​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 26 September 2020

சித்தன் அருள் - 924 - ஆலயங்களும் விநோதமும் - முர்தேஷ்வர் (சிவன்) கோவில், கர்நாடகா!


முர்தேஷ்வர் (சிவன்) கோவிலின் தொடக்கம், ராவணனின் காலத்திற்கு உட்பட்டது.  இது வடக்கு கர்நாடகாவில், அமைந்துள்ளது.

ராவணன், சிவபெருமானை நினைத்து, பலகாலம் தவமிருந்தான். ராவணனின் தவத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவர் முன் தோன்றி, "யாது வேண்டும்" என்று வினவினார்.

"தங்களின் ஆத்மலிங்கம் வேண்டும்" என்றான்.

ராவணனிடம் விளையாட நினைத்த சிவபெருமான், 

"தந்தோம். ஆயினும் ஒரு நிபந்தனை. இலங்கை போய் சேரும்முன் எந்த காரணம் கொண்டும் அதை பூமியில் வைக்கக்கூடாது!. அப்படியாயின், அதன் பாரத்தினால், பின்னர் பூமியை விட்டு தூக்கவே முடியாது" என்றார்.

"அதற்கென்ன! அப்படியே ஆயிற்று!" என்று சிரித்தபடி கூறிட, சிவபெருமானும் தன் ஆத்மலிங்கத்தை, ராவணனிடம் ஒப்படைத்தார்.

ராவணன் சந்தோஷமாக ஆத்மலிங்கத்தை பெற்றுக்கொண்டு இலங்கை நோக்கி பயணமானார்.

லிங்கத்தை தானம் கொடுத்து, சற்றே வருத்தத்துடன் திரும்பிய சிவ பெருமானுக்கு, அந்த லிங்கம் இலங்கையை அடைந்துவிட்டால், ராவணன் மிக பலம் பொருந்தியவனாக மாறிவிடுவான். பின்னர் பூவுலகில் மிகப்பெரிய அழிவினை உருவாக்குவான். அவனை யாரும் அழிக்க முடியாது, என்பது புரிந்தது.

சிவபெருமான், விநாயகப் பெருமானை அழைத்து "எப்படியும், ஆத்மலிங்கம் ராவணனுடன் இலங்கை சென்று சேராமல் இருக்க ஏதேனும் செய்து உதவி செய்யவேண்டும்" என வேண்டினார்.

பிறகு பெருமாளிடம் விநாயகப் பெருமான் நடத்தப்போகும் திருவிளையாடலுக்கு உதவி செய்யுமாறும், வேண்டினார்.

பெருமாளும், விநாயகரும் கை கோர்த்தனர்.

ராவணன், ஆத்மலிங்கத்துடன், கோகர்ணம் என்கிற இடத்தின் அருகில் வந்ததும், பெருமாள், மாயையால், சூரியன் அஸ்தமிக்கப் போவதுபோல் ஒரு சூழ்நிலையை உருவாக்கினார்.

ராவணன், ஆசார/அனுஷ்டானங்களில் மிகவும் ஈடுபாடுடையவர்.

மாலை நேரம் நெருங்கிவிட்டபடியால், சந்தியா வந்தனம் செய்ய வேண்டும். கையிலோ இறைவன் அருளிய  ஆத்மலிங்கம். கீழே வைக்க முடியாது. யாரேனும் உதவிக்கு வந்தால், தன் நித்ய அனுஷ்டானத்தை முடித்துவிடலாம். என்ன செய்வது என்று திகைத்து நிற்கும் பொழுது!

அந்த வழியாக ஒரு சிறுவனின் ரூபத்தில், விநாயகப் பெருமான் வந்தார்.

அவனை அழைத்த ராவணன், சற்று நேரம் ஆத்மலிங்கத்தை கையில் வைத்திருக்க வேண்டினார். குறிப்பாக அதை பூமியில் வைத்து விடக்கூடாது எனவும், கூறினார்.

அந்த சிறுவனோ, "ஒரு நாழிகை வேண்டுமானால் வைத்திருக்கிறேன். தனக்கும் நித்யானுஷ்டானங்கள் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே மூன்று முறை அவர் பெயரை அழைக்க, ஒரு நாழிகைக்குள் வரவில்லையானால், அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிடுவதாக கூறியதும், ஒரு நாழிகைக்குள் வந்துவிடுவதாக கூறி சென்றார் ராவணன்.

அன்று பார்த்து நித்யானுஷ்டானங்களுக்கு எல்லா தடங்கலும் வந்தது. ராவணனால், ஒரு நாழிகைக்குள் முடிக்க முடியவில்லை.

ஒரு நாழிகை கடந்ததும், விநாயகர் மூன்று முறை "ராவணா" என கூப்பிட்டார். மந்திர ஜெபத்தில் கவனத்துடன் இருந்ததால், ராவணனால், விநாயகர் கூப்பிட்டதை கவனிக்க முடியவில்லை.

விநாயகர், கீழே ஆத்ம லிங்கத்தை பூமியில் வைத்துவிட்டு, தான் வந்தவழியே திரும்பி சென்றார்.

பூமியில் வைக்கப்பட்ட லிங்கம், கோகர்ணத்தில் பதிந்து போனது.

நித்யானுஷ்டானங்களை முடித்து வந்த ராவணனுக்கு, ஆத்மலிங்கம் பூமியில் வைக்கப்பட்டதை கண்டவுடன், உடனேயே அதை தூக்க முயற்சித்தான். முடியவில்லை. மிகுந்த கனம் ஏறிப்போயிருந்தது.

பெருமாள் தான் உருவாக்கிய "அஸ்தமன மாயையை" விலக்கிக்கொண்டார்.

ராவணனுக்கு, அனைத்தும் உடனேயே புரிந்து போனது. இனி, அந்த லிங்கத்தை அங்கிருந்து அசைக்க முடியாது என்ற எண்ணம் பயங்கர கோபத்தை உருவாக்கியது.

கோபத்துடன் லிங்கத்தை இழுத்த பொது, அது ஐந்து துண்டுகளானது. ஒன்று அங்கேயே பூமியில் பதிந்து இருந்தது. நான்கு துண்டுகளையும், நான்கு இடத்தில் தூக்கி வீச, ஒரு துண்டு லிங்கம், அதை வைத்திருந்த துணியுடன், முர்தேஷ்வரில் விழுந்தது.

ஆதலால் கோகர்ணத்தில் லிங்கம், ஒரு கூம்பு வடிவத்தில் வளைந்து இருக்கும்.

சரி! இங்கு நாம் தெரிந்து கொள்ள என்ன உள்ளது?

முர்தேஷ்வர் கடற்கரை ஓரத்தில் மூன்று புறமும் கடலால் சூழப்பட்டுள்ளது. நான்கு திசைகளில், மூன்று நீர் சூழ்ந்திருக்கும் நிலையில் இறைவன் அமர்ந்திருக்க, நாம் சென்று பிரார்த்தித்தால், பிரார்த்தனை உடனே நிறைவேற்ற பட்டு, வாழ்க்கை மிகுந்த வளமாகும்.

இங்கு சிவபெருமானை 123 அடி உயரத்தில் பத்மாசனத்தில் தரிசிக்கலாம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆத்மலிங்க உபாசனை பண்ண விரும்புகிறவர்கள், இங்கு சென்று இறைவனிடம் வேண்டிக்கொண்டு, அவர் தரும் பிரசாதத்தை அருந்தி வந்தால், அவர் அருளால், நம் ஆத்மாவை. ஆத்மலிங்க உருவத்தில் மார்பில், சுழுமுனையில், சிரசில் உணர வைப்பார். அதில் பிடித்து, த்யானத்தில் மேலே ஏறி பலநிலைகளை கடந்து சென்றுவிடலாம்.  

கவனம், கேட்கவேண்டியது "நம் ஆத்மாவை" லிங்கரூப உபாஸனைக்கு. சிவபெருமானின் ஆத்மாவை லிங்கரூப உபாஸனைக்கு கேட்டுவிடாதீர்கள்! தவறாக கேட்டுவிட்டால், யார் எப்படி நம்மிடம் விளையாடுவார்கள் என கூற முடியாது. நமக்கும் தாங்க முடியாது.

அடியேனின் அனுபவம்:-

இந்த விஷயம் தெரிய வந்ததும், அங்கு வரை சென்று, "அடியேனுக்கு, ஆத்மலிங்க உபாஸனைக்கு அருளுங்கள்" என பிரார்த்தித்து, த்யானத்தில் அமர்ந்திருந்தேன்.

யாரோ ஒரு வயதானவர் வந்து, தோளில் தட்டி, உணர்த்தி, "இந்தா! இதை சாப்பிடு! என இறைவன் சன்னதியில் நிவேதிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை தந்துவிட்டு போனார்.

இனிப்பு மனதை மென்மையாக்கும். அதுவே மனோபீஷ்டங்கள் நிறைவேற நிமித்தம்.

அதன் பின் ஆத்மலிங்க உபாசனை மிக எளிதில் கைவல்யமானது. பேச்சு மிகவும் குறைந்தது. எப்பொழுதும் ஒரு லிங்கம் மார்பில் அமர்ந்து உள்ளிருந்து வெளியே அழுத்துகிற உணர்வு வரும். மிக மிக மேன்மையானது முதல், மிக ஆபத்தான அனுபவங்கள் வரை, வரத்தொடங்கியது. எது வரினும் மனம் கலங்காமல் நின்றது. நடப்பவை அனைத்தையும் உற்றுப்பார்த்து, வாழ்ந்த பொழுது,

ஓரிடத்தில், ஒருவரிடம் இதை பற்றி கேள்வி எழுப்பினேன்.

"இதற்காகத்தான் எல்லோரும் அலைகிறோம். எனக்கு சொல்லிக்கொடு" என்றார்.

"பெரியவர் என்பதற்காக பேசினேன். யாரிடமும் பேசவே பிடிக்கவில்லை. பின்னர் இதை எப்படி தெளிவிக்க. வேண்டுமென்றால், அடியேன் உபாசனை பண்ணுகிற ஆத்மலிங்கத்தை தாரைவார்த்து விடுகிறேன். பெற்றுக்கொள்ளுங்கள்" என சட்டென்று சொல்லிவிட்டேன்.

அவரும், அதே வேகத்தில் இருகையையும் சேர்த்து நீட்டினார்.

ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை.

எதுவும் பேசாமல் அவர் இரு கரங்களையும் பற்றி, உபாசனை முத்திரைகள் செய்து, ஆத்மலிங்கத்தை, தானம் செய்துவிட்டேன். அன்று வணங்கி சென்றவர்தான். இன்றுவரை சந்திக்கவே இல்லை. அன்று செய்தது சரியா, தவறா என தோன்றவே இல்லை.

பின்னர் தான் குடும்ப வாழ்க்கை அமைந்தது. இன்றும் இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறேன்.

"தானம் செய்தது சரியா/தவறா என்று அன்று உணரவில்லை. நீங்கள் செய்த அருளை தானம் கொடுத்துவிட்டேன். மறுபடியும் கேட்கிறேன். ஆத்மலிங்கத்தை மறுபடியும் அருளுங்கள். இம்முறை தங்களை விட்டு விலகேன்" என்று.

அவரும், "பார்க்கலாம்" என்று ஒரு பாணியாக பதில் கூறுகிறார்!

இது போன்ற அனுபவங்கள் பெற முர்டேஸ்வர் சென்று வாருங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................. தொடரும்!

6 comments:

  1. ஓம் ஸ்ரீ மாதா லோபமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்

    ReplyDelete
  2. அருமை அருமை அருமை
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவா
    ஓம் நமசிவாய
    ஓம் அகத்தியர் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  3. ஐயா அன்பு வணக்கங்கள். ஓம் நமசிவாய! ஐயா ஒருமுறை அவர் அருளால் முர்தீதீஸ்வர் சென்றோம் ஐயா. எத்தகைய ஒரு இடம். மிக அருமையான ஸ்தலம். தங்களின் அனுபவம் பிரமிக்க வைக்கிறது ஐயா. அவ்வாறு ஆத்ம லிங்க உபாசனை செய்தால் குடும்பத்தில் பிடிப்பு இருக்குமா ஐயா. குருவருள் துணை! ஐயா, அம்மா வாழ்க வளமுடன்! மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி

    ஐயா... குழந்தைகள் சிறு வயதினர் எனக்கு. ஆத்ம லிங்கம் பெற்றால் குடும்ப வாழ்க்கையில் எப்பொழுதும் போல வாழ முடியுமா? ஆத்ம லிங்கம் அடைவது எளிதல்ல என்பதை உணர்கிறேன் இருந்தாலும் மனதில் தோன்றிய எண்ணம். நன்றிகள் ஐயா

    ReplyDelete
  5. கொடுத்த ஆட் கொள்வதும் நீயே எடுத்துக் கொள்வதும் நீயே எல்லாம் என் திருவிளையாடல் ஈசனே சர்வேஸ்வரா உன் பாதம் சரணம் சரணம் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமக

    ReplyDelete