​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 24 March 2017

சித்தன் அருள் - 622 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஐயனே! பரமாத்மாவுடன் இந்த ஜீவாத்மா இரண்டறக் கலக்க எந்தெந்த நிலைகளைக் கடக்க வேண்டும் ? ஒவ்வொரு படியிலும் எத்தனை அபாயங்கள் இருக்கின்றன? அவற்றைக் கடந்துவரும் உபாயங்களையும் கூறுங்கள்!

இறைவன் அருளால் இதுவும் மனிதனுக்கு மனிதன் வேறுபடுமப்பா. ஒருவனுக்கு கூறுகின்ற முறை இன்னொருவனுக்கு பெரும்பாலும் பொருந்துவதில்லை. இதில் ஆசாரம், வாமாசாரம் என்று இரண்டு முறைகள் இருக்கின்றன. இதில் பெரும்பாலும் நாங்கள் யாருக்கும் வாமாசாரத்தைக் கூறுவதில்லை. ஏனென்றால் வாமாசாரத்தில் நன்மையை விட தீமைகள், எதிர் விளைவுகள் அதிகமாக இருப்பதால் அதை கூறுவதில்லை. ஆனால் வாமாசார முறையை ஒருவன் சரியாகப் புரிந்து கொண்டு விட்டால் நீ கூறுவது போல பல படிகளை, இன்னும் கூறப்போனால், குறுக்கு வழியிலே இறைவனை உணரக்கூடிய ஒரு நிலை வாமாசாரம். இருந்தாலும் இவற்றை சொல்லளவில் தெரிந்து கொள். செயலளவில் தெரிந்து கொள்ள வேண்டாம். இன்னொன்று ஆசார பூஜைகள் பல செய்து கொண்டே, தர்மங்கள் செய்து கொண்டே, ஸ்தல யாத்திரைகள் செய்து கொண்டே, ஒருவன் இல்லறக் கடமைகளையும் நேர்மையாக நடத்திக் கொண்டே, மனைவி அல்லது மனைவியாக இருக்கப்பட்டவள் கணவனுக்கு வேண்டிய கடமைகளை செய்து கொண்டே, கணவன், மனைவி இருவரும் குழந்தைகளுக்கு வேண்டியவற்றை நல்ல முறையில் செய்து கொண்டே தாராளமாக இறைவனை அடையலாம். ஆனாலும் கூட இதில் உள்ள படிகளில் எல்லாம் மனிதன் ஏறிப்போக  வேண்டுமே தவிர அமர்ந்து விடக்கூடாது. இதில் சிக்கல் என்னவென்றால் மனிதன் அமர்ந்து விடுகிறான். ஆங்காங்கே அமர்ந்து கொண்டே இருப்பதால்தான் அந்த நிலையிலேயே அவனுக்கு அந்த பிறவி பூர்த்தியடைந்து விடுகிறது.

ஒரு மனிதன் ஒரு நீண்ட தூர பயணத்தை துவங்குவதாகக் கொள்வோம். ஒரு நகரத்திலிருந்து ஆயிரம் கல் தொலைவில் உள்ள இன்னொரு நகரம் நோக்கி ஒரு பொது வாகனத்தில் பயணம் செய்வதாகக் கொள்வோம். இடையிடையே சிறு, சிறு ஊர்களும், நகரங்களும் வரும். ஆனால் அவன் இறங்க மாட்டான். ஏனென்றால், அவன் எந்த நகரம் அல்லது எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறானோ அந்த ஊர் வரும்வரை பயணத்தை நிறுத்த மாட்டான் அல்லவா ?

அதைப்போல ஆத்மா எனப்படும் பயணி, தேகம் எனப்படும் வாகனத்தில் ஏறி, இறைவன் எனும் ஊரை அடைவதற்குண்டான பிறவி எனும் பயணத்தை துவங்கியிருக்கிறது. இடையிலே மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை, பதவி ஆசை, இந்த உலக ஆசை – இது போன்ற ஊர்கள் குறுக்கிட்டாலும் அங்கேயெல்லாம் கவனத்தை திசை திருப்பாமல் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தால் கட்டாயம் இந்தப் படிகளை எல்லாம் ஒரு மனிதன் எளிதில் தாண்டி விடலாம். அறிவு பூர்வமாக சிந்திக்கும்பொழுது ‘ஒன்று, உலகியல் ரீதியாக வேண்டும், தேவை என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்தத் தேவை உடலைக் காப்பதற்கும், அந்த உடலை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள மட்டும் இருந்தால் போதும். அதனையும் தாண்டி தேவையில்லை என்கிற நிலைக்கு ஒரு மனிதன் தன்னை ஆட்படுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து வெறும் உடல் தேவைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவன் கவனம் திசை திரும்பி, பரமாத்மனை நோக்கி ஜீவாத்மா செல்வது தடைபட்டுப் கொண்டேயிருக்கும். அப்படி வரக்கூடிய தடைகளை எல்லாம் ஒரு மனிதன் ஈஸ்வர த்யானம் அஃதாவது இறை த்யானம் மூலம் மெல்ல, மெல்ல வெல்லலாம். இதற்கு தர்மமும், சத்தியமும் பக்க பலமாக இருக்கும். எனவே மிக எளிய வழி, எத்தனையோ தர்மங்கள் செய்தாலும், எத்தனையோ புண்ணிய காரியங்களை செய்தாலும், எத்தனையோ ஸ்தல யாத்திரை செய்தாலும் கூட அவனுடைய ஆழ்மனதிலே, அவனுடைய அடிமனதிலே நீங்காத ஒரு இடமாக ‘இறைவனை அடைந்தே தீருவேன்‘ என்று உறுதியான எண்ணத்தோடு இருந்தால் அவன் எதை செய்தாலும் அது குறித்து அவன் பாதிக்கப்படாமல் இருப்பான். அஃதாவது ஒருவன் எங்கிருந்தாலும், எந்த சூழலில் இருந்தாலும் அவனுடைய ஆழ்மனதிலே ஈஸ்வர சிந்தனை அசைக்க முடியாமல் இருந்தால் அந்த ஜீவாத்மா மிக எளிதில் பல படிகளைத் தாண்டிவிடும். ஆனால் அடிப்படையிலேயே அந்த எண்ணம் இல்லாமலும், பரிபூரண சரணாகதி பக்தி இல்லாமலும் இருக்கின்ற மனிதனுக்கு தடுமாற்றங்கள் வரத்தான் செய்யும். அது போன்ற தருணங்களிலே குழப்பம் கொண்டிடாமல் கீழே விழுந்தாலும் ‘விழுவது இயல்பு’ என்று மீண்டும், மீண்டும் எழுந்து அமர்ந்து ‘இறைவா! என்னைக் காப்பது உன் பொறுப்பு' என்றெண்ணி இறைவனை நோக்கி மனதை விரைவாக பயணம் செய்வதற்குண்டான முயற்சியில் இறங்குவதே மனிதனுக்கு உகந்த கடமையாகும். இதை செய்தால் ஜீவாத்மா எளிதில் பரமாத்மாவை அடையும்.

1 comment:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete