​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 13 March 2017

சித்தன் அருள் - 610 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

விதியை மாற்றத்தான் யாங்களும், எங்கள் நிலையிலிருந்து மிக, மிகக் கீழே இறங்கி பல்வேறு தருணங்களில், பல்வேறுவிதமான மனிதர்களுக்கு இங்கு ஜீவ அருள் ஓலையிலே ஏறத்தாழ 9 ஆண்டுகாலம் எந்தவிதமான  (பாவ ஆத்மா, புண்ணிய ஆத்மா என்ற) கணக்கினையும் பார்க்காமல், இன்னும் கூறப்போனால், புண்ணியம் அதிகம் செய்த, செய்கின்ற ஆத்மாக்களைவிட பாவங்களை அதிகம் சுமந்து கொண்டிருக்கின்ற ஆத்மாக்களுக்கும் சேர்த்து வாக்குகளை, விதவிதமாக உரைத்திருக்கிறோம். ஆயினும்கூட எப்படி  ஒரு செவிடன் செவியிலே எதைக்கூறினாலும் ஒன்றும் நுழையாதோ, அதைப்போலதான் நடந்துகொண்டிருக்கிறது. இயல்பாக, சாத்வீகமாக எதையும் நல்லவிதமாக, பார்க்கக்கூடிய தன்முனைப்பு குறைந்த ஆத்மாக்களை கரையேற்றுவது என்பது எளிது. அதாவது, ஏற்கனவே நன்றாக படிக்கக்கூடிய மாணாக்கனை மேலும் நன்றாக படிக்கவைப்பது போல. ஆனால், சற்றும் கல்வி ஏறாமல் திணறிக்கொண்டு இருக்கக்கூடிய, கல்வி என்றாலே வெறுக்கக்கூடிய ஒரு மாணவனை மேலேற்றுவதுதான் ஆசிரியருக்கு சவாலாக இருக்கும். அந்த வழிமுறையையும் நாங்கள் கையாண்டு, இங்கு வருகின்ற பலருக்கு தராதரம் பார்க்காமல், நாங்கள் வாக்கைக் கூறியது உண்டு. ஆயினும்கூட வழக்கம்போல் விதி வென்று அவர்கள் (விதிப்படி) வாழத்தான் அவர்களுக்கு வழிகாட்டியிருக்கிறது. இறைவன் தந்த அறிவை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் பயன்படுத்தாத மனிதன், எந்த இடத்தில் பயன்படுத்தக்கூடாதோ அந்த இடத்தில் பயன்படுத்துகிறான். சதாசர்வகாலம் மிருகவெறி கொண்டு அலைவதும், தன்முனைப்பும், ஆணவமும் கொண்டு அலைவதும், நல்ல புண்ணியம் செய்கின்ற ஆத்மாக்கள் மனம் நோக நடந்துகொள்வதும்தான். இங்கு வருகின்ற பெரும்பாலான ஆத்மாக்களின் இயல்பாக இருக்கிறது. கடும் சினமும், ஆணவமும் கட்டாயம் உலக வாழ்க்கையை மட்டுமல்ல, மேலுலக வாழ்க்கையைக்கூட தராது தடுத்துவிடும், என்பதை உணரவில்லை. உணர்ந்தாலும் அதை பெரிதாக யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.

எல்லாம் விதிதான் என்றால், மதிக்கு என்ன வேலை இருக்கிறது? என்றெல்லாம் சிந்திக்கின்ற மனிதன் எந்த இடத்தில் மதியை வைக்கவேண்டுமோ அந்த இடத்தில் மதியை வைக்காமல் வாழ்வதுதான், விதி அங்கே வெல்வதற்கு வழியாகப் போய்விடுகிறது. விதியை மீறி எத்தனையோ நல்ல விஷயங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட மனித வாழ்விலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எஃதாவது ஒரு மகானின் மூலம் இறைவன் அதனை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார். ஆயினும் பெரும்பாலான பொழுதுகளில் மனிதர்கள் அதனை உணர்வதில்லை. மிகவும் தரம்தாழ்ந்த ஆத்மாவிடம் அதே நிலைக்கு இறங்கி, ஒரு மகான் வாக்கு உரைப்பது என்பது கடினம்தான். இருந்தாலும், அதனையும் நாங்கள் செய்திருக்கிறோம். எப்படியாவது அந்த ஆத்மா மேலேறி வரவேண்டுமே?  அவன் போக்கில் சென்றாவது மேலேற்றலாமே? என்றுதான். ஆனாலும் வழக்கம்போல் விதி வென்று மகான்களின் போதனைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன.

1 comment:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete