சித்தன் அருள் - 1737 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 1
சித்தன் அருள் - 1742 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 2
சித்தன் அருள் - 1745 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 3
சித்தன் அருள் - 1750 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 4
சித்தன் அருள் - 1752 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 5
நான், அறுவை சிகிர்ச்சை முடிந்து வீட்டில் தனிமை ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த காலம். என் மனைவியும், யோகா மாஸ்டரும் தவிர யாரும் வந்து பார்க்க, பேச அனுமதி இல்லா நேரம். அன்று காலை எழுந்தது முதலே ரத்த அழுத்தம் மிக குறைவாக இருந்தது. நானும் பலமுறை மூச்சு பயிற்சி செய்து பார்த்து விட்டேன். ரத்த அழுத்தம் மேலே ஏற மறுத்தது. உறங்கினால் மேலும் கீழ் இறங்கிவிடும். மருந்து மாத்திரைகளை தவிர்க்க முடியாது. கற்றவை அனைத்தையும் நடை முறை படுத்திப் பார்த்தேன். ஒன்றும் பலன் அளிக்கவில்லை. நண்பரை கூப்பிட்டு ஏன் இப்படி? என்ன செய்யலாம் என்று கேட்ப்போம்! என நினைத்து அவர் எண்ணில் தொடர்பு கொண்டேன். எடுக்கவில்லை. சரி! ஆன்லைன் வகுப்பு எடுத்துக் கொண்டிருப்பர் போலும். சற்று நேரம் கழித்து கூப்பிடுவோம் என்று பொறுத்திருந்தேன்.
அரை மணி நேரத்துக்கு பின் மீண்டும் அழைத்தபொழுது இவர் அவதூதருடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். செல் போன் அடித்தும் எடுக்காமல் இருந்ததால்,
புல்லாங்குழல் வாசிப்பது போல் கை அசைவை காட்டி, "அவர் தான் கூப்பிடுகிறார். எடுங்கள்" என்று கூறினார் அவதூதர். தன் பையிலிருந்து போனை எடுத்து பார்த்த நண்பர், ஆச்சரிய பார்வையுடன், "ஹலோ" என்றார்.
"எங்க இருக்க? ஒரு விஷயம் கேட்கணும்!" என்றேன், விளக்கினேன்.
"இப்போ காப்பி கடைலதான் இருக்கேன். ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அது முடிந்து திரும்பி போகும் வழியில் உங்கள் வீட்டிற்கு வருகிறேன்" என கூறி போனை துண்டித்தார்.
அதெப்படி அவர்தான் கூப்பிடுகிறார் என்று சரியா சொன்னீங்க? என்று நண்பர் கேட்கவும், நண்பரிடம் யோகா கற்றுக் கொண்டிருக்கும் ஒரு பெண் இவரை கடந்து கை உயர்த்தி பின்னர் அழைக்கிறேன் என்ற படி இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
"அப்போ! எந்த அலைவரிசைக்குள்ளும் புகுந்து செல்ல, வாசிக்க முடியும் என்பதை உணர்ந்தீர்களா?" என்றார் அவதூதர் புன்னகைத்தபடி.
அனைத்தும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஏன் இந்த சக்தியை பயன்படுத்தி உலகமெங்கும் நல்லதை செய்யலாமே?
"ஏன் இப்பொழுதும் கூட செய்து கொண்டுதான் இருக்கிறோம். எதுவுமே தேவை இல்லை என்று விலகியவர்களுக்கு, உரிய இடத்திலிருந்து உத்தரவு வரும். அதை செய்வதற்காக என்னை போன்றவர்கள் வெளியே வருவோம். இறைவன் அருளால், உத்தரவை நிறைவேற்றுவதுதான் எங்கள் வாழ்க்கை. அன்றி இது ஒரு தொழில் போல் அல்ல. இன்னும் நிறைய தூரம் இவ்வழியில் நடந்து சென்றால் தான் அது புரியும்" என்றார் சிரித்தபடி.
"சரி போகட்டும். சற்று முன் கை அசைத்து ஒரு பெண் சென்றாளே, அவளுக்குத்தானே மனதில் ஏற்பட்ட பாதிப்பை மாற்றிட வகுப்பெடுக்கிறீர்கள். அவளை அழைத்து, இப்பொழுது இங்கு வர சொல்லுங்கள்! நான் பார்க்கிறேன்!" என்றார்.
நண்பர் சற்று அசந்து தான் போனார். யாரேனும் தன்னிடம் தொடர்பு கொண்டால், உடனேயே அவர்களின் பிரச்சினை என்னவென்று கண்டு பிடித்து விடுக்கிறார், என்று யோசித்துக் கொண்டே அந்த பெண்ணை தொடர்பு கொண்டார். மூன்று முறை செல் அடித்து , எடுக்காமல் இருக்கவே, துண்டிக்க போன பொழுது, "சொல்லுங்க மாஸ்டர்!" என்று அப்பெண்ணின் குரல் வந்தது.
"இப்ப எதுவரை போயிருக்கே? எங்க போறே?" என்றார்.
"வேலை முடிந்து வீட்டுக்குத்தான் போகிறேன். இன்னும் 10 நிமிடத்தில் வீட்டுக்கு போய்விடுவேன்" என்றார்.
"நான் காப்பி கடையில் நிற்கிறேன்! ஒரு அம்மா வந்திருக்காங்க. நீ கை அசைத்து கடந்து போவதை பார்த்தார்கள். அவங்களுக்கு உன்னை பார்க்கணும் என்கிறார்கள். வந்துட்டுப்போயேன்!" என்றார்.
"சரி வருகிறேன்!" என்றாள்.
உண்மையில் மிகப் பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டு, மனதாலும், குடும்பத்துக்கும் வருத்தத்தை உருவாக்கி, பின் போதும் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்று சென்ற பெண்ணை, யோகா மூச்சு பயிற்சி வழி திரும்பி அமைதியான வாழ்க்கைக்கு நண்பர் கொண்டு வந்திருந்தார். நலமாகி வந்தாலும், மிக மன அழுத்தங்கள் அவ்வப்போது வெளிப்பட்டு பிரச்சினை பண்ணும். மனதை விட்டு நிறைய நினைவுகளை அழிக்க வேண்டும். ஆனால் நண்பரின் குருநாதர், நினைவுகளை அழிக்க, அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. மூச்சு பயிற்சி வழி சமநிலை படுத்திக் கொண்டு வந்திருந்தார்.
பதினைந்து நிமிடத்தில் அந்த பெண் வந்து சேர்ந்த பொழுது,
"இவங்க ஹிமாலயத்திலிருந்து வந்திருக்கிறார்கள். உனக்கு ஆசீர்வாதம் பண்ணுவார்கள். அதற்காகத்தான் வரச்சொன்னேன்!" என்றார் நண்பர்.
அந்த பெண் கை கூப்பி வணங்கி அவர் முன் நிற்க, தன் வலது கை விரல்களை ஒன்று சேர்த்து குவித்து, அந்த பெண்ணின் தலை உச்சியில் வைத்து, கண் மூடி அருளை பரவ விட, மூளை, முதுகுத்தண்டு வழியாக ஒருவித மென்மையான குளிர்ச்சி அந்த பெண்ணின் மார்பு வரை பரவி, மொத்த உடலில் இருந்த பதட்டச் சூட்டை அழித்தது.
புன்னகைத்தபடியே, "சரியாகிவிட்டது! இனி நன்றாக இரு!" என வார்த்தைகளால் ஆசீர்வதித்து அனுப்பினார்.
தனக்குள் என்ன நடந்தது என்றறியாமல், மிகுந்த நிம்மதியுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றாள், அந்த பெண்.
அந்த பெண் சென்றதும் அவர் பேசத் தொடங்கினார்.
"இந்த சிறு வயதில் மிகப் பெரிய பிரச்சினைகள். அவள், அவள் தாய், அவள் தந்தை, யாரெல்லாம் இந்த பெண்ணின் வாழ்க்கையில் பிரச்சினைக்கு காரணமாக இருந்தார்களோ, அத்தனை பேர் மனதிலிருந்தும் நடந்த விஷயங்கள், அறிமுக தொடர்பு என எல்லாவற்றையும் அழித்துவிட்டேன். தன் தாய், தந்தையை தவிர அவள் பிரச்சினைக்கு காரணமாக இருந்த பிறர் யாரையும் இனி அவளால் அடையாளம் காண முடியாது. நடந்த நிகழ்ச்சிகளும் ஞாபகம் இருக்காது. அவர்களுக்கும் இவளை பார்த்தாலும் ஞாபகம் வராது . இனி இவள் பெற்றோர்களும், இவளும் நிம்மதியாக வாழ்வார்கள். ஆனால், இவள் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து, கடைசி வரை தன் தாய் தந்தையரை வைத்து காப்பாற்றுவாள். இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிற வேலையை விட்டுவிடுவாள். இன்னும் இரண்டு மாதத்தில் ரயில்வேயில் வேலை பார்ப்பாள், அதுவும், வீட்டுக்கு அருகில் இருக்கும். போதுமா?" என்றார், சிரித்துக் கொண்டே.
இவர் முக்காலத்திலும் சஞ்சரிப்பவர். அதுவுமின்றி போகும் வழியெங்கிலும் உள்ள மனித கர்ம குப்பைகளை சுத்தம் செய்து செல்கிறார் என்று உணர்ந்தார், நண்பர்.
"எதிர்காலத்தில் ஏதேனும் விஷயத்துக்காக, உங்கள் தொடர்பு எண்ணை நான் சேமித்து வைத்துக் கொள்ளலாமா?" என்றார் நண்பர்.
"தேவை இல்லை. தேவை இருந்தால், நானே உங்களை தொடர்பு கொள்கிறேன். எந்த வித பற்றும் இருக்க கூடாது." என்றார், திடமாக.
"என் நண்பர் ஒருவர் இங்கு அருகில்தான் இருக்கிறார். அவரை சந்திக்க வருவதனால் உங்களை அழைத்து செல்கிறேன்!" என்றார் நண்பர்.
மறுபடியும் புல்லாங்குழல் வாசிப்பது போல் காட்டி "இவர் தானே! இப்போதைக்கு உத்தரவில்லை. அடுத்த முறை வந்தால் பார்க்கலாம்" என்று முடித்துக் கொண்டார்.
"என்னால் திருப்பதி மலைக்கு செல்ல முடிவதே இல்லை. ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டே இருக்கிறது!" என்றார் நண்பர்.
"இன்னுமா புரியவில்லை! உங்கள் குருநாதர் அங்குதான் சமாதியில் இருக்கிறார், உங்களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார். உங்கள் குடும்ப கடமைகளை முடித்த பின் ஏற விடுவார். அது வரை அமைதியாக இருங்கள். மீறி ஏறினால் இகபர வாழ்க்கை போய்விடும்" என்ற உண்மையை போட்டுடைத்தார்.
"சரி! நான் கிளம்பறேன். மறுபடியும் உத்தரவிருந்தால் வருவேன். பார்க்கலாம்!" என்றுவிட்டு மெதுவாக நடந்து, இடது பக்கமாக திரும்பி, கூட்டத்துக்குள் மறைந்து போனார்.
மறுநாள், யோகா வகுப்பு முடிந்து ஒரு காப்பி சாப்பிட்டு வரலாம் என்று கடைக்கு சென்றார், நண்பர்.
இவரை பார்த்ததும் கடைக்காரர் "வாங்க! எப்போதும்போல காப்பி தானே?" என்றார்.
"ஆம்" என்றவர், "அண்ணே! நேத்து வந்தங்களே, அந்த அம்மா, இன்று வந்திருந்தாங்களா?" என்றார் நண்பர்.
"அம்மாவா? யார் அது? நீங்க நேத்து காப்பி சாப்பிட கடைக்கு வந்தீங்களா?" என்றார் கடைக்காரர்.
ஒரு நிமிடம் யோசித்த நண்பர், அவர் சொன்னது சரிதான், இவரின் மூளையிலிருந்து நேற்றைய விஷயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது என்று உணர்ந்தார்.
சரி! எப்போதும்போல ஒரு காப்பி போடுங்க! என்று கூறிவிட்டு நேற்று வந்து சென்ற பெண்ணை தொடர்பு கொண்டார்.
"எப்படிம்மா இருக்கே?" என்ற உடன்,
"ரொம்ப அமைதியா இருக்கு! அந்தம்மா தலையை தொட்டவுடன் ஒரு குளிர்ச்சி பரவியது. பின்னர் இப்பொழுதுவரை எந்தவித எண்ணமும் இல்லை. என்னென்னவோ என் நினைவை விட்டு சென்றது போல் உள்ளது. யார் அவங்க?" என்றாள்.
"ஹிமாலயத்திலிருந்து வந்த அவதூதர்!" அவ்வளவுதான் எனக்கும் தெரியும்! இன்னும் இரண்டு மாதத்தில் ரயில்வேயில் வேலை கிடைக்கப் போகிறது உனக்கு. வேண்டும் என்றால் இப்பொழுதே இந்த வேலையை உதறி தள்ளிவிடு." என்றார் நண்பர்.
"பரீட்ச்சை எழுதியிருக்கிறேன்! இன்னும் ரிசல்ட் வரவில்லை" என்றாள்.
அவதூதர் சொன்னதுபோல் இரண்டே மாதத்தில் ரயில்வேயில் வேலையில் அமர்ந்து தன் வாழ்க்கையை நிம்மதியாக நடத்திக் கொண்டு இருக்கிறாள், அந்த பெண்!
நண்பருக்குள் ஒரு கேள்வி தொக்கி நின்றது.
"அவதூதர்! எதற்காக என்னை பார்க்க வந்தார்?"
என்னிடம் கேட்ட பொழுது, "இதன் பதில் நாள் போக போகத்தான் கிடைக்கும்! காத்திருங்கள்!" என்றேன்.
ஒரு மாதத்திற்குப்பின்
நண்பர் குடும்பத்துடன், வேறொரு நண்பரை அழைத்துக் கொண்டு சிதம்பரம், திருவாரூர், தஞ்சாவூர் போன்ற இடங்களுக்கு சென்று தரிசித்துவிட்டு பழனி செல்லும் வழியில் ஒரு பெரிய விபத்தில் மாட்டிக்கொண்டார். நான்கு பேருக்கும் செம அடி. ஒரு நாழிகை வரை அனைவரும் ஞாபகம் இன்றி நடு ரோடில் கிடந்தனர்.
இங்கு வீட்டில், அப்பொழுது குளித்துவிட்டு வந்த அடியேன், சாப்பிட செல்லாமல் ரொம்ப அசதியாக இருந்ததால் படுக்கையில் அமர்ந்து தலையை சாய்த்து அமர்ந்தேன்! ஞாபகம் போனது. எங்கு இருக்கிறேன் என்கிற உணர்வு இல்லை. 15 நிமிடங்களுக்குப்பின் நினைவு வந்த பொழுது, கழுத்து, தோள்பட்டை, இடுப்பு, இடது கை மேல் பாகம் என எல்லா இடத்திலும் மிகுந்த வலி. அடுத்த 10வது நிமிடத்தில் நண்பரின் அழைப்பு வந்தது. மிகப்பெரிய விபத்து நடந்துவிட்டது. நண்பருக்கு கழுத்திலும், கையிலும், காலிலும் அடி! மனைவி குழந்தைக்கு ஞாபகம் இல்லை, மருத்துவமனைக்கு எடுத்து சென்றிருக்கிறார்கள். அழைத்து சென்ற நண்பருக்கும் நினைவில்லை, இடுப்பில் எலும்பு உடைந்துவிட்டது!
இங்கு படுக்கையில் கிடக்கும் அடியேனால் "அகத்தியா!" என மனதுள் அலறத்தான் முடிந்தது. அந்த அலறலில் அனைத்தும் அடக்கம் என்றுதான் கூறவேண்டும்.
என்னிடம் பேசி துண்டித்த இரண்டாவது நிமிடத்தில் அவதூதரிடமிருந்து நண்பருக்கு போன் வந்தது.
"என்ன? விபத்து நடந்துவிட்டது போல? மொத்தம் நாலு பேரா? ஒரு பத்து நிமிடம் வரை அந்த நாலு பேரின் ஆத்மாக்கள் உடலை விட்டு வெளியே நின்றிருக்கிறது! மறுபடியும் உட்புகுந்த உங்களுக்கு, இனி புது ஜென்மம். பரவாய் இல்லை. இது நடக்க வேண்டும் என்று விதி, உங்கள் அனைவருக்கும். வலி நீண்ட நாட்களுக்கு இருக்கும். இன்னும் இரண்டு கண்டம் இருக்கு. அதையும் கடந்து விடுவாய்." என்றார்!
"என் நண்பருக்கு இடுப்பில் எலும்பு முறிவு!" என்றார் நண்பர்.
"ஆறு மாதத்தில் அதுவும் சரியாகி விடும்!" என்றார் அவர்.
அவதூதர் கூறியபடி அனைத்தும் நடந்தது. இன்றும் நண்பர் கழுத்து, கையில் வலியுடன் வாழ்ந்து வருகிறார். அவருடன் ஆத்மா உயரத்தில் தொடர்பில் இருந்த ஒரு பத்து பேர்களும் அடி வாங்கினர்! இன்றும் வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர், நான் அடக்கம்.
அவதூதர் வந்தது தன்னையும் பிறரையும் காப்பாற்றத்தான் என்பதை, நாள் செல்லச் செல்ல உணர்ந்தார்.
சில மாதங்களுக்குப்பின்,
ஒருநாள், வகுப்பு எடுத்து முடித்தபின், புத்தகம் படிக்கலாம் என எடுத்து பிரிக்க, செல்போன் அழைப்பு வந்தது.
எடுத்த பொழுது "ஹலோ யோகா மாஸ்டரா?" என ஹிந்தியில் பேசினாள் ஒரு பெண்மணி.
"ஆமாம்! நீங்க யாரு, எங்கிருந்து பேசறீங்க?" என்றிட,
"ஹிமாலயத்திலிருந்து பேசுகிறேன்! எனக்கு ஒரு மூச்சு பயிற்சி சொல்லித்தர முடியுமா?" என்றார் அந்த பெண்மணி.
மறுபடியும் முதலிலிருந்தா என்று யோசித்தவர், "எனக்கு நேரம் இல்லீங்க! மேலும் நான் ஊருக்கு எல்லாம் போக வேண்டி இருக்கு, இங்கு இருக்க மாட்டேன்!" என்றார்.
"நீங்க திருவனந்தபுரத்தில் தானே இருக்கிறீர்கள்? நான் வரும் போது நிச்சயம் அங்கு இருப்பீர்கள்!" என்று கூறி போனை துண்டித்தார்.
நண்பர் தன் செல்லில் போன் வந்த எண்ணை தேட, அது அழிந்து போயிருந்தது.
[அவதூதருடன் சில அனுபவங்கள் தொடர் நிறைவு பெற்றது]
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஅற்புதமான அனுபவங்கள் பதிவு! நன்றி ஐயா ! ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் போற்றி
ReplyDeleteவணக்கம் அவதூதருக்கு தெரியாத மூச்சுப்பயிற்சியா? நினைத்த நேரத்தில் கைலாயம் செல்லும் சக்தி படைத்தவர் அவர்கள் ஏன் இவரிடம் உதவி கேட்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
ReplyDeleteஓம் அகத்தியர் போற்றி
ReplyDeleteஅருமை ஐயா அருமை அருமை 🙏🙏🙏
ReplyDelete