அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
மகான்களும், ஞானிகளும் அரூபமாக இருந்து வாக்கை அளிக்கிறார்கள். அதே சமயம் ‘ வாழ்விலே பிரச்சினைகளும், துன்பங்களும் இருப்பதும், அதனை எங்கள் சக்தியால் தீர்க்க முடியாத நிலையில்தான், எங்களைவிட அதிக சக்தி கொண்ட ஞானிகளையும் அல்லது தேவதை வர்க்கங்களையும் நாடுகிறோம். அதனை அவர்கள் புரிந்து கொண்டு தங்கள், தங்கள் தெய்வீக ஆற்றலால் உடனடியாக நிவர்த்தி செய்து கொடுத்தால் மனம் மகிழ்ச்சியில் இருக்குமல்லவா?. ஆனால் கர்ம வினையைக் காரணம் காட்டி, வெறும் பரிகாரங்களைக் கூறுவதால் ஏற்கனவே பிரச்சினைகளால் மனம் வேதனையில் இருக்கின்ற தருணம், அந்த பரிகாரங்களையும் முழுமையாக செய்ய இயலாத நிலையும், அப்படி செய்தாலும் கூட அதிலும் குறை ஏற்படுவதும், பிறகு வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் போவதற்கு வழியாக அமைந்து விடுகிறதே? என்றெல்லாம் கூட மனிதர்கள் எண்ணுகிறார்கள். யாங்கள் மீண்டும், மீண்டும் கூற வருவது இஃதுதான். ஒவ்வொரு பிறவியிலும், விதிக்கு வேலை தருவதே, மனிதனின் மதிதான். அந்த மதியை தன் கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் காட்டுவதும் விதிதான். பற்றையும், பாசத்தையும், ஆசைகளையும், இஃது தேவை, இஃது வேண்டும் என்கிற ஒரு நினைப்பையும் மனிதன் விடாத வரையில், விதி கடுமையாக தன் பணியை செய்து கொண்டே இருக்கும். முழுக்க, முழுக்க அனைத்தையும் துறந்து, பற்றற்ற ஞானியாக முயன்று, சதா சர்வகாலம் இறைவனையே எண்ணி வாழ்கின்ற துறவு நிலை மனிதர்களுக்கே, விதி, தன்னுடைய கடமையை ஆற்றி பல்வேறு விதமான இடர்களைத் தரும்பொழுது, ஆசாபாசங்களில் சிக்கித் தவிக்கும் மனிதனை விதி அத்தனை எளிதாக விட்டுவிடுமா? மீண்டும், யாங்கள் ஒட்டுமொத்தமான மனிதர்களுக்குக் கூற வருவது மகாபாரதத்தை நினைவூட்டுவதுதான். பஞ்ச பாண்டவர்களோடு துணையாக இருந்தது சாக்ஷாத் கிருஷ்ண பரமாத்மா. பரம்பொருள். அதற்காக, பஞ்ச பாண்டவர்கள் எந்தவித இடர்களும், துன்பங்களும் இல்லாமல் வாழ்ந்தார்களா? பரமாத்மா எண்ணியிருந்தால், ஆதிமுதலே ஒரு சுகமான வாழ்விற்கு பஞ்ச பாண்டவர்களை தயார் செய்து எந்தவித இடரும், துன்பமும் வராமல் செய்திருக்கலாமே? அப்படி செய்தால் பரமாத்மாவை எதிர்த்து வினவ யார் இருக்கிறார்கள்? அல்லது அதனை வேண்டாம் என்று மறுக்க யாரும் இருந்தார்களா? இல்லையே?. பிறகு ஏன் அவ்வாறு? ஒரு வகையில் அது மேலிடத்து நாடகம். அதைப் போலதான் மனித வாழ்வும். விதி தன்னுடைய கடமையை பரிபூரணமாக செய்ய வேண்டும் என்றுதான், நவக்ரகங்களிடம் அந்தப் பணி இறைவனால் ஒப்படைக்கப்பட்டு, ஒவ்வொரு காலமும், ஒவ்வொரு யுகமும், அந்த யுக தர்மத்திற்கேற்ப அனைத்தும் மிகத் துல்லியமாக நடந்து கொண்டிருக்கிறது. இதிலே மகான்கள் ஆனாலும் சரி. ஏன்?, இறைவனே ஆனாலும் சரி, எந்த அளவு தலையிட இயலும்? யாருக்காக தலையிட இயலும்? எந்த ஆத்மாவிற்கு, எந்த காலகட்டத்தில் தலையிட இயலும்? என்றெல்லாம் மிகப்பெரிய கணக்கு இருக்கிறது. ஆயினும் கூட ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நிம்மதி, சந்தோஷம், நிரந்தரமான திருப்தி இவைகள் கட்டாயம் புறத்தேயிருந்து வருவது அல்ல, என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பெண் கிடைத்தால் நிம்மதி. இந்த ஆணை மணந்து கொண்டால் நிம்மதி. இந்த இல்லம் கிடைத்தால் நிம்மதி. இந்தப் பதவி கிடைத்தால் நிம்மதி. இந்தக் கல்வியை கற்றால் நிம்மதி அல்லது சந்தோஷம் என்று மனிதன் எண்ணுவதே மிக, மிக அறியாமையின் உச்சம். விதி, இங்குதான் தன் பணியை நன்றாக செய்து கொண்டிருக்கிறது. அப்படியானால் இந்த உலகிலே வாழ்கின்ற அனைவரும் ஆசைகளையெல்லாம் விட்டுவிட்டு, தன்னுடைய எதிர்பார்ப்புகளையெல்லாம் விட்டுவிட்டு, பந்த,பாசங்களையெல்லாம் விட்டுவிட்டு எங்கோ வனாந்தரம் சென்று துறவு நிலைக்கு ஆட்பட வேண்டுமா? என்றால், அப்படி செய்தால் நன்றுதான். ஆனால் எல்லோருடைய விதியும் அப்படியில்லை என்பதும் எமக்குத் தெரியும். அதே சமயம், அப்படியொரு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு, இல்லற கடமைகளை ஒருவன் ஆற்றினால்தான் நிம்மதி கிட்டும். ஒரு மனிதன் எதைக் கேட்டாலும் இறைவன் தருவதாக வைத்துக் கொண்டாலும், அது கிடைக்க, கிடைக்க அந்த மனிதனுக்கு நிம்மதியும், சந்தோஷமும் வருவதற்கு பதிலாக மேலும், மேலும் மன உளைச்சல்தான் வரும். ஆனாலும் யாங்கள் ஆறுதலுக்காக கூறவில்லை. மெய்யாக உணரவேண்டும் என்றுதான் கூறுகிறோம். அதே சமயம் விதிக்கு எதிராக, சில, சில விஷயங்கள் வேண்டும் என்பதற்காகத்தான் இறைவனருளால் யாங்கள் சில வழிமுறைகளையும், பரிகாரங்களையும் கூறுகிறோம். விதி கடுமையாக இருக்கும்பொழுது அதனை எதிர்த்து போராடுகின்ற மனிதனுக்கு அந்த அளவு புண்ணிய பலமும், ஆத்ம பலமும் இருக்க வேண்டும். சராசரியான பிரார்த்தனைகளும், வழிபாடுகளும், சிறிய தர்மமும் அத்தனை எளிதாக விதியை மாற்றி விடாது. அப்படி மாற்றி விடும் என்றால் எல்லா மனிதர்களுமே விதியை வென்று காட்டுவார்களே? எனவே, விதியை மீறி ஒருவன் எண்ணுவது நடக்க வேண்டுமென்றால், மனம் தளராமல் தொடர்ந்து இறை பிரார்த்தனையில் ஈடுபடுவதோடு புண்ணிய பலத்தையும் எல்லா வகையிலும் அதிகரித்துக் கொண்டு, சுய பிரார்த்தனையினால் ஆத்ம பலத்தையும் அதிகரித்து மனம் தளராமல் போராட கற்றுக் கொள்ள வேண்டும்.