​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 23 March 2022

சித்தன் அருள் - 1100 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த அறிவுரைகள்!


ஸ்ரீமந் நாராயணர் இவ்வாறு கூறியதும் கருடபகவான், திருமகள் தலைவனைத் திருவடி தொழுது  "ஓ, அனந்த கல்யாண குண நிலையரே! ஒரு ஜீவன் எத்தகைய பாவங்களால் பிரேத ஜன்மத்தை அடைகிறான்?  அத்தகைய பிரேத ஜன்மத்தை அடைந்தவன் என்ன பொருள்களை உண்பான்?  எங்கே வாசிப்பான்? இவற்றை அடியேனுக்குப் புகன்றருள வேண்டும்" என்று கேட்கவும் பரமபதநாதன் பக்ஷிராஜனை நோக்கி கூறலானார்.

 "புள்ளரசே ! பூர்வ ஜன்மத்தில் மகாபாவம் செய்தவனே பிரேத ஜன்மத்தை அடைவான்.  ஒருவன் பெருவழிகளில் கிணறு, தடாகம், குளம் முதலியவற்றை வெட்டியும்,  தண்ணீர்ப் பந்தல் வைத்தும் சத்திரம், தேவாலயம் முதலியவற்றைக்  கட்டியும் பலருக்கும் பயன்படும்படியான  தருமத்தைச் செய்ய, அவனது குலத்தில் பிறந்த ஒருவன், முன்னவன் மரித்தவுடன் அவற்றை விலைக்கு விற்பானாயின், அவன் மரித்தவுடன் பிரேத ஜன்மத்தை அடைவான்.  மேற்சொன்ன தர்மங்களை ஒருவன் செய்து, பின்னர் ஒரு காலத்தில் அவனே அவற்றை விற்பானாகில் அவனும் பிரேத ஜன்மத்தை அடைவான்.  பிறர்க்குரிமையான பூமியை அபகரித்தவனும், கிராமத்தின் எல்லைகளையும் வயலின் எல்லைகளையும் பூங்காவின் எல்லைகளையும், ஆரணியத்தின் எல்லைகளையும் புரட்டித் தன் நிலத்தோடு அந்த நிலத்தைச் சேர்த்துக் கொண்டவனும், குளத்தையோ கிணற்றையோ தூர்த்து, அதன் நிலத்தைத் தன் நிலத்தோடு சேர்த்துக் கொண்டவனும், சண்டாளனிடம் அடிப்பட்டு மரணமடைத்தவனும், மிருகங்களால் கடிபட்டு இறந்தவனும். இடி விழுந்து அதனால் மாண்டவனும், நெருப்பில் குதித்து மரித்தவனும், தீயிடுட்டுத் தன்னைத் தானே கொளுத்திக் கொண்டவனும், மாடு முட்டி மாண்டவனும், கழுத்தில் சுருக்கிட்டு நான்று மாண்டவனும், விஷம் உட்கொண்டு உயிர் துறந்தவனும், ஆயுதத்தால் மாய்ந்தவனும்,  சம்ஸ்காரம் செய்யத் தனது குலத்திலேயே ஒருவரும் இல்லாமல் இறந்தவனும்,  தேசாந்திரங்களில் ஒருவரும் அறியாதவாறு இறந்தவனும் ,  திருடனால் மாய்ந்தவனும்,  விருஷோற்சர்க்கம் செய்யாமல் மாண்டவனும், தாய்  தந்தையர்க்குச் சிரார்த்தம் செய்யாமலேயே இருந்து இறந்தவனும் பிரேத ஜன்மத்தை அடைவார்கள்.  ஓ! வைனதேயா!  பிராமணன் ஒருவன் இறந்தானென்றால், அவன் சம்பத்தப்பட்ட ஈமக்கிரியைகள் அனைத்தையுமே பிராமணன் தான் செய்யவேண்டும்.  எந்த ஜாதியான் இறந்தாலும், அவனது அந்திமக்கிரியைகளை, அவனவன் ஜாதியைச் சேர்ந்தவனே செய்ய வேண்டும். அவ்விதமில்லாமல் இறந்த பிராமணனுடைய சம்ஸ்காரத்திற்கான நெருப்பு, எருமுட்டை, வைக்கோல், அரிசி முதலியவற்றைச் சுடுகாட்டுக்கு இதர ஜாதியான் எடுத்துச் செல்வானானால், இறந்த அந்தப் பிராமணனும் சம்ஸ்காரப் பொருள்களைச் சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றவனும் பிரேத ஜன்மத்தை அடைவார்கள். மலைமீதிருந்தோ,     மலைச்சாரலிலிருந்தோ   விழுந்து அந்த இடிபாட்டில்   அகப்பட்டு இறந்தவனும், கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டோ, விழித்துக் கொண்டுருக்கும் போதோ செத்தவனும், மேல் வீட்டில் உயிர் நீத்தவனும்,  தெய்வத் திருநாமங்களை உச்சரிக்காமல் உயிர்விட்டவனும், ராஜஸ்வாலையான  பெண், சண்டாளன் முதலியோரைத் தீண்டிவிட்டு, ஸ்நானம் செய்யாமல் சூதகத் தீட்டோடு இறந்தவனும் , ரஜஸ்வாலையாயிருக்கும்  போது அவ்வீட்டில் இறந்தவனும், பிரேத ஜன்மத்தை அடைவார்கள்.  தாய், மனைவி, பெண், மருமகள் முதலியவர்களுடைய சரீர தோஷத்தைத் தன் கண்களால் பாராமலேயே பிறர் வார்த்தைகளைக் கேட்டு, ஜாதிப் பிரஷ்டம் செய்தவனும், மனுநூலுக்கு விரோதமாகத் தீர்ப்பு வழங்குவோனும் தீர்மானஞ் செய்பவனும், அந்தணரையும், பசுக்களையும் கொல்பவனும்,  ஹிம்சிப்பவனும், கள் மதுபானம் முதலியவற்றை அருந்துவோனும், குரு பத்தினியைக் கூடியவனும், வெண்பட்டு, சொர்ணம் ஆகியவற்றைக் களவாடுவோனும் பிரேத ஜன்மத்தை அடைவார்கள்.  பிரேத ஜன்மம் அடைத்தோர் அனைவரும், எப்போதும் கொடிய பாலைவனங்களில் சஞ்சரித்து வருந்துவார்கள்" என்றார் திருமால்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

1 comment:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete