​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 24 September 2020

சித்தன் அருள் - 922 - திருப்பதி பெருமாளுக்கு "கோவிந்தா" என்ற திருநாமம் எப்படி வந்தது!


சில நாட்களுக்கு முன், திருப்பதி வேங்கடவரை, நம் அகத்தியப்பெருமான்தான் முதன் முறையாக "கோவிந்தா" எனும் பெயர் கூறி அழைத்தார் என்பது தெரியவர, அதை சித்தன் அருளில் எழுத வேண்டும் என நினைத்தேன். ஆனால் ஏனோ நேரம் கிடைக்கவில்லை. தற்போதைய "ஆலயங்களும் விநோதமும்" தொடர் அடியேனின் முழு நேரத்தையும் வாங்கிக்கொண்டது.

சரி! பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்.

சமீபத்தில், சிங்கப்பூரில் வசிக்கும், அகத்தியர் அடியவர், திரு.ஸ்ரீனிவாசன் பழனிச்சாமி என்பவர், "கோவிந்தா" நிகழ்ச்சியை தட்டச்சு செய்து, அடியேனுக்கு அனுப்பித்தந்தார். இதை அகத்தியப்பெருமானின் சித்தன் சித்தன் அருள் வலைப்பூ வழி அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் என வேண்டிக்கொண்டார்.

அவருக்கு அடியேனின் மனமார்ந்த நன்றியை கூறிவிட்டு, தொகுப்பை கீழே தருகிறேன்!

பகவான் விஷ்ணு மஹாலக்ஷமி தாயாரை தேடி பூலோகம் வந்த பொழுது இந்த சம்பவம் நடந்தது.    பெருமாள் பூலோகம் வந்த பிறகு அவரும் மனிதர்களை போன்றே பசி, தாகம் போன்றவைக்கு ஆட்பட்டார். ஆகவே, ஸ்ரீநிவாஸப்பெருமாள்  அகஸ்தியரின் ஆசிரமத்திற்கு சென்று "முனீந்திரரே!  நான் பூவுலகிற்கு ஒரு குறிப்பிட்ட பணிக்காக வந்திருக்கிறேன், கலியுகம் முடியும் வரை இங்கு இருப்பேன்.  எனக்கு பசும்பால் மிகவும் விருப்பம், ஆகையால், எனது தினசரி தேவைகளுக்கு ஒரு பசு தேவை, உங்களிடம் உள்ள பெரிய கோசாலையில் நிறையபசுக்கள் உள்ளனவே. அதில் இருந்து எனது தேவைக்கு ஒன்று தர முடியுமா?" என்று கேட்டார்.

அகஸ்தியர் குறுநகை புரிந்தவாறு கூறினார், "ஸ்வாமி, தாங்கள் ஸ்ரீநிவாஸனாக மனித உருவில் வந்துள்ள பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணு என்பது எனக்கு நன்றாக தெரியும். இந்த லோகத்தை உருவாக்கியவரும், ஆள்பவருமான தாங்கள் அடியேனின் ஆஸ்ரமத்திற்கு வந்து உதவி கேட்கிறீர்கள்  என்பது அடியேனுக்கு ஆனந்தத்தை அளிக்கிறது.  தாங்களே மாயா சக்தி என்பதும், அடியேனின் பக்தியை சோதிப்பதற்காக வந்துள்ளீர்கள் என்பதையும் உணர்கிறேன்".

"ஆகையால் தேவா, அடியேனை சாஸ்த்திரத்தை அனுஷ்டிக்க அனுமதியுங்கள்.  புனிதமான பசுவை தன்னுடைய மனைவியுடன் வந்து கேட்பவருக்கே தானம் அளிக்க வேண்டும்.  அவ்வாறு செய்வதற்கு நான் நிச்சயமாக மகிழ்வுடன்  இருக்கிறேன். ஆகவே, தாங்கள் எனது தாயாரான மஹாலக்ஷ்மியுடன் வந்து கேட்குமாறு விண்ணப்பிக்கிறேன். அதுவரை அடியேனை மன்னித்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

பகவான் ஸ்ரீநிவாஸர் சிரித்தவாறு "சரி மூனீந்த்ரா, உன் விருப்பப்படியே செய்கிறேன்", என்று கூறி தன் இடம்  ஏகினார்.

பிறகு பத்மாவதி தாயாரை திருமணம் புரிந்தார்.   திருமணத்திற்கு சில நாட்களுக்கு பின் அகஸ்திய மஹாமுனிவரின் ஆஸ்ரமத்திற்கு தனது பட்டமகிஷியுடன் புனிதமான பசுவை தானம் கேட்க எழுந்தருளினார்.  முனிவர்அவ்வேளையில் வேறிடம் சென்றிருந்தார்.

அகஸ்த்தியரின் சிஷ்யர்களுக்கு வந்தது பகவான் ஸ்ரீநிவாஸர் என்பது தெரியாத காரணத்தால் அவர் வந்த காரணத்தை வினவினர்.

பகவான் உரைத்தார்."எனது பெயர் ஸ்ரீநிவாஸன், இவள் எனது மனைவி பத்மாவதி.உங்கள் ஆச்சாரியரிடம் எனது தினசரி தேவைகளுக்காக நான் ஒரு பசுவை தானமாக கேட்டிருந்தேன்.  எனது மனைவியுடன் வந்துகேட்க அவர் விரும்பியதால் நான் இப்பொழுது வந்துள்ளேன்" என்றார்.

"எங்கள் ஆச்சாரியர் தற்பொழுது ஆஸ்ரமத்தில் இல்லை. ஆகவே, பிறகு வந்து பெற்று செல்லுங்கள்" என்று பணிவாக சிஷ்யர்கள் உரைத்தனர்.

குறுநகையுடன் பகவான் ஸ்ரீநிவாஸன்,

"ஏற்கிறேன்.  ஆனால் இந்த ஜகத்தை ஆள்பவன் நான், ஆகவே என்னை நம்பி பசுவை தானமாக கொடுக்கலாம்.  நான் திரும்பவும் வர இயலாது" என்றார்.

அதற்கு சிஷ்யர்கள், "நீங்கள் இந்த இடத்தையோ அல்லது மொத்த ஜகத்தையோ  ஆள்பவராக இருக்கலாம்.  ஆனால், எங்கள் ஆச்சாரியரே எமக்கு அனைத்திற்கும் மேலானவர், அவரை வருத்தமடைய செய்யும் எச்செயலையும் செய்வதற்கில்லை, மேலும் அவர் அனுமதி இல்லாமல் எதையும் நாங்கள் செய்வதில்லை" என்று உறுதியாக பதிலுரைத்தனர். 

குறுநகை புரிந்த பகவான்,

"ஆச்சாரியரின் மீதான உங்களது பக்தியை நான் மதிக்கிறேன்.  உங்களது ஆச்சாரியர் திரும்பியதும், ஸ்ரீநிவாஸன் ஞானாத்ரி மலையில் இருந்து தன் மனைவியுடன் பசுவை தானமாக பெறவந்தேன் என்பதை கூறவும்"  என பதிலுரைத்துவிட்டு திருமலையில் இருக்கும் ஏழுமலை நோக்கி நடக்கஆரம்பித்தார்.
 
சரியாக இரண்டு நிமிடங்களுக்கு பிறகு அகஸ்த்திய முனிவர் தனது ஆஸ்ரமம் வந்தடைந்தார்.  சிஷ்யர்கள் மூலம் நடந்ததை அறிந்து மனம் வருந்தினார்.

சத்தமாக "என்ன துரதிர்ஷ்டம், ஸ்ரீமந் நாராயணனும், லோகமாதா லக்ஷ்மியும் வந்த பொழுது நான் இங்கில்லாமல் போனேனே" என்றவாறு மஹாமுனிவர் கோசாலைக்கு விரைந்து சென்று ஒரு "கோவு"(பசுவை தெலுங்கில் அழைக்கும் சொல்) ஒன்றை பிடித்துக்கொண்டு தாயாரும், பெருமாளும் சென்ற திசையில் ஓடினார்.

சில அடிகள் ஓடிய பிறகு தொலை தூரத்தில் ஸ்ரீநிவாஸன் அவர் மனைவி பத்மாவதியுடன் நடந்து செல்வதைகண்டார்.

அவர்களை பின் தொடர்ந்து ஓடியவாறு தெலுங்கில் "ஸ்வாமி, கோவு இந்தா (கோவு - பசு, இந்தா- எடுத்துக்கொள்ளவும் - இந்த பசுவை  எடுத்துக் கொள்ளுங்கள்), கோவு இந்தா, கோவு இந்தா என்றவாறு அழைத்தார்.  ஆனால், பகவான் திரும்பவில்லை.  இதை பார்த்த பிறகு சத்தமாக "ஸ்வாமி கோவு இந்தா" என்றவாறு கூப்பிட்டுக் கொண்டு மிகவும் வேகமாக ஓடினார். அவர் "ஸ்வாமி கோவு இந்தா" என்று கூறியவாறு ஓடியது "ஸ்வாமி கோவிந்தா ஸ்வாமி கோவிந்தா ஸ்வாமி கோவிந்தா" என்று ஒலித்தது.  இவ்வாறு மேலும் சிலமுறை ஒலித்ததும் புன்முறுவலுடன் திரும்பி பெருமாளும், தாயாரும் பசுமாட்டை பெற்றுக்கொண்டு,

"ப்ரியமுனீந்த்ரா தெரிந்தோ தெரியாமலோ எனக்கு மிகவும் ப்ரியமான கோவிந்த நாமத்தை 108 முறை கூறிவிட்டாய்.  நான் 28வது கலியுகம் முடியும் வரை சிலா வடிவில் ஏக மூர்த்தியாக ஞானத்ரி மலையில் வசிக்கவுள்ளேன். நான் பூவுலகில் இங்கு சிலா ரூபத்தில் வசிக்கும் வரை பக்தர்கள் என்னை இதே பெயரால் அழைப்பார்கள்”.

“எனக்கு இப் புனிதமான ஏழுமலையில் ஒரு கோவில் நிர்மாணிக்கப்படும். பெருந்திரளான பக்தர்கள் இங்குதினமும் வந்தவண்ணம் இருப்பர்.  அவ்வாறு வரும் பக்தர்கள், மலை ஏறும்பொழுதோ அல்லது சன்னதியில் எனது முன்பாகவோ இந்த நாமத்தால் அழைப்பார்கள்".

"நன்றாக நினைவில் கொள் முனீந்திரா, ஒவ்வொரு முறை என்னை இந்த நாமம் சொல்லி அழைக்கும் பொழுதும், நீயும் நினைக்கப்படுவாய்.  யாரேனும் பக்தர்கள், ஏதேனும் காரணங்களால்  எனது கோவிலுக்கு வர முடியாமல் போனாலும் "கோவிந்தா" என்ற இந்த நாமத்தை எத்தனை முறை கூறினாலும் அவர்களது நியாயமான கோரிக்கைகளை நான் நிறைவேற்றுவேன்". "மேலும் இந்த ஏழுமலையில் ஏறும்பொழுது யாரெல்லாம் குறைந்தபட்சம் 108 முறை கூறுகிறார்களோஅவர்களுக்கு நான் மோக்ஷம் அளிப்பேன்" என்றார்.

இதுவே "கோவிந்தா!" என மலையில் பக்தர்கள் வாய்விட்டு கூறக்காரனாம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.

"கோவிந்தா" எனும் பொழுது, நம் குருநாதரையும் நினைக்கிறோம்,  நமது நியாயமான கோரிக்கைகள் பெருமாளால் அருளப்படுகிறது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்..................தொடரும்!

8 comments:

 1. ஓம் ஸ்ரீ மாதா லோபமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்

  ReplyDelete
 2. Om sri lobha mudra thayar samedha agasthiyar thiruvadigale potri.

  ReplyDelete
 3. அருமை அருமை அருமை
  ஓம் நமச்சிவாயா

  ஓம் அகத்தியர் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏

  ReplyDelete
 4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை

  ReplyDelete
 5. ஐயா அன்பு வணக்கங்கள். திருப்பதியில் கோவிந்தா நாமம் தீடீர் ஒருவர் சொல்வார் அதை தொடர்ந்து எல்லோரும் சொல்வர். அவன் பாதாரவிந்தகளில் நம் துன்பங்கள் துளைந்து போகும். நம் வாழ்வு நலமாகும். ஐயா ஒருவருடம் தொடர்ந்து முதல் திங்கள் மாதா மாதம் சென்று வந்தோம் ஐயா. கோவிந்தா கோவிந்தா. ஓம் அகத்தியர் திருவடிகள் சரணம். மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன் ஐயா, அம்மா.

  ReplyDelete
 6. கோவிந்தா கோவிந்தா 🙏🙏 ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

  ReplyDelete
 7. omg !!! govinda ku ippadi oru per karanam iruka lol theriyama pochae..

  ReplyDelete
 8. Sarvarthra Govinda Nama Sangeerthanam.......... Govinda....Govinda

  ReplyDelete