​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 30 March 2017

சித்தன் அருள் - 627 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு 

இறைவன் கருணையாலே, மனிதர்களின் எண்ணங்கள், அவர்களுக்குள் தோன்றுகின்ற விதவிதமான சிந்தனைகள், பல்வேறு குழப்பங்களை வாழ்க்கையிலே ஏற்படுத்திவிடுகிறது. இறைவனின் கருணையாலே நாங்கள் கூறவருவது யாதென்றால் சாத்திரங்களும், சாத்திரங்களை ஒட்டி நடக்கவேண்டிய நிகழ்வுகளும் ஒருவிதத்தில் மெய்தான், யாங்கள் மறுக்கவில்லை. ஒவ்வொன்றிற்கும் ஒரு மரபு இருக்கிறது. நல்ல தினம், சிறப்பான கோட்களின் ஆட்சி கொண்ட தினம், சுப ஹோரை, சுப நக்ஷத்திரம் இன்னும் திதி போன்றவற்றையெல்லாம் பார்க்கத்தான் வேண்டும், நாங்கள் மறுக்கவில்லை. இவற்றின் ஆளுமை மனிதன் மீது என்றென்றும் இருந்துகொண்டேதான் இருக்கிறது, ஒவ்வொரு மனிதனின் கர்மவினைகளை அனுசரித்து. ஆயினும்கூட எல்லா நிலையிலும் இப்படியெல்லாம் எண்ணி அச்சம் கொண்டிடத் தேவையில்லை. மெய்யான இறைபக்திக்கு காலங்களோ, வேறு சாத்திரங்களோ தேவையில்லை. ஆழ்ந்த பக்தியும், திடமான பக்தியும், மனித நேயமும் கொண்டு எந்த இடத்திலும் இறைவனை ஒரு மனிதன் வழிபடலாம். அப்படி வழிபட வேண்டியதற்குரிய ஒரு குடிலை அமைத்துக்கொள்ளலாம். இது அடிப்படை ஆதார விதியாகும். அதிலும் பரம்பொருளை மூத்தோன் எனப்படும் விநாயகப்பெருமான் வடிவத்திலே மிக எளிமையாக அணுகலாம் என்பதற்காகத்தான் முழுமுதற்கடவுள் என்றும், மூத்தோன் என்றும், வேழமுகத்தோன் என்றெல்லாம் அழைக்கப்பட்டு அனைத்து பூஜைகளிலும், அனைத்து சுப நிகழ்வுகளிலும் முன்னதாக விநாயகர் வழிபாட்டை செய்வது மரபாக இருந்துவருகிறது. ஒரு எளிய வடிவமாக பரம்பொருள் காட்சியளிக்கக்கூடிய நிலையிலே அந்த விநாயகப்பெருமான் வடிவம் இருக்கிறது. இந்த வடிவத்திற்கும், பக்திபாவனைக்கும் எத்தனையோ தொடர்பிருக்கிறது. அஃது ஒருபுறம் இருந்தாலும் மஞ்சளிலே பிடித்து வைத்தாலும், பசுஞ்சாணத்திலே பிடித்து வைத்தாலும் விநாயகப்பெருமான் என்று எண்ணிவிட்டால் அது விநாயகப்பெருமான்தான். எஃதாவது ஒன்றை அஃது பரம்பொருள், அதிலே பரம்பொருள் உறைகிறது என்று மெய்யாக யார் எண்ணிப்பார்த்தாலும் அங்கே பரம்பொருள் இருப்பதும், வெளிப்படுவதும் உறுதி. இறைவனின் கருணையாலே இந்த உன்னதமான கருத்தினை மனதிலே கொண்டு ஆன்மீக விஷயங்களை பார்க்கும்பொழுது பல்வேறு விதமான தேவையற்ற குழப்பங்கள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மனிதர்களிடம் இருந்துவருகிறது. அதற்கும் எத்தனையோ காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

பல்வேறு தருணங்களில் மனிதர்களுக்கு அச்சம் வந்துவிடுகிறது. ‘குலதெய்வத்தை வணங்கவில்லை. எனவே குலதெய்வம் சினம் கொண்டுள்ளது. இந்த தெய்வத்தை வணங்கவில்லை. எனவே அந்த தெய்வம் சினந்து நம் குடும்பத்திற்கு துன்பத்திற்கு மேல் துன்பம் தருகிறது, என்றெல்லாம் மனிதர்கள் பல்வேறு தருணங்களில் எண்ணுவதும், பேசிக்கொள்வதும், பல ஆன்மீகவாதிகளும் இதை உறுதிப்படுத்துவதுபோல் நடந்துகொள்வதும் தேவையற்ற கருத்தாகும். கோடானுகோடி பாவங்களை மனிதர்கள் அன்றாடம் செய்கிறார்கள். எவையெல்லாம் செய்யக்கூடாது என்று தெரிந்தாலும் எஃதாவது ஒரு காரணத்தை சுட்டிக்காட்டி ‘நான் இதனால் இந்தத் தவறை செய்யவேண்டியிருக்கிறது' என்று சமாதானம் கூறிக்கொண்டு தொடர்ந்து செய்துகொண்டே வருகிறான். பல மனிதர்களும் அவ்வாறு பலகீனமான மனம் கொண்டிருப்பதால், எல்லாவகையான குற்றங்களையும் இந்த உலகிலே காலகாலம் செய்து கொண்டேயிருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் சினம் கொண்டிடாத இறைவன், ஆகம விதியில் பிழை ஏற்பட்டுவிட்டாலோ அல்லது தன்னை வந்து மனிதன் வணங்கவில்லை என்பதாலோ சினம் கொள்ளவா போகிறார்? ஒருபொழுதும் அப்படியெல்லாம் இறைவன் சினம் கொள்வதில்லை. தான் படைத்த உயிர்கள் பக்குவம் அடையவேண்டும். பக்குவம் அடையாமல் பாவத்தை செய்து, செய்து மீண்டும் மாயையில் வீழ்கிறார்களே? என்று எண்ணி வேண்டுமானால் வருத்தம் கொள்ளலாம். இது கூட வார்த்தைக்காக நாங்கள் கூறுவது. எந்தவிதமான உணர்வுக்கும் ஆட்படாத நிலைதான் பரம்பொருளின் நிலை.

4 comments:

  1. எந்தவிதமான உணர்வுக்கும் ஆட்படாத நிலைதான் பரம்பொருளின் நிலை.

    அகத்தியருக்கு நான் மிகவும் கடன் பட்டுள்ளேன் ....

    ReplyDelete
  2. மிகுந்த மன உளச்சல் கொண்டு தவித்து போயி இருந்த என்னக்கு இன்றைய பதிவு அமுதம் போன்று வந்தது. சுற்றம் எல்லாம் சுடும் நெருப்பாக வந்தது என்னுடைய கர்ம வினை

    வினை தீர குருநாதர் வேழ முகத்தோன் உடன் வந்து விட்டார்

    என்னுடைய பாவ உடல் சுத்தம் பெற , உள்ளம் தெளிவாக அன்னை லோபாமுத்திரை நீராடி ஆசி அருள இந்த நாள் பொன்னாள்

    அருள் வாக்கு பதிந்த உங்கள் கருணைக்கு நன்றி

    ReplyDelete
  3. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  4. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
    இது என்னுடைய முதல் பதிவு.திரு.கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கும் திரு.அக்னிிலிஙங்கம் அருணாசலம் ஐயா அவர்களுக்கும் இதயம் நெகிழ்ந்து ஆசிகள் வேண்டி வணக்கங்கள்.
    சித்தன் அருள் வளைதளத்தை தற்பொழுதான் காணும் பாக்கியம் பெற்றேன்.அகத்திய பெருமானின் அடிபணிந்து வணங்கி அவர்தம் அடியவர்களை தொடரும் பாக்கியம் பெற வழி காட்டியமைக்கு மிகுந்த நன்றி.

    ReplyDelete