​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 10 November 2016

சித்தன் அருள் - 498 - "பெருமாளும் அடியேனும்" - 72 - வேங்கடவர் அகத்தியருக்கு உணர்த்துதல்!



சாந்திஹோமம் செய்ய முடியாமல் வேதவிற்பன்னர்கள் அவதிப்படுவதைக் கண்டு கலிபுருஷன் கை தட்டிச் சிரிப்பதைக் கேட்டதும், திருமலையில் இருந்த அகஸ்தியருக்கு கோபம் பொங்கியது.

தர்மச் செயல்களெல்லாம் அதர்மச் செயல்களாக மாறுவதை அகஸ்தியரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

நேராக வேங்கடவன் சந்நிதிக்குள் நுழைந்தார்.

கடுங்கோபத்துடன் அகஸ்தியர் வருவதைக் கண்டு வேங்கடவன் புன்னகையோடு வரவேற்றார்.

“ஐயனே! உங்களின் ஞானக் கண்ணில் கலிபுருஷன் செய்கிற செயல்களெல்லாம் தெரிகிறதா?” என்றார் அகஸ்தியர்.

“நன்றாகவே தெரிகிறது”

“அந்தக் கிராமத்தில் யாகம் செய்ய முடியவில்லை. மாமிசத்துண்டுகளை கலிபுருஷன் வீசுகிறான்.”

“செய்துவிட்டுப் போகட்டுமே”

“வேதம் பாதிக்கப்படுகிறது. அந்தணர்கள் துடிதுடிக்கிறார்கள். தர்மம் மெதுவாகச் செத்துக்கொண்டிருக்கிறது.”

“தெரியும்”

“ஐயனே! இதையெல்லாம் தெரிந்துமா நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்? அந்தக் கிராமத்து நல்லவர்கள் உங்களையே முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டியது உங்களின் கடமையல்லவா?”

“நியாயம்தான்.”

“அப்படியென்றால் நீங்கள் சென்று அவர்களுக்கு அடைக்கலம் தரவேண்டும். பொல்லாத கலிருருஷனை இந்தப் பூலோகத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும். இனியும் நீங்கள் இங்கு இருப்பது நல்லதல்ல.”

“அகஸ்தியரே! சற்று அமைதி காப்பீர்! எப்பொழுது எது எது நடக்க வேண்டுமோ அப்போது அது அது நடக்கும்.”

“இந்தத் தத்துவம் கேட்பதற்கு இனிமையாயிருக்கும். ஆனால்...”

“என்ன ஆனால்?”

“தேவா! தங்களுக்குத் தெரியாதது என்ன இருக்கிறது? இதையெல்லாம் நான் சொல்லியா தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்? எதற்கு மௌனம்? எதற்கு இந்தச் சோதனை?”

“அகஸ்தியரே! என்னைவிட பலவிதத்தில் பொறுமை காக்கும் நீங்கள் இன்றைக்கு ஏன் இத்தனை பதற்றம் அடைகிறீர்கள்?” சிரித்துக் கொண்டே கேட்டார் திருமலைவாசன்.

இதைக் கேட்டதும் அகஸ்தியர் வாய் பொத்தி மௌனியாக நின்றார்.

பின்பு திருமலை வாசனே பேசினார்.

“அகஸ்தியரே! பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டக் கூடாது. பிரம்ம தேவனால் படைக்கப்பட்டவன் கலிபுருஷன். பூலோகத்தில் இனி கலிபுருஷனின் ராஜ்ஜியம்தான்”

“தெரிந்த விஷயம்தானே?”

“அதனால்தான் சொல்கிறேன். கலிபுருஷன் தன் கடமையைச் செய்யட்டும். அதில் நான் இனி குறுக்கிடமாட்டேன்”

“வேங்கடவா!” என்ற அகஸ்தியர் “இதென்ன அவச்சொல்? நீங்களா இதைச் சொல்வது? அதையும் என் இரண்டு காதுகளாலும் கேட்கவேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறதே, இதென்ன கனவா? அல்லது நனவா?” என்று தன்னையும் அறியாமல் துடிதுடித்துப் போனார்.

பொறுமையாக அகஸ்தியரையே பார்த்துக் கொண்டிருந்த வேங்கடவன் “ஏன் இந்தப் பதற்றம்?” என்று சொல்லவும் கருடாழ்வார் அங்கு வரவும் சரியாக இருந்தது.

அகஸ்தியர் அசாதாரண நிலையில் இருப்பதை சூசகமாகப் புரிந்து கொண்ட கருடாழ்வார் கலிபுருஷனை நினைத்துக் கோபம் கொண்டார். வேங்கடவன் உத்தரவு கொடுத்தால் அடுத்த நிமிடமே கலிபுருஷனைக் கொத்தித் தூக்கி வந்து விடலாம் என்றும் மனத்திற்குள் பொருமிக் கொண்டார்.

“அகஸ்தியரே! நான் சொன்னதை மிகத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர். கலிபுருஷனால் தான் இந்தப் பூலோகம் அழியப் போகிறது. இனி பூலோக மக்கள் ஒவ்வொருவரும் திசைமாறி அக்கிரமங்கள் செய்யப் போகிறார்கள். அதற்குப் பின் பிரளயம் ஏற்படப் போகிறது. எனவே கலிபுருஷன் மீது கோபம் கொள்வதில் அர்த்தமே இல்லை” என்று சொன்னதும்,

“அப்படியென்றால் பலமுறை அவன் உங்களால் துரத்தப்பட்டு, விரட்டியடிக்கப் பட்டிருக்கிறானே, அது எதனால்?” என்று பவ்வியமாக அகஸ்தியர் கேட்டார்.

“யாரெல்லாம் கலிபுருஷனால் பாதிக்கப்படுகிறார்களோ அவர்கள் முழுமனத்தோடு என்னைச் சரண் அடைந்தால் அவர்களை கலிபுருஷனிடமிருந்து காப்பாற்றுவேன். என்பதைத்தான் எடுத்துக் காட்டினேன்.” என்று முடித்தார் வேங்கடவன்.

“சரி! இப்போது அந்தக் கிராமத்து மக்கள் தங்களையே முழுமையாக நம்பி சாந்தி ஹோமம் செய்யத் துடிக்கிறார்கள். தாங்கள் அங்கு சென்று அவர்களுக்கு ஆதரவு சொல்லி சாந்தி ஹோமம் நடத்த உதவி செய்யக்கூடாதா?”

“எனக்கும் ஓர் எல்லை உண்டு. அதைத் தாண்ட விரும்பவில்லை”

“இதென்ன புதுச் செய்தியாக இருக்கிறதே! உங்களுக்கு ஏது எல்லை வேங்கடவா?”

“அது பிரார்த்தனை செய்கிறவர்களின் பாபபுண்ணியத்தைப் பொறுத்தது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அந்தணர்கள் என்மீது பக்தியை வைத்திருந்தாலும் பிறர் சொத்தை அபகரித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ பஞ்சமா பாபத்தில் ஒன்றைச் செய்து விட்டதால் அவர்கள் கையால் எந்த ஒரு சுப நிகழ்ச்சி தெய்விக நிகழ்ச்சி நடந்தாலும் அந்தச் செயலுமே பாபப்பட்டது போலாகும். அதனால்தான் அமைதியாக இருக்கிறேன்.”

“இதற்குப் பெயர்தான் எல்லைக் கோடா?”

“ஆமாம்! அவரவர்கள் செய்கிற பாபபுண்ணியத்தை வைத்துத்தான் நான் அவர்களைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது”

“வேங்கடவா! நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எல்லா மனிதர்களும் ஏதாவது ஒரு விஷயத்தில் பாபம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் அத்தனை பேரையும் கைவிட்டுவிடுவீர்களா?”

“இப்படிக் கேட்டால் எப்படி? யார் குறைந்த அளவு பாபம் செய்கிறார்களோ அவர்கள் என் பாதாரவிந்தத்தில் விழட்டும். பிறகு பார்க்கலாம்”

“வேங்கடவா! அப்படியென்றால் கலிபுருஷன் பாடு கொண்டாட்டம்தான்”

“சந்தேகமில்லாமல். அதுமட்டுமா? மனிதர்களை கலிபுருஷன் எப்படியெல்லாம் ஆட்டுவிக்கப் போகிறான் என்பதை அகஸ்தியரும் பார்க்கப் போகிறார். இந்தக் கருடாழ்வாரும் பார்க்கத்தான் போகிறார்.” என்றார் திருமலைவாசன்.

“வேங்கடவா! ஒரு சிறு வேண்டுகோள்”

“என்ன?”

“இந்த ஒரு முறை மட்டும் அந்தக் கிராம மக்களை கலிபுருஷனிடமிருந்து காப்பாற்றிக் கொடுங்கள். அங்கு சாந்தி யாகம் நடத்த உதவி செய்யுங்களேன். அல்லது நீங்கள் உத்தரவு கொடுத்தால் உங்கள் சார்பாக நானே அங்கு நேரில் சென்று யாகத்தை நடத்திவிட்டு வருகிறேன்.”

“அகஸ்தியரே! உங்கள் மனம் மிகவும் கிரக்கமான குணத்தைக் கொண்டது. தலையாய சித்தராகவும் இருப்பதால் உங்களை மாற்ற முடியாது. கலிபுருஷனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்போம். அவன் தவறு உச்சக்கட்டத்திற்குப் போகும்பொழுது ஏதேனும் ஒரு வழியில் அதனைத் தடுத்து நிறுத்துவோம்” என்றார் வேங்கடவன்.

கருணைக்கே சொந்தமான வேங்கடவன் இப்படிச் சொன்னது எல்லாருக்கும் வருத்தம்தான். இருந்தாலும் வேங்கடவன் நல்லதே செய்வார் என்ற நம்பிக்கையில் அகஸ்தியர் விடைபெற்றார்.

கிராமத்தில்...

யாக குண்டத்தின் மீது தண்ணீரைக் கொட்டி யாகத்தை நடத்தவிடாமல் செய்து, அதனால் ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்த கலிபுருஷனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

‘இத்தனை தொல்லைகள் தந்திருக்கிறோம். கோவில்களில் ஆகம விதியைத் தடுத்து பூஜை இல்லாமல் செய்து விட்டிருக்கிறோம். இதெல்லாம் வேங்கடவனுக்குத் தெரிந்தும் ஏன் இதைத் தடுக்க முன்வரவில்லை? அப்படியென்றால் திருமலைவாசன் வேறு ஏதாவது சூட்சுமம் வைத்து செயல்படப் போகிறாரா? அதன் விளைவு எப்படி இருக்கும்? அந்த விளைவை எப்படி எதிர் காலத்தில் சமாளிக்கப் போகிறோம்?’ என்று யோசித்தான் கலிபுருஷன்.

இப்பொழுது கலிபுருஷனுக்கு உதவ அசுர குருவான சுக்கிராசாரியாரைத் தவிர வேறு யாருமே இல்லை என்று தோன்றியது. பேசாமல் அவரிடம் சென்று சரணாகதி அடைந்து விட்டால் அசுரர்களின் மொத்த பலமும் தனக்குக் கிடைத்து விடும். இதை வைத்து தன் விருப்பத்தைக் கச்சிதமாக நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தான். நேராக சுக்கிராசாரியாரிடம் சென்றான்.

எப்படியும் கலிபுருஷன் தன் பக்கம்தான் வந்தாக வேண்டும் என்பது முன் கூட்டியே அசுரகுருவான சுக்கிராசாரியாருக்குத் தெரியும் போலும். ஆனாலும் அதை நேரிடையாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

கலிபுருஷனின் வேண்டுகோளை மிக நன்றாகக் கேட்டார். பின்னர் “கலிபுருஷா! இன்று முதல் நீயும் நானும் நண்பர்கள். உனக்கொரு கஷ்டம் வந்தால் நான் உன்னை விடமாட்டேன். என் அரக்கர் வம்சம் எல்லாருமே உனக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இது வரை தனிநபராக இருந்தாய். இன்று முதல் எங்களோடு கூட்டுச் சேர்ந்து கொண்டாய்.”

“அந்தக் கிராமத்தில் நீ நினைத்தபடி யாகத்தை நடத்த முடியாதபடி செய்து விட்டாய். இதுவே உனக்குக் கிடைத்த பெரும் வெற்றி. இப்போது முதல் என்னுடைய அரக்கர்கள் அனைவரும் பூலோகத்திற்குப் படையெடுப்பார்கள். எங்கு எங்கு யாகங்கள், தர்மங்கள் நடக்கிறதோ அதைத் தடுத்து நிறுத்துவார்கள்”

“அதுமட்டுமல்ல, கோவில்கள் இனி கொடியவர்களின் கைக்கு மாறும். நைவேத்தியம், பூஜை அனைத்தும் தடுக்கப்படும். கோவில் சொத்துகளைக் கொள்ளையடிக்கப் பொதுமக்கள் தூண்டப்படுவார்கள். பிற்காலத்தில் கோவில்கள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்படும்.”

“ஏன் இன்னும் வேடிக்கை பாரேன்! பிற்காலத்தில் கோவில்களில் சிலைகளே இருக்காது. அத்தனையும் கொள்ளயடிக்கப்பட்டு உருக்கப்பட்டுவிடும்.” என்றார் சுக்கிராசாரியார்.

“அப்படியா!” என்று ஆனந்தப்பட்டான் கலிபுருஷன்.

அடுத்த விநாடியே புற்றீசல் போல் அரக்கர்கள் கூட்டம் பூலோகத்திற்குப் பறந்தது. ரிஷிகள், ஞானிகள் யாகங்கள் செய்ய விடாது தடுத்தனர். பசுக்கள் வெட்டப்பட்டன. நாட்டில் கலிபுருஷனின் ஆதிக்கம் உண்டாயிற்று.

சித்தன் அருள்...................... தொடரும்!

4 comments:

  1. படம் மிக அருமையாக, சிறப்பாக, விளக்கப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்றவாறு வரைந்த திரு சரவணனுக்கு, மிக்க நன்றி. வாழ்த்துக்கள். மேலும் தொடரட்டும் உங்கள் பணி. அகத்தியர் அருள் உங்களுக்கு உண்டு.

    ReplyDelete
  2. என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்

    முன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன

    மன்னு நமுசியை வானில் சுழற்றிய

    மின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ.

    ReplyDelete
  3. என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்

    முன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன

    மன்னு நமுசியை வானில் சுழற்றிய

    மின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ.

    ReplyDelete