அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் பலர் எண்ணலாம், எப்பொழுது வந்தாலும் நலமான வாழ்வு உண்டு. நலமான எதிர்காலம் உண்டு. அச்சம் வேண்டாம். கலக்கம் வேண்டாம். கவலை வேண்டாம் என்று சித்தர்கள் கூறுகின்றார்கள். ஆயினும்கூட, இஃதொப்ப உலகத்தில் அவ்வாறு எல்லாவகையிலும் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ முடிவதில்லையே? பின் சித்தர்கள் ஆசிகள் கூறுகிறார்களே? பின் அது அவ்வாறு நடைமுறையில் காண முடியவில்லை? என்று பலரும் ஐயமும், குழப்பமும், ஏன்? எங்கள் மீது விரக்தியும் கொண்டுதான் வாழ்கிறார்கள். நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
இஃதொப்ப இந்த உலகத்தில் ஒவ்வொரு ஆன்மாவும் பிறவியெடுத்ததின் நோக்கம், பூர்வீக பாவங்களைக் கழிப்பதற்கும், புதிதாக பாவங்களை சேர்த்துக் கொள்ளாமல் வாழ்வதற்குமே. அஃதாவது இது முற்றிலும் மனித பிறவிக்கு 100 க்கு 100 விழுக்காடு பொருந்தும். ஆயினும்கூட எண்ணற்ற பாவங்களை பிறவிகள்தோறும், இது ஆன்மாவிற்கு தான் செய்தது அல்லது செய்து கொண்டிருப்பது பாவம். இதனால் மற்றவர்களுக்கு துன்பமும், துயரமும், மனவேதனையும் ஏற்படும் என்பதை இறைவன் பெருங்கருணை கொண்டு கால அவகாசம் கொண்டு உணர்த்தவே எண்ணுகின்றார். இல்லையென்றால் எல்லோரும் கூறுவதுபோல தவறு செய்யும்பொழுதே ஒரு மனிதனை தடுத்துவிடலாமே? தண்டித்து விடலாமே? என்ற பார்வையிலே பார்த்தால், இறைவன் எண்ணினால் அவ்வாறும் செய்யலாம்தான். ஏன்? அதைவிட படைக்கும்பொழுதே எல்லோரும் நல்லவர்களாக இருக்கவேண்டும். நல்லதையே எண்ணவேண்டும், நல்லதையே உரைக்கவேண்டும் நல்லதையே செய்யவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவன் எண்ணினால் அது மிக எளிதாக நடக்குமே? ஆனால் அவ்வாறு இல்லாமல் இஃதொப்ப நிலையிலே மனிதர்களுக்கு எல்லாவகையான சுதந்திரங்களையும் தந்து, அவனை, பல்வேறு தருணங்களில், அவன் போக்கிலேவிட்டு ‘இஃது நல்லது, இஃது தீயது, இஃது தக்கது, இஃது தகாதது' என்று அவனையே சிந்தித்துப் பார்க்க வைத்து, இயல்பாக ஒருவன் நல்லவனாக மாறவேண்டுமே தவிர தண்டனைக்கு பயந்தோ, அல்லது தன்னை கண்காணிக்கின்றான் ஒருவன், அதாவது தான் கண்காணிக்கப்படுகிறோம் என்பதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ, அச்சத்தினாலோ அல்லது வேறு எஃதாவது உபாதை ஏற்பட்டுவிடும் என்பதற்காகவோ ஒருவன் நல்லவனாக இருப்பது என்பது இறைவனை பொருத்தவரை ஏற்புடையது அல்ல.
ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
ReplyDelete