​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 14 September 2020

சித்தன் அருள் - 912 - ஆலயங்களும் விநோதமும் - பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்,  சுருட்டப்பள்ளி, சித்தூர், ஆந்திர மாநிலம்.


சிவன் பள்ளி கொண்ட நிலையும், அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக இருப்பதும் இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். பள்ளி கொண்ட ஈஸ்வரன்-சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர்-மரகதாம்பிகை, விநாயகர்-சித்தி, புத்தி, சாஸ்தா-பூரணை, புஷ்கலை, குபேரன்-கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் உள்ளனர்.

துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தான் இந்திரன். அசுரர்கள் அவனது ராஜ்யத்தைப் பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து, அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு பிரகஸ்பதி கூறினார்.

திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர். வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற சிவனை வேண்டினர். சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வர கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி சிவனிடம் தந்தார். அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும், "சிவபெருமானே! இந்த விஷத்தை வெளியில் வீசினால் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எங்களை காத்திடுங்கள்" என மன்றாடினர். உடனே சிவன் "விஷாபகரண மூர்த்தி'யாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த லோகமாதா பார்வதி, சிவனை தன் மடியில் கிடத்தி அவரது வாயிலிருந்த விஷம், கழுத்தினை விட்டு செல்லாதவாறு கைவைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் (கண்டத்தில்) நீலநிறத்தில் விஷம் தங்கியது. அதனால் அவர் "நீலகண்டன்' ஆனார். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் "அமுதாம்பிகை' ஆனாள். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார். அப்படி செல்லும் வழியில் இத்தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணமும், ஸ்கந்த புராணமும் கூறுகிறது. சிவன் பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்த இந்த அருட்காட்சியை, சுருட்டப்பள்ளியில் பார்க்கலாம்.

இந்த ஆலயத்தில் அருளும் பள்ளிகொண்டீஸ்வரர், சர்வ மங்களாம்பிகையின் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் காட்சி தருகிறார். பரந்தாமனை போலவே பரமேஸ்வரன் பள்ளிகொண்ட ஒரே கோவில் இது என்பது சிறப்பாகும். இந்த ஆலயத்தில் தான், முதன் முதலில் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டதாகவும், அதன்பிறகே மற்ற சிவ ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு தொடங்கியதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது.

சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் 56 கி.மீ. ஊத்துக்கோட்டையிலிருந்து 2 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.  

சரி! இங்கு நமக்கென்ன உள்ளது!

வழக்கமாக சிவன் கோவிலில் வழங்கப்படும் விபூதிப் பிரசாதம் இங்கே கிடைக்காது. மாறாக பெருமாள் கோவிலைப் போல தீர்த்த பிரசாதமும், தலையில் சடாரி வைத்த ஆசீர்வாதமும் தான்.  

நெடுஞ்சாண் கிடையாக படுத்திருக்கும் மூலவருக்கு சாம்பிராணி தைலக்காப்பு மட்டும் தான் உண்டு. மற்ற அபிஷேகங்கள் கிடையாது.

பிரதோஷ பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான். இந்த பள்ளிகொண்ட நாதனை (சிவபெருமானை) சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும். பதவியிழந்தவர்கள் மீண்டும் பதவியை அடைவர், பதவி உயர்வு கிடைக்கும், திருமணத்தடை விலகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர், என்பது தத்ரூபமான உண்மை.

உலகில் வேறு எங்கும் அம்மை மடியில் தலை வைத்து, சிவபெருமான் கிடந்த கோலத்தில் இருக்கிற காட்சியை காண முடியாது.

பிரதோஷ தரிசனம், பிறப்பின் தோஷத்தை முற்றிலும் அகற்றும். ஒரு பிரதோஷத்தன்று, இளநீர் வாங்கி வால்மீகிஸ்வரர் லிங்கத்துக்கு அபிஷேகத்துக்கு கொடுத்து, அதன் பலன் என்ன என்பதை உணருங்கள்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...................தொடரும்!

5 comments:

  1. ஓம் நமச்சிவாய

    அருமை அருமையான தகவல்

    அற்புதம் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ மாதா லோபமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்

    ReplyDelete
  3. தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி காவாய் கனகத் திரளே போற்றி கயிலை நாதனே போற்றி ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ🙏🙏🙏🙏

    ReplyDelete
  4. ஐயா அன்பு வணக்கங்கள் . ஐயா சுருட்டப்பள்ளி கு சென்று தரிசனம் செய்து இருக்கிறோம் ஐயா. அருமையான காட்சி ஐயா. பிரதோஷம் அன்று இன்னோரு முறை செல்கிறோம் ஐயா.வாழ்க வளமுடன் ஐயா, அம்மா. மிக்க நன்றி ஐயா. ஓம் சிவாய நம!

    ReplyDelete
  5. Aum Nama Shivaya, Aiyya, where in other places we could see Vathmeehwarar lingam

    ReplyDelete