​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 16 November 2016

சித்தன் அருள் - 507 - அந்த நாள் > இந்த வருடம் 2016 - கோடகநல்லூர் - 1

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!


இறை அருளால், அகத்தியப் பெருமானின் அருள்வாக்கில் வந்து நம்மை ஆட்கொண்ட "புண்ணிய தினம்" கோடகநல்லூரில் இந்த வருடம் 12-11-2016 அன்று அகத்தியர் அடியவர்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நடந்த நிகழ்ச்சிகளை அடியேனின் பார்வையில் நின்று உங்களுக்கு சமர்ப்பிக்கலாம் என்று நினைத்த பொழுது உருவானதே, இந்த தொகுப்பு.

பல அகத்தியர் அடியவர்களின் துணையோடு, ஒரு மாதத்திற்கு முன்னரே திட்டமிடல் தொடங்கியது. அன்றைய தின பூஜைக்காக, அங்கு வரும் அகத்தியர் அடியவர்கள், குறைந்தது இறை தரிசனத்தை கண்குளிர கண்டு, அமைதியுடன் செல்வதற்காக, நிறையவே முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டி வந்தது. அதற்காக பலமுறை இறைவனை வேண்டிக்கொண்டு, கோடகநல்லூர் சென்று ஒவ்வொரு மனிதரின் உதவியை, அன்றைய தினம் கிடைக்க செய்ய பேசி முடிவு செய்தேன். கோவில் அர்ச்சகர், கோவில் நிர்வாகிகள், கோவில் மடப்பள்ளியில் பிரசாதம் தயாரிக்க ஒரு சமையல்காரர் போன்றவற்றை கோடகநல்லூரிலும், அனைத்து தெய்வங்களுக்கும் புது வஸ்திரம் சார்த்த நினைத்து அந்த வேலையை இன்னொருவரிடம், இப்படி பல விஷயங்களில் முன்னேற்பாடு செய்ய வேண்டி வந்தது. நாள் நெருங்க, நெருங்க தினமும் இறைவனிடமும், குறிப்பாக அகத்தியப் பெருமானிடமும், அன்றைய தினம் எல்லாம் நல்லபடியாக நடக்க, வந்திருந்து நடத்திக் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டேன். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற எண்ணம் எனக்குள் வலுத்தது. நாளும் நெருங்கி வந்தது. [இப்படி தொடர்ந்து விண்ணப்பத்தை அகத்தியரிடம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, அகத்தியரின் ஜீவநாடி படித்த ஒரு நண்பர், அகத்தியரின் ஒரு செய்தியை கூறினார். நாடியில் வந்த அகத்தியர் "எங்களிடம் பிரார்த்தனையை ஒருமுறை சமர்ப்பித்துவிட்டு, அமைதியாக இருந்தால் போதும். மறுபடியும், மறுபடியும் விண்ணப்பிக்கத் தேவை இல்லை. நினைவு படுத்த தேவையில்லை. சரியான நேரத்தில் எல்லாவற்றையும் இறையருளால் நாங்கள் நடத்திக் கொடுப்போம்" என்று கூறினார்.]


11/11/2016 இரவு 12.30 மணிக்கு பெருமாளுக்கான பூமாலை, பூசைக்கான பொருட்கள், பூ, தாமிரபரணி தாய்க்கு கொடுக்க வேண்டிய தாம்பூலத்துடன், எங்கள் ஊரிலிருந்து  புறப்பட்டோம்.  கோடகநல்லூர் சென்று சேர குறைந்தது ஐந்து மணிநேரம் ஆகும். சமீபத்திய பொருளாதார சீர்திருத்தத்தால் (500, 1000 ரூபாய்கள் அரசாங்கத்தால் திருப்பி பெறப்பட்டது), வாகன நெரிசல் எங்கும் இல்லை. அத்தனை ஏற்பாடும் செய்தவர்களுக்கு, கொடுக்க வேண்டிய பணத்துக்கு, கடைசி நிமிடத்தில் அகத்தியப் பெருமான் வழிகாட்டினார்.

இந்த சூழ்நிலையில், குறைந்தது 50 அகத்தியர் அடியவர்கள் அன்றைய தினம் கோடகநல்லூரில் வந்து, பெருமாளை தரிசனம் செய்தாலே பெரிய விஷயம் என்று மனதில் தோன்றியது. ஆனால், அன்றைய தினம் யார் யாரெல்லாம் உண்மையாக, ஆழ்மனதில் "இறைவா உன்னை காணவேண்டும்" என்று ஆசைப்பட்டார்களோ,  அவர்கள் எல்லோருக்கும் அகத்தியப் பெருமான், அங்கு வருவதற்கு அருளினார், என்றுதான் சொல்லவேண்டும். சுமார் 200 முதல் 250 அகத்தியர் அடியவர்கள் அன்று வந்திருந்தது, எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆனந்தமாயிற்று.

நாங்கள் செல்லும் வழியில் இரு அகத்தியர் ஆலயங்கள் உள்ளது. அவற்றின் முன் நின்று, "தாங்கள் வந்திருந்து, இறைவனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, இந்த புண்ணிய தினத்தை, நடத்தி தரவேண்டும்" என வேண்டிக் கொண்டேன்.

காலை 4.15 மணிக்கு கோடகநல்லூரில் பெருமாள் கோவில் தெருவில் நாங்கள் சென்ற வாகனம் திரும்பிய பொழுது, எங்கோ தூரத்தில் ஒரு மயில் கூவியது. "அட! பரவாயில்லை! ஓதியப்பரும் ஆசிர்வதித்துவிட்டார்!" என அனைவரும்  ஒரே நேரத்தில் நினைத்தோம், கூறினோம்.

எங்கும் நிசப்தம். அவ்வப்போது, இந்த நிலையை ஊடுருவி மயில், பறவைகள், இவைகளின் குரலோசை  வருடியது.

விடிவதற்காக காத்திருந்து, விடிந்தபின் தாமிரபரணி நதிக்கரையோரம் சென்று எட்டிப்பார்த்தால், தண்ணீர் மிக மிக குறைந்த அளவே ஓடிக்கொண்டிருந்தது. ஒருவர் நின்றால் அவரின் கீழ் முட்டுவரைதான் நீர் இருந்தது. 

ஆற்றின் நடு வரை நடந்து சென்ற போது இடுப்புவரை நீர்மட்டம் உயர்ந்தது. இதற்குள் சென்னையிலிருத்து ஒரு நண்பர் கூட வந்து சேர, அனைவரும் நதியின் நடுவில் நின்று, "அகத்தியர்" அருளிய "ஸ்நான மந்திரம்" சொல்லி நீராடினோம். கோவில் நடை திறக்கப்பட்டது.

குளித்து,  கரை ஏறி, கோவிலுக்குள் சென்று அனைத்தையும் வைத்துவிட்டு இறைவனை  தரிசித்தோம்.

"இதுவரை ஆட்கொண்டு வந்துவிட்டீர்கள். இனி உள்ளதையும் நிறைவாக நடத்திக் கொடுங்கள்" என்று வேண்டிக் கொண்டேன். வஸ்த்திரம் ஒருநாள் முன்னரே வந்துவிட்டதால், அபிஷேகம் இல்லாத அனைத்து விக்கிரகங்களுக்கும். அர்ச்சகர் முதல் நாள் இரவே புது வஸ்திரத்தை சார்த்தியிருந்தார். ஆதலால், நாங்கள் தரிசனம் செய்யும் பொழுதே பெருமாளும், தாயாரும் புதுவஸ்திரத்தில்தான் தரிசனம் கொடுத்தனர். மிக மகிழ்ந்து, பெருமாளுக்கான 5 1/2 அடி உயர தொங்குமாலை, ஒரு பெரியமாலை என அனைத்தையும் அர்ச்சகரிடம் கொடுத்து அணிவிக்க சொன்னோம். பெருமாள், தாயாருக்கு உடனேயே மாலையால் அலங்காரம் செய்யப்பட்டது. போதும், இனி, எல்லாம் நல்லபடியாக நடக்கும், என்ற நம்பிக்கை உறுதியாயிற்று, என்னுள்.

வெளியே வந்து, கருடாழ்வாரை தரிசித்து, பின் வந்தவர்களை பார்க்க, ஒரு பத்து பேர் இருந்தனர்.

"என்ன பெருமாளே! உங்கள் முகூர்த்தத்துக்கு இத்தனை பேர்தானா?" என்று பெருமாளை பார்த்து கேள்வி கேட்டு விட்டு, தாமிரபரணி தாய்க்கு தாம்பூலம் கொடுக்க தயார் செய்தோம்.

வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, ஒரு சிறு பச்சை நிற பட்டு, பச்சை நிற வளையல் 12, பூ, ஒரு விளக்கு, இவைகளுடன், கோவில் பின்புறமாக உள்ள நதிக்கரையில் வந்திருந்த அகத்தியர் அடியவர்களுடன் சென்று, பிரார்த்தனை செய்து, விளக்கேற்றி, ஆதவன் சாட்சியாக "சர்வலோகமும் சுபிட்சமாக இருக்கட்டும் - ஏற்றுக் கொள்ளுங்கள்" என வேண்டி மெதுவாக நதியில் விட, அந்த தாம்பூலம் மெதுவாக நகர்ந்து சென்றதை பார்த்தபொழுது, அன்னை தாமிரபரணி, இந்த சிறு காணிக்கையை ஏற்றுக்கொண்டுவிட்டாள் என மனதுள் தோன்றியது.


செய்தது சிறு விஷயமாகினும், அகத்தியர் சொல்வது போல், எந்த மனநிலையுடன் செய்கிறோம் என்பது முக்கியம் என்பதற்கு ஏற்ப அது அமைந்ததில் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

கோவிலுக்கு திரும்பி வந்த பொழுது ஒரு குழுவினர் அர்ச்சகரிடம் "நாங்கள் காக புசுண்டர் நாடில வந்த உத்தரவின் பேரில் வந்திருக்கிறோம். தாமிரபரணி நதிக்கரையில் ஒரு யாகம் செய்யச் சொல்லியிருக்கிறார். அதை இங்கே, கோவிலுக்குள் வைத்து செய்ய அனுமதி வேண்டும்" என்றனர்.

"கோவிலுக்குள், தனிப்பட்ட முறையில் யாகம் செய்வது கிடையாது. ஆதலால், உங்கள் உத்தரவின் பேரில்,  நீங்கள் நதிக்கரை படித்துறையில் தாராளமாக யாகம் செய்யலாம்" என்றிட, அவர்களும் மிக சந்தோஷமாக சென்று யாகம் நடத்தினர்.

எங்களுக்குள்ளும் ஒரு ஆனந்தம். அகத்திய பெருமான் அருளிய இந்த முகூர்த்தத்தில், காக புசுண்டரும், தன் அடியவர்களை அனுப்பி, தாமிரபரணி தாய்க்கு யாக பூசையை செய்ய உத்தரவிட்டிருக்கிறாரே என்பதில்.

இனி, பெருமாளின் அபிஷேக பூசைக்கான ஏற்பாடுகளை கவனிப்போம் என்று, உள்ளே சென்றோம்.

உள்ளே வந்த அர்ச்சகரிடம் "எல்லோருக்கும் அபிஷேக பூசையை பார்க்கிற பாக்கியம் கிடைக்க வேண்டும். ஆதலால்,  உற்சவ மூர்த்தியை, வெளியே உள்ள மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணி, அபிஷேகத்தை செய்ய வேண்டும்" என்றேன்.

"அதற்கென்ன! அதுதான் சரியும் கூட. ஆனால் ஒரு சில உதவிகள் நீங்கள் அனைவரும் செய்ய வேண்டிவரும். அதற்கும் ஆட்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். எத்தனை மணிக்கு அபிஷேகம் தொடங்கலாம்?" என்றார்.

"உதவிக்கான அடியவர்களை, நான் அவர்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். சுமார் 10.30க்கு மேல் அபிஷேகம் தொடங்கலாம். வருபவர்கள், வந்து சேர்ந்துவிடட்டும். எல்லோருக்கும் பார்த்து பரவசமடைகிற நிலையை கிடைக்க செய்வோம்" என்றேன்.

அதன்படி முடிவாயிற்று. உண்மையிலேயே, வந்திருந்த அகத்தியர் அடியவர்களை பாராட்டத்தான் வேண்டும். ஒவ்வொருவரும், தன்னால் இயன்ற சிறு சிறு வேலைகளை, உதவியை பெருமாள் திருமஞ்சனத்துக்கு செய்தனர். அவை என்ன, என்பதை  அடுத்த தொகுப்பில் பார்க்கலாம்.

அந்தநாள் > இந்தவருடம் 2016 ................. தொடரும்!

2 comments:

  1. Waiting for the next post
    Om Agasthiyaya namaha

    ReplyDelete
  2. ஐயா வணக்கம். நான் இந்த ஆண்டு கோடகநல்லூர் பச்சை வண்ணப் பெருமாள் கோவிலுக்கு வந்திருந்தேன்.மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.காலையில் பக்தர்களின் சார்பாக இட்லி கிடைத்தது.மதியம் பிரசாதம் அருமை.மாலை சிவன் கோவிலுக்கும் சென்றேன்.கூட்டம் அதிகம் இருந்தது.தயிர்சாதம் புளியோதரை வழங்கினார்கள்.சாப்பிட்ட
    பின்னர் பெருமாள் கோவிலில் இரவு தங்கி அதிகாலையில் எழுந்து தாமிரபரணி தாயிடம் என் பாபத்தை ஒப்படைத்துவிட்டு கோவிலில் விடியும் வரை அகத்தியர்,பெருமாள் நாமத்தினை உச்சரித்துக்கொண்டிருந்தேன்.பின் பெருமாளையும் அகத்திய பெருமானையும் சிவ பெருமானையும் மற்ற எல்லா சித்தர்களையும் வணங்கி அங்கிருந்து புறப்பட்டு அம்பை சென்றேன்.அங்கு அகத்திய பெருமான் லோபமுத்திரை தாயிடம் என் இன்னல் தீர வேண்டினேன்.பின்னர் அகத்தியர் நாமத்தினை 108 முறை வழக்கம் போல எழுதி அதை குருவின் திருவடிகளில் சமர்பித்து விட்டு அங்கிருந்து கிளம்பினேன்.பின் கல்லாறு சென்று பௌர்ணமி பூஜையில் கலந்து கொள்ள நினைத்தேன்.13/11/16 இரவு 11.45 க்கு மேல் கல்லாறு நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கினேன்.மேட்டுப்பாளையம் தாண்டியதிலிருந்தே மழை நன்றாக பெய்து கொண்டிருந்தது.நான் இறங்கும் போது அகத்தியர் அருளால் இன்னொருவரும் இறங்கி எனக்கு அகத்தியர் ஞானபீடத்திற்கு செல்ல வழிகாட்டினார்.மழையில் நனைந்து கொண்டே ஞானபீடத்தை அடைந்தேன்.அங்கு இருவர் உலாவிக்கொண்டிருந்தனர்.அவர்கள் என்னை வரவேற்று போர்வை விரிப்பு தலையனை அனைத்தும் கொடுத்தனர்.அங்கே அகத்திய பெருமானும் முருகப்பெருமானும் தரிசனம் தந்துகொண்டிருந்தனர்.அவர்களை வணங்கி இரவு12.00 மணிக்கு மேல் விளக்கேற்றி அகத்தியர் நாமம் சொல்ல ஆரம்பித்தேன்.27 முறை சொல்லி இருப்பேன் நான்கு திசைகளிலும் அடுத்தடுத்து பல்லிகள் சப்தமிட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அகத்திய பெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறார் என நினைத்துக் கொண்டேன்.பின்னர் தூங்கி 5.58 மணிக்கு விழிப்பு வந்து அகத்தியரை பார்த்தேன் அங்கு தங்கராசு அடிகளார் தியானத்தில் இருந்தார்.பின்னர் வாக்கிங் சென்றார்.பூஜைக்கு ஏற்பாடு செய்து கொண்டிந்தனர்.நான் குளித்து விட்டு ஐயாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டேன்.பின் பூ பறித்தல் உட்பட சிறுசிறு பணிகள் கிடைத்தது மகிழ்ச்சி தந்தது .அழகான ஆசிரமமாக அமைந்துள்ளது.பக்தர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்.பின் காலை உணவு வழங்கப்பட்டது. 10.00 மணி அளவில் பஜனை ஆரம்பித்தது. மதியம் 12.30 மணிக்கு யாகம் செய்தனர்.பின் அனைவரையும் ஆசீர்வதித்தார் அடிகளார்.பின்னர் 18 சித்தர்கள் உள்ள தியான கூடத்தில் அகத்தியர் சிலையை நிறுவினர்.பின் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.அனைவரும் பிரார்த்தனை விண்ணப்பம் எழுதி அகத்தியரிடம் சமர்பித்தோம்.பின் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்தேன்.என் துன்பம் பெருமளவு குறைந்து விட்டது. கோடகநல்லூர் பச்சை வண்ணப் பெருமாளுக்கும் சிவபெருமானுக்கும் லோபமுத்திரை தாயிக்கும் குரு அகத்திய பெனுமானுக்கும் மிக்க நன்றிகள்.மீதி துன்பத்தையும் அகத்தியர் துடைப்பார்.கல்லாறில் வரும் குட முழுக்கு விழாவிலும் கலந்து கொள்வேன்.

    நம்பகமான வலைப்பூ சித்தன் அருளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    மேலும் அகத்தியர் அருளால் 786 கொண்ட 10 ரூபாய் நோட் ஒன்றை கொடுத்தது தாங்களா அல்லது வேறொருவரா என்பதைத் தெளிவுபடுத்தவும்.

    ஓம் அகத்தீசாய நமஹ




    ReplyDelete