​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 16 September 2020

சித்தன் அருள் - 914 - ஆலயங்களும் விநோதமும் - அங்குண்டீஸ்வரர் கோவில், சுத்தமல்லி, திருநெல்வேலி!


தாமிரபரணி கரையில் கீழச்செவல் கிராமத்திற்கும், சுத்தமல்லி கிராமத்திற்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதி சித்தர்காடு. பரசுராமர் பூஜித்த தலங்களில் இதுவும் ஒன்று. சித்தபுரி, வேதபுரி, ரிஷிபுரி, சித்தர்காடு, சித்தவல்லி, சித்தமல்லி, சுத்தமல்லி என்று பல நாமங்களை கொண்டது இந்த இடம். சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த திருத்தலத்தில் பதினெண் சித்தர்கள், முனிவர்கள், தேவர்கள் வழிபட்டுள்ளனர்.

வேதவியாசரின் சீடரான சூதமா முனிவர், இந்தக் கோவிலின் பெருமையைப் பாடலாக தாமிரபரணி மகாத்மியத்தில் பாடியுள்ளார். இக்கோவிலில் பங்குனி மாதம் வரும் பரணி நட்சத்திரத்தில் இறைவனை வழிபட்டால் அனைத்து நற்பலனும் கிடைக்கும் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.

ஒரு சமயம் சரஸ்வதி தேவிக்கு, துர்வாச முனிவரால் சாபம் உண்டானது. அந்த சாபம் நீங்க, பிரம்மனுடன் சரஸ்வதி தேவி சித்தர்காட்டிற்கு தவம் செய்ய வந்தாள். அவள் பூஜிப்பதற்காக மாணிக்க லிங்கம் ஒன்றை, தேவ சிற்பியான விஸ்வகர்மா வடிவமைத்தார். அந்த லிங்கம் அங்கிருந்த பாறை மீது சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்தது. சித்தர்காட்டில் உருவான அந்த லிங்கத்திற்கு ‘சித்தீஸ்வரர்’ என்று பெயர்.

ஆரம்ப காலத்தில் இந்த ஈசனை அகத்தியர் வழிபட்டு வந்துள்ளார். அவர் உலகை சமன் செய்ய பொதிகைமலை வந்தார். அங்கு கயிலைநாதனான சிவபெருமானை வணங்க ஆவலாய் இருந்தார். ஒவ்வொரு நாளும் தீர்த்த யாத்திரையாக தாமிரபரணி ஆற்றங்கரைக்கு சென்று வந்தார். அப்போது இந்த இடத்தில் நின்றபடி “ஈசனே நான் உம்மை கயிலாயமலையில் உள்ளபடியே பூஜிக்க வேண்டும்” என்று வேண்டினார்.

அப்போது சரஸ்வதிதேவி பூஜை செய்த இறைவன், அகத்தியருக்கு காட்சியளித்தார். உடனே அகத்தியர் “இறைவா! தாங்கள் கயிலாயநாதர். பனிபடர்ந்த மலையில் குளர்ச்சியாக வாழ்பவர். இங்கேயும் நீங்கள் தான் தோன்றினீர்களா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

அப்போது “அங்கு (கயிலாயம்) நான் உண்டு என்றால், இங்கும் உண்டு” என ஒரு அசரீரிவாக்கு கேட்டது. எனவே இந்த இறைவனுக்கு ‘அங்குண்டீஸ்வரர்’ என்று அகத்தியர் பெயரிட்டு வணங்கினார்.

பரணி நட்சத்திரத்தில் கூடிய நன்னாளில் ஆதிசங்கரர் இத்தலத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்து மீன-பரணி வைபவத்தைக் கொண்டாடி ஆனந்தம் அடைந்துள்ளார். ஸ்ரீசக்ர நாயகி அன்னை ஸ்ரீ மாதா, இங்கு ஈசனைப் பூஜித்துக் கொண்டிருக்கிறாள் என்பது ஐதீகம். பதினெண் சித்தர்களும், இதற்கு முன் வாழ்ந்த ஸ்ரீ சந்தானு மகானு பாவுலு சித்தரும் தங்களது மருத்துவ ஆராய்ச்சியைத் தொடங்கு வதற்கு முன்பாக, இத்தல சித்தீஸ்வரரை வணங்கி, அந்த சக்தி முழுவதையும் இந்த ஆலயத்திலேயே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். எனவே இந்த இறைவன் ‘ஆதி மருந்தீஸ்வரர்’ என்றும் திருநாமம் கொண்டுள்ளார்.

காலங்கள் கடந்தது. தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது கருவூர் சித்தர் பல சிவன் கோவில்களில் வழிபாடு செய்து விட்டு, சித்தீஸ்வரரை தரிசிக்க வந்தார். சுத்தமல்லியில் உள்ள தவணை தீர்த்தக் கட்டத்தில் நின்றபடியே சிவனை பாா்த்தார். இறைவனோ வெள்ளத்துக்குள் மூழ்கி இருக்கிறார். தவணை தீர்த்தக்கட்டத்தில் நின்று கொண்டு, “நான் உம்மை எப்படி வழிபடுவது?” என வேண்டினார்.

அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. வடகரையில் கந்தர்வன் அமைத்த ஆலயத்தில் உள்ள இறைவனை வணங்கி செல். அவரும் வேறு யாரும் அல்ல நான் தான் என உரைக்கும் வண்ணம், “அங்கு (தாமிரபரணி நதிக்குள்) நான் உண்டெனில், இங்கும் (வடகரையில்) நான் உண்டு” என்று அந்த அசரீரி சொன்னது. எனவேதான் வடகரையில் உள்ள சிவனும் ‘அங்குண்டீஸ்ரமுடையார்’ என பெயர் பெற்றார்.

கந்தர்வன் ஒருவன் துர்வாசரின் சாபத்தால் நாரையாக மாறினான். தனக்கு சுயஉருவம் கிடைக்க சிவபெருமானை நினைத்து தவம் செய்தான். ஆடாமல் அசையாமல் சமாதி நிலைக்கு சென்றான். பிரம்மா, புலிந்தமலை மேல் இருந்து கசாலிகா தேவியை நதியாக ஓடிவரச் செய்தார். அந்த நதி சமாதி நிலையில் இருந்த கந்தர்வனை வெகு தூரம் அடித்து வந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் வீசியது. கந்தர்வன் கண்விழித்தபோது, ரிஷி பத்தினியான அக்னிசிகாவின் ஆசிரமம் தென்பட்டது.

ரிஷிபத்தினி, கற்கள் நிறைந்த ஒரு கலசத்தை கந்தர்வனிடம் கொடுத்தார். அதை வைத்து அவன் பூஜித்து வந்தான். சில நாட்களில் கலசத்தில் இருந்த கற்கள் அனைத்தும் சேர்ந்து சிவலிங்கமாக மாறியது. அதை பரத்வாஜ முனிவரின் ஆலோசனைப்படி அங்கே பிரதிஷ்டை செய்து வணங்கினான், கந்தர்வன். அப்போது ஈசன், சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் தோன்றி காட்சி தந்தார். அந்த இறைவன் ‘கந்தவேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். கந்தர்வன் சாப விமோசனம் பெற்று தேவலோகம் சென்றான். ஆனாலும் வருடம் தோறும் மீன-பரணி நட்சத்திரம் அன்று, தேவர்கள் புடைசூழ இங்கு வந்து சிவபூஜை செய்வதாக ஐதீகம்.

அந்தக் காலத்தில் மாதம் மும்மாரி பொழிந்த மழையால், தாமிரபரணி ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாகத் தாமிரபரணி இருபிரிவாகப் பிரிந்து செல்லும் சித்தர் காடு பகுதி நீருக்குள் மூழ்கியது. அப்போது கரையில் இருந்த சித்தீஸ்வரமுடையார் நயினார் என்ற அங்குண்டீஸ்வரர் கோவில் மணலில் புதைந்தது. அந்த இடத்தைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்து விட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சில ஆண்டு களுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக, சுத்தமல்லி பகுதியில் இருந்த தாமிரபரணி தண்ணீர் இன்றி வறண்டது. தொடர்ந்து அங்கு மணல் அள்ளப்பட்டதால் சுமார் 8 அடி ஆழத்தில் புதையுண்டிருந்த சித்தீஸ்வரர் கோவில், 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தென்பட்டது. அந்த பகுதி மக்கள், அடியார்களின் நடவடிக்கையால் மணல் குவியல் அகற்றப்பட்டு, ஆலயத்தின் முழு வடிவமும் வெளியே தெரிந்தது.

ஆலயத்தின் கருவறையில் சிவலிங்கம் உள்ளது. அதைச் சுற்றி தண்ணீர் நிறைந்துள்ளது. இந்த நிலை எப்போதுமே கயிலாய மலையில் சிவன் குளிர்ச்சியாக இருப்பது போலவே விளங்குகிறது. இங்கு அம்பாள் இல்லை. ஆற்றில் வெள்ளத்தில் சிலை அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது சுவாமிக்கு மட்டும் தினமும் பூஜை நடக்கிறது. ஹயக்ரீவரின் சாபத்தால் குதிரை முகம் கொண்ட பெண், இக்கோவிலில் வழிபட்டு சாப விமோசனமும், ஞானமும் பெற்றதால், குரு சாப நிவர்த்தி தலமாகவும் இது திகழ்கிறது.

தாமிரபரணி ஆற்றின் உள்ளே இருக்கும் சிவாலயம், ‘ஆதி தலம்’ ஆகும். இந்த ஆலயம் தண்ணீருக்குள் மூழ்கிய வேளையில், தென் புறத்தில் ஒரு ஆலயம் அமைத்து சிவனை பூஜித்து வந்துள்ளார்கள். அந்த ஆலயம் தற்போதும் உள்ளது. அதே போல் கந்தர்வன் வழிபட்ட ஆலயம் வடகரையில் உள்ளது. ஒரே இடத்தில் ஆற்றின் நடுவிலும், ஆற்றின் இருகரையிலும் ஒரே திருநாமத்தில் மூன்று கோவில்கள் அமைந்திருக்கும் அற்புத தலமாக இந்த இடம் போற்றப்படுகிறது. இந்த மூன்று ஆலயத்தையும் ஒரு சேர வணங்குவது சிறப்பானது.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள  என்ன உள்ளது?

தாமிரபரணி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும் காலத்தில், நதி நடுப் படுக்கையில் இருக்கும் கோவில், நீரில் மூழ்கிவிடும். அந்த நேரத்தில், அவருக்கும் சேர்த்து பூஜையை, கரையிலுள்ள அங்குண்டீஸ்வர முடையாருக்கு செய்வார்கள்.

தினமும், உச்சிகால பூசையை, கோடகநல்லூர் ப்ரஹன்மாதவப் பெருமாளும், தாயார்களும் இங்கு வந்து அங்குண்டீஸ்வரருக்கு செய்வதாக புராணங்கள் கூறுகிறது. அந்த நேரத்தில் அங்கிருப்பதே இந்த ஜென்மத்தில் கடைத்தேற நமக்கு இறைவன் அருளுகிற ஒரு வாய்ப்பு!

அங்குண்டீஸ்வரருக்கு அபிஷேகம் செய்த விபூதி, அவரே ஆதி மருந்தீஸ்வரர் ஆதலால், அனைத்து வியாதிகளுக்கும், சிறந்த மருந்தாக விளங்குகிறது.

கரையிலிருக்கும் கோவிலில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து "ஓம்" என ஜெபித்தால், கைலாசத்தில், இறைவன் முன் அமர்ந்து பிரணவம் சொல்கிற உணர்வு ஏற்படும். த்யானம் செய்வதில் ஈடுபாடுள்ளவர்கள் ஒருமுறை சென்று தரிசித்து, அனுபவிக்கவேண்டிய ஒரு கோவில், இது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....................தொடரும்!

7 comments:

  1. தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி காவாய் கனகத் திரளே போற்றி கைலாய நாதனே போற்றி என்னை ஆளும் பரம்பொருளே சர்வேசா பரமேசா ஓம் நமசிவாய ஓம் லோபாமுத்திரா தாயார் சமேத அகத்தீசாய நமக

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ மாதா லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடியில் சரணம்

    ReplyDelete
  3. Om sri lobha mudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நம ஓம்

    இறைவனின் கருணையில் தரிசனம் கிடைக்கும்.

    ReplyDelete
  5. சிறப்பு ஐயா

    ஓம் அகத்தியர் திருவடிகள் சரணம் சரணம் சரணம்
    🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  6. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
    நன்றி ஐயா

    ReplyDelete