​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 23 January 2026

சித்தன் அருள் - 2076 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு!


21/01/2026 அன்று, ஓதிமலையில் அகத்தியப்பெருமான் உரைத்த வாக்கின் சுருக்கமான பதிவு! 

அனைவருக்குமே ஆசிகள். அனைவர்களுக்கும் அவரவர் விருப்பப்படியே நடக்குமப்பா! ஓதிமலையில் அவன் சந்தோஷமாக இருக்கின்றான். சந்தோஷத்தில், அகத்தியன்! இவர்களுக்கு என்ன வேண்டும் என்று அவர்களே கேட்கட்டும்! உங்களுக்கு அருளப்போகின்றேன், ஆகவே நீங்களே கேளுங்கள்!

விதியை மாற்ற என்னால் முடியும்! ஆயினும், இங்கு நான் இருக்கின்றேன் என என்னிடத்தில் (ஓதியப்பர்) கூறப்போகின்றான்!

முருகனுக்கு மகன் போல் இருந்தால், எல்லாம் பார்த்துக்கொள்வான்!

தொழில் செய்வதாக இருந்தால், யாரானாலும், நாய் படாத பாடு பட்டால்தான் எழுந்து நிற்க முடியும்!

முதலில் அருள் வேண்டுமப்பா! அதை பெற்றுவிட்டால், அனைத்தும் கிடைத்து விடுமப்பா!

அனைவருக்கும் அனைத்தும் கொடுத்துவிட்டால், இறைவனுக்கு இங்கு மரியாதை கிடையாது என்பேன்!

இறைவன் யாரை தேர்ந்தெடுக்கின்றானோ அவனே, முதலாளியாவான். முதலில் அடிமையாக இருந்தால் பின்னர் முதலாளியாவாய்!

வறுமையில் இருந்தாலும், உண்மையாக கல்வி கற்றால், இறைவனே வந்து உதவி செய்வான்.

காலையிலும், மாலையிலும் தீபம் ஏற்றி கந்த சஷ்டி கவசம் கூறி வந்தால், நிச்சயம் இறைவன் வந்து உதவி செய்வான்.

நூறு மூட்டை சுமக்கிற அளவுக்கு அனுபவம் இருப்பவனுக்கே தொழில் அமையும். அனுபவத்தை தேடி ஓடு!

எப்போது வேதங்கள் அழிகின்றதோ, அப்பொழுது கலியுகம் முற்றுகிறது என்று அர்த்தம்.

எப்பொழுது வேதங்கள் ஓதப்படுகின்றதோ, அப்பொழுது இப்புவியில் தர்மம் நிலை நாட்டப்படுகிறது.

தர்மத்தை கடைபிடிக்காமல் இங்கு வந்தால் (ஓதிமலை) அவன் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று அர்த்தம்!

உடல் ஒத்துழைக்கவில்லை!

அப்பனே ஒரு வண்டி வாங்கி 10 வருடங்கள் ஆகிவிட்டால் எப்படி இருக்கும்? அதில் தேவையானவற்றை கொடுத்தால் தான் நன்றாக இருக்கும். அதுபோல், உடலுக்கு தேவையானவற்றை கொடுத்து, உடற்பயிற்சி செய்து வந்தால் முன் இருந்தது போலவே இருக்கும். ஐம்பது வயதாகிவிட்டாலே, உடல் பழுதடைய தொடங்கும். அவரவர் செய்கிற கர்மத்துக்கு ஏற்ப, இறைவன் அவ்வப்போது அடித்து கொண்டு சென்று கடைசியில் எங்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ அங்கு கொண்டு சேர்த்துவிடுகிறான். ஆகவே, அப்பனே, கவலை விடு, பார்த்துக்கொள்வோம்!

பிரச்சினை இன்றி மனிதன் இவ்வுலகத்தில் இல்லை. பிரச்சினை இல்லாமல் மனிதன் இவ்வுலகத்தில் பிறப்பதில்லை. பிரச்சினையோடவே பிறக்கின்றான் மனிதன், அதை சரி செய்யவே முருகன் இருக்கின்றான். அனைத்தும் கடந்து செல் அப்பனே! முருகனை வேண்டிக்கொள் அப்பனே! 

அனைத்தும் முருகனே பார்த்துக் கொள்வான்!

பக்தி என்பது கத்தி போன்றது. கவனமாக நடந்துதான் ஆகவேண்டும். அதில் நடப்பது எவ்வளவு சிரமம் என்று அனைவரும் அறிந்ததே! கத்திமேல் நடந்து முடிந்துவிட்டால், மோக்ஷமப்பா! கத்தி மேல் நடந்து, தர்மத்தை கடைபிடித்தால், கடைசியில், இறைவனை கண்டுவிடலாம். 

இங்கு வரும் அனைவருக்கும் ஒவ்வொரு வேலை இருக்கிறதப்பா!

எத்தனை ஆசிகள் கொடுத்தாலும், நீங்கள்தான் முயற்சிக்க வேண்டும்.

கந்தனிடம் வேண்டிக் கொள்ளுங்கள், அவனே தருவான்.

ஓதுவார்கள் (வேதம்) அனைவருக்கும், பிரம்மன் வெற்று காகிதம் தான் கொடுத்துள்ளான். அவர்கள் விதியை அதில் எழுதுவது ஈசனே! எனவே, ஆசிரியனுக்கு (ஈசன்) மகனாக இருங்கள், அல்லது ஆசிரியனிடம் நெருக்கமாக இருங்கள், நல்ல தலையெழுத்துக்கு!

அறுபடை வீடும், பஞ்ச பூததலங்களும் இணைந்ததுதான் ஓதியப்பர். அவரிடம் செய்வினை பலிக்காது. எனவே, அவனவன் செய்யும் வினையே செய்வினையாக வரும்!

தன்னிடம் இருப்பவற்றை, எவன் ஒருவன் பிறருடன் பங்கிட்டு கொள்கிறானோ, அதுவே தர்மம். அப்படிப்பட்ட தர்மம், ஒருவனை சிறப்பாக வாழ வைக்குமப்பா! இப்படி வாழ்ந்தால், இறைவனே கண்ணீருடன் வந்து கையேந்துவானப்பா!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. என்னப்பன் முருகன் என் குழந்தை

    ReplyDelete