி நடவாமல் இருந்து கொண்டு, மேற்சொன்ன அத்தர்மங்கள் அனைத்தையும் தவறாமல் செய்தாலும் அவையாவும் வியர்த்தமாகுமேயல்லாமல், அவற்றால் சிறிதேனும் பயன் உண்டாகாது. தாய் தந்தை மரித்த பிறகு அவர்களைக் குறித்துத் தானம் தர்மங்களை எவன் ஒருவன் செய்கிறானோ அவற்றின் பயனை அவனே அடைகிறான். 'புத் ' என்ற நரகத்திலிருந்து தாய் தந்தையரைக் கரையேற்றுவதனாலேயே மகனுக்குப் புத்திரன் என்ற பெயர் உண்டாயிற்று. எவன் ஒருவன், தாய் தந்தையர் சொற்படி நடவாமல் தன பெண்டு, பிள்ளைகளின் சொற்படி நடக்கிறானோ, அவன் புலையனிலும் புலையனாவான். ஓ, கலுழா! கிணற்றிலாவது நதியிலாவது விழுந்து மரித்தவனுக்கும் வாளால் வெட்டப்பட்டு இறந்தவனுக்கும் தற்கொலை செய்து கொண்டவனுக்கும் ஓராண்டுக் காலம் வரையிலும் எந்தவிதக் கிரியைகளும் செய்யலாகாது. கர்மம் செய்வதற்குள் குடும்பத்தில் திருமணம், முதலிய வைபவங்களையும் விசேஷ தர்மங்களையும் செய்யலாகாது. தீர்த்த யாத்திரை, க்ஷேத்ராடனம் முதலியவற்றிலும் ஈடுபடலாகாது. வருஷ முடிவில் கர்மம் செய்து, அதன் பிறகு யாவுஞ் செய்யலாம்" என்று கூறியருளினார்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்................. தொடரும்!
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDelete