வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
இன்று அகத்தியர் அருளிய சுப்பிரமண்யர் தத்துவத்தின் சில தகவல்களை பார்ப்போம்.
இருதயம் என்பது ஒரு குளம். அதுவே "சரவணப் பொய்கை". இக்குளம் நாடிகளாகிய வாய்க்கால்கள் மூலமாகவே ரத்தத்தை உடல் முழுவதும் பரப்புகிறது. இந்த குளத்தின் நீரே ரத்தம். ஆசாபாசங்களும், ஆணவாதிகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் இக்குளம் தூய்மையாகவே இருக்கும். ஆசாபாசங்களே இக்குளத்தில் பாசியாகப் படர்ந்துள்ளது. இவைகளை நீக்கி தெய்வ பக்தியை இதயத்தில் ஏற்றிவிட்டால் அதுவே பேரின்ப வாழ்வு. அந்த இருதய சரவணப் பொய்கையில் விளையாடுபவன் முருகன்.
இக்குளத்தை சுத்தம் செய்து நல்ல எண்ணங்கள் மூலம் தன்னை நினைப்பவனை "தன்" வண்ணமாக்குவது தெய்வத்தின் இயல்பு. நம் நினைவு ரத்தத்தையே முதலில் சேருகிறது. நல்ல நினைவுள்ளவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.
இதையே ஒரு சித்தர்
குறவன் குடிசை புகுந்தாண்டி
கோமாட்டி எச்சில் உமிழ்ந்தாண்டி
என்கிறார்.
மானிட சரீரமே குறவன் குடிசை. குறப்பெண்ணை கைபிடித்த குறவனான முருகனை அழைத்தால் அவன் அதில் குடியேறுவான். ஆசாபாசங்களை, ஆணவத்தை அறுத்த உடல், நாமத்தை சொல்லும் நாவில் ஊரும் எச்சில் கங்கயாகிவிடுகிறது. அத்தகைய அன்பர்கள் நாவில் அவன் விளையாடுகிறான். நாமமே முருகனின் சரீரம். சப்தமே அவன் சரீரமானபடியால் நாமத்தை சொல்லும்பொழுது சப்தத்துடன் அவனை அனுபவிக்கிறோம்.
திருவடி என்பது நாதப்பிரம்மம். (நடராஜரின் இடது கை ஆள்காட்டி விரல் அவர் திருவடியை காட்டுவது, இந்த சூட்ச்சுமம் தான்). சப்த பிரம்மத்தால் (நாம ஜபம்) உலகினை கட்டி தன்னகத்தே வைத்தால் பிரம்மஞானம் உணர முடியும்.
தன் அன்பை எங்கு கொண்டுபோய் வைப்பதென்று முருகன் பதினான்கு உலகிலும் சுற்றிப் பார்த்தானாம். தொண்டர்கள் இருதயம்தான் தக்க இடம் என்று தீர்மானித்து நமது இருதயத்தில் புகுந்தானாம்.
"நான்" "எனது" என்கிற உணர்ச்சிகளை ஆண்டவனுடைய "நானாக" "உனதாக" மாற்றிவிட்டால் அது உலகம் முழுவதும் பரந்த "நான்" "உங்களுடையது" ஆக ஆகிவிடுகிறது.
ஒரு நிமிடம் கண்ணை மூடி முருகனை நினைத்து அகக்கண் திறக்கப் பெற்றால் அவர்களே மிகுந்த புண்ணியவான்கள்.
முருகன் நம் இருதயத்திலிருந்து எப்போதும் பிரம்ம ஞானம் பேசிக்கொண்டு இருக்கிறான். ஆனால், ஐவர் (பஞ்சேந்த்ரியங்கள்) அவன் பேச்சை கேட்க விடாமல் தாங்கள் பேசிக் கொண்டே இருக்கின்றனர். "முருகா" என்னும் சப்தத்தினால் அந்த ஐவரையும் (பஞ்சேந்த்ரியங்கள்) ஒடுக்கவேண்டும்.
ஜீவர்களிடமுள்ள கருணை காரணமாக தனக்கு நெற்றிக் கண் வேண்டாம் என்று தீர்மானித்துவிட்டாரம் முருகர்.
6 முகம், 12 ஆயுதம் ஏந்திய கைகள் :-
இவருடைய ஆறு முகங்கள் முற்றறிவு, அளவிலின்பம், வரம்பில் ஆற்றல் உடைமை, தன்வயமுடைமை, பேரருளுடைமை, இயற்கை அறிவு என்ற ஆறு குணங்களாகும். அவர் திருமேனி அருள் உரு.
வேலாயுதம் தவிர மற்ற பதினோரு ஆயுதங்கள் ஏகாதச ருத்திரர்கள். வேல் ஞான உருவம். சேவல் கொடி நாத தத்துவம், மயில் விந்து தத்துவம். வள்ளி, தெய்வயானை இச்சா சக்தி, க்ரியா சக்தி தத்துவம்.
தேவசேனா பக்தர்கள் பகவானை தேடி செல்லும் தத்துவம். மர்க்கட நியாயம். அதாவது குரங்குக் குட்டி தன் தாயின் வயிற்றை கெட்டியாக கட்டிக் கொள்வது.
வள்ளி நாயகி, பகவானே பக்தர்களை நாடி வரும் தத்துவம். மார்ஜால நியாயம். தாய் பூனை தன் குட்டிகளை கவ்விச் சென்று பாதுகாப்பது போல.
வேல் இருப்பது ஆன்மாக்களுக்கு ஞானம் தர. அந்த ஞான அறிவை, இச்சையையும், கிரியையும் ஒழித்தால் அடையலாம்.
அகத்தியர் அடியவர்களே! அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி எல்லா அருளும் பெற்று வாழ்ந்திட பிரார்த்திக்கிறேன்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக, ஓம் முருகா சரணம் 🙏
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete