​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 17 November 2016

சித்தன் அருள் - 508 - "பெருமாளும் அடியேனும்" - 73 - சுக்ராச்சாரியார் !

சுக்கிராச்சாரி இவ்வளவு தூரம் தன்னிடம் அன்பு காட்டி அரவணைத்துப் பேசுவார் என்பதை கலிபுருஷன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆகவேதான் சுக்கிராச்சாரியார் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் கேட்டு அகமகிழ்ந்து போனான் கலிபுருஷன்.

எதையெல்லாம் இந்தப் பூலோகத்தில் செய்ய தான் அனுப்பப்பட்டானோ அந்த அத்தனை காரியங்களையும் சுக்கிராச்சாரியாரே விளக்கமாகச் சொல்லி இவை அத்தனையும் நடக்கும் என்று சொன்னபோது தன்னுடைய வேலையில் பெரும்பங்கு சுக்கிராச்சாரியாருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது, இனி தனக்குக் கவலையே இல்லை என்று ஆனந்தத்தின் உச்சியிலே மிதந்தான் கலிபுருஷன்.

சட்டென்று அவனுக்கு ஒரு சந்தேகம்.

“அசுரர்களின் தலைவரே! எல்லாம் சரி. ஆனால் திருமலையில் குடிகொண்டிருக்கும் வேங்கடவன் நம் செயலைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டாரே. அதற்கு ஏதாவது மாற்று வழியிருக்கிறதா?” என்றார்.

இதைக்கேட்டு சுக்கிராச்சாரியார் கடகடவென்று சிரித்தார். அவருடைய சிரிப்புக்குக் காரணம் தெரியாமல் விழித்தான் கலிபுருஷன்.

“பைத்தியக்காரா! வேங்கடவன் சக்தியெல்லாம் திருமலை எல்லைக்குள்தான். அதைத் தாண்டி அவரும் வரமுடியாது. வந்தாலும் வேங்கடவனுக்கு வெற்றியும் கிடைக்காது.”

“எதை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள்?”

“கலிபுருஷா! இப்போது நீ அந்த கிராமத்திற்குச் சென்று யாகம் செய்யாமல் தடுத்தாய் அல்லவா?” என்றார்.

“ஆமாம்” என்றான் கலிபுருஷன்.

“மாமிசப் பிண்டங்களை யாக குண்டத்தில் தூக்கிப் போட்டாய் அல்லவா?”

“ஆமாம்”

“அந்தணர்களையும் ரிஷிகளையும் விரட்டித் துன்புறுத்தினாய் அல்லவா?”

“ஆமாம்”

“அவர்கள் அனைவரும் வேங்கடவனிடம் கண்ணீர்விட்டுக் கதறி அழுதிருப்பார்கள் அல்லவா?”

“ஆமாம்”

“இப்படிக் கதறி அழுதும் வேண்டியும் வேங்கடவன் ஏன் வந்து அவர்களுக்கு உதவி செய்யவில்லை?”

“ஆமாம். நியாயமான கேள்வி”

“கலிபுருஷா! எனக்குக் கிடைத்த தகவலின் படி இனி வேங்கடவன் ஆங்காங்கே ஓடி வந்து அருள் புரிய மாட்டான். யார் யார் திருமலைக்கு பட்டினி கிடந்து நடையாக நடந்து காத்துக் கிடந்து வேண்டினால் ஒருவேளை அவர்களுக்கு மாத்திரம் வேங்கடவன் அருள் புரிவதாக அறிந்தேன்.”

“அப்படியா விஷயம்?”

“அதுமட்டுமில்லை கலிபுருஷா! இனி இது நம்முடைய ஆட்சிக் காலம். நாம் தான் இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு கொடிகட்டிப் பறக்கப் போகிறோம். எனவே நீ எதற்கும் அஞ்சாதே! நான் உனக்குத் துணையாக இருப்பேன். இந்த உறுதிமொழி போதுமா?”

என கர்வத்தோடு தாடியைத் தடவிக்கொண்டு சுக்கிராச்சாரி தீர்க்கமாகச் சொன்னதைக் கேட்டு வாய் பிளந்து நின்றான் கலிபுருஷன்.

சில விநாடிகள் கழிந்திருக்கும். சுக்கிராச்சாரியாரே வாய் திறந்தார்.

“என்ன யோசிக்கிறாய் கலிபுருஷா?”

“ஒன்றுமில்லை. நான் எதை எதைச் செய்ய நினைத்தேனோ அதை நீங்களும் உங்கள் அசுரக் கூட்டமும் செய்து முடிக்கப் போகிறது. இருந்தாலும் இன்னமும் பெண்களுக்குத்தான் அதி தீவிர தெய்விகப் பக்தி இருக்கிறது. நானும் அத்தனை பேரிடமும் பார்த்திருக்கிறேன். ஆண்களை விட பெண்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகமாக இருக்கிறதே, இதை எப்படித் தடுப்பது? என்றுதான் யோசிக்கிறேன்” என்றான் கலிபுருஷன்.

“நியாயமான கவலைதான். ஆனால் அவர்களிடமிருந்து அவ்வளவு எளிதில் பக்தியைப் பிரிக்க முடியாது.”

“அப்படியென்றால் இந்தப் பூலோகத்தில் நம் ஆட்சி எப்படி கொடி கட்டிப் பறக்கும்? பெண்களை மாற்றாமல் எந்தச் செயலையும் செய்யமுடியாதே.” என்று உறுதிபடச் சொன்னார் சுக்கிராச்சாரியார்.

“இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா தலைவா?”

“ஒன்றா இரண்டா? எத்தனையோ காரணங்கள் உண்டு. அதைத் தடுக்க என்னால் கூட முடியாது கலிபுருஷா!”

“ஏன்?”

“அவர்கள் பார்வதி தேவியின் வரம் பெற்றவர்கள். மகாலக்ஷ்மியின் முழுக் கருணை பெற்றவர்கள். சரஸ்வதி தேவியின் அரவணைப்பைப் பெற்றவர்கள். இவர்கள் மூவருமே ஒன்று சேர்ந்து உண்டாக்கிய வடிவம்தான் பெண்கள். அவர்கள் உடலில் ஓடுவது ரத்தமல்ல. ‘பக்தி’தான். இது எக்காலத்திலுமே மாறாது. அந்தத் தெய்விக பக்திதான் உலகை ரட்சித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் இந்த உலகம் பிரளயம் வந்து அழியும் வரை இந்த உலகைப் பெண்களுடைய பக்திதான் காக்கும்.”

“அப்படியானால் நம் எதிர்காலத் திட்டம் தவிடு பொடியாகிவிடுமா?”

“இல்லை. அதற்கும் நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். அது மட்டும் சரியாக நடந்து விட்டால் பெண்களையும் பக்தியையும் பிரித்து விடலாம். ஆனால்...”

“என்ன ஆனால்?”

“அதை நிறைவேற்றுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல.”

“ஆச்சாரியாரே! அது எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள். எப்பாடு பட்டாலும் நிறைவேற்றிக் காட்டுகிறேன்.”

“அந்தத் திட்டத்தை நிறைவேற்ற உடனடியாகச் செயல்படமுடியாது. அதற்கு முன்னால் இந்தப் பூலோகத்தில் எங்கெங்கு ஆன்மிகம் வளர்ந்து கொண்டிருக்கிறதோ அங்கங்கு சென்று அதைப் பூண்டோடு களைய அசுரர்கள் சென்று விட்டார்கள். நீயும் அவர்களோடு கலந்து கொள். ஓர் அமாவாசை கழியட்டும். பிறகு என்னிடம் வா. மேற்கொண்டு பேசுவோம்.” என்று சுக்கிராச்சாரியார் பேச கலிபுருஷன் மௌனமாக வெளியேறினான்.

பூஞ்சோலை என்னும் கிராமம்.

சிவபெருமான் அன்னை பார்வதி தேவியோடு ஆனந்தமாக அருள்பாலித்துக் கொண்டிருக்க சிவபெருமான் கோவிலுக்குப் பக்கத்தில் நரசிம்மர் கோவிலும் இருந்தது.

இயற்கைச் செழிப்பும் தெய்வ நெறியும் சேர்ந்திருக்கும் அந்த அருமையான ஊருக்குள் மாறு வேடத்தில் புகுந்த அசுரர்கள் சிவபெருமானைப் பற்றியும் அன்னை பார்வதி தேவியைப் பற்றியும் தெருக்கூட்டத்தில் பழி சுமத்திப் பேசினர்.

ஆனால்-

அவர்கள் போட்டிருந்ததோ ஆன்மிக சாமியார் வேடம். அவர்கள் மாறு வேடத்தில் வந்த அசுரர்கள் என்பதைத் தெரியாமல் உள்ளூர் கிராம வாசிகள் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அசுரர்களின் மயக்கத்தனமான பேச்சு அந்தக் கிராமத்து ஆண்களைத் தலையாட்ட வைத்தது. குழந்தைகளும் ஏதோ விடுகதை கேட்பதைப் போல் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அந்தக் கிராமத்துப் பெண்கள் அன்றைக்கு கோவிலில் திருவிளக்கு ஏற்றி விளக்கு பூஜை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது-

அசுரர்கள் சட்டென்று அந்தக் கோவிலுக்குள் புகுந்தனர். அங்குள்ள திருவிளக்குகள் அத்தனையும் அணைத்தனர். கோயிலே இருண்டு போனதால் பயந்து போன பெண்கள் அலறி அடித்துக் கொண்டு இங்குமங்கும் வழி தெரியாமல் ஓடி கீழே விழுந்து அடிபட்டு மயக்கம் அடைந்தனர்.

இதுதான் சமயம் என்று அந்த அசுரர்கள் அந்தக் கிராமத்துப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது போல் செய்துவிட்டுத் தப்பி ஓடினர். தெருமுனையில் மாறு வேடத்தில் ஆன்மிகத்திற்கு எதிராக பிரசாரம் செய்து கொண்டிருந்த அசுரர்கள் செய்தியைக் கேள்விப்பட்டு, உதவி செய்வது போலெண்ணி அங்குள்ள ஆண்மக்கள் துணையோடு கோவிலுக்குச் சென்றனர்.

அந்தப் பெண்களின் உயிரை - உடைமையைக் காப்பாற்றுவது போல் ஊர் மக்களோடு சேர்ந்து தாங்களும் நாடகமாடினர்.

எப்படியோ அந்தக் கோவிலில் மிதிபட்ட அடிபட்ட அத்தனை பேரும் பிழைத்தனர்.

மறுநாள் காலையில்-

“உண்மையில் தெய்வம் இங்கிருந்தால் விளக்குகள் அணைந்திருக்காது. பெண்கள் மானபங்கம் ஆக்கப்பட்டிருக்கமாட்டார்கள். அடியும் பட்டிருக்காது. எனவே இந்தக் கோவிலை நம்பாதீர்கள். பூஜை செய்யாதீர்கள். சிவனும் இல்லை. பார்வதியும் இல்லை. நரசிம்மரும் இல்லை. எனவே எல்லாம் வெளிவேஷம். எங்களை நம்புங்கள். நாங்கள் பகுத்தறிவுடன் கூடிய வழியைக் காட்டுகிறோம்.

“நேற்றைக்கு நாங்கள் மட்டும் வராமல் போயிருந்தால் இந்தப் பூஞ்சோலை கிராமத்துப் பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றியிருக்க முடியுமா? ஆகவே தெய்வம் கோயிலில் இல்லை. எங்களிடம் தான் இருக்கிறது.” என்று அசுரர்கள் பிரசாரம் செய்து பூஞ்சோலை மக்கள் மனத்தை மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்த பொழுது-

நரசிம்மர் கோவிலிருந்து புறப்பட்ட ஒரு மண் அகல்விளக்கு அந்தரத்தில் வந்தது.

ஆச்சரியத்துடன் பூஞ்சோலை மக்கள் அதனைப் பார்க்கும் பொழுது அந்த அகல் ஆன்மிகத்திற்கு எதிராகப் பிரசாரம் செய்து கொண்டிருந்த மாறு வேஷத்தில் இருந்த அசுரர்களை நோக்கிப் பாய்ந்தது.

அதனை சற்றும் எதிர்பாராத அந்த போலி ஆன்மிகவாதிகள் பதறியடித்துக் கொண்டு தலைதெறிக்க நாலா பக்கமும் சிதறி ஓடினர். அந்த விளக்கு அவர்களை ஓட ஓட விரட்டியடித்ததைக் கண்டு வியந்து போன பூஞ்சோலை கிராமத்து மக்கள் என்ன நடக்கிறது? என்று புரிந்து கொள்ளும் முன்னர் “இவர்கள் அசுரர்கள் இறைப் பணியைத் தடுக்க வந்தவர்கள். இவர்கள் பேச்சைக் கேட்டு நம்பி ஏமாறாதீர்கள்.” என்று மூன்று முறை சொல்லிவிட்டு மறைந்தது.

இதென்ன விசித்திரமாக இருக்கிறதே என்று யோசிக்கும் பொழுது விளக்கு எங்கு மறைந்ததோ அந்த இடத்தில் வேங்கடவன் ‘சிலை’ தோன்றிற்று. இதைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனார்கள் அங்குள்ள அனைவரும்.
-----------------------------

"பெருமாளும் அடியேனும்" தொடர் தற்காலிகமாக நிறைவு பெற்றது.

["அகத்தியர் அடியவர்களே! அகத்தியப் பெருமான் ஜீவ நாடியில் வந்து உரைத்த "பெருமாளும் அடியேனும்" என்கிற இந்த தொடர் இத்துடன் நின்று போனது. விரும்பி, எதிர்பார்த்து படித்தவர்களுக்கு இது சற்றே அதிர்ச்சியான தகவலாக இருந்தாலும், ஏன் நின்று போனது? நின்று போனதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதை, "சித்தன் அருளின்" மூத்த தொகுப்பாளர். திரு.கார்த்திகேயனிடம் விரிவாக, தெளிவாக, தொகுத்து உரைக்கும்படி வேண்டிக் கொண்டுள்ளேன். அவரும். தருவதாக சம்மதித்துள்ளார். அதை அவரே தொகுத்து, அடுத்த வாரம் வழங்குவார். அதுவரை காத்திருப்போம்."]

சித்தன் அருள்................. தொடரும்!

2 comments:

  1. Om Agatheesayah Namaha, Aum Sairam,

    Brother Arunchalam, will wait for Ayya Karthikeyan's article to understand where we lag to receive the future posts of "Perumalum Adiyenum" we hope to stay blessed.

    Thanks Anna for your efforts!!!

    ReplyDelete
  2. உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
    மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
    அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
    துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே

    நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியின் முதற்பாடல் இது.

    இறைவனை நம்பும் அனைத்து சமயங்களுக்கும் பொருந்துமாறு ஆரம்பிக்கிறார். இறைவனின் தன்மைகள் பற்றி முழுதுமாய் சொல்லமுடியாதஅளவு உயர் நலம் உடையவனாக அவன் இருக்கிறான்.

    அவனைப் பற்றி அறிந்துகொள்ளுவதற்கான நல்லறிவைத் தந்தவனுமாய் உள்ளான். இறைத் தூதர்கள்,சித்தர்கள், முக்தர்கள் போன்ற அமர நிலை அறிந்தவர்களும் என்றும் போற்றும் அதிபதியாக உள்ளான். அப்படிப் பட்டவனின் சுடர் போன்ற அடிகளைத் தொழுது, உயர்வு கொள் மனமே என்பது எளிமையான பொருள்.

    ReplyDelete