​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 29 December 2019

சித்தன் அருள் - 833 - 2020 பொதிகை பயணம் பற்றிய தகவல்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

2020 வருட பொதிகை பயணத்தை பற்றிய ஒரு தகவல் கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

2020-ம் ஆண்டிற்கான பாபநாசம் மலையின் மீதுள்ள  பொதிகைமலை அகஸ்தியர் பயண முன்பதிவு ஜனவரி 8-ம்தேதி காலை 11  மணிக்கு kerala forest wildlife department இணையதளத்தில் தொடங்குகிறது! 
    
பொதிகை தென்காசி மாவட்டம் பாபநாசம் மலைக்கு மேலே முண்டந்துறை புலிகள் காப்பக அடர் வனத்திற்குள் 6350-அடி உயரத்தில் அமைந்துள்ளது
   
இந்த இடத்திற்கு தமிழ்நாடு வழியாக செல்ல முடியாது.. கேரளா வழியாகவே செல்ல முடியும்.
        
ஆர்வமுள்ளவர்கள் மேற்சொன்ன நாள் நேரத்தில் www.forest.kerala.gov.in என்ற இணையதளத்தில் டிக்கட் எடுக்கவும்! மொத்தம் 10 நிமிடங்களுக்குள் அனைத்து டிக்கட்களும் தீர்ந்துவிடும்! அக்கவுண்டில் பணம் உள்ள டெபிட் கார்டு, மற்றும் அதிவேக இன்டர்னெட் சென்டர் மூலம் முயலவும்! விண்ணப்பிக்கும் போது அனைவரின் அடையாள அட்டை எண் அவசியம். டிக்கட் கிடைத்துவிட்டால் பயணத்தின்போது அதே ஒரிஜினல் அடையாள அட்டை அவசியம்!
      
நபர் ஒருவருக்கு 1100 ரூபாய்!,  அதிகபட்சம் 10 பேர் கொண்ட குழுவாக முன்பதிவு செய்யலாம்! காலையிலேயே கேரள அரசின் வனத்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று  USERNAME & PASSWORD கிரியேட்டிவ் செய்து வைத்துக்கொள்ளவும்! வாய்ப்புகள் கிடைக்கலாம்!

அகத்தியர் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்!

சித்தன் அருள்.............. தொடரும்!

Thursday, 26 December 2019

சித்தன் அருள் - 832 - 2020 வருட புத்தாண்டு வாழ்த்துக்களுடன் .....!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் அருளால், பலவிதமான சூழ்நிலைகளை கடந்து புத்தாண்டை நோக்கி வந்துவிட்டோம்.

புது வருடம் ஒவ்வொருவருக்கும், நல்வாழ்வை தந்து, நல்விஷயங்களை செய்கிற வாய்ப்பை தந்து, அமைதியையும், ஆனந்தத்தையும், நம் குருநாதர் அருளால் வழங்கட்டும் என வேண்டிக்கொண்டு, "சித்தன் அருள்" சார்பாக 2020ஆம் ஆண்டின் நாட்காட்டியை உங்களுக்கு வழங்குகிறது.

தினம் பன்னிரெண்டு (12) முறை "பிராணாயாமம்" (இடமிருந்து வலம் 12, வலமிருந்து இடம் 12) சித்த மார்கத்தின் பாதைக்கு எளிதில் அழைத்து செல்லும் என அகத்தியரின் சித்த சாஸ்த்திரம் உரைக்கிறது. நாள்பட குரு வருவார், கைபிடித்து அழைத்து செல்வார் என்கிறது. விருப்பமுள்ளவர் முயற்சிக்கலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேதே அகத்தியர் திருவடிகளில் அனைத்தும் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..................... தொடரும்!



Thursday, 19 December 2019

சித்தன் அருள் - 831 - அகத்தியப்பெருமான் அளித்த தகவல்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இந்த வருட தொடக்கத்தில், அகத்தியப் பெருமான் நாடியில் வந்து ஒரு முக்கிய செய்தியை நமக்காக உரைத்தார். அதை கீழ்கண்ட தொகுப்பில் அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என பதிவிடப்பட்டிருந்தது.


அன்று அகத்தியப் பெருமான் உரைத்த மிக கடுமையான கிரகநிலை இந்த மாதம் 25, 26, 27, 28 ஆகிய நாட்களில் வருகிறது. அமாவாசை, அதற்கடுத்தநாள் சூரிய கிரகணம், ஆறு கிரகங்கள் ஒருவீட்டிலும், ராகுவின் பார்வை அவைகள் மீதும் படுவது அத்தனை நல்ல நிகழ்வாக ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படவில்லை.

சமீபத்தில், ஒரு நாடியில் நம் குருநாதர், இந்த கிரகநிலை, எப்படிப்பட்ட நல் மனதையும், கெடுத்துவிடும் என்றார். இதிலிருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள, அந்த நான்கு நாட்களும், அதற்கு முன்னரும், கணபதியையும், ஆஞ்சநேயரையும் சிரத்தையுடன் வழிபட்டு வர வேண்டும் என்கிறார்.

மேலும் அந்த நான்கு நாட்களில், அகத்தியர் அருளிய, ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தையும், இந்திராக்ஷி சிவ கவசத்தையும் வீட்டில் விளக்கேற்றி வைத்து, காலை, மாலை என இரு வேளையும் கூறவோ, கேட்கவோ செய்வது மிகுந்த பாதுகாப்பை, கவசத்தை ஒவ்வொருவருக்கும் உருவாக்கும் என கூறியுள்ளார்.

மேலும், குடிக்கும் நீரில், சிறிது தர்ப்பை புல்லை போட்டு வைத்து அருந்தி வந்தால், மனித மனது இந்த காலங்களில் அதிக சேதப்படாமல் தப்பிக்கும் என்ற அருளுரையையும் தந்துள்ளார்.

அகத்தியர் அடியவர்களே!

கிடைத்த தகவலை அப்படியே தெரிவித்துவிட்டேன். நடைமுறைப் படுத்தவேண்டியது, இனி உங்கள் கையில்.

அகத்தியர் காட்டிய வழியில் நடந்து சென்று, அவர் அருளை பெற்று, நலமுடன் வாழ, இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில், நமஸ்காரம்!

சித்தன் அருள்.............. தொடரும்!

Thursday, 12 December 2019

சித்தன் அருள் - 830 - அகத்தியரின் அனந்தசயனம்!


"குபேரனுக்குற்ற தனத்தினும் மிகுத்து
கிடக்கு அம்பலத்தடியதினிலே"

என்ற அகத்தியர் நாடியின் வாக்கில், சிதம்பரம், சீர்காழி, தஞ்சை பெரிய கோவில், குற்றாலம், திருவண்ணாமலை, திருவரங்கம், திருவானைக்கா, ராமேஸ்வரம், திருவாரூர், பழனி, திருச்செந்தூர், அழகர் கோவில், மதுரை, போன்ற கோவில்களில் பாதுகாப்பாக இருக்கும் பொக்கிஷங்களை கணக்கிடவே முடியாது. சோமநாதர் கோவிலை 18 முறை அந்நியன் படையெடுத்ததே அங்குள்ள பொக்கிஷங்களை கவர்ந்து செல்லத்தான்.

பத்மநாப சுவாமி  சன்னதிக்கு முன் உள்ள ஒற்றைக்கால் மண்டபத்தில், மன்னரை தவிர வேறு யாரும் கீழே விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய அனுமதிப்பதில்லை. இந்த கோவிலின் ஆகம விதிப்படி, அப்படி செய்பவரின் அனைத்து சொத்தும் பத்மநாபருக்கு சென்று சேர்ந்துவிடும். ஆதலினால், அங்கு நமஸ்காரம் செய்கிற உரிமையை கோவிலை நிர்வகித்துவரும் அரசருக்கு மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு தனிப்பட்ட மனிதரின் எந்த பொருளும் அந்த மண்டபத்தில் கை தவறி விழுந்தால், அங்கிருக்கும் ஊழியரால், பறிமுதல் செய்யப்பட்டு, உடனேயே பத்மநாபரின் உண்டியலில் சேர்க்கப்படும்.

வருடத்தில் இருமுறை, ஐப்பசி, பங்குனி மாதங்களில் பத்து நாட்கள் உற்சவம் நடை பெரும். மாலையிலும், இரவிலும், கோவிலுக்குள் நான்கு முறை ப்ரதக்ஷிணமாக பத்மநாபர், நரசிம்மர், கிருஷ்ணர் ஆகிய இறை மூர்த்தங்கள் வித விதமான வாகனங்களில் எழுந்தருளுவார்கள். எட்டாவது நாள் "காணிக்கை" எனப்படும். முதலில் மன்னரும், அவர் குடும்பத்தாரும் தங்க குடத்தில் பத்மநாபாருக்கு காணிக்கை செலுத்துவார்கள். அதன் பின் யார் வேண்டுமானாலும், பத்மநாபாருக்கு காணிக்கை சமர்ப்பிக்கலாம். ஒன்பதாவது நாள் "வேட்டை"  என்கிற உற்சவம் நடை பெறும். பத்தாவது நாள், பத்மநாபர், நரசிம்மர், கிருஷ்ணர் ஆகிய இறை வடிவங்கள், பல்லக்கில் வைக்கப்பட்டு, தீர்த்தவாரிக்காக கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம் பூஜைகள்  செய்யப்படும். இதை "ஆராட்டு" என்பார்கள். ஸ்வாமிகளை, விமானநிலைய ஓடுபாதை வழியாகத்தான் பல்லக்கில் கொண்டு செல்வார்கள். உலகத்திலேயே, ஒரு கோவில் விசேஷத்துக்காக, விமான ஓடுபாதையை விட்டு கொடுத்து, ஸ்வாமியை எடுத்து செல்ல அனுமதிப்பது, அனந்தசயனத்தில் மட்டும்தான் நடக்கிறது. அன்றையதினம் மதியத்துக்குப்பின் விமானநிலையம், மூடப்படும், ஒரு விமானமும் ஏறவோ, இறங்கவோ அனுமதிக்கப்படாது.

ஆராட்டுக்கு மூன்று தெய்வங்களும் செல்வதை கண்டு பிரார்த்தனையை சமர்ப்பித்திட, அது உடனேயே நிறைவேறும். இதை அனுபவ பூர்வமாக உணர்ந்த அடியவர்கள், இறைவனை தரிசிக்க மறப்பதில்லை.

வேட்டை என்கிற ஒன்பதாவது நாள் நிகழ்ச்சியின் தொகுப்பை கீழே தருகிறேன்.


மூன்று தெய்வங்களும் விமான ஓடுபாதை வழி ஆராட்டுக்கு செல்கிற ஒரு தொகுப்பை கீழே தருகிறேன்.


முடிவுரை:-

பத்மநாபர் உலகின் முதல் செல்வந்தர் என்கிற செய்தி வெளியுலகுக்கு தெரிந்து போனபின், கோவிலை சுற்றியும், ஊரிலும் நிறையவே கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துள்ளது. எங்கும் துப்பாக்கி ஏந்திய காவல். கோவிலுக்குள் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் யாரும் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

பத்மநாபரை தரிசிக்க செல்பவர்கள், அவரை மட்டும் மனதுள் அமர்த்தி, அதுவே அவாவாக இருக்க செல்வதே நல்லது. அந்த நிதி எங்கிருக்கிறது, அந்த அறையின் கதவு எங்கு தொடங்குகிறது என்கிற எண்ணங்கள், ஒவ்வொருவருக்கும் தோஷங்களைத்தான் உருவாக்கும், என்கிறார் அகத்தியப்பெருமான். அங்கிருக்கும் "பொருள்" யாருக்கோ சொந்தம். அதை காப்பாற்ற வேண்டியது, அகத்தியப்பெருமானின்  வேலை என்றிருந்துவிடுங்கள்.

அகத்தியர் அடியவர்களான ஒவ்வொருவரின் கவனமும், எண்ணமும், இறையிடம், அகத்தியப்பெருமானிடம் (அவரின் ஆத்ம சொரூபத்தின் சமாதியில்) மட்டும் இருக்க வேண்டும் என்பதே, இந்த தொகுப்பின் நோக்கம்.

அகத்தியரின் அனந்தசயனம் தொடர் இத்துடன் நிறைவு பெற்றது! 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................. தொடரும்!

Thursday, 5 December 2019

சித்தன் அருள் - 829 - அகத்தியரின் அனந்தசயனம்!


இறையை சார்ந்திருக்கும் தேசம் நிச்சயம் வளர்ச்சியுறும் என்பதறிந்த நவகிரகங்கள், கெட்ட சக்திகள் வழி தங்கள் ஆட்சியை நிலை நிறுத்த முயற்சிக்கும், வளர விடாமல் தடுக்கும், என்பதே கலியுக விதி.

கலியுக தொடக்கத்தில், நவகிரகங்களுக்கு ஆட்சி செய்ய அனுமதி கொடுத்து, அவர்கள் ஆட்சி எல்லை மீறி செல்லவே, அனைத்து ஜீவராசிகளுக்கும் ஊரு விளைவிக்கவே, சித்தர் இடைக்காடரை வைத்து, நவகிரகங்கள் ஒருவருக்கொருவர் முகம் பார்க்க விடாமல் செய்து, பூமியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஒரு அனுபவமே, இறைவனை பல தீர்மானங்களை எடுக்க வைத்தது என்பர். நவகிரகங்களின் ஆட்சி உச்சகட்டத்துக்கு சென்று விடாமல் தடுக்கவே, கோவில்களில் அவர்களுக்கு சன்னதி அமைத்துப் பூசை நடக்கிறது. இறைவன் சார்பாக நடக்க வேண்டுமென்பதே தாத்பர்யம். 

மனிதனுக்கான அறிவுரையில், "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என மூத்தோர்கள் சொல்லிப்போனதின் உள் அர்த்தமே, மனிதன், நவகிரகங்களால் அதிகமாக பாதிக்கப்படாமல், தன் உண்மை நிலையை உணர்ந்து, இறைவனில் லயித்து வாழ வேண்டும் என்கிற அர்தத்தில் தான்.

ஒரு சாளிகிராமம் வீட்டில் இருந்தால், அதற்கு நித்ய பூசை செய்ய வேண்டும். அது கண்டகி நதியில் விளைவது. நாராயண ஸ்வரூபம். நாராயணரின் பல ரூபங்கள் அவைகளுக்குள் இருக்கும். அப்படிப்பட்ட சாளிக்ராமத்தை நித்ய பூசை செய்யாவிடில், அந்த வீட்டில் குடியிருக்கும் அத்தனை குடும்பத்தையும் பாடாய் படுத்திவிடும். 

இப்படிப்பட்ட 12000 சாளிக்ராமங்களை தருவித்த அகத்தியர், 10008 சாளிக்ராமங்களை வைத்து பத்மனாபாரின் திருமேனியை உருவாக்கியுள்ளார். மீதியை வைத்து மஹாலக்ஷ்மி தாயாரையும், பிரம்மாவையும், ஆதிசேஷனையும் உருவமைத்து, 9000 மூலிகைகளை கொண்டு "கட்டு சக்கர யோகம்" என்கிற மூலிகை மருந்தினால் பத்மநாபரின் திருமேனிக்கு மூலிகை பூச்சை உருவாக்கினார். ஆதலினால், பத்மநாபர் திருமேனிக்கு அபிஷேகம் கிடையாது. மூலவருக்கு அர்ச்சிக்கப்படும் பூக்களை, மயிலிறகினால் அகற்றுவார்கள்.

அத்தனை சாளிக்ராமங்களும் ஒரே இடத்தில் இருந்து, மிக பலமான ஆளுமைசக்தியை உருவாக்கியது. பாரத கண்டத்துக்கு மிக உயர்ந்த அரண் உருவாகியது. யாரும் பத்மநாபாருக்கு அருகில் செல்லவே முடியாமல் போயிற்று. அவரை தரிசனம் செய்து, பூசை செய்ய விரும்பிய திவாகர முனிவரின் வேண்டுதலுக்கிணங்கி இறைவன் தற்போதுள்ள திருமேனியின் உருவத்துக்கு தன்னை சுருக்கிக் கொண்டார். அப்படி சுருக்கிக் கொண்டும், இறைவனின் தேஜஸ் தாங்கமுடியாத அளவுக்கு இருந்ததால், திவாகர முனிவரே மறுபடியும் வேண்டிக் கொள்ள, இறைவன், நான்கு வேதங்களை அழைத்து தன்முன்னே சுவராக நிற்கச்செய்து, மூன்று வாசல்களை உருவாக்கி, அவரை மூன்று வாசல் வழி, சிரம்-கரம், நாபி, பாதம் என தன்னை தரிசனம் செய்தால் போதும் என அருள் செய்தார்.  பத்மநாபரை முழுமையாக தரிசிக்கும் சக்தியை முனிவர்களே பெறவில்லை என்பதே உண்மை.

பெருமாளின் வலது கரமாக விளங்குபவர், நம் குருநாதர் அகத்தியப்பெருமான் என்பதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட அகத்தியப்பெருமானுக்கு, இறைவனுக்கு திருமேனியை செய்து சன்னதியை அமைத்து, தன் சித்த சமாதியை உருவாக்குகிற பாக்கியத்தை இறைவன் கொடுத்தார் என்றால், ராமபக்த ஆஞ்சநேயர் மேலும் ஒரு பெருமையை கொடுத்தார்.

கிழக்கு வாசல் வழி பத்மனாபாரை தரிசனம் செய்ய வந்தால் கொடிமரத்துக்கு அருகில் ஆஞ்சநேயர் சன்னதி இருப்பதை காணலாம். அவர் வெண்ணை சார்த்தப்பட்டு, கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருப்பார். அனைவரும் தரிசிக்கலாம், ஆயின் அனுமனின் பாதத்தை காண முடியாது. ஏன் எனில், அனுமனின் பாதங்கள் இருப்பது, அகத்தியப்பெருமானின் தோள்களில்.

தவக்கோலத்தில் இருந்த ஆஞ்சநேயர், அனைத்து தேவர்களும், முனிவர்களும், இறைமூர்த்தங்களும், சித்தர்களும், நாரயணரின் பத்மநாபர் அவதாரத்தை கண்டு மகிழ்வதாக கேள்வியுற்று, தானும் அனந்தன் காட்டிற்கு எழுந்தருளினாராம். வெகு தூரத்தில் நிற்பதை தவிர, வேறு வழியில்லை என்ற நிலை நிலவியது அனந்தன் காட்டில். அத்தனை உயர் ஆத்மாக்களும் சூழ்ந்து நின்று பத்மனாபரின் அருளை பெற்றுக் கொண்டிருந்ததினால், ஆஞ்சநேயருக்கு பத்மநாபரின் திருப்பாத தரிசனம் கூட கிடைக்கவில்லை. மிகுந்த வருத்தமுற்ற ஆஞ்சநேயரின் மனநிலையறிந்த பெருமாள், அகத்தியரை நோக்கி கண் அசைக்க, அவரும் அனுமனை கண்டார்.

"வாருங்கள் ராமதூதனே! நாங்கள் அனைவரும் பத்மனாபரின் திருமேனியை கண்டு மனம் மகிழ்ந்துள்ளோம்! தாங்களும் வந்து இறையருளை பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.

"நன்றி! அகத்தியரே! இருப்பினும் இங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்தால், அடியேனுக்கு அவர் தரிசனம் கிடைக்குமா என்று சந்தேகமாக உள்ளது. பத்மநாபரின் திருப்பாத தரிசனம் மட்டும் கிடைத்தால் போதும். ஆனால், அத்தனை பேரும் அவர் முன் நின்று மறைப்பதால் ஒன்றுமே தெரியவில்லை!" என்றார் ஆஞ்சநேயர்.

"அடடா! தாங்களுக்கு பத்மநாபரின் தரிசனம் தானே வேண்டும்! இதோ, அடியேன் தோள்களில், தங்கள் திருப்பாதம் பதித்து ஏறி நின்று, அவரின் தரிசனத்தை பெற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறி அவர் முன் நின்றார்.

அனுமனும் பத்மநாபரை, அகத்தியப்பெருமானின் தோள்களில் ஏறி நின்று தரிசித்துவிட்டு, மன நிறைவுடன், அகத்தியப்பெருமானை, அவரின் சேவைக்கு பாராட்டி ஆசிர்வதித்து சென்றார் என்பதை சுட்டும் விதமாக, அந்த ஆஞ்சநேயர் திருப்பாதத்தில் அகத்தியர் தோள்கள் இருப்பதாக வடிவமைத்துள்ளனர். ஆனால், அனுமன் திருப்பாதத்தை காண்பதே மிக அரிது என்கிற நிலையில் தான் இன்றைய சூழ்நிலை. அப்படியிருக்க, அகத்தியரை எங்கு பார்க்க!

சித்தன் அருள்.................. தொடரும்!    

 

Thursday, 28 November 2019

சித்தன் அருள் - 828 - அகத்தியரின் அனந்தசயனம்!


விடை தேடி முக்கண்ணனிடம் செல்லலாம் என்றவுடன், பத்மநாபர் கோவிலின் ஒருவிஷயம் அடியேன் கவனத்துக்கு வந்தது. அடியேன் கேள்விப்பட்டவரை, இங்கு போல் எங்குமே இல்லையே என்று உணர்ந்தேன்.

பெருமாள் கோவில் இருக்கும் எந்த ஊரிலும், சிவபெருமான் கோவில் இருக்கும். சிவபெருமான்தான், பெருமாள் கோவிலின் ஷேத்ரபாலகர். பெருமாள் கோவிலின் மொத்த உரிமையும், நடக்கிற விஷயங்களை கட்டுப்படுத்துவதும், காவல் காப்பதும், ஒரு க்ஷேத்ர பாலகரின் கடமை. இது இறை விதி.

பத்மநாபா சுவாமி கோயிலின் நான்கு திசைகளிலும், சிவபெருமான் கோவில்கொண்டு அமர்ந்திருப்பது, யோசிக்க வேண்டிய விஷயம். இதை யாரும் கவனிப்பதில்லை என்பதே உண்மை.

மறுபடியும், எங்கு செல்வது, எங்கு தொடங்குவது  என்கிற கேள்வி சுழன்றது.

ஒருநாள்,

மாலையில், தெற்கு வாசலில் உறையும் சிவன் கோவிலுக்கு சென்றேன். நான்கு கோவில்களில், தெற்கு வாசல் கோவிலே அருகில் என்பதால், அடிக்கடி செல்கிற பழக்கம் உண்டு. கேள்வி கேட்டால், பதில் கிடைக்கும். அதுவும் எதிர்பாராத நேரத்தில், ஆச்சரியப்படும் விதமாக இருக்கும்.

உள்ளே பூசாரியும், கோவிலின் நிர்வாக ஊழியரும் இருந்தனர். மாலை தீபாராதனை முடிந்துவிட்டபடியால், யாரும் இல்லை. உள்ளே சென்று இறைவன் முன் நின்று அடியேனின் வேண்டுதலை கொடுத்தேன்.

பிரசாதம் வழங்கப்பட்டது. பெற்றுக்கொண்டு திரும்பும் பொழுது, ஒரு எண்ணம் உதித்தது. சிறிது நேரம் கோவிலுக்குள் அமர்ந்து செல்லலாமே என்று. ப்ரதக்ஷிணம் செய்து முன் புறம் வந்து இறைவனின் இடது புறம் தரையில் அமர்ந்தேன். அமர்ந்த இடத்திலிருந்து  இறைவனின் லிங்கத்திருமேனி தெளிவான காட்சி. அப்படியே அதை கண்மூடி உள்வாங்கிட, ஓம் நமசிவாய என்கிற ஜபம் உள்ளில் உதித்தது.

எவ்வளவு நேரம் த்யான ஜெபத்திலேயே இருந்தேன் என தெரியவில்லை. யாரோ கடந்து உள்செல்வதும், சற்று நேரத்தில் வெளியே செல்வதும் உணரப்பட்டது.

மனதுக்கு திருப்தி வந்ததும், த்யானம் கலைந்தது. எழுந்து வணக்கம் கூறிவிட்டு கோவிலுக்கு வெளியே வந்தேன்.

மனம் ஒன்றி நடக்கத் தொடங்கியவுடன், "திருச்சிற்றம்பலம்" என்ற சப்தம் கேட்டது.

நிமிர்ந்து பார்க்க வயதான ஒருவர் நின்று கொண்டிருந்தார். மார்பில் கை விரல்களை வைத்து, தலை தாழ்த்தி "சிவசிதம்பரம்" என்றேன்.

"இப்ப போனா பத்மநாபரை தரிசனம் செய்ய முடியுமா?" என்றார் கோவில் தெற்கு வாசலை சுட்டி காட்டியபடி.

"ஹ்ம்ம்! இப்ப போனா தரிசனம் கிடைக்கும்" என்றேன்.

வெள்ளை வேஷ்டி, வெள்ளை அங்கவஸ்திரம் அணிந்திருந்தார். நீண்ட நரைத்த தாடி. வாசியோகியாக இருக்கவேண்டும் எனத்தோன்றியது.

"கேள்விக்கான பதில் கிடைத்ததா?" என்றார்.

"இல்லை!" என்றேன்.

"ஏன் ரொம்ப அலையணும்! சிவபுராணம், குறிப்பாக சிவபெருமான்-பார்வதியம்மை திருமண கட்டத்துக்கு முன் பாருங்க. பதில் கிடைக்கும். சிவசிந்தனை என்னவென்று புரியும்!" என பதில் கூறி, வேகமாக கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

தலையசைத்து நன்றி கூறி, அவர் போவதை பார்த்து நின்றேன்.

யார் இவர் என்று கூட யோசிக்க தோன்றவில்லை. "கேள்விக்கான பதிலை இறை தரவேண்டும் என நினைத்தால், ஏதேனும் ஒரு வழியை திறக்கும்" என்ற அகத்தியரின் வாக்குதான் நினைவுக்கு வந்தது.

அடுத்தவாரம், நண்பரின் உதவியுடன், சிவபுராணம், பெரியபுராணம், சிவமஞ்சரி, ருத்ரப்ரச்னம் போன்ற நூல்களில் ஆராய்ச்சி தொடர்ந்தது. நிறைய உண்மைகள் புரியத்தொடங்கியது. அவற்றை சுருக்கி அடியேனுக்கு தெரிந்த எளிய மொழியில் கீழே தருகிறேன்.

பாரத கண்டத்தை "கர்மா பூமியாக" விவரித்து தீர்மானம் நிறைவேற்றியதே சிவபெருமான்தான். கைலாசத்தில், பாரதத்தின் வடகிழக்கு என்கிற "ஈசானத்தில்" தான் அமர்ந்தார். தனக்கு சரி நிகரான ஒருவர் பாரதத்தின் தென்மேற்கு பகுதியான கன்னிமூலையில் அமர வேண்டும் என விரும்பினார். கர்மபூமி, வளர்ச்சியை கர்மம் வழியாகத்தான், மெதுவாக அடையும். அப்படிப் பட்ட நிலையில், எதிர் வினையாற்றும் சக்திகள், ஈசான மூலை வழியாகவும், கன்னிமூலை வழியாகவும் உள்புகுந்து அழிக்க நினைக்கும். அந்த முயற்சியை தடுத்து நிறுத்த சிவபெருமான் எடுத்த தீர்மானத்துக்கு, நாராயணன் தான் அமர்ந்தார். கைலாசத்திலிருந்து அகத்தியப் பெருமான், நிறய வேலைகளுடன் தென்புலம் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டார். நாராயணனுக்கு அனந்தன்காட்டில் கோவில் கட்டுவது, தாமிரபரணி நதியை உருவாக்குவது, இறைவன் அமர நினைத்த இடங்களில் எல்லாம் கல்யாணக்கோலத்தை காட்டி கோவில் கட்டி அமர்ந்தது, விந்திய மலை தடங்கலை விலக்கியது, என பலவிஷயங்களும் அதில் அடங்கும். பஞ்சேஷ்டி வந்து ஐந்து விதமான யாகங்களை செய்து இறைவன், இறைவியின் ஆசிர்வாதத்துடன் பொதிகை வந்தடைந்தார்.

திருவட்டாறில் ஆதிகேசவப் பெருமாளை ஆராதனை செய்து, பத்மநாபபுரத்தில் இருந்து சேர நாட்டை ஆண்டு வந்த மன்னருக்கு இறைவனின் தீர்மானத்தை எடுத்துரைத்து, அனந்தன் காட்டில் கோவில்கட்ட வைத்ததே அகத்தியர்தான். அனந்தன்காட்டில் பத்மநாபர் வந்துறைந்த பொழுது, கலியுகமும் ஆரம்பமானதாக புராணங்கள் கூறுகிறது. இறைவனின் மிக உன்னதமான தீர்மானத்தை நிறைவேற்றும் பொழுது, தங்கத்தால் ஸ்ரீசக்ரமும், சுதர்சன சக்கரமும் செய்து, அகத்தியப்பெருமான் தன் தவவலிமையை  பெருக்கி அந்த சக்கரங்களில் பகிர்ந்து, பத்மநாபாருக்கு கீழே பதித்து, தன் சமாதியாக்கினார். அன்று அகத்தியர் பகிர்ந்து கொண்ட தவவலிமையும், இறைவனின் தீர்மானமும் இன்றுவரை  பாரத கண்டத்துக்கு அரணாக நின்று காத்து வருகிறது.



சித்தன் அருள்...................... தொடரும்!

Saturday, 23 November 2019

சித்தன் அருள் - 827 - அகத்தியரின் அனந்தசயனம்!


மறுபடியும் ப்ரச்னம் பார்ப்பவருக்கு எதிர் பக்கமாக வந்து நின்று சிறுவன், பிரார்த்தனை செய்துவிட்டு களத்தை பார்த்தான். இடது பக்கம் இருந்த ஒரு கட்டத்தை தெரிவுசெய்து, சோழியை வைக்கப்போகிற கடைசி நேரத்தில், வலது கையிலிருந்து, இடது கைக்கு சோழிகளை மாற்றி, இடது கையால் வைத்தான். இதை கண்டு பிரச்னர் குறிப்பெடுத்துக் கொண்டார்.

அந்த சிறுவன் தெரிவுசெய்து வைத்தது லக்கினத்துக்கு நான்காம் பாவமான கும்பராசி (சுக ஸ்தானம்).

அடுத்ததாக, 6ம் பாவமான மேஷ ராசி, பின்னர் 8ம் பாவமான மிதுன ராசி, 9வது வீடு கடக ராசி, என ப்ரச்னம் வளர்ந்து கொண்டே சென்றது.

எதுவுமே, மனதுக்கு திருப்தி அளிப்பதாக அமையவில்லை. ப்ரசனம் பார்ப்பவரும் தன் பொறுமையை இழந்து கொண்டிருந்தார் என்றுதான் கூற வேண்டும். ஒவ்வொரு முறை சோழியை கொடுக்கிற போதும், "பத்மநாபா,அமரப்ரபோ" என வாய்விட்டு கூறியே அந்த சிறுவனிடம் கொடுத்தார்.

கடைசி முறையாக நான்கு சோழிகளை, சிறுவனிடம் கொடுத்து அவன் விருப்பப்படியே களத்தில் வைக்கச் சொல்ல, அவன் அவற்றை ஒரு கட்டத்தில் வைத்தான். அது விருச்சிக ராசிக்கு 12ம் இடமான துலா ராசியாக அமைந்தது.

அனைவரும் அமைதியாக இருக்க, அவரது சிஷ்யர்கள் குறிப்பெடுத்துக் கொண்டனர். அனைவரும் எழுதி முடிக்கும் வரை காத்திருந்த பிரச்னர், மகாராஜாவை அர்த்தத்துடன் பார்க்க, அவரும் அனுமதிப்பதுபோல் தலையசைத்தார்.

உடனேயே, களத்துக்கு, அனைத்து தேவதைகளுக்கும் நிவேதனம் காண்பிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தேறியது. ப்ரச்னம் நிறைவுக்கு வந்தது, ப்ரஸ்ன விதி அறிவிக்கப்படாமலேயே!

ப்ரச்னம் பார்ப்பவர், தன் அனுமானத்தை 22 சிஷ்யர்களின் முடிவுகளுடன் சரிபார்த்துவிட்டு, மறுநாள் அறிவிப்பதாக கூறி பிரஸ்னத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். அனைவரும், அவரவர் இருப்பிடம் ஏகினர்.

மறுநாள், அதே நேரத்துக்கு, அனைவரும் ஒன்று கூடி இருக்க, மகாராஜாவின் உத்தரவுடன், ப்ரஸ்ன விதி வாசிக்கப்பட்டது. [ப்ரஸ்ன விதியின் முக்கிய உரை மட்டும் இங்கு கூறப்பட்டுள்ளது].

"இறை அருளால், அவர் அனுமதியுடன் ப்ரஸ்ன விதி மஹாராஜாவால் வேண்டிக்கொள்ளப்பட்டது. கோவிலின் பூஜை முறைகளில் ஏதேனும் குறை ஏற்பட்டுள்ளதா? எந்த விதத்தில் பூசை செய்து அதை மாற்றவேண்டும் என்பதே முக்கிய விஷயமாக இருந்தது. பூஜை முறைகளில் எந்த வித தவறும் நடக்கவில்லை, எந்த வித மாற்றமும் தேவை இல்லை என்பதே விதியின் முடிவு.

இங்கு நடந்த மனிதத் தவறுகள் தான் பிரச்சினைகளை உருவாக்கும் என்பது ப்ரஸ்ன லக்கினத்தின் தோற்றம் உரைக்கிறது. அத்தனை நிதியும் இங்கு அமர்ந்த இறைக்கு உரிமையுடையதாயினும், மனித வாசம் பட்டதும், பார்வை பட்டதும், கலைக்கப்பட்டதும், இறையின் எண்ணத்துக்கு எதிரானது. அத்தனை நிதியும் முக்கண்ணனின் எண்ணப்படியே இங்கமர்ந்தது. அதுவும் ஒரு பொதுநல நோக்குடன், எது எதை செய்யும் என அறிந்து வைக்கப்பட்டது.

இதுவரை நிதியை தொட்டதின் பின் நடந்த நிகழ்ச்சிகளே, இறை அளித்த தண்டனையை உணர்த்துவதாகும். உணர்ந்து திருந்துவதே மனிதருக்கு அழகு. மேலும் நிதியை நெருங்கிட, தொடர்பான அனைத்து மனிதர்களின் குடும்பத்திலும், விஷம் எப்படி உள்ளே சென்றது, என அறியாமலேயே அழிவு ஏற்படும். ஆதிசேஷனும், அனுமனும், நரசிங்கமும் மிகுந்த கோபத்தில் உருமாறியுள்ளனர். அமைதியாய், விலகி நிற்பதே மனிதர்க்கு அழகு" என கூறி முடித்தார்.

பல இடங்களிலும், நாடியில் தோன்றிய சித்தர்கள் உரைத்த ஒரு சில வாக்குகளையும் கீழே தருகிறேன்.

இலுப்பையடி யோகா நித்திரை கொள்ளும் அனந்த பத்மனாபனடி ஆஸ்தி கண்டார் வியக்கவே; இது தனை கண்டு ரிஷியரெல்லாம் நோவ, சித்தருஞ் சினம் கொண்டனரே -

காவலாய் இருக்கும் சிங்க முக ஈசனும் (நரசிங்கர்) பசுபதிநாதனொரு (பசுபதிநாதர், நேபாளம்), காடுறை நாகராஜனும், மங்களப் பேய்ச்சி முலையுண்டானும், கொடனந்த  புரமய்யனுமாதி கேசவனும் வாடி நிற்ப...........  

பொக்கிஷத்தை கையாண்டதால் நரசிங்க பெருமாளும், அனந்தன்காடு நாகராஜா ஸ்வாமியும், வில்வமங்கலத்திலிருக்கும் கிருஷ்ண பரமாத்மாவும், காசர்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அனந்தபுரத்து பெருமாளும், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாளும், நேபாளத்திலிருக்கும் பசுபதிநாதரும் வருத்தம் கொண்டனர்.

தவறு நடந்த்துவிட்டது என்பது தெளிவாயினும், ப்ரஸ்ன விதியில் வந்த ஒரு குறிப்பிட்ட உத்தரவு அடியேனின் மனதுள் பதிந்து உறுத்திக்கொண்டே இருந்தது.

அது என்ன?  

"முக்கண்ணனின் எண்ணப்படியே இங்கமர்ந்தது. அதுவும் ஒரு பொதுநல நோக்குடன்" என்பதின் அர்த்தம் என்ன என்பதே!

முக்கண்ணனை நோக்கி நடக்கலாமா? என்று யோசிக்க தொடங்கினேன்!

சித்தன் அருள்............... தொடரும்!

Thursday, 21 November 2019

சித்தன் அருள் - 826 - அனந்தசயனத்தில் லக்ஷதீப திருவிழாவின் தொடக்கம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

15/01/2020 அன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் லக்ஷ தீபம் என்கிற திருவிழா நடக்க உள்ளது. அன்றைய தினம், மொத்த கோவிலுமே, தீபத்தினால் அலங்கரிக்கப்படும். இறைவனுக்கு சிறப்பு பூசைகள் நடை பெரும்.

அப்படிப்பட்ட திருவிழாவுக்கு தொடக்கமாக, 56 நாட்கள் தொடந்து நடக்கிற "முறை ஜபம்" என்கிற மந்திர உச்சாடனம் இன்று தொடங்கியது. மந்திர உச்சாடனத்திற்கென தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பத்மதீர்த்த குளத்தில், முட்டளவு நீரில் நின்று மந்திர உச்சாடனம் செய்வார்கள். இன்று முதல் 56 நாட்களுக்கு மாலை 6 மணிக்கு இது நடக்கும்.

இன்று ஜபம் நடந்த பொழுது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு தருகிறேன். ஒரு விஷயம் --> இங்கு நடக்கிற விஷயங்கள் எல்லாம், பெருமாளுக்கும், அகத்தியருக்கும், என்பதே உண்மை.





சித்தன் அருள் ................... தொடரும்!

Saturday, 16 November 2019

சித்தன் அருள் - 825 - அகத்தியரின் அனந்தசயனம்!


நித்ய அனுஷ்டானங்கள் பூஜைகளை பத்மநாபாருக்கு செய்துவிட்டு, மஹாராஜா, ப்ரச்னம் பார்ப்பவர், கோவில் பூஜாரி, அதிகாரிகள், கோவிலில் வேலை பாப்பவர்கள், ஊர் மக்கள் என அனைவரும், ஆவலுடன் காத்திருந்தனர், கிழக்கு வாசலை நோக்கியபடி. 

வெளியூரிலிருந்து, பத்மநாபரை தரிசிக்க வருபவர்கள், பொதுவாக, கிழக்கு வாசல் வழியாகத்தான் உள்ளே வருவார்கள்.

சரியாக, 8.30 மணிக்கு ஒரு சிறுவனுடன், நடுத்தர வயதை எட்டிய ஒருவர் கோவிலுக்குள் நுழைந்தார்.

அவர்கள் வருவதை கவனித்த மகாராஜா, கோவிலின் உயர் அதிகாரியை நோக்கி தலையசைத்தார்.

உயர் அதிகாரி, உடனேயே முன் சென்று, சிறுவனுடன் வந்த பெரியவரிடம், "சற்று நில்லுங்கள், எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று வினவினார்.

"ஹைதராபாத், ஆந்திரா மாநிலத்திலிருந்து பத்மநாபரை தரிசிக்க வந்திருக்கிறோம்" என்றார், அவர்.

பதிலை கேட்ட அதிகாரி, மகாராஜாவை நோக்கி "ஆம்!" என்பது போல் தலையசைத்தார்.

அவர்களை அழைத்து வருமாறு மகாராஜா சைகையால்,உத்தரவிட்டார்.

அருகில் வந்த பெரியவரையும், சிறுவனையும் உற்று பார்த்த மகாராஜா, மீண்டும் ஒரு முறை "எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டார்.

முன்னர் கூறிய அதே பதிலை வந்தவர் கூறினார்.

பதிலை கேட்ட, மகாராஜா, அர்த்தத்துடன், ப்ரச்னம் பார்ப்பவரை நோக்க, அவரும் கை கூப்பி  "எல்லாம் பத்மநாபர் விருப்பம் போல்" என்றார்.

உடனே மகாராஜா, அந்த பெரியவரை நோக்கி, "உங்கள் மகனை ப்ரச்னம் பார்க்க உதவிக்கு எடுத்துக் கொள்ள சொல்லி, இறைவன் உத்தரவிட்டிருக்கிறார். உங்களுக்கு சம்மதம்தானே?" என்றார்.

இறைவன் உத்தரவிருந்தும், கேட்பவர் மகாராஜாவாக இருந்தாலும், இறைவன் வேலைக்கு உதவி கேட்கும் பொழுது, அவர்கள் சம்மதத்தை கேட்டுத்தான் செய்யவேண்டும். அப்படி எஜமானன் நடந்து கொண்டால்தான் ப்ரச்னம் உண்மையை தெளிவாகக் காட்டும். இதெல்லாம் ப்ரஸ்ன விதியில் உள்ள கட்டுப்பாடுகள்.

ஆச்சரியத்துடன் உண்மையை உணர்ந்த, சிறுவனின் தகப்பனார், மகன் சார்பாக சம்மதம் தெரிவித்தார்.

"உங்கள் மகன் குளித்து புது ஆடை அணிய வேண்டும். வாருங்கள்!" எனக்கூறி இருவரையும் உயர் அதிகாரி, மகாராஜா அனுமதியுடன், கோவிலினுள் தனி இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

அனைவரும் அரை மணி நேரம் காத்திருந்தனர்.

சிறுவன் தயாராகி வந்ததும், ப்ரஸ்னர் மஹாராஜாவிடம் உத்தரவு கேட்டார்.

அவர் அனுமதி கொடுத்ததும், ப்ரஸ்ன விதிகளின்படி மந்திரோச்சாடனம் நடந்தது.

விக்னேஸ்வரர், கோவில் காவல் தெய்வங்கள், அஷ்டதிக் பாலகர்கள்,ப்ரஸ்ன தேவதை, இறைவன் ஆகியோருக்கு பூசை செய்து அனுமதி பெற்றுக்கொண்டபின், ப்ரச்னம் பார்ப்பவர், அந்த சிறுவனை அழைத்தார்.

அந்த சிறுவனின் கைகளில் நான்கு சோழிகளை கொடுத்து, "உன் மனத்தால் பிரார்த்தித்து, உனக்கு இந்த 12 கட்டங்களில் எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் வைக்கலாம். அது உன் விருப்பம்!"என்றார்.

அவர் கொடுத்ததை பெற்றுக்கொண்டு, தரையில் வரையப்பட்டுள்ள களத்தை [ஜாதக கட்டம்] உற்று நோக்கியபடி, அவருக்கு எதிர்புறம் வந்து நின்றான், அந்த சிறுவன்.

கண்மூடி தியானித்து, கையிலிருந்த சோழிகளை, தன் இடது கால் பக்கத்தில் இருந்த ஒரு கட்டத்தில் வைத்தான். நான்கு சோழியில் ஒன்று விலகி ஓடியது. அதை உடனேயே பிடித்து மற்ற மூன்றுடன் சேர்த்து வைத்தான்.

நடந்தவைகளை உற்று நோக்கியபடி இருந்த ப்ரச்னம் பார்ப்பவர், மிகுந்த கவலையுற்று, மகாராஜாவை நிமிர்ந்து பார்த்தார்.

மகாராஜா "பரவாயில்லை! தொடருங்கள்!" என சைகையால் உணர்த்தினார்.

அவரது சிஷ்யர்கள் 22 பேரும் களத்தை அமைதியாக உற்று நோக்கியபின், தங்கள் ப்ரஸ்ன விதியை ஒரு காகிதத்தில் வேகமாக எழுதினர்.

அந்த சிறுவன் சோழிகளை வைத்த முதல் களம், கோவிலின் ப்ரஸ்ன விதி ஜாதகத்தின் லக்னம் எனப்படும். அதுவே ஜீவன்.

நடந்தது என்ன? நிலைமை எப்படி உள்ளது என்பதை அறிய, நுழைய வேண்டிய, நுழைவு வாசல்.

சிஷ்யர்கள் எழுதி முடிக்கும் வரை எங்கும் அமைதி நிலவியது.

மகாராஜாவும், ப்ரச்னம் பார்ப்பவரும் சற்று தளர்ந்து போயினர்.

ஏன் என்றால், ப்ரஸ்ன விதிக்கு லக்கினமாக அந்த சிறுவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட களம் - "விருச்சிக ராசி". இந்த ராசியை ஜோதிட விதிப்படி "யுத்த ராசி" என்பார்கள். உருவாகப் போகிற ப்ரஸ்ன புருஷனுக்கு, தலையாக, ஆத்மாவாக, விருச்சிக ராசி அமைவது, நல்ல சகுனமல்ல.

ப்ரச்னம் பார்ப்பவர், சிறுவனை இரண்டாவது முறையாக அருகில் அழைத்து, நான்கு சோழிகளை கையில் கொடுத்து, மௌனமாக சைகை காட்டினார்.

சிறுவன் களத்தை சுற்றி நடக்கத் தொடங்கினான்!

சித்தன் அருள்............... தொடரும்!

Thursday, 7 November 2019

சித்தன் அருள் - 824 - அகத்தியரின் அனந்தசயனம்!


"அனந்தசயனம்" மனதுள் சுழன்று கொண்டே இருந்தது.  எங்கு தொடங்குவது என்று பிடிபடவில்லை. கோவில் அதிகாரிகளிடம் கேட்கலாம் என்றால், ஏற்கனெவே அவர்கள், உள்ளிருக்கும் விஷயம் வெளியே தெரிந்துவிட்டபடியால், நிறைய கட்டுப்பாடுகளை விதித்து, பிரச்சினைகளை எதிர் கொண்டிருந்த நேரம்.

அடியேன் ஒரு முடிவுக்கு வந்தேன். குருநாதரிடம் வழி கேட்டு தெளிவு பெறலாம் என்று தோன்றியது. ஒரு வியாழக்கிழமை, குருவின் தரிசனத்துக்காக பாலராமபுரம் அகஸ்தியப் பெருமான் கோவிலுக்கு சென்ற பொழுது  மனதார வேண்டிக்கொண்டேன்.

"அய்யனே! அனந்த பத்மநாபா சுவாமி கோவிலின், உங்கள் வரையில் உள்ள தொடக்கத்தை காட்டியருளுங்கள். அங்கிருக்கும் எந்த பொருளிலும், இன்றைய சாதாரண மனிதனுக்கு இருக்கும் ஆசை அல்லது எண்ணம், அடியேனுக்கு இல்லை. திருவட்டாறில் இறை இருக்கும் பொழுது, இங்கு ஏன் குடி கொண்டது? என அறிந்துகொள்ள ஆவல். தயை கூர்ந்து அருளுங்கள்" என கூறிவிட்டு, ப்ரதக்ஷிணம் செய்யத் தொடங்கினேன். ஆறு ப்ரதக்ஷிணம் முடிந்து ஏழாவது சுற்றில், அகத்தியப் பெருமானின் சன்னதிக்கு பின்புறம் நடக்கும் பொழுது, மிகத் தெளிவாக, வலது காதில் கேட்டது.

"யாம் யாகம் வளர்த்த பஞ்சேஷ்டிக்கு வா! தெளிவாக்குகிறேன்" என்று.

அன்றுதான், அந்த ஊரின் பெயரை முதன் முறையாக கேட்கிறேன். எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. ஒரு வேளை வட இந்தியாவில் இருக்குமோ. அப்படியாயின், மிகுந்த சிரமமாக இருக்குமே என்றெல்லாம் மனம் யோசித்தது. எதற்கும், பூசாரியிடம், இப்படி ஒரு இடம் தெரியுமா" என்று கேட்டுவிடலாம் என்று, விசாரித்தேன்.

அவருக்கு அப்படி ஒரு இடம் எங்கிருக்கிறது என்று தெரியாது என்பது, உடன் புரிந்தது. கூடவே, எதற்க்காக கேட்கிறீர்கள்? என்று வினவினார்.

"அகத்தியப் பெருமானிடம் ஒரு வேண்டுதலை இன்று வைத்தேன். அங்கு வரச்சொல்லி உத்தரவு கொடுத்துள்ளார். ஆதலால், உங்களுக்கு அந்த இடம் எங்கிருக்கிறது என்று தெரியுமோ? என்று வினவினேன்" என்றேன்.

சரி! இனி நாமாகத்தான், தேடித் தெளிய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். பின்னர் இதை பற்றி மறந்தே போனேன்.

ஒரு வாரம் சென்றிருக்கும். உறவினர் ஒருவர், வீட்டுக்கு வந்த பொழுது, நிறய விஷயங்களை பற்றி பேசும் பொழுது, வந்த உத்தரவை கூறாமல், இப்படி ஒரு இடம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்று வினவினேன்.

அந்த இடம் தமிழ்நாட்டிலேயே, சென்னைக்கு 25 கீ.மீ தொலைவில் இருப்பதாகவும், தான் சென்றுள்ளதாகவும் கூறினார். மேலும் அந்த கோவில் பற்றிய சில விஷயங்களை கூறினார். அதில் அகத்தியப் பெருமான், அங்கு ஐந்து யாகங்கள் செய்ததாக கூறினார். இந்த "யாகம்" வார்த்தை உத்தரவில் வந்த வார்த்தையுடன் பொருந்திப் போனதை கவனித்தேன்.

"அடியேன் சென்னைக்கு வருகிறேன். அந்த கோவிலுக்கு அழைத்து செல்லுங்கள்" எனக் கூறினேன். அவரும் சம்மதித்தார்.

இரண்டாவது வாரம் சென்னை சென்று, அங்கிருந்து உறவினருடன் பஞ்சேஷ்டி கோவில் முன் நின்றேன்.


கோவில் முகப்பில் ஒரு நிமிடம் நின்ற பொழுது, உடல் சிலிர்த்தது. மனம் நெகிழ்ந்தது.

"தாங்கள் உத்தரவின்படி இது வந்துவிட்டது அய்யனே! இனி உங்கள் அருள் வேண்டும்!" என மட்டும் வேண்டிக்கொண்டேன். 

மாலை வேளை. பூசைக்கான மணி அடித்தது, சூழ்நிலையை மேலும் மெருகேற்றியது.

உள்சென்று இறைவனை தரிசித்து, பிரசாதம் பெற்றுக்கொண்டு, மெதுவாக வெளியே வந்து ப்ரதக்ஷிணம் செய்தேன்.

அகத்தியப் பெருமான் சந்நதி முன் நின்ற பொழுது, என்னவோ மனதுள் ஒரு எண்ணம் வலுத்தது. தேடிவந்ததின் சில விடைகள் இங்கு கிடைக்கும், நிச்சயம் அவர் அருளுவார், என்று.

அதிக நேரம், அந்த சன்னதியிலேயே, கண் மூடி த்யானத்தில் அமர்ந்தேன்.

"அனந்தசயனத்துக்கு செல்லும் முன் இங்குதான் ஐந்து யாகங்களை யாம் செய்தோம். மிக புண்ணியமான இடம் இது. இங்குதான் முதன் முறையாக சிவபெருமான் அவர் தீர்மானத்தை உத்தரவாக்கினார். யாம் அதை சிரம் மேற்கொண்டு பணிந்தோம். அனைத்து இறை ரகசியங்களையும் இப்பொழுது கூற தகுந்த நேரமல்ல. சூரியன் அஸ்தமித்துவிட்டான். தேடு! வேட்கையுடன், நேர்மையாக தேடு. சரியான நேரத்தில், தெரிந்து கொள்ள வேண்டியதை யாம் தெரிவிப்போம்" என வாக்கு வந்தது.

"சரிதான்! நம்மை விரட்டி விரட்டி ஓடவைத்துத்தான், கேட்டது இவர் கொடுக்கப்போகிறார்" என்று மனதுள் நினைத்தேன். என்னதான் அடியவராக பணிந்து சென்றாலும், சில வேளைகளில் சாதாரண மனித சிந்தனைக்கு நாம் வந்துவிடுவோம்.

ஒரே அமைதி எங்கும் நிலவியது. வேறு எந்த பதிலும் வரவில்லை. சரி, இன்று இவ்வளவுதான் போல, என்று நினைத்து, குருநாதருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, கோபுர வாசலை நோக்கி நடக்கும் பொழுது, பூசாரி எங்களுடன் நடந்து வந்தார்.

"அகஸ்தியருக்கு, எல்லா மாதமும் சதயம் நட்சத்திரத்தன்று, இங்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. பல இடங்களிலிருந்தும் அகத்தியர் அடியவர்கள் இங்கு வந்து சிறப்பாக நடத்துகின்றனர். அந்த பூஜை கூட, நாடியில் வந்த அகத்தியர் உத்தரவின் பேரில்தான் செய்வதாக கூறுகிறார்கள். அகத்தியர் எத்தனையோ காலங்களுக்கு முன் இங்கு இருந்து ஐந்து விதமான யாகங்களை செய்துள்ளார். பின்னார்தான் அவர் மலை கடந்து மலையாள தேசத்துக்கு சென்றதாக கூறுகிறார்கள். இங்கு வந்து பூசையில் கலந்து கொண்டு சமர்ப்பிக்கப்படுகிற வேண்டுதல்கள், உடனடியாக நிறைவேறுவதாக, பக்தர்கள் கூறுகின்றனர்" என பல விஷயங்களை கூறினார், பூசாரி.

அனைத்தையும் உள்வாங்கி, பாதுகாத்த பொழுது மனதுள் ஒரு எண்ணம் உதித்தது.

"குருநாதா! ஏதேனும் ஒரு தடயம் தரக்கூடாதா?" என்றேன் மனதுள்.

எங்களை வழியனுப்ப வந்த பூசாரி, கோபுர வாசல் படி மேல் நின்று பேசத் தொடங்கினா. அவர் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்த அடியேனின் பார்வை, கோபுர சுவரில் பதிந்தது.

அங்கு,

பத்மநாபரின் அனந்தசயன உருவம், அவர் வலது கைக்கு கீழே ஒரு சித்தர் த்யானத்தில் அமர்ந்திருப்பது போல் பொறிக்கப்பட்டிருந்தது. பொதுவாக, பத்மனாபாரின் வலது கைக்கு கீழே, ஒரு சிவலிங்கம் தான் இருக்கும். ஆனால் இங்கோ, ஒரு சித்தர் அமர்ந்திருந்தார்.


மிகுந்த சந்தோஷம் அடைந்து, பூசாரியை அங்கிருந்து சற்று விலகச்சொல்லி, அந்த ரூபத்தைக் காட்டி, "அடியேன் தேடி வந்தது கிடைத்த்துவிட்டது. இது போதும். அகத்தியரின் அருள் மிகப்பெரியது." என்றேன்.

பின்னர் அந்த சிற்பத்தை, புகைப்படம் எடுத்துக்கொண்டு, விடை பெற்றோம். அன்றிலிருந்து, அடியேனின் கேள்விக்கான பதில்களை, அகத்தியப்பெருமான், எதிர்பார்க்காத சூழ்நிலைகள் வழி, மனிதர்கள் வழி தரத்தொடங்கினார்.

இதற்குள், கோவிலை சுற்றி கட்டுப்பாடுகள் இறுகத்தொடங்கியது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், துப்பாக்கி ஏந்திய கருப்பு பூனைப்படை காவலுக்கு இறங்கியது. கோவிலுக்குள் யாரும் அதிக நேரம் இருக்க முடியாது என்ற சூழ்நிலை உருவானது.

கோவிலின் பத்து நாட்கள் உற்சவத்தின் பொழுது,  பத்தாவது நாள் ஆராட்டின் (தீர்த்தவாரி) பொழுது  வேறு ஒரு கோவிலிலிருந்து வந்த யானைக்கு மதம் பிடிக்க, ஆபத்தான கலவர சூழ்நிலை உருவானது. இதனுடன், மஹாராஜா கையில் அணிந்திருந்த நவரத்ன மோதிரம், சில நாட்களில் தொலைந்து போனது.

நிமித்தம் சரியாக இல்லாமல், கெடுதல் நடக்கிறதே, என்று கவனித்த மஹாராஜா, கோவிலுக்குள் பூஜையில் ஏதேனும் தவறு நடந்துவிட்டதோ? என்றறிய, அனைவராலும் மதிக்கப்படுகிற ப்ரச்னம் பார்க்கிற ஒருவரை வரவழைத்தார்.

வந்தவர், முதல் நாள் த்யானத்தில் அமர்ந்து பத்மனாபாரிடம் உத்தரவு வாங்கினார்.

உத்தரவு கிடைத்தது, ஆயின் மறுநாள், வரை காத்திருக்க வேண்டி வந்தது.

"நாளை காலை தெலுங்கு தேசத்திலிருந்து ஒரு சிறுவன் தன் தகப்பனுடன் எம்மை தரிசிக்க வருவான். அவனை கொண்டு ப்ரச்னம் பார்க்கவும். வரும் அருளை சோதித்து பார்த்து, தெரிவி!" என பத்மனாபாரிடமிருந்து அவருக்கு உத்தரவு வந்தது.  

ப்ரச்னம் பார்ப்பவரும், அவரது 22 சிஷ்யர்களும், இந்த நிகழ்ச்சிக்காக, மறுநாளுக்கு காத்திருந்தனர்.

நாமும் அடுத்தவாரம் வரை காத்திருப்போம்!

சித்தன் அருள்...................... தொடரும்!

Thursday, 31 October 2019

சித்தன் அருள் - 823 - அகத்தியரின் அனந்தசயனம்!


"தேவருக்குற்ற கோயில்
திருமகள் தேடி நிற்கும் கோயில்
தீராக்குறை தீர்க்கும் கோயில் 
தவறிழைப்பாரைக் கொல்லும் கோயில்
யாம் போற்றும் பத்மநாபனவன் கோயில்"

என்பது அனந்தசயனத்தை பற்றிய அகத்தியர் வாக்கு.

அனந்தசயனம் என்ற வார்த்தையை கேட்டால் சித்த மார்கத்தில் செல்பவர்கள் ஒரு நிமிடம் மௌனமாகி, மனதுள் அகத்தியரை நினைத்து நமஸ்காரம் செய்வர். இது சான்றோர் நிலை. மற்றவர்கள், இந்த வார்த்தையை கேட்டால், ஆச்சரியத்துடன், ஏதோ கிடைத்தாற்போல் பூரித்துப்போய், நிறைய கேள்விகளை கேட்பார்கள். இந்த இருவகை மனிதர்களின் எண்ணமும் இரு திசையில் செல்வதே காரணம்.

முன்காலத்தில் அனந்தசயனம், அனந்தபுரி என்றழைக்கப்பட்ட நிலப்பரப்பே இன்று "திருவனந்தபுரம்" என்றழைக்கப் படுகிறது. இங்கு குடிகொண்டுள்ள இறைரூபத்தின் பெயரான  "அனந்த பத்மநாபன்" என்கிற பெயரிலிருந்து உருவானதே "திரு அனந்தபுரம்".

இந்த கோவில் உருவாக்கியதில் நம் குருநாதருக்கு நிறையவே பங்குண்டு. இறைவன் அருளால், எத்தனை பெரிய முயற்சி எடுத்து இந்த கோவிலை உருவாக்கினார் அகத்தியர், என்பதை தெரிந்துகொண்டால்,  மனத்தில் ஒருவித பயமும், பக்தியும் உருவாகும், என்பதை அடியவர்களுக்கு உணத்தவே, இந்த தொகுப்பை சமப்பிக்கிறேன்.

முதலில் நாம் நமக்குள்ளே சில கேள்விகளை கேட்கவேண்டும். அவை,

1. திருவட்டாரில் ஆதிகேசவ பெருமாளுக்கு சேவை செய்து, சேரநாட்டை ஆண்டு வந்த மன்னர்களுக்கு, எதற்கு, அதே போல் இன்னொரு கோவில் கட்ட தோன்றியது? காரணம் என்ன? தேவை என்ன?

2. பத்மநாபபுரத்தை தலைநகராக கொண்டு சேரநாட்டை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மகாராஜா, திடீரென ஒரு முடிவெடுத்து, திருவனந்தபுரத்துக்கு தலைநகரை மாற்றியமைத்து, கோவிலைக்கட்டி, அரண்மனை கட்டி, பிரஜைகளை அழைத்துக்கொண்டு வந்து அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது, எதற்காக? அப்படி ஒரு முடிவை எடுக்க, அவரை தூண்டியது யார்?

3. இவர்கள் அனைவரும் இங்கு வரும் முன்னரே, அனந்தன்காடு என்கிற இடத்தை பெருமாள் தெரிவு செய்து அமர்ந்த காரணமென்ன?

4. பிற பெருமாள் கோவில் போல இல்லாமல், இங்கு இறையை மூன்று வாசல் வழியாகத்தான் பார்க்க முடியும். அது ஏன்?

5. பிற கோயில்களை போல் இல்லாது, பெருமாளின் மூலவர் சிலை, 10008 சாலிக்கிராமங்களால் உருவாக்கப்பட்டது ஏன்?

இந்த கேள்விக்கான விடைகளை தெரிந்து கொண்டால், அந்த கோவிலுக்கு செல்லும் பொழுது, இறைவனின் எண்ணம் மட்டும் நம்முள் இருக்கும். அந்த "நிதி" இருக்கும் அறையின் வாசலை தேட தோன்றாது. முன்னர் சொன்னது போல் மனத்தில் ஒருவித பயமும், பக்தியும் உருவாகும்.

அனந்தன்காட்டில் பெருமாள் அமர வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது, கைலாயத்த்தில். ஆம்! சிவபெருமான், பார்வதி திருமணத்திற்காக, அனைவரும் ஒன்று கூடிய பொழுது, சிவபெருமான் தன், தீர்மானத்தை பெருமாளிடம் தெரிவித்ததாக, சிவபுராணம் கூறுகிறது.

அன்று எடுக்கப்பட்ட தீர்மானம், பின்னர் கோவிலாக உருப்பெற்று நிற்பதைத்தான், இன்று நாம் காண்கிறோம். 

நம் குருநாதர் அகத்தியப் பெருமானும், இதில் பெரும் பங்கு வகித்துள்ளதனால், அடியேனுக்கு, "நடந்தது என்ன?" என்று அறிய ஆவலானது. கிடைத்த தகவல்கள் பிரமிப்பூட்டுவனவாக இருந்ததால், அத்தனையையும் சேர்த்து வைத்து, ஒரு தொகுப்பாக மாற்றினேன்.

இதற்கு குருநாதர் அகத்தியப் பெருமானும் அருளினார்.

சித்தன் அருள்..................... தொடரும்!

Sunday, 27 October 2019

சித்தன் அருள் - 822 - தீபாவளி நல் வாழ்த்துக்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று (27/10/2019) கொண்டாப்படும் தீபத்திருநாள் என்கிற தீபாவளி, உங்கள் குடும்பத்திலும், உற்றார், உறவினர்கள் அகத்திலும், நிறைவை, நிம்மதியை, ஆரோக்கியத்தை, செல்வத்தை, எல்லாவற்றிற்கும் மேலாக, இறை அருளை பெற்றுத்தரட்டும் என, அகத்தியப்பெருமானின் சித்தன் அருள் வலைப்பூ சார்பாக வாழ்த்துகிறோம். எல்லோரும் "நலம்" பெற்று நீடூழி வாழ்கவென அகத்தியப்பெருமானின், ஆசிகள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்!

சித்தன் அருள்.............. தொடரும்!

Friday, 18 October 2019

சித்தன் அருள் - 821 - அந்தநாள் >> இந்த வருடம் - 2019 !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமான் அருளி, எல்லா வருடமும் நடத்தி தருகிற "அந்தநாள்-இந்த வருட பூஜை", இந்த வருடம் 10/11/2019, ஞாயிற்றுக்கிழமை, கோடகநல்லூர் ப்ரஹன்மாதவர் கோவிலில் நடக்கிறது.

அகத்தியர்  அடியவர்கள் அனைவரும் ஒன்று கூடி, எல்லா வருடமும், சிறப்பான அபிஷேக ஆராதனைகளை பெருமாளுக்கு செய்து, அவர் அருள் பெற்று செல்வோம் என்பது நினைவிருக்கும். ஆனால், இந்த வருடம் அபிஷேக ஆராதனைகளை செய்வது நடக்கும் என்று தோன்றவில்லை. ஏன் என்றால், கோவில் நிர்வாகம்,பெருமாளுக்கு பாலாலயம் செய்வித்து, கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்திருப்பதால், அன்றைய தினம் அபிஷேக ஆராதனைகள் செய்வது இயலாது என்று கூறிவிட்டனர்.

இருப்பினும், அகத்தியர் கூற்றின் படி, அன்றைய தினம் மிக முக்கியமான நாள் ஆனதால், அடியவர்கள் கோடகநல்லூர் வந்து, தாமிரபரணியில் நீராடி, பெருமாளை தரிசித்து, தாமிரபரணியின், சித்தர்களின், இறையின் அருளை பெற்று செல்லலாம். பெருமாளுக்கு, பூமாலை, பூஜைக்கான பொருட்கள் கொண்டு வந்தால், உற்சவ மூர்த்திக்கு அணிவித்து, அர்ச்சனை செய்து, அருளை பெறலாம்.

மறுபடியும் ஞாபகபடுத்துவதற்காக, அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை, சுருக்கமாக கீழே தருகிறேன்.

"எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்."


அகத்தியர் அடியவர்கள் அனைவரும், அன்றைய தினம் கோடகநல்லூர் வந்து இறையருள் பெற்றுச் செல்லுமாறு, வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் சாணம்!

சித்தன் அருள்................... தொடரும்!

Tuesday, 15 October 2019

820 - சித்தன் அருள் - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமானின் சித்தன் அருளில்" "சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்" என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளியிட்டதை நீங்கள் அறிவீர்கள். பல அகத்தியர் அடியவர்கள் கேட்டுக்கொண்டதின் பெயரில், அந்த தொடரை ஒரு pdf  தொகுப்பாக மாற்றி உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். தேவைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட தொடுப்பிலிருந்து, டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Download Link:-

சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள் 

சித்தன் அருள்.................... தொடரும்!

Thursday, 26 September 2019

சித்தன் அருள் - 819 - தாமிரபரணி மஹாபுஷ்கர நிறைவு விழா!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இறைவன் அருளால்,  2018ம் ஆண்டு 12.10.2018 முதல் 23.10.2018 முடிய தாமிரபரணி மகா புஷ்கரவிழா சிறப்பாக  நடைபெற்றது.

இந்த ஆண்டு  (2019) குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்வதால் அதற்குரிய பிரம்மபுத்திரா நதியில் புஷ்கரவிழா கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக *தாமிரபரணி மகாபுஷ்கரத்தின் நிறைவு* நிகழ்ச்சியாக "தாமிரபரணி அந்திம புஷ்கர விழா"  1.11.2019 முதல் 4.11.2019 முடிய நடைபெற உள்ளது.

இந்த விழா நெல்லை குறுக்குத்துறை, திருப்புடைமருதூர் ஆகிய பகுதிகளில் நான்கு நாட்கள் வேதபாராயணம், நதிபூஜை, நதி நீராடல், சிறப்பு பூஜைகள் ஆகியவையுடன் நடைபெற உள்ளது. விழாவில் மடாதிபதிகள் கலந்து கொள்கிறார்கள். விழாக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

தாமிரபரணி புஷ்கர விழாவின் தொடக்கத்தில் கலந்துகொள்ளவேண்டும் என ஆசைப்பட்டு, பின்னர் முடியாமல் போன அகத்தியர் அடியவர்களுக்கு, இந்த ஜென்மத்தில் கிடைக்கும் ஒரு அரிய வாய்ப்பு.  01.11.2019க்கும் 04.11.2019க்கும் இடையில் ஒருநாள் சென்று தாமிரபரணியில் ஸ்நானம் செய்து, இறை அருள், உன்னத நதியாம் தாமிரபரணியின் அருள் பெற்று நலமாக வாழ வேண்டுகிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் நமஸ்காரம்!

சித்தன் அருள்................ தொடரும்!

Thursday, 1 August 2019

சித்தன் அருள் - 818 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள் - விட்டுப்போனவை!


வணக்கம், அகத்தியர் அடியவர்களே. சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள் நிறைவு பெற்றதும், ஒரு முறை வேகமாக படித்து பார்த்த பொழுது, அடியேன் எடுத்த குறிப்புகளில், ஒன்றிரண்டு விஷயங்களை, கூற விட்டுப்போனேன் என புரிந்தது. அவற்றை தொகுத்து, இங்கே தந்துள்ளேன்.

ஆசாரம் Vs ஆரோக்கியம்:-

உடலை இயக்கத்தை கட்டுப்படுத்துவது தச வாயுக்கள். அதை கண்டுபிடித்த பெரியவர்கள், தின வாழ்க்கையில், பல நல்ல வழிகளை முறை படுத்தி வைத்தார்கள். ஆனால் அந்த வழி முறைகள் என்ன செய்யும், உடலுக்கு எவ்விதம் நலம் தரும் என்று கூறாததினால், பல தலைமுறைக்கு ஒரு செயலின் உள்ளர்த்தம் புரிய வில்லை. உதாரணமாக, பிராணனும், அபானனும் (வாயுக்கள்) ஒன்றுக்கொன்று கைகோர்த்து, ஒருவரை ஒருவர் தன் பக்கம் இழுப்பதால், இதயத்துக்குள், மருத்துவர்கள் சொல்கிற "லப்-டப்" ஓசை உருவாகிறது. எப்பொழுது இந்த வாயுக்கள் ஒருவரை ஒருவர் கைவிட்டு தன் வழியில் செல்கிறதோ, அப்பொழுதே, அந்த  பிராணன் உடலை விட்டு வெளியேறப் போகிறது என்று அர்த்தம்.

இயற்கை உபாதைகளான, உடல் கழிவுகள் உடலைவிட்டு சரியான நேரத்தில் வெளியேற, அபானன் விரிந்து செயலாற்றுகிறது. எந்த வாயுவும், விரிவடைந்தால், உடலுக்குள் மிகுந்த சூட்டை உருவாக்கும். அபானன் விரிவடைந்து கழுத்து முதல், கால் வரை பரவி நிற்கும். அதை உடனேயே குளிரவைக்கவில்லை எனில், வேறு சில பிரச்சினைகளை கிளப்பிவிடும், என்றறிந்த பெரியவர்கள், கழிவறைக்கு சென்று வந்த பின், கால்களில், கைகளில் நீர்விட்டு கழுவி, பலமுறை வாய் கொப்பிளிக்க வேண்டும் என உரைத்தார்கள். அப்படி குளிர்ந்த, சமனான நீர்விட்டு சுத்தம் செய்து கொள்கிற பொழுது, நாம் அறியாமல், அபானனை குளிர்வித்து உடல் இயக்கத்தை காப்பாற்றுகிறோம், என்பதே உண்மை. இதையே, ஒரு சிலர் ஆசாரமாக, பாவித்து வருகிறார்கள்.

திருவண்ணாமலை - சித்தர்கள் பார்வையில் ஒரு அதிசயமாக பாவிக்கப் படுகிறதே!

திருவண்ணாமலை, அகத்தியர் கூற்றின்படி, நித்தம் நித்தம், ஒவ்வொரு நொடியும், அதிசயங்கள் நடக்கும் இடம். நிறைய மனிதர்களுக்கு, அவரவர் கர்மாவின்படி, அதிசயத்தில் பங்குபெறுகிற, காண்கிற வாய்ப்பை சித்தர்கள் அளித்துள்ளனர். அப்படிப்பட்ட நிகழ்ச்சியே, பலரது வாழ்விலும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது, என்பதும் உண்மை. ஒவ்வொரு கிரிவலமும், முறையாக, அமைதியாக, சிவநாம ஜெபத்துடன், உள் முனைப்புடன் செய்தால், அந்த ஒருவன்/ஒருவள், வந்த பொழுது வாங்கி வந்த மிகப்பெரிய கர்மா கட்டை, அவிழ்த்து, அண்ணாமலையார், தன் மீது கட்டிக்கொள்வர். இவனுக்கு/இவளுக்கு கர்ம பாரம் குறையும்.

மேலும், சித்த மார்கத்தில் ஒரு வழக்கு சொல் உண்டு.  "வட்டம் என்பது ஒரு நேர்கோடு" என. திருவண்ணாமலை கிரிவலம் அது என்னவென்று புரியவைக்கும்.

வாழ்க்கையில் மனிதன் இயல்பாகவே சேர்த்துக் கொள்கிற கர்மா என்பது, கிரிவலத்தின் பொழுது செய்கிற தானத்தினால், உடனேயே விலகும்.

கர்மா கழிதல்:-

மரணம் என்பது எல்லோருக்கும் உள்ள ஒரு நிலைதான். அது எங்கு, எப்பொழுது, எப்படி என்பதில்தான் வித்தியாசப்படுகிறது. உடல் அசந்து போகும்முன் பௌதீகத்தை சேர்த்துவிடவேண்டும் என்று முனைப்புக்காட்டுகிற மனிதன், உயிர் நீத்தபின் கூட வருவது அவனது பாபமும், புண்ணியமும் தவிர சேர்த்துவைத்த எந்த பொருளோ, தனது உறவோ, சுற்றமோ இல்லை என்பதை உணர்வதே இல்லையே. முனைப்பு அனைத்தும், உலகாயாத பொருட்களில், தன் குடும்பத்தாரிடம் மட்டும் வைத்துவிட்டு, தனக்கொரு பிரச்சனை வந்தால் மட்டும் சித்தர்களை நாடியில் தேடி வந்து, அன்றுவரை செய்த கெட்ட கர்மாவை, அவர்கள்  மொத்தமாக கழித்துவிட, வழி கூற வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். சாப்பிட்டது ஜீரணமாக, குறைந்தது ஒரு மணி நேரம் உடலுக்கு தேவைப்படுகிறதென்றால், எத்தனை ஜென்ம கர்மாவுக்கு, எவ்வளவு நேரம் வேண்டி வரும்? இதை ஏன் யோசிப்பதில்லை?

சித்த மார்கத்தில் தானம் செய்யும் முறை:-

சித்த வித்யார்த்திகள், தானம் செய்வது, தங்கள், மூச்சை. அது பார்க்கக் கிடைப்பது அரிது. அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பிப்பதாக வரித்துக் கொண்டு, இரு கையையும் சேர்த்து, இரு கட்டை விரலும் மூக்கின் இரு பக்கமும் வைத்து, இரு ஆள்காட்டி விரலும் ஒன்றாக சேர்த்து, சுழுமுனையில் இருக்க, மற்ற விரல்கள் மூக்கை மறைத்து நிற்க, பிறர் காணா வண்ணம், இடது மூக்கை அழுத்தி மூடி, வலது மூக்கு வழியாக காற்றை உள்ளிழுக்கும் பொழுது "ஓம் நமச்சிவாய" என்று மனதுள் தியானித்து, கும்பமானதும், "சிவாய நமஹ" என தியானித்து, அந்த நேரத்தில், இடது மூக்கின் வழி மூச்சை, மூடிய விரல்களை திறந்து, இறைவன் பாதத்தில் சமர்ப்பிப்பார்கள். 

சித்தன் அருள்.................. தொடரும்!

Thursday, 18 July 2019

சித்தன் அருள் - 817 - அகத்தியப்பெருமானின் நமக்கான அருள் வாக்கு!


[டவுன்லோட் செய்ய]
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், அகத்தியப் பெருமான், இறைவன் உத்தரவால், தன் சேய்கள் நலமாக வாழவேண்டும் என்பதற்காக, ஒரு அருள் வாக்கை அருளியுள்ளார். ஒரு அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த, ஒலிநாடாவிலிருந்து, முக்கியமான விஷயத்தை, சுருக்கமாக, அடியேன் புரிந்து கொண்ட வரையில் கீழே தருகிறேன்.

ஆனிமாத முடிவில் ஏற்பட்ட, சந்திர கிரஹணத்துக்குப்பின், நல்லதை செய்கிற ஏழு கிரஹங்களும், ராகு, கேதுவின் பிடிக்குள் மாட்டிக் கொண்டுவிட்டது. இதனுடன், பஞ்ச பூதங்களும், அந்த இரு கிரகங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. இது, கார்த்திகை மாதம் முடியும் வரை தொடரும். இந்த காலகட்டத்தில், நிறைய அனிச்சையாக, சம்பவங்கள் நடக்கும். மனித மனதை, எண்ணங்களை விஷப்படுத்தி, தனிப்பட்ட வாழ்க்கையில், குடும்பத்துக்குள், பொது வாழ்க்கையில், வேண்டாத விஷயங்களை நடத்திவைக்கும். இது, பக்தி மார்கத்தில், சித்த மார்கத்தில், மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களையும் தடுமாற வைக்கும். தேவை இல்லாத கெட்ட பெயர், பேச்சு, தூற்றுதல், போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கும். இவ்வுலகில், நடக்கும் அனைத்தும் இறைவன் அருளால் நடப்பதால், எவ்வளவோ பக்குவத்துடன் இருந்தாலும், சேய்கள் மனம் கலங்கத்தான் வேண்டிவரும். ஆகவே, இறைவன் உத்தரவால், அனைத்து சித்தர்களும், ரிஷிகளும், முனிவர்களும், அனைத்து ஆத்மாக்களையும், இந்த நேரத்தில், அருகிலிருந்து, வழி நடத்தி, காப்பாற்ற அனுப்பப்பட்டுள்ளனர். நாம் காப்பாற்றப்பட்டு, வழி நடத்திட, என்ன செய்ய வேண்டும் என ஒரு வழியையும் அகத்தியப் பெருமான் அருளியுள்ளார்.

இறைவனை, ஜோதி ரூபமாக, (அதுவே கல்யாணக் கோலம்), தினமும் காலையிலும், மாலையிலும் அவரவர், வீட்டில் ஒரு விளக்கேற்றி வைத்து, முடிந்தவரை, குறைந்தது ஒரு நாழிகையாவது, த்யானம் செய்யச் சொல்கிறார். நடப்பது எதுவாயினும், மனதுக்கு பிடிக்காததாக இருந்தாலும், பொறுமையை கைபிடித்து, பெரியவர்கள் இருக்கிறார்கள் என்ற திடமான நம்பிக்கையில், இறைவனிடம் அர்ப்பண மனோபாவத்துடன் இருக்கச்சொல்கிறார்.

இன்னொரு அகத்தியர் அடியவருக்கு, தனிப்பட்ட வாக்குரைத்த பொழுது, சூரியனில் எற்பட்ட மாற்றங்களால்தான், தமிழகத்தில், இத்தனை கடுமையான வெயிலும், தண்ணீர் பஞ்சமும் இருக்கிறது எனவும், அதற்காக நாம் கீழ்காணும் மூலிகைகளை, வாங்கி, பொடித்து, தினமும் காலையிலும், மாலையிலும், அவரவர் வீட்டில், தூப புகை போட்டு, முக்கியமாக, இது சித்தர்களுக்கு சமர்ப்பணம் என்று கொடுத்துவிட்டால், நிச்சயமாக, நாம் கொடுக்கும் மூலிகை தூபத்தை ஏற்றுக்கொண்டு,  வெம்மையிலிருந்து காப்பாற்றுவோம்! என வாக்குரைத்துள்ளார்.

இதை கேட்ட அடியவர், ஒரு வெம்மை நிறைந்த நாளில், அகத்தியப்பெருமான் கூறியதுபோல் செய்ய, மறுநாளே, வெம்மை குறைந்து, அன்று முழுவதும், மேகம் குடைபோட்டு வெப்பத்தை குறைத்ததாம்.

வேண்டிய மூலிகை பொருட்கள்:-

1.  கஸ்தூரி மஞ்சள்.
2.  வெண் கடுகு.
3.  பச்சை கற்பூரம்.
4.  மஞ்சள் தூள்.
5.  நாய் கடுகு.
6.  மருதாணி விதை.
7.  சாம்பிராணி.
8.  அருகம் புல்.
9.  வில்வ இலை.
10. வேம்பு இலை, குச்சி.
11. வன்னி இலை, குச்சி.
12. கருங்காலி குச்சி.
13. பேய் மிரட்டி குச்சி.
14. வெண் குங்குலியம்.
15. அகில்.
16. சந்தனம்.

மேற் கூறிய இரு விஷயங்களையும், "லோக ஷேமத்துக்காக" என்று வேண்டிக்கொண்டு செய்தால், "எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்குமோ, அப்படி வாழ்ந்துவிடு" என நம் குருநாதர் அடிக்கடி கூறுவது, எப்படிப்பட்ட நிலை என்று அனைவராலும் உணர முடியும்.

நலமாக வாழுங்கள்.

ஓம் ஸ்ரீலோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் அனைத்தும் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................... தொடரும்

Thursday, 11 July 2019

சித்தன் அருள் - 816 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


[அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்! ஒரு சின்ன வேண்டுதல்.  இந்த தொகுப்பை படிக்கும் முன், ஒவ்வொருவரும், தயை கூர்ந்து, சிரமம் பார்க்காமல், அடுத்த தலைமுறை நன்றாக வாழ வேண்டும் என பிரார்த்தித்துக் கொண்டு, 40 வருடங்களுக்கு ஒருமுறை, தரிசனம், ஆசி வழங்கும் இறைவன் அத்தி வரதராஜ பெருமாளை, காஞ்சிபுரம் சென்று தரிசித்து அவர் ஆசியை, பெற்று விடுங்கள். இனி, சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகளுக்கு செல்வோம்]

"சித்தர்கள் வழியில் ஒரு குறிப்பு உண்டு. அது, "குடலை கவனி. குறையின்றி வாழலாம்" என்பதே. எந்த ஒரு மனிதன், தான் உண்ணும் உணவை, தன் உடலுக்கு பொருந்துமா, குடல் ஏற்றுக்கொள்ளுமா, என்று கண்டறிந்து, அதற்கேற்ப, தன் உணவு பழக்கங்களை சீர்படுத்திக் கொள்கிறானோ, அவனுக்கு இறைவனே வியாதியை அருள தீர்மானித்திருந்தாலும், விதி அதை நடைமுறைப்படுத்த முடியாமல், திணறி, விலகி நிற்கும். இதுவும் ஒருவகையில் இறைவனை ஏமாற்றும் ரகசியம். அதனால்தான், சித்தர்கள், இறைவனே, விதியே இறங்கி வந்து தவறை செய்யத் தூண்டினாலும், திடமான, வைராக்கியமான புத்தியுடன், ஒரு மனிதன், "முடியாது! நான் தவறு செய்ய மாட்டேன்" என்று இரு" எனக் கூறுகிறார்கள். இன்னொன்று தெரியுமோ! எல்லா தவறுக்கான தண்டனையும், வயிற்றிலிருந்துதான் தொடங்குகிறது. "உப்பை, அதிகமாக சேர்க்காதே, அறவே தவிர்க்காதே" எனவும் சித்தர்கள் கூறுவார்கள். உப்பு சுவை பற்றை கூட்டும். ஏன்? நவகிரகங்கள், தங்கள் கடமையை எளிதாக மனிதரிடத்தில் செய்ய, தேர்ந்தெடுப்பது, உப்புதான், உணவுதான். அதுதான், அவர்கள் நகர்த்தும் காய்!" என்றார்.

"ஹ்ம்ம்! இப்படித்தான், நவகிரகங்கள், மனித வாழ்க்கைக்குள் நுழைகிறார்களா! ஏன் சுவாமி! இந்த நவகிரகங்கள் இல்லாமல், இருந்தாலும் மதியாமல், ஒருவனால் இவ்வுலகில் வாழ முடியாதா?" என்று எதிர் கேள்வியை கேட்டேன்.

"சித்த மார்கத்தில் செல்பவர்கள், நவகிரகங்களை சட்டை செய்வதில்லை. ஆனால் இகழ்வதும் இல்லை. காண நேரிடின், தொழுது, நீங்கள் உங்கள் வேலையை செய்யுங்கள், நாங்கள் எங்கள் வேலையை (இறைவனை சார்ந்து நிற்பதை) செய்கிறோம், என்று, இகழாமல், சென்று விடுவார்கள், என்றார்.

சித்த மருத்துவத்தில் ஒரு சிறு கேள்வி. தினமும், குடலை சுத்தம் செய்ய எதேனும் எளிய ஒளஷத மருந்து உள்ளதா? என்றேன்.

"உள்ளேதே! கீழா நெல்லி. இதை, தினமும் பிரார்த்தித்து பறித்து, வெறுமென மென்று வர, குடல் தொடர்பான, அத்தனை வியாதிகளும் சடுதியில் மறைந்து விடும். ஒன்றை கவனிக்கவும். சூரிய உதயத்துக்கு முன்னரும், அஸ்தமனத்துக்கு பின்னரும், இதன் இலையை பறிக்கக்கூடாது. அவ்வாறு செய்யின், சிசுக்களை கொன்ற குற்றத்துக்கு ஆளாவீர்கள். மேலும், முழு செடியையும், பறிக்காமல், அந்த செடி மீண்டும், மேலும் வளர வாய்ப்பளித்து, பிரார்த்தனையுடன், வேண்டிக்கொண்டு, பறிக்க வேண்டும். சித்தர்களில், போகர் பெருமான் அனைத்து மூலிகைகளுக்கும் சொந்தக்காரர் எனலாம். ஆகவே, அவரையும் வேண்டிக்கொள்வது, மிக சிறப்பாக அமையும்.நோயும் விரைவில் குணமாகும்" என்றார்.

சற்று நேர அமைதி நிலவியது. அடியேனிடம், கேள்விகள் தீர்ந்துவிட்டது போன்ற நிலை. இருப்பினும், அமைதியை கலைக்க விரும்பாமல், பெரியவரை உற்றுப்பார்த்தேன். அமைதியாக இருந்தேன்.

சில நொடிகளில், பெரியவர் கண்ணை மூடி ஏதோ ஒரு மோன நிலையில் அமர்ந்தார். அமைதியாக அமர்ந்து, பிறரை (இவரைப் போன்றவர்களை) கவனிப்பது, என்பது அடியேனுக்கு பிடித்தமான ஒரு செயல். அவர் அமர்ந்த நிலையை நோக்கினால், எதோ ஒரு சம்பாஷணையில் ஈடுபட்டுள்ளதுபோல் தோன்றியது. இடையில் பல முறை கை கூப்பினார், தலையசைத்தார். சிறு புன்னகை, ஆச்சரிய முக பாவம். சாந்தமாக கவனிப்பது, இடை புகுந்து கேள்வி கேட்பது போன்ற பாவனைகள், முகத்தில் தெரிந்தது.

கூட இருந்த மற்றவர்களை நோக்கியவுடன், அவர்கள் அமைதியாக இருக்கும் படி என்னை நோக்கி கை அமர்த்தினர்.

அடியேனும் அமைதியாக இருந்தேன், அவரின் கவன நிலை கலையும் வரை.

மேலும் 15 நிமிடங்கள் சென்றதும், கண்ணை திறந்தவர், யாரையும் குறிப்பிடாமல், பொதுவாக பேசினார்.

"நாளை காலை சூரிய உதயத்துக்கு முன் கிளம்பணும். குருநாதர் உத்தரவு. திரும்பி வர ஒரு மண்டலமாகலாம். யாரெல்லாம், கூட வாறீங்களோ, தயாராயிடுங்க" என்றார்.

அடியேன் குழம்பிப் போனேன். யாரும், எந்த எதிர் கேள்வியும், எங்கே போகிறோம் என்பது கூட கேட்காமல், தலையசைத்தனர். இவர்களுக்குள், அப்படி ஒரு கூட்டுப் பொருத்தம் மனதளவில் உள்ளது என்ற தீர்மானத்துக்கு வந்தேன். என் முகம், ஆச்சரிய பாவத்தின் வழி, எண்ணங்களை அவருக்கு காட்டிக் கொடுத்துவிட்டது.

"அது ஒன்றும் இல்லை. எங்கள் அனைவருக்கும் ஒரு புது ப்ரொஜெக்ட்டை, எங்கள் குருநாதர் கொடுத்திருக்கிறார். அதற்காக செல்கிறோம்." என்றார்.

"தங்கள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை, என்றால், அடியேன் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கலாமா?" என்றேன்.

"சரி கேள்!" என்றார்.

"இந்த விஞ்சான உலகத்தில இருக்கிற, தொலைபேசி, கைபேசி வழி செய்தி பரிமாறிக்கொள்வதுபோல், எப்படி உங்களால், தூரத்திலிருக்கும் ஒருவருடன் தொடர்பு கொள்ள முடிகிறது?" என்றேன்.

"இதை விளக்குவது மிக கடினம். ஏன் என்றால், தியானத்தில் அமர்ந்து பல நிலைகளை பிராணன் உதவியுடன் கடந்து, நிறைய கட்டுப்பாடுகளை அமைத்து, ஒரு நிலையை அடைய வேண்டும். அப்பொழுது, மிக தூரத்தில் கீழே விழும் சிறு குண்டூசியின் ஓசை கூட தெளிவாக கேட்கும். அங்கேயே நின்று விடாமல், பிற புண்ணிய ஆத்மாக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டால், இதுபோல், செய்தி பரிமாற்றம் செய்வது எளிது என்று புரியும். எங்கள் காலத்தில் இரு புண்ணிய ஆத்மாக்களுக்கு இடையே நடந்த சம்பாஷணை நிகழ்ச்சியை கூறுகிறேன். அதிலிருந்து, மொழி, தூரம் என்பது சம்பாஷணைக்கு ஒரு தடையே இல்லை என்று புரியும்.

திருவண்ணாமலையில் வாழ்ந்து, தன் அருட்பார்வையால் பலரது கர்மாவை உற்றுப்பார்த்தே, கரைய வைத்து, அவர்கள் வாழ்வில் விளக்கேற்றி வைத்தவர் ஸ்ரீ ரமண மகரிஷி.  அவர் மதுரையில் படித்து, பின் திருவண்ணாமலைக்கு வந்தபின், வேறு எங்கும் சென்றதில்லை. அவருக்கு, தமிழ், ஆங்கிலம், சமிஸ்க்ருதம் போன்ற மொழிகள் தெரியும். அவரது அதே காலத்தில் வாழ்ந்த ஒரு இளைய மகான், கேரளா நாட்டில் வாழ்ந்து, வர்க்கலை என்கிற இடத்தில் சமாதி பூண்ட ஸ்ரீ நாராயணகுரு என்கிற மஹான்.

நாராயண குருவுக்கு நிறைய சீடர்கள் இருந்தனர். ஒவ்வொருவரும், தினம் தினம் கேள்விகளை அவரிடம் கேட்டு, தெளிவடைந்து வந்தனர். இருப்பினும், அவருக்குள், நிறைய கேள்விகள் தங்கி நின்றது. இதை யாரிடம் கேட்டு தெளிவடைவது? எப்படி! என்கிற சிறு எண்ணம் வளர்ந்து பெருகியது. இவருக்கு, மலையாளம், சமிஸ்க்ரிதம் போன்ற மொழிகள் தெரியும்.

ஒரு நாள் இரவு, நாராயண குரு ஒரு கானா கண்டார். அதில் அவர் ஒரு சாதுவிடம் தன் கேள்விகளை கேட்பதாகவும், தெளிவு அடைவதாகவும் கண்டார். இவர் யார்! எங்கிருக்கிறார், என்ற கேள்வி உதித்ததும், "திருவண்ணாமலை" என்று யாரோ சொல்வது போல் கேட்டது. மறுநாளே, திருவண்ணாமலையை தேடி புறப்பட்டார், தன் சீடர்கள் ஒரு சிலருடன்.

எங்கெல்லாமோ தேடிவிட்டு, கடைசியில், ரமணர் இருந்த ஆஸ்ரமத்துக்கு அருகில் சென்றதும், தன்னை யாரோ, தோளில் தட்டி உள்ளே வா! என அழைப்பது போல் உணர்ந்தார், நாராயணகுரு. 

சீடர்களுடன் உள்ளே சென்று பார்த்த பொழுது, தான் கனவில் கண்ட அந்த சாது, ஸ்ரீ ரமண மஹரிஷிதான் என்பதை உணர்ந்தார். நாராயண குரு கைகூப்பி வந்தனம் செய்ய, மோனாவில் அமர்ந்திருந்த ஸ்ரீ ரமணா மகரிஷி, அதை விட்டு கீழிறங்கி, பத்மாசனம் அமைத்து, தரையில் அமர்ந்தார். அவரது உதவியாளர்கள் சுற்றி நின்றனர். உடனேயே, நாராயணகுரு, ரமணமஹரிஷியின் முன் பத்மாசனத்தில் அமர்ந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் உற்று நோக்கியபடி இருந்தனர். அரை மணி நேரம் சென்றது. ஒரு வார்த்தை கூட, வாய் திறந்து இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

கடைசியில், ஸ்ரீ ரமண மஹரிஷியே மலையாள மொழியில் "அப்போ, எல்லாம் பரஞ்ஞது போலே!" [அர்த்தம்: அப்போ, எல்லாம் சொன்னபடி!] என்று மலையாளத்தில் பேசினார். அவரது சீடர்கள் அசந்து போனார்கள். ரமண மகரிஷி மலையாளத்தில் பேசுகிறாரா! என்கிற ஆச்சரியம்.

பதிலுக்கு நாராயணகுருவும் தமிழில் "சரிங்க பெரியவரே! எல்லாம் நீங்கள் சொன்னபடி!" என பதிலளித்தார். இவரது சீடர்களும், அசந்து போய்விட்டனர்.

அனைவரும், ஒரு விஷயத்தில் ஒரே போல குழம்பி போயினார். அரை மணி நேரத்துக்கு மேல், ஒருவரை ஒருவர் ஒன்றுமே பேசாமல் உற்று பார்த்து இருந்துவிட்டு, என்னவோ ரொம்ப பேசியதுபோல், கடைசியில் சொல்லிக்கொண்டது, இது எப்படி சாத்தியம்? அங்கே உண்மையாகவே பேச்சு நடந்ததா? ஆம் எனில், அது பிறர் கேட்காமல், அந்த இருவர் மட்டும் கேட்ட உரையாடல், எந்த வகையை சேர்ந்தது!, என ஒரு ஆராய்ச்சியை தொடங்கு. நிறைய விஷயங்கள் உனக்கு புரியவரும். அதற்கான தகுதியை நீயே தேடி அடைய வேண்டும்." என்றார்.

ஒரு நிமிட அமைதிக்குப் பின், இளையவர் வந்து பெரியவரிடம் ஏதோ கூற, "சரி! நீ சென்று வா! நிறையவே பேசிவிட்டோம். அடுத்த முறை இறையருள், சித்தர் அனுமதி இருந்தால், இன்னும் நிறைய விஷயங்களை பேசலாம். அனைத்தையும், இவ்வுலகம் உய்ய தெரிவிக்கலாம். அனுமதி உண்டு. கேள்வி எழும், யார் அனுமதித்தார் என! அகத்திய பெருமானே அனுமதியளிப்பார். அப்படிப்பட்ட நிலையில், கேள்விக்கான பதிலாக "அகத்தியப் பெருமானை" கைகாட்டு! பூதகரம், பஞ்சு மிட்டாய் போல் ஆகிவிடும். திருச்சிற்றம்பலம்!" எனக் கூறினார்.

"சிவ சிதம்பரம்!" எனக்கூறி, கைகூப்பி வணங்கி, ஒரு வித்யார்த்தியின் மன நிறைவுடன் விடைபெற்றேன். 

அகத்தியர் அடியவர்களே! "சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்" என்கிற இந்த தொடர் இங்கு நிறைவு பெறுகிறது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடிகளில் அனைத்தும் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................ தொடரும்!