​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 3 February 2023

சித்தன் அருள் - 1282 - தரித்திரன்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

என்னய்யா, இப்படி ஒரு தலைப்பு, உமக்கு என்னவாயிற்று என்று நீங்கள் அனைவரும் ஒரு நிமிடம் யோசிக்கலாம். யாரையோ திட்டுவது போல் உள்ளதே! அதற்குத்தான் இந்த வார்த்தையை உபயோகிப்பார்கள். இந்த வலை தொகுப்பில் கூட பிற சித்தர்களின் வாக்குகளின் இடயிலூடே இந்த வார்த்தை வந்திருப்பதை கவனித்திருக்கலாம். ஒரு விளக்கம் தந்து பலரின் மனதில் உள்ள தவறான எண்ணத்தை விலக்க, இந்த தொகுப்பு!

"தரித்திரன்" என்ற வாக்கு "தரி" + "அரன்" என பிரியும். இன்னொரு வித விளக்கம் என்னவென்றால், "அரனை தரித்தவன்" "சிவனை தரித்தவன்". "தரித்திரன்" என்ற வார்த்தை என்னைத்தான் சுட்டிக்காட்டும் என்பதை "சிவபெருமானே" தலையாட்டி ஒப்புக் கொண்டுள்ளார். அது என்ன?

சிவ பெருமானால் தலையாட்டி ஆமோதிக்கப்பட்ட, ருத்ரம் என்பது தக்ஷனால் பல ஜென்மங்கள் எடுத்து உருவாக்கப்பட்டது. அவர் சிறந்த சிவ பக்தர். சிவபெருமானின் அருமை பெருமைகளை விளக்கி மந்திரங்களாக உருவாக்க ஆசைப்பட்டார். சிவபெருமானை நேரில் கண்டு தன் அவாவை கூறி "அப்படி அடியேன் இயற்றும் போது நீங்கள் அங்கே அமர்ந்து ஒவ்வொரு வார்த்தையையும் தலையாட்டி, ஆமோதித்து ஏற்றுக் கொண்டால் தான் அந்த வார்த்தைகள் மந்திரங்களில் இடம் பெறும். இல்லையென்றால் அந்த வார்த்தைகள் மந்திரங்களில் இடம் பெறாது" என வேண்டிக் கொண்டார்.

இறைவனும், தன் பக்தனின் மன எண்ணத்தை உணர்ந்து, வந்து அமர சம்மதித்தார்.

ஒரு நல்ல முகூர்த்தத்தில், சித்தர்கள், முனிவர்கள், தேவாதி தேவர்கள் சூழ்ந்து நிற்க, சிவபெருமான் பார்வதி தேவியுடன் வந்து தக்ஷன் முன் அமர்ந்தார்.

முதலில் விநாயகப்பெருமானை துதித்து மந்திர வாக்குகளை சிவபெருமான் பாதத்தில் சமர்ப்பித்தார். சிவபெருமானும், அவர் கூறிய வாக்குகளை தலையசைத்து ஆமோதித்தார். அவ்வாக்குகள் மந்திரத்தின் தொடக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆக்கல், காத்தல், அழித்தல் என மூன்று நிலைகளில் இருப்பதும் நீயே என்றார்.

"ஆம்" என தலையசைத்தார்.

"பஞ்சபூதங்களாக இருப்பதே நீ தான்" என்றார்.

அதற்கும் "ஆம்" என்று தலையசைத்தார்.

இவ்வாறு ருத்திரம் மெதுவாக உருவெடுத்து வளர்ந்தது.

அருகில் அமர்ந்திருந்த பார்வதி தேவி அனைத்தையும் உணர்ந்து, ரசித்துக் கொண்டிருந்தாள்.

"அனைத்து கோள்கள், நட்சத்திரங்கள், பிரபஞ்சம், உயிர்கள் நீயே, உனக்கே சொந்தம். ஆகையால், மிகப்பெரும் கோடீஸ்வரன் நீ தான்!" என்றார்.

"ஆம்" என்று தலையசைத்தார்.

பார்வதி தேவிக்கு சந்தோஷம் மிகுந்தது. தன் கணவனை கோடீஸ்வரன் என்று ஒப்புக்கொண்டதால்.

அதற்கு அடுத்த நிமிடம் தக்ஷன் கூறினார்,

அத்தனை பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், மிகப் பெரிய "தரித்திரனும்" நீ தான், என்றார்.

கேட்டுக்கொண்ட சிவபெருமான் "ஆம்" என அதற்கும் தலையாட்டினார்.

"கோடீஸ்வரன்" என்று கூறிய அடுத்த நொடியில், தன் புருஷனை  "தரித்திரன்" என்று கூறி கேட்ட பார்வதிக்கு, கோபம் தலைக்கு ஏறியது.

"எவ்வளவு தைரியம் இருந்தால், தங்களை நோக்கி தரித்திரன் என்று இவன் கூறுவான்? அதற்கு நீங்களும் ஆமோதிக்கின்றீர்கள்" என்றாள் கோபம் கலந்த மன வருத்தத்துடன்!

பார்வதி தேவியின் கோபத்தை கண்டு தக்ஷன் ஒரு நிமிடம் கலங்கி போய்விட்டார்.

அனைத்தையும் கண்ட இறைவன், "தேவியே! அவன் கூறுவது உண்மையே! அதன் அர்த்தத்தை பிறகு உரைக்கிறேன். இப்பொழுது விட்டுவிடு!" என்றார்.

"இல்லை அய்யனே! இப்பொழுது என் சந்தேகத்துக்கான விடை தெரிய வேண்டும். இல்லை என்றால், இந்த வாக்கியங்கள் மந்திரத்துள் பதிந்து விடும். ஆகவே, இப்பொழுதே தெளிவு படுத்துங்கள்" என்றாள்.

"இதன் எளிய பொருளை விளக்குகிறேன். உலகத்தில் உள்ள அனைத்தும் நான்தான். எனக்கே சொந்தம். அதனால் நான் கோடீஸ்வரன் ஆகிறேன். அதே நேரத்தில், இவை அத்தனையின் மீதும் எனக்கு பற்றில்லை. பற்றில்லையேல், ஒன்றுமில்லாதவனாகிறேன். ஒன்றுமில்லாத நிலை (தரித்திர நிலை) என்பது என்னை வந்து சேரும். ஆகவே! இரண்டுமே நான்தான்!" என்றார்!

அடியவர்களே! பெரியவர்கள் உபயோகப்படுத்துகிற ஒவ்வொரு வார்த்தைக்கும், பல அர்த்தங்கள் உண்டு. அதை சரியாக புரிந்து கொள்வதில்/எடுத்துக் கொள்வதில் தான் வாழ்க்கை செம்மையாகும்.

இன்னொரு விஷயம் உங்களிடம் தெரிவிக்கிறேன். பெரியவர்கள், திட்டினாலும், சத்தம் போட்டாலும், ஒரு விஷயத்தை அடிப்படையாக புரிந்து கொள்ள வேண்டும். நம் செயலால் கரைக்க முடியாத கர்மாவை அவர்கள் கரைக்கிறார்கள் என்று, நம் கர்மாவை கரைக்க/ஏற்றுக்கொள்ள இவ்வுலகில் யார் வருவார்? சித்தர்களன்றி!

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    ReplyDelete
  2. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    நன்றிகள் ஐயா

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நம
    நன்றி ஐயா🙏🌹🙏

    ReplyDelete
  4. இதை ருத்திரத்தில் ஏற்கப்பட்டதா.
    தக்ஷன் பார்வதிய்ன் தமையனார் தானே.
    அந்த காலத்திலேயே வஞ்ச புகழ்ச்சி உள்ளதோ
    சிலவற்றை பாதியில் விட்டு விட்டீரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      ருத்திரத்தில் ஏற்கப்பட்டது. மொத்தமாக எழுத்துவதானால், நேரம் போதாது. ஆதலால் சுருக்கி கூறியுள்ளேன். இது போதும் என்று தோன்றியது.

      அக்னிலிங்கம்!

      Delete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Agastheeswaraya Namaha 🙏🙏🙏

    ReplyDelete