​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 30 July 2011

சித்தன் அருள் - என் மனதில் நின்ற சில விஷயங்கள்!

வணக்கம்!

இந்த தொடர் திடீரென்று முடிவு பெற்றதில் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். எனக்கும் ஆச்சரியம் தான்.  எப்படி இத்தனை தொகுப்பை உங்கள் முன் தமிழில் வழங்க முடிந்தது என்று.  இதை தொடங்கும் முன்னர் ஒரு நிமிடம் த்யானத்தில் அகத்தியரிடம் "அய்யனே! எனக்கு பெரியவர் கூறிய விஷயங்களை பிறருடன் பகிர்ந்துகொள்ள உத்தரவு வேண்டும்! எந்த புகழும், பொருளும் எதிர் பார்த்து அல்ல.  உங்கள் பெருமைகளை உரைக்க வேண்டும்.  இதுவரை சித்தர்களை பற்றி எழுதியதில்லை.  உத்தரவு கொடுங்கள்" என்று கேட்டு விட்டு சென்று விட்டேன். 

அன்று மாலை, மனம் ஏனோ ஒரு நிலை படவில்லை.  எந்த தகவலும் இல்லை.  சித்தரோ பயங்கர கோபக்காரர் என்று தெரியும்.  ஏதாவது ஏடாகூடமாக சொல்லப் போக, எக்கச்செக்கமாக மாட்டி கொண்டு விடுவேனோ என்கிற பயம் வேறு.  எதை சொல்லலாம், எதை சொல்லக்கூடாது என்று கூட தெரியாத நிலை.   சற்று நேரத்துக்கு பின் மனம் ஒன்று பட, குளித்து விட்டு சிறிது நேரம் தியானம் செய்யலாம் என்று அமர..........

யாரோ பக்கத்தில் நின்று சுத்த தமிழில் "எமது ஆசிகள் உமக்குண்டு" என்று சொல்வது கேட்டது.  மனம் காலையில் வேண்டுகோளை வைத்ததை மறந்து விட்டது.  இது என்ன இப்படிப்பட்ட சுத்த தமிழை எங்கோ யாரோ சொல்ல கேட்டிருக்கிறோமே என்று நினைத்து, யோசிக்க, திடீரென்று நினைவுக்கு வந்தது.  ஆம்! இது அகத்தியர் எங்கோ யாரையோ ஆசிர்வதித்ததை நினனைவு கூர்ந்தது.  உணர்ந்ததும், உடல் முழுவதும் புல்லரித்து போயிற்று. 

அட! நமக்கு கூட ஆசிர்வதிக்கிறாரே! எவ்வளவு பெரியவர் என்று வியந்தேன்.  உடனே, விஷயங்களை நினைவுக்கு கொண்டு வர முயற்ச்சிக்க, மடை திறந்த வெள்ளம் என எதோ ஒன்று உடலெங்கும் பரவியது.  நன்றி கூறி, நீங்களே நல்ல நேரம், நாள் பார்த்து இதை குழுவில் தெரிவிக்க வையுங்கள் என்று கூறி விடை பெற்றேன்!

முதல் தொகுப்பை தட்டச்சு செய்ய அத்தனையும் தவறாக வந்தது.  அந்த நிமிடத்தில் குருவை நினைக்காமல் தொடங்கிய தவறு புரிந்தது.  ஒரு நிமிடம் கண் மூடி அவர் பாதங்களை நினைத்து "கூட இருந்து வழி நடத்த வேண்டும்!" என வேண்டிக்கொண்டு மறுபடியும் தொடங்க எல்லாம் சரியாக வந்தது.

அத்துடன் ஒரு தயிரியமும் உள்ளே புகுந்தது!  அவர் ஆசி இருக்க எதை பற்றி கவலை பட வேண்டும்! முன் செல்வோம் என உணர்ந்து ஒரு வழியாக முதல் தொகுப்பை முடிக்க, நிறைவாக வந்தது.

மறு நாள் காலை.  அது ஒரு வியாழக்கிழமை! குருவாரம்! நல்ல உறக்கத்தில் இருந்த போது யாரோ தட்டி உணர்த்துவது போல உணர, எந்த தூக்க மிச்சமும் உடலில் இல்லாமல் தெம்பாக எழுந்து உட்கார்ந்தேன்.  மனம், முன் தினம் நடந்ததை மறந்து விட்டது.

ஒரே கேள்விமயம் தலைக்குள்.  யார் அது? எதற்காக? என்ன செய்ய வேண்டும்? ஒன்றுமே புரியவில்லை.  இன்று என்ன கிழமை என்று மனம் யோசிக்க, குரு வாரம் என்று மனதில் வந்தது.  அட! நாம் தானே அவரிடம் நல்ல நேரம் நாள் பார்த்து இந்த தொடரை போட அருள வேண்டும் என வேண்டினோம்.  அதான்.  இப்பொழுது எழுப்பி......... கடிகாரத்தை பார்க்க மணி நான்கு.  பிரம்மா முஹுர்த்தம் ஆரம்பமாக போகிற நேரம். 

உற்சாகத்துடன் எழுந்து குழுவில் பதித்தேன்.  நல்ல நேரம், நாள் ஹ்ம்! அனைத்தையும் அவர்கள் வழங்குகிறார்கள்.  நம் மனதில் நேர்மை இருந்தால் உதவி கிடைக்கும் என்று உணர்ந்தேன்.  இருந்தாலும் மனதில் எதோ ஒன்று நெருடியது! எங்கிருந்தோ ஒரு பிரச்சினை வரும் என மனது சொல்லியது.  சரி வரும்போது பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன். அடுத்த வாரம் குரு வாரத்தில் அதே போல் நான்கு மணிக்கு விழிப்பு வர, தொடர்ந்து பிரம்ம முஹுர்த்தத்தில் வழங்க முடிந்தது.  இப்படி ஐந்து வாரங்கள் சென்ற போது, "போதும் அய்யா - இனிமேல் எனக்கு நேரம் கிடைக்கும் போது போடுகிறேன்" என்று சொல்லி வியாழக்கிழமை எழுப்பி விடுவதை நிறுத்தினேன்.

வந்தது பிரச்சினை.  வேறு எங்கிருந்தும் அல்ல.  குழுவிலிருந்து.  மனம் தளராமல் அகத்தியர் மேல் பாரத்தை போட்டு முடிந்த அளவு உங்களுக்கு தெரிவித்தேன்.  இந்த குழிவில் ஒரு அன்பர் எனக்கு தனிப்பட்ட மெயில் போட்டிருந்தார்.  அவர் ஒரு வலைபூ உருவாக்குவதாகவும் அங்கு யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம் என்றும் எழுதி இருந்தார்.  சரி! நம்மிடம் உள்ள ஆன்மீகம் சம்பந்தமான விஷயங்களை கொடுப்போம் என்று நினைத்து ஒரு கேள்வி கேட்க - கிண்டலாக பதில் வந்தது.    போகட்டும் என்று விட்டு விட்டேன்.

இந்த தொடரை எழுதும் போது நிறைய ஆச்சரியமான விஷயங்கள் நடந்தது.  எல்லாம் அவர் செயல்.  மின்சாரம் இருக்காது.  நாளை போட வேண்டுமே, என்ன செய்ய என்று யோசித்தால், பத்து நிமிடத்தில் மின்சாரம் வரும்.  நெட் இல்லை என்கிற நிலை இருந்தால் "என்ன அய்யா! எதோ கொஞ்சம் உதவி செய்யக்கூடாதா?" என்று கேட்டால், பத்து  நிமிடத்தில் நெட் தொடர்பு கிடைக்கும்.  இந்த தொடரை தொடங்கும் முன் அகத்தியர் சித்தரை பற்றி நான் அறிந்தது மிக குறைவு.  ஆனால், இது தொடர, எங்கிருந்தோ முன் பின் தெரியாதவர் அறிமுகமாகி அவரை பற்றிய நுணுக்கமான தகவலை தந்துவிட்டு செல்வார்.  அதை விசாரித்து போனால், ஆச்சரிய படும்படி அது உண்மையாக இருக்கும்.  இப்படி பல நிகழ்ச்சிகள்.

திரு ராஜாஜி அவர்கள் "சக்கரவர்த்தி திருமகன்" என்ற எளிய ராமாயணத்தை எழுதி முடித்த பின் அவரிடம் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார்.

"இதை எழுதி முடித்தபின் உங்கள் மன நிலை என்ன?"

அதற்கு அவர் பதில் 

"எழுதி முடிக்கும் வரை எனக்கு வேலை இருந்தது.  நேரமே போதவில்லை.  ஆனால் இப்பொழுது என் மனது வெறுமையாக உள்ளது.  இனி அல்லது அடுத்தது என்ன என்று யோசிக்க கூட மனம் முன் வரவில்லை"

இதை தொகுத்து முடித்த பின் (எனக்கு தெரிந்தவரையில்) அந்த வெறுமை நிலையை என்ன என்று நான் உணர்ந்தேன்.  யாரோ உள்ளிருந்து சொன்னார்கள்.  அதை உங்களுக்கு தெரிவித்தேன்.  அவ்வளவு தான்!

மிக சிறந்த பணியை செய்து முடித்த திருப்தி! அதில் என்பங்கு என்று ஒன்று இல்லை!

இருப்பினும், ஒன்று தான் என் மனதில்.  நாடியை பற்றி தெரிந்துகொள்ள விதியில் இடம் இருக்க வேண்டும் என்று அகத்தியர் பல இடங்களில் கூறியுள்ளார். 

அகத்தியர் திருவிளையாடலை அறிந்துகொள்ள உங்களில் நிறைய பேர் விதிக்கப்பட்டுள்ளீர்கள்.

இன்று வரை பொறுமையாக வாசித்து, கிரகித்து கொண்டதில் நன்றி!

இந்த தொடர் .................. அகத்தியர் பாதம் சரணம்!

சித்தன் அருள் - 50


என் பையனுக்கு முப்பத்திஎட்டு வயது ஆகப்போகிறது.  நல்லா படிச்சிருக்கான்.  கை நிறைய சம்பளமும் வாங்கறான்.  இன்னும் கல்யாணம் தான் ஆகலை. எப்போ கல்யாணம் நடக்கும்னு அகத்தியர் கிட்டே கேட்டுச் சொல்ல முடியுமா? - என்று கேட்டார்கள், பையனை பெற்றவர்கள்.

அந்தப் பெற்றோரைப் பார்க்கும்பொழுது மிகவும் வசதிமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.  பையனுக்கு ஏதாவது தோஷம் இருந்து அதைச் செய்யாமல் விட்டு விட்டார்களா? என்பது தெரியவில்லை.

அவர்கள் வந்த நேரம் அஷ்டமியாக இருந்தது.  இந்த நேரத்தில் என்னைத் தேடி வந்திருக்கிறார்களே ஏதாவது வித்யாசமாக அகத்தியர் சொல்லி விடக்கூடாதே என்ற பயம் எனக்குள் வந்தது.  சிலருக்கு அஷ்டமி அதிர்ஷ்டமான நாள் என்பது வேறு விஷயம்.

இப்போது படிக்க சொல்கிறீர்களே, அதுவும் சுபகாரிய விஷயமாக கேட்கத் துடிகிரீர்கள், அஷ்டமி ஆயிற்றே - என்றேன்.  கொஞ்சம் தடுத்துப் பார்க்கலாம் என்ற அல்ப ஆசை தான்.  ஆனால் அவர்களோ.....

எங்களுக்கு அஷ்டமி எட்டர நாள், மற்ற நாட்கள் விசேஷமாக அமைவதில்லை.  இது அகத்தியருக்கே தெரியும்.  வேண்டுமென்றால் அகத்தியரைக் கேட்டுப் பாருங்கள் - என்றார்கள்.

எனக்கு உள்ளுக்குள் ஒரு கேள்விக்குறி.  இருந்தாலும், விதி யாரை விட்டது என்று எண்ணி ஜீவ நாடியைப்  பிரித்தேன்.

"இன்னவனுக்கு சுபகாரியம் பேச, செய்ய அஷ்டமி எட்டர நாள் என்பது உண்மை தான்.  இவனுக்கு மட்டுமல்ல.  இன்னும் பலருக்கும் கூட அஷ்டமி, நவமி, பரணி, கார்த்திகை அனுகூலமான நாட்களாக இருக்கும்.  எனவே, நீயாக எந்த முடிவும் எடுக்காதே.  உனக்கு அதற்க்கான அதிகாரம் இல்லை" என்று சம்மட்டியால் அடிக்கிற மாதிரி ஒரு போடு போட்டார் அகத்தியர்.

அப்படியெனில் இதற்கு முன்னாள் அஷ்டமி, நவமி, பரணி, கார்த்திகையில் தாங்கள் அருள்வாக்கு தரவில்லையே.  அதற்கு என்ன காரணம்? - என்று நானும் விடாப்பிடியாகக் கேட்டேன்.

அது என் இஷ்டம்.  நான் சொல்கிறபடி செய்.  இது சித்தனின் கட்டளை அல்ல.  சிவபெருமானின் கட்டளை. யார் யார் சதாமி, நவமியில் வந்தாலும் கட்டைப் பிரித்துப்பார்.  அகத்தியன் உத்தரவு கொடுத்தால் படி.  இலையேல் கட்டை மூடிவிடு - என்றார் மேற்கொண்டு.  இது எனக்குக் கிடைத்த சாட்டை அடி.

அன்றிலிருந்து இன்று வரை, எந்த திதியாக இருந்தாலும் நான் வை மூடிக் கொண்டு கட்டைப் பிரித்துப் பார்ப்பேன்.  அகத்தியர் அருள்வாக்கு சொன்னாள் நான் சொல்வேன்.  இல்லையேல் மூடிவிடுவேன்.

அந்த பணக்கார பையனுக்கு வயது முப்பத்திஎட்டு ஆகிறது.  திருமண பாக்கியம் ஏற்ப்படவில்லை, என்று அந்த பெற்றோர்கள் சொன்னதாலும், அஷ்டமி அவனுக்கு எட்டர நாள் என்று கூறியதாலும் மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

முன் ஜென்ம விதிப்படி இவனஊகுத் திருமண பாக்கியம் என்பது இல்லை.  ஆனாலும் கடந்த பதினைந்து வருடமாகப் பெற்றோர் செய்த பூசை காரணமாக சிறு குறையோடு கூடிய வரன் வரும்.  அதை ஏற்கத் தயாரா" - என்று அகத்தியர் கேட்டார்.

சிறு குறை என்றால் எப்படி? - கேட்டார்கள் அந்தப் பெற்றோர்கள்.

பெண் இளம் விதவையாக இருப்பாள்.  ஏழ்மை குடும்பத்தில் பிறந்திருப்பாள்.  ஓரளவுக்கு அழக்ஹு இருக்கும்.  அவளது சகோதரி சற்று கால் ஊனமாக இருப்பாள்.  தெய்வ பக்தி இருக்கும்.  இப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் வந்தால் ஏற்பீர்களா?  - என அகத்தியர் சொன்ன போது, அந்த பெற்றோருக்கு முகம் சுருகிப் போயிற்று.

ஐந்து நிமிடம் ஆயிட்ட்று.  அவர்களிடம் இருந்து எந்தவிதப் பதிலும் வரவில்லை. எனவே அவர்கள் இப்படிப்பட்ட குறையுடன் கூடிய வரனை ஏற்கத் தயார் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிந்தது.

நாங்கள் இப்படிப்பட்ட வரனை ஏற்க்க மாட்டோம்.  அகத்தியரிடமிருந்து நல்ல பதிலைத்தான் எதிர்பார்த்தோம் - என்று அரைகுறை மனதோடு சொன்னார்கள்.

பையன் வெளிநாட்டில் இருக்கிறான்.  நிறைய இடங்களில் நல்ல வரன் வந்தது.  நாங்கள் தான் சரியாக முயற்சி செய்யாமல் விட்டு விட்டோம்.  இப்போது கூட ஒரு பெரிய இடத்து வரன் காத்திருக்கிறது.  நாங்கள் சரி என்று சொன்னாள், நாளைக்கே திருமணம் முடிந்து விடும் - என்று கர்வமாகவே பேசினார், அந்தப் பெரியவர்.

அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த வரனையே முடித்து விடுங்கள்.  எதற்காக இங்கு வரவேண்டும் - என்று பதிலுக்கு நானும் கேட்டேன்.

அதெல்லாம் இருக்கட்டும், நாங்கள் பார்த்த வரன் முடியுமா? முடியாதா? என்று அகத்தியரிடம் மறுபடியும் கேட்டுப் பாருங்கள், என்று பையனுடைய தாயார் கேட்டார்.  மறுபடியும் மறுபடியும் கெஞ்சினார்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த வரன் தான் உங்கள் மகனுக்கு ஏற்றது.  வேறு விதமான இடத்திலிருந்து வரும் வரன் அதிக நாளைக்கு நீடிக்காது.  பிறகு உங்கள் விருப்பம், என்று சட்டென்று ஒரே வரியில் முடித்துக் கொண்டார் அகத்தியர்.

கொஞ்ச நேரத்தில் அந்த வயதான பணக்கார தம்பதிகள் அரை குறை மனதோடு எழுந்து போனார்கள்.  அவர்கள் மனதிற்கு அகத்தியர் சொன்னது சிறிதும் திருப்தி இல்லை என்றே தோன்றியது.

ஒரு மாதம் கழிந்தது.

அந்த பணக்காரப் பெற்றோர் ஒரு திருமண அழைப்பிதழை என்னிடம் கொடுத்தார்கள், பிரித்துப் பார்த்தேன்.

அவர்கள் எண்ணப்படி அந்தப் பணக்காரப் பெண்ணுக்கே தன் பையனை மனம் முடிக்கப் போவதாக அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டிருந்தது.

வாழ்த்துக்கள் என்று ஒரே வரியில் சொல்லிவிட்டு அமர்ந்தேன்.  இதை கேட்டதும் அவர்கள் அர்த்த புஷ்டியோடு என்னைப் பார்த்து சிரித்தார்கள்.  நான் மவுனமானேன்.  வேண்டுமென்றே கேவலப்படுத்த அவர்கள் இந்த கல்யாண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு போனார்கள் என்பது பின்புதான் தெரிந்தது.

பதினைந்து நாட்கள் கழிந்திருக்கும்.

மிகவும் அவசரம் அவசரமாக அந்தப் பணக்காரப் பெரியவர் என்னை நோக்கி ஓடி வந்தார்.  எதற்காக இவர் இவ்வளவு வேகமாக வந்திருக்கிறார் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது.....

ஒரு பெரிய தப்பு நடந்து போச்சு. முதலில் மன்னித்தேன் என்று சொன்னாள் தான் நான் இங்கிருந்து நகர்வேன் - என்றார் அவர்

பெரியவர் நீங்கள், எந்த தவறும் செய்திருக்க மாட்டீர்கள்.  எதற்காக நான் உங்களை மன்னிக்க வேண்டும், என்றேன்.

நானும், என் மனைவும் அகத்தியரை மிகவும் அவமானப் படுத்தி விட்டோம்.

எப்படி?

அகத்தியர் அன்றே சொன்னார்.  ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த வரன் தான் அமையும் என்றார்.  முதலில் இந்த வார்த்தையை நாங்கள் நம்பவில்லை.  எங்களுக்குப் பிடித்த பெரிய இடத்துப் பெண்ணை நிச்சயம் செய்தோம்.  திருமண நாளையும் குறித்தோம்.  எல்லோருக்கும் அழைப்பிதழ் அனுப்பினோம்.  பையனும், அந்த பெண்ணும் பேசினார்கள்.  என்ன நடந்தது என்று தெரியவில்லை.  அகத்தியர் சொன்ன வாக்கு பொய்த்து விட்டது என்று கூட பலரிடம் சொல்லி நகயாடினோம்.  ஆனால், நேற்று இரவு அந்தப் பெண் - இந்த திருமணத்திற்கு மறுத்து விட்டாள்.  திருமணம் நின்று போயிற்று, என்றார் அவர்.

மிகவும் வருந்துகிறேன்.  இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டேன்.

மறுபடியும் அகத்தியரிடம் அருள்வாக்கு கேட்க முடியுமா?

கேட்டு பார்க்கிறேன் - என்றேன்.  அகத்தியரை வேண்டி நாடியைத் தூக்கினேன்.

குல தெய்வக் கோவிலுக்குச் சென்று, அங்கு அர்ச்சனை அபிஷேகம் எல்லாம் செய்து வரட்டும்.  ஆடம்பரமாகச் செல்ல வேண்டாம்.  பக்தியோடு சென்று வருக.  அருமையான வரன் கிடைக்கும்.  அதோடு பத்திரிகையில் ஏற்க்கனவே போட்டிருந்தப்படி அதே நாளில், அதே நேரத்தில் திருமணம் நடக்கும் - என்று நான்கே வரிகளில் முடித்துக் கொண்டார்.

வேறு எதுவும் விவரமாக சொல்லவில்லை.

அடடா... இதுவரையில் எங்களுக்கு குலதெய்வம் கோவில் இருந்தும் இதுவரை ஒன்றுமே செய்யத் தோன்றவில்லை.  இப்பொழுதாவது அகத்தியர் ஞாபகப் படுத்தினாரே, அவருக்கு நன்றி - என்று வாயாரச் சொல்லிவிட்டு நம்பிக்கையோடு நகன்றார், அந்தப் பெரியவர்.

ஐந்தாம் நாள் காலையில், எதிர்பாரதவிதமாக மணமாலை சகிதம் மாப்பிளை - பெண்ணுடன் என்னிடத்திற்கு வந்து இறங்கினார்கள் - அந்த வயதான பெற்றோர்.

"என்ன விஷயம்?" என்று நான் கேட்க்கும் முன்பே அவரே வாய் திறந்து சொல்ல ஆரம்பித்தார்.  அது இது தான்.

அகத்தியர் உத்தரவுபடி, பரிகாரங்களைச் செய்ய எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் ரயிலில் கும்பகோணத்திற்கு குடும்பத்தோடு சென்று கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கு எதிரில் மிக சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பயணம் செய்துள்ளனர்.

அவர்களில் சமீபத்தில் திருமணமாகி விதவையான ஓர் இளம் பெண்ணும் இருந்திருக்கிறாள்.  பார்க்க சாதுவாகவும், குடும்பத்திற்கு எட்டர பெண்ணாகவும் இருப்பதால், அந்த பணக்கார தம்பதிகளின் பிள்ளைக்கு அந்தப் பெண்ணைப் பிடித்துப் போயிற்று.

பணக்கார வீட்டுப் பெண் தன்னை மதிக்காமல் கேவல்ப்படுதியதர்க்கு இந்த சாதாரணக் குடும்பத்துப் பெண் எவ்வளவோ தேவலை என்பதால், தன் என்னத்தை அங்கேயே அப்பொழுதே தென் பெற்றோரிடம், சொல்லியிருக்கிறான் அவர்களது மகன்.

இது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், பையனது ஆணையை நிறைவேட்ட்ற முன் வந்து, மனதை திடப்படுத்திக் கொண்டு, அந்த குடும்பத்தளைவரிடம் பெசஈருக்கிரார்கள்.

பெண் வீட்டாருக்கு முதலில் பயம், அதே சமயம் தங்களது விதவை மகளுக்கு ரயிலில் ஒரு அருமையான வரன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.  குலதேவக் கோவிலின் முன்பு பூ கட்டிப் போட்டு பார்ப்போம்.  உத்தரவு கொடுத்தால், திருமத்திற்கு சம்மதிக்கிறோம் என்று கூறினார் அந்த பெண்ணின் தந்தை.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அகத்தியர் சொன்னபடி எந்த குலதெய்வத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்களோ, அதே குல தெய்வக் கோவிலுக்குத்தான் அந்த விதவைப் பெண்ணின் குடும்பமும் சென்று கொண்டு இருந்திருக்கிறது. இருவருக்கும் பிடித்துப் போனது போல், அவர்கள் விரும்பிய வண்ணம் குலதெய்வக் கோவிலில் பூ கட்டிப் பார்த்ததில் அனுமதியும் கிடைத்திருக்கிறது.  இனியும் தாமதிக்கக் கூடாது என்று சட்டுபுட்டுன்னு திருமணத்தை அங்கேயே நிச்சயம் செய்து விட்டனர்.

இந்தக் கதையைச் சொல்லி காரில் சென்றுந்தால் இந்த வரன் கிடைத்திருக்காது. ரயிலில் சென்றதால் வரன் கிடைத்தது.  அதுமட்டுமின்றி, அகத்தியர் சொன்னபடி ஒரு சாதாரணக் குடும்பத்தில் பெண் கிடைத்தும் விட்டது.  இது நாங்கள் செய்த பாக்கியம்.  அகத்தியர் கட்டிய நல் வழி என்று ஆனந்தப்பட்டனர், அந்தப் பணக்காரப் பெரியவர்கள்.

இதைக் கேட்டதும் என் மனதுக்கு தோன்றியது ஒன்று தான்.

அகத்திய பெருமானே, எல்லோருடைய எதிர்பார்ப்பையும் இதுபோல நிறை வேற்றிக் கொடுப்பீராக!

சித்தன் அருள் - 49

"என் பக்கத்திலுள்ள நிலமெல்லாம் எல்லாமே வித்துப் போச்சு; ஆனா என் நிலம் மாத்திரம் விற்கவே முடியவில்லைங்க.  இதற்கு ஒரு பரிகாரத்தை அகத்தியர் கிட்டே கேட்டுச் சொல்லுங்க" என்று என்னிடம் கேட்டாள் ஒரு கோடீஸ்வரப் பெண்மணி.

அந்த பெண்மணியை ஏற இறங்கப் பார்த்தேன்.

பணத்தின் செழுமை அப்படியே உடல் முழுக்க வியாபித்திருந்தது.  கஷ்டப்பட்டு எதையும் செய்ய வேண்டாம் என்ற நிலையில் அந்தப் பெண்மணியின் உடை, உடல் பாவனைகள் காணப்பட்டது.

அவளிடம் கேட்கின்ற பொழுது கூட பணத் தட்டுபாடிற்காக நிலம் விற்க வேண்டும் என்று சொல்லவில்லை.  உடனடியாக விற்றால் நல்லது.  சில கொடிகள் ஆதாயமாகக் கிடைக்கும் என்ற நிலையில் தான் பேசினார்.

நான் எதையும் மேற்கொண்டு கேட்டுக் கொள்ளாமல் அகத்தியரை வணங்கி நாடியைப் பிரித்தேன். பிரார்த்தனையை செய்து கொண்டேன்.

ஆனால், அகத்தியரிடமிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை.  இது மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது.  மீண்டும், மீண்டும் பிரார்த்தனை செய்து விட்டு ஓலைச்சுவடியைப் படித்தேன்.

சுத்தமாக ஒரு செய்தியைக் கூட அகத்தியர் சொல்லவே இல்லை.  இது எனக்கே மிகப் பெரிய கஷ்டமாக இருந்தது.  வந்த நபரைத் திருப்தி படுத்துவதற்க்காக பொய்யும் சொல்ல முடியாது.  அதே சமயம் அவர்கள் மனம் புண்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

"அம்மா இன்னிக்கு உங்களுக்கு உகந்த நாளாக இல்லை.  இன்னும் ஒருவாரம் கழித்து வர முடியுமா?" என்று கேட்டேன்.

இல்லை.  இன்னிக்கே எனக்கு நாடி படித்தாக வேண்டும்.  அடுத்த வாரம் நான் வெளிநாடு சொல்லப் போகிறேன்.  திரும்பி வர ஒரு மாத காலம் ஆகும் - என்றார் அந்தப் பெண்மணி.

மன்னிக்க வேண்டும்.  இன்றைக்கு தங்களுக்கு அகத்தியர் அருள்வாக்கு சொல்லுவதாக இல்லை. எப்பொழுது சவுகரியமோ அப்போது வாருங்கள் நிச்சயம் நான் சொல்கிறேன் - என்றேன்

வைத்தீஸ்வரன் கோவிலில் உடனே சொல்கிறார்கள்.  மற்ற இடங்களில் நான் போனால் உடனே சொல்கிறார்கள்.  நீங்கள் என்ன இப்படி இருக்கு மாறாகச் சொல்கிறீர்கள்.  அதிகப் பணம் வேண்டுமானால் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் - என்றார்.

இதுவரை பொறுமையாக இருந்த நான் இந்த வார்த்தையைக் கேட்டதும் கோபம் வந்தது.  ஆனால் அமைதி காத்தேன்.  என்னிடம் இருந்து பதில் எதுவும் வராததால் விருட்டென்று எழுந்து கிளம்பி விட்டார் அந்த கோடீஸ்வரப் பெண்மணி.

ஒரு மாதம் கழிந்தது.

ஒரு நாள் காலையில் என் அலுவகத்திற்கு கம்பீரமாக வந்து இறங்கிய அந்த கோடீஸ்வரப் பெண்மணி, நான் உங்களிடம் நாடி பார்ப்பதற்காக இப்போது வரவில்லை.  அன்றைக்கு ஒரு அவசியம் ஏற்ப்பட்டது.  அதற்காக வந்தேன்.  ஆனால் அகத்தியர் அருள்வாக்கு கிடைக்கவில்லை.  அவர் அருள்வாக்கு இல்லாமல் என்னுடைய நிலம், நினைத்ததை விட பத்து மடங்கு அதிக விலைக்கு விற்று விட்டது என்பதைச் சொல்லிவிட்டு போகத்தான் வந்தேன், என்று என்னையும் அகத்தியரையும் கேவலப்படுத்தும் அளவுக்குப் பேசிவிட்டுப் போனார்.

இன்னிக்கு எனக்கு சந்திராஷ்டமம்.  அதனால் தான் இப்படிப்பட்ட கேவலங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது, என சற்று வேதனைப்பட்டேன், அகத்தியர் நாடியைத் தொடவே எனக்குப் பிடிக்கவில்லை.

"சந்திராஷ்டமம் கழிந்த பிறகு விடியற்காலையில் அகத்தியரிடம், ஏன் இப்படிப்பட்ட அவமானம் அந்தப் பெண்மணியால் ஏற்பட்டது?" என்று கேட்டேன்.

அகத்தியர் பதில் சொன்னார்........

அந்தப் பெண்மணியைப் பற்றிச் சொல்கிறேன் கேள்.  அவள் புராணத்தில் சொல்லப்படும் கூனியை விட கேடு கெட்டவள்.  பணத்திற்காக எதையும் செய்யக் கூடியவள்.  அன்றைக்கு முதன் முறையாக அகத்தியனிடம் நாடி பார்க்க வருவதற்கு முன்பு தகாத உறவைச் செய்து விட்டு உடல் சுத்தமில்லாமல் வந்திருந்தாள்.

அதுமட்டுமல்ல.  அவள், நிலம் விற்க வந்தால் என்றாலும், அது அவளுடைய நிலம் அல்ல.  மாற்றாரை வஞ்சித்து ஏமாற்றி அடியாட்களை வைத்து பயமுறுத்தி எழுதி வாங்கப்பட்ட நிலம்.  இன்னொருவருக்குச் சொந்தமான அந்த நிலத்தை மோசடி செய்து தன் பெயருக்கு வாங்கினால்.  அது தன்னிடம் இருந்தால் பின்னர் வம்பு வருமே என்பதால் உடனடியாக விற்று பணத்தைப் பிடுங்க முயற்ச்சித்தால்.  இதற்கு அரசு அலுவலர்கள் சிலர் துணை போனதும் உண்மை.  இது அகத்தியனுகுப் பிடிக்கவில்லை.  ஏழைகளின் நிலத்தைக் கொள்ளையடித்த அந்தப் பெண்மணியை, கோடீஸ்வரி என்று எண்ணுகிறாய்.  இன்னும் ஒன்பது நாட்கள் பொறுத்திரு.  உன்னையும், என்னையும் அலட்சியம் செய்து பேசிய அந்தப் பெண்மணி என்ன நிலைக்கு ஆளாகப் போகிறாள் என்பதைப் பார்.  எனவே இதற்கு மனம் கலங்காதே.  இந்தப் பெண்மணி ஆவது நேரில் அவமானப் படுத்தினாள்.  இன்றும் உன்னைச் சுற்றி இருக்கின்றவர்கள் பலர், உன்னையும், என்னையும் எப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியமாட்டாய்.  அவர்களுக்கும் அந்தப் பெண்மணிக்கு ஏற்படும் நிலையைப் போல் ஏற்படும் என்று என்று அகத்தியர் என்னைத் தட்டிக் கொடுத்து உர்ச்சாகப்படுத்தினார்.

இது ஓரளவு மன ஆறுதலைத் தந்தாலும் என்ன நடக்கப் போகிறது என்பதை அரிய ஒன்பது நாட்கள் காத்திருந்தேன்.  ஆனால் எந்தச் செய்தியும் நான் காணவில்லை.

பத்தாவது நாள் காலை.....

எனக்கு வேண்டிய ஒரு நபர் வந்தார்.

இன்னிக்கு நாளிதழில் ஒரு செய்தியைப் பார்த்தீங்களா?" என்றார்.

"என்ன செய்தி நீங்களே சொல்லுங்களேன்" என்றேன்

ஒரு பொம்பிளை பதினஞ்சு வருஷமா போர்ஜரி செய்து, மத்தவங்க நிலத்தை தன் பெயர்லே மாற்றி, அப்படியே அதை மற்ற மாநிலத்திலுள்ள பெறும் பணக்காரங்களுக்கு கொடி, கொடியாக வித்து சாப்பிட்டிருக்காங்க.  நேத்திக்குத்தான் அவங்களை போலீஸ் அரஸ்ட் செய்திருக்காங்க! என்றார் என் நண்பர்.

எனக்கு இது சுரீர் என்று உரைத்தது.

அந்தப் பெண்ணின் பெயர் என்ன என்று கேட்டேன்.  அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை.  உடனே அவசர, வசரமாக கடைக்குப் போய் நாளிதழை வாகிப் பார்த்ததில் அவளது புகைப்படம் போட்டிருந்தது.  அந்த புகைப்படம் என்னிடம் நாடி பார்க்கா வந்த அதே பெண்ணின் புகைப்படம் தான் என்று தெரிந்தது.

இப்போது

அந்தப் பெண்மணி பதினான்கு ஆண்டு காலம் சிறைத்தண்டனை பெற்று அதை அனுபவித்து விட்டு இப்போது தான் செய்த தவறுக்குப் புண்ணியம் தேடிக் கொள்ள அடிக்கடி அகத்தியரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டு முதியவர்களுக்காக, அநாதைகளுக்காக ஆஸ்ரமம் நடத்துகிறார்.

சித்தன் அருள் - 48


என்னை எப்படியாவது அகத்தியர் தான் காப்பாற்றவேண்டும்.  இல்லையென்றால் நான் மட்டுமல்ல என் குடும்பமே தற்கொலை செய்து கொள்ள வேண்டியிருக்கும் என்று சொன்னபடி ஒரு நடுத்தர வயதுள்ள நபர் என் முன் வந்தார்.

அவர் இதை சொன்ன போது எனக்கு ஆச்சரியமானதாகத் தெரியவில்லை.

இப்படி பரபரப்பாக பேசிய நபர்கள் பலரைப் பார்த்து இருக்கிறேன்.  அவர்களில் இருவரும் ஒன்று என்று எண்ணிக் கொண்டேன்.

"எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலிக்கு அருகே பாபநாசம்.  படிப்பு இல்லை.  காட்டில் சுள்ளி பொருக்கி அதை விற்று எங்க அம்மா சோறாக்கி போடுவாங்க.  பதினெட்டு வருஷ காலம் புதுத் துணியை ஒரு நாலாவது கட்டியதில்லை.  அப்படிக் கஷ்டப்பட்ட குடும்பம்.  இப்போ நான் நல்லாயிருக்கேன்.  கஷ்டப்பட்ட என் குடும்பத்தையும் முன்னுக்கு கொண்டு வந்து விட்டேன்.  ஆனால் ---- என்று இழுத்தார் அவர்.

விஷயத்தை சொல்லுங்கள் - என்றேன்

பொதிகைமலைக்கு அடிக்கடி போவேன்.  அகத்தியரை தினமும் வணங்கி முடிஞ்சா போதெல்லாம் செண்பக மலரைப் பறிச்சு அகத்தியருக்கு மாலையாக சாற்றியிருக்கிறேன்.

இன்னும் விஷயத்தை சொல்லவே இல்லையே - என்று கொஞ்சம் விரட்டினேன்

குடும்பக் கஷ்டம் தீரனுங்கிரதுக்காக ஒரு பெரிய தப்பு செய்துட்டு வரேன்.  ஒரு தகாத கும்பலோடு எப்படியோ எனக்கு பழக்கம்.  நல்ல பணம் கொடுத்தாங்க.  அவங்க சொல்ற இடத்திற்குப் போகணும்.  யாராவது ஏதாவது பொருளைக் கொண்டுத்தா அதை அப்படியே இவங்க கிட்டே கொடுக்கணும்.  உள்ளே என்ன இருக்கு, எது இருக்குன்னு பார்க்கவே கூடாது.  பொருளை பத்திரமாக கொடுத்தா கை நிறைய பணம் தருவாங்க.

ஓஹோ1

அப்படித்தான் நான்கு நாட்களுக்கு போய் ஒருத்தர் கிட்டே பொருளை வாங்கிட்டு வரச் சொன்னங்க.  அதை வாங்கி விட்டு வரும் போது போலிசும், சுங்கத்துரைகாரங்களும் வழி மறிச்சு பிடிச்சுக்கிட்டாங்க.  பொருளை அப்படியே போட்டுவிட்டு தப்பிச்சேன், பிழைச்சென்ன்னு ஓடி வந்துட்டேங்க - என்றார் அவர்.

அப்போ போலீஸ் உங்களை தேடறாங்களா?

இருக்கும்.

அப்படின்னா நீங்க வந்த இடம் இதுக்கு சரியானதில்லை.  வக்கீல் கிட்டே போய்ச் சொல்லி, என்ன செய்யணுமோ அதைச் செய்யுங்க.  அதான் ஞாயம் என்று அவரை விரட்டி விடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தேன்.

"இல்லைங்க. உங்களைப் பத்தியும் உங்ககிட்டே இருக்கும் அகத்தியர் ஜீவ நாடியைப் பற்றி பரவலாகக் கேள்விப்பட்டிருக்கேன்.  இந்த இக்கட்டான நிலையிலிருந்து அகத்தியர் ஒருத்தர் தான் என்னைக் காப்பாற்ற முடியும்னு நம்பிக்கையோடு ஊரை விட்டு ஊர் வந்திருக்கேன் என்று விடாப்பிடியாக சொன்னவர் சட்டென்று என் காலில் விழுந்து பாதத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

அகத்தியர் இப்படிப்பட்ட நபர்கலஐக்கெல்லாம் அருள்வாக்கு தருவாரா?  என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.எதை எதையோ நினைத்துக் குழம்பினேன்.  முடிவில் அகத்தியர் என்ன தான் சொல்கிறார் என்பதையும் கேட்டு விடலாமே என்ற உந்துதலின் பேரின் நாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.

"இன்னவன் கெட்ட வழியில் பணம் ஈட்டினாலும் அவ்வப்போது நிறைய தானம், தருமம் செய்திருக்கிறான்.  கிராமத்தில் இருக்கும் சுடலைமுத்து கோவிலுக்கும், இசக்கி அம்மனுக்கும் கோவில் கட்டியவன்.  இருப்பினும் செய்த தவறுக்குத் தண்டனையும் உண்டு.  அதே சமயம், அவனது புண்ணியமும் இவனைக் காப்பாட்ட்ரும், என்று சொன்னவர் எனக்கொரு கட்டளையும் இட்டார்.

"நான் சொன்னது தெய்வ ரகசியம்.  இதை இவனிடம் இப்போதே சொன்னாள் பயம் விலகிவிடும்.  தண்டனையிலிருந்து தப்பி விடுவோம் என்ற நம்பிக்கையில் மீண்டும் இதே தொழிலைச் செய்ய ஆரம்பிப்பான்.  பின்னர் ஒவ்வொரு தடவையும் அகத்தியனான என்னை வந்து அடைக்கலம் கேட்ப்பான்.  இந்த தடவை மாத்திரம் இவனை அந்த இக்கட்டானச் சூழ்நிலையிலிருந்து காப்பாற்றுவோம்" என்றவர், இப்பொழுது அவன் காதில் கேட்கும்படி சற்று உரக்கவே படி என்று ஆணையிட்டார்.  அதன் படியே நானும் படித்தேன்.

அந்த பொல்லாத தவறிலிருந்து தப்பிக்க இப்போது முதல் குல தேவக் கோவிலுக்குப் பாடுபட்டு சம்பாதித்த பணத்திலிருந்து பால் அபிஷேகம் செய்து கொண்டு வருவதாக பிரார்த்தனை செய்க.  ப்ரத்யங்கிர தேவிக்கு அமாவாசையன்று ஒரு யாகம் செய்க.  அறுபடை வீட்டுக்குச் சென்று முருகப் பெருமானை அங்கமெல்லாம் குளிர சந்தக் காப்பு சாற்றுக.

கருட தண்டக யாகம் ஒன்றை கருடன் சன்னதியில் ஓர் சனிக்கிழமையன்று செய்யட்டும்.  இதைச் செய்தால் பழியிலிருந்து தப்பிப்பான்.  ஆனால் ஒன்று, இத்தகையப் பிரார்த்தனைகள் செய்யும் பொழுது தீட்டுப்படக் கூடாது.  மனம் அலைபாயக் கூடாது.  நாற்ப்பது நாட்கள் சுத்தமாக இருக்கட்டும்.  அப்படி மீறி ஏதேனும் நடந்தால் அதற்கு அகத்தியனைப் பொறுப்பாளியாக எண்ணக் கூடாது.  இன்னொன்று இதுதான் முதலும் கடைசியும்.  மறுபடியும் அகத்தியனை நோக்கி வந்தால் பதில் உரைக்க மாட்டேன்."

இவ்வாறு அகத்தியர் சொன்னதை அப்படியே அந்த நபரிடம் சொன்னேன்.

கையைக் கூப்பிக் கொண்டு, பயந்தபடியே கேட்டவர், இதிலிருந்து தப்பித்தால் போதும்.  இனிமேல் அந்த பொல்லாதக் கூட்டத்தில் ஒரு போதும் சேரமாட்டேன், என்றார்.  அவர் சொன்னாலும் எனக்கு அவ்வளவாக அவர் மீது நம்பிக்கையில்லை.

இரு மாதம் கழிந்தது.

என்னிடம் நாடி பார்த்துச் சென்ற அந்த நபரின் சொந்தக்காரர் ஒருவர் வெகு வேகமாக வந்தார்.  ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தார்.

அகத்தியர் சொற்படி அத்தனைப் பிரார்த்தனைகளையும் நான் சுத்தமாக செய்து விட்டேன், அவர் அருளால் பொல்லாத செயலிலிருந்தும், வழக்கிலிருந்தும் தப்பி விட்டேன்.  ஒரு விஷயத்தை நான் சொல்லியாக வேண்டும்.  நான் மாட்டிக் கொண்டது ஒரு போதை மருந்து கடத்தும் கும்பலில் தான்.  ஆனால் அன்றைக்கு நான் பிடிபட்ட பொழுது என் கையில் இருந்தது என்று எண்ணினேன்.  ஆனால் அது போதை மருந்தல்ல.  வெறும் வேப்பிலை பொடி என்பது எனக்கே பின்னால் தான் தெரிந்தது.

என்னை ஏமாற்றவே, போதை மருந்துக்குப் ப்பதிலாக வேப்பிலைப் பொடியைக் கொடுத்திருக்கின்றனர்.  நல்லவேளை அகத்தியர் என்னைக் காப்பாற்றவே வேப்பிலைப் பொடியை மாற்றினாரோ? என்று தான் தோன்றுகிறது.  எனினும் இது போன்ற தொழிலைச் செய்யக்கூடாது என்று நான் முடிவெடுத்தேன்.  காவல் நிலையத்திர்க்குச் சென்று சரண் அடைந்தேன்.  என் மீது உள்ள பழைய வழக்குகள் ஒன்றிரண்டு இருக்கிறது.  அதனால் இப்போது விசாரணைக் கைதியாக இருக்கிறேன்.

செய்த தவறுக்குத் தண்டனை கிடைத்தால் அதையும் ஏற்ற்றுக் கொள்வேன்.  ஒருவேளை அகத்தியர் கருணையால் நான் விடுதலை ஆனால் எஞ்சி இருக்கும் நாட்களில் மூடத் தூக்கியாவது பிழைத்து என் குடும்பத்தைக் காப்பாற்றுவேன்.  எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள், என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தது.

சில வருஷத்திற்கு பிறகு.........

அகத்தியர் அருல்வக்குபடி அவன் தண்டனை பெறாமல் வழக்கிலிருந்து தப்பித்தான்.  ஏற்கனவே செய்த தவறுக்கு ஒன்னரை ஆண்டு காலம் தண்டனை மட்டும் அனுபவித்து விட்டு வெளியே வந்து விட்டான்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவனுக்கு குறைந்த பட்சம் தண்டனையைக் கொடுத்து வெளியே கொண்டு வந்த வழக்கரிஞ்சரின் பெயர் "அகஸ்தீஸ்வரன்"

சித்தன் அருள் - 47

கிராமத்திலிருந்து வந்திருந்த அந்த நபரைப் பார்த்ததும் எனக்கு பகீர் என்று இருந்தது.  காரணம், முரட்டு மீசை, வாட்ட சாட்டமான உடம்பு, இடுப்பிலே சாண் அளவுக்கு தோலால் செய்யப்பட பெல்ட்.  மேலுடம்பில் எதுவும் இல்லை.  லுங்கி கட்டியிருந்தார்.

"என்ன வேண்டும்" என்று கேட்டேன்.

என் மனைவிக்கு உடம்பு சுகமில்லைங்க.  கிராமத்திலே இருக்கா.  உடல் நிலை சரி இல்லைங்க.  அவங்களுக்கு சுவடி பார்க்கணம். என்றார் அந்த நபர்.

டாக்டரிடம் காட்ட வேண்டியது தானே.  இங்கே நாடியைப் படிச்சு என்ன செய்யப் போறீங்க? என்று கேட்டேன்.

அகத்தியர் அய்யா, என் மனைவியைக் காப்பாத்தணும்! அதற்காகத்தான் இங்கு வந்தேன் - என்றார்

இனிமே உங்க மனைவி குழந்தை பெத்துக்க கூடாது, இதன் மீறினா அவங்க உயிருக்கு ஆபத்துன்னு டாக்டர் அய்யா சொன்னாரு! ஆனா இப்போ என் பெண்டாட்டிக்கு நிறை மாசங்க............. என்றார்

ஏம்ப்ப!, டாக்டர் அப்படிச் சொல்லிட்டார்னா நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா?  சரி உனக்கு எத்தனை குழந்தைகள்? என்றேன்.

ஏழு குழந்தைங்க.  இப்ப மூத்த மகளுக்கு கல்யாணம் ஆகி அவளும் தலை பிரசவத்திற்கு வீட்டிக்கு வந்திருக்கா - லேசாக வெட்கப்பட்டு சொன்னார்.

சரிதான் போ! உம பொண்ணுக்கு பிரசவம் பார்ப்பியா இல்லை, உன் சம்சாரத்திற்கு பிரசவம் பார்ப்பியா?  போதாகுறைக்கு அவங்களுக்கு உடம்பு வேற சரி இல்லைன்னு சொல்றே! என்னப்பா இது! ரொம்ப தப்பு பண்ணிட்டியே - என்றேன் ஆதங்கத்துடன்.

சிறிது நேரம் மௌனமாக கழிந்தது.

"சரி.  உன் கிராமம் எங்கே இருக்கு?"

மலைக்குப் பக்கத்திலே, போக வர சரியான பாதை கிடையாது.  ஆறு தாண்டி அக்கரைக்கு வரணும்.  அப்புறம் இரட்டை மட்டு வண்டியில் ஒரு மணி நேரம் போனா தான் ஊரு வரும்.  அந்த ஊர்ல தான் பிரசவ ஆஸ்பத்திரி இருக்கு........ - ரொம்ப நிதானமாக சொன்னார் அவர்.

"சரி இவ்வளவு கஷ்டப்பட்டு போறதுக்குள்ளே வீட்டிலே பிரசவமே நடந்துடுமே! வேறு டாக்டர், ஆயா, மருத்துவச்சி உங்க ஊர்ல கிடையாதா?

இருக்காங்க! ஆனா அவங்க எங்க ஊர் பக்கமே வரமாட்டாங்க.  ஒரு நாள் காத்து கிடந்தது தான் கூட்டி வாரணம்.

உங்க கிராமத்திலே இவ்வளவு அசவுகரியம் இருக்கே.  அந்த கிராமத்தை விட்டு வெளியே வரக்கூடாதா?

முடியாதுங்க.  நாங்க கிராமக் கட்டுப்பாட்டிற்கு உள்ளவங்க.

அது சரி.  இப்போ யார் சொல்லி என்னைத்தேடி வந்தே.

ஊர்ல சொன்னங்க.  என் மனைவி உயிருக்கு ஆபத்தா, இல்லையான்னு கேட்டுப் போகலாம்னு வந்தேனுங்க - என்றார் அந்த நபர்.

எனக்கு அந்த கிராமத்து நபர் சற்று வித்தியாசமாகவே தென்பட்டார்.  எந்த நம்பிக்கையில் இவர் என்னைத்தேடி நாடி பார்க்க அவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்க வேண்டும்?  எதைப் பற்றியும் அதிகம் கவலைப்பட்டதாக தெரியவில்லை.  பண வசதியும் இல்லை.

முரட்டுத்தனம் தோற்றத்தில் தெரிகிறது.  உள்ளத்தில் தெய்வ நம்பிக்கை இருக்கிறது.  நிறைமாத கர்பிணியை கிராமத்தில் விட்டு விட்டு இங்கு வந்து நாடி பார்க்க வந்திருக்கிறானே இவனை என்னவென்று சொல்வது? என்று நினைக்கும் பொழுது சிறிது வருத்தம் கலந்த கோபம் ஏற்பட்டது.

மனதை தேற்றிக் கொண்டு அகத்தியரிடம் வேண்டி படிக்க ஆரம்பித்தேன்.

உடல் பலவீனம் உள்ள மனைவி அவள்.  மருத்துவர் சொன்னதும் உண்மை.  இனியொரு முறை கர்ப்பம் தரித்தால் இரத்தச்சோகை.  இனிப்பு நோய் எதிராக காரணமாக அவளுக்கு ஆயுட் பலம் இல்லை தான்.  எனினும் அகத்தியனை தேடி வந்தவன் பார்க்க முரடனாக இருந்தாலும் மனதளவில் ஏதுமறியா குழந்தை.  படிப்பறிவு இல்லை.  ஆனால் தெய்வ நம்பிக்கை அதிகம்.

இவனுக்கு அகத்தியன் உதவிடத்தான் வேண்டும்.  ஏனெனில் சென்ற ஜென்மத்தில் இவன் எத்தனையோ உயிர்களைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றி இருக்கிறான். அது மட்டுமல்ல, அகத்தியன் மீது அளவற்ற பக்தி கொண்டு பொதிகை மலையில் கஷ்டப்பட்டு நடந்து, பட்டினி கிடந்தது அகத்தியனுக்காக பால் அபிஷேகம் செய்து ஆனந்தப்பட்டவன்.  அந்த பொதிகை மலை அருவியில் வீழ்ந்திட்ட ஒரு பெண்ணைக் காப்பாற்ற இவன் அந்த அருவிக்குள் குதித்து அந்தப் பெண்ணை காப்பாற்றினான்.  அதன் சமயம் தான் அவளுக்காக அருவியிலே உயிரும் துறந்தான்.  இதை எண்ணிப் பார்த்தோம்.

முன் ஜென்மத்தில் இன்னவன் செய்திட்ட அரும்பணிக்காக யாமும், எம் துணைவி லோபமுத்திரையும் இன்னவன் மனைவிக்கு பிரசவ சமயத்தில் உறுதுணையாக இருப்போம் - என்று சொன்னார் அகத்தியர்.

பின்பு என்னிடம் "அகத்தியன் மைந்தா, இன்னவனை உடனடியாக கிராமத்தை நோக்கிப் போகச் சொல்.  அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டு விட்டது.  துடிக்கிறாள் அவள்" என்று சொல்லி முடித்துக்கொண்டார்.

இதை கேட்டதும் எனக்கு உள்ளூர உதறல் ஏற்பட்டுவிட்டது.  இருந்தாலும் அந்தக் கிராமத்து நபரிடம் பிரச்சினை எதுவும் இல்லை "உடனே ஊருக்கு செல்" என்று சொன்னேன்.

பிரசவம் நல்ல படியாக நடக்க வேண்டும்.  அந்த இரு உயிர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று எல்லா வேலைகளையும் தள்ளி வைத்து விட்டு நானும் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன்.

என்ன நினைத்தானோ தெரியவில்லை, புறப்பட்டுச் சென்றவன் மீண்டும் திரும்பி வந்தான்.

எல்லா வேலைகளையும் தள்ளி வைத்து விட்டு, நாடி பார்க்க வந்த பலரையும் வீட்டிற்கு அனுப்பி விட்டு, த்யானத்தில் நான் உட்கார்ந்ததைக் கண்டு அந்த கிராமத்தானுக்கு எதோ சந்தேகம் ஏற்பட்டு விட்டது.

நன்றாகப் பேசிக் கொண்டிருந்த நான் சட்டென்று த்யானத்தில் ஆழ்நததால், தன மனைவிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.  இனி அவள் உயிர் பிழைக்க மாட்டாள் என்று கருதி விட்டான்.  தான் நினைத்தது சரிதானா என்றறிய உடனடியாகக் கிராமத்திற்குச் செல்வதைவிட இங்கேயே இருந்து விடுவது என்று முடிவெடுத்து விட்டான். 

கிராமத்திருக்கு செல்லாமல் அவனும் எனக்குச் சற்று தள்ளி ஒரு ஓரத்தில் அமர்ந்து விட்டான்.  ஆனால் அவனால் எந்த விதப் பிரார்த்தனையும் செய்ய முடியவில்லை.  கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்து கொண்டிருந்தது.  நடக்கக் கூடாத எதோ ஒரு துக்கம் நடந்து விட்டது போல கற்பனை செய்து கொண்டு அமர்ந்து விட்டான்.  இதை நானும் கவனிக்கவில்லை.

பிரார்த்தனையை செய்து முடித்து கண் திறந்து பார்த்த போது, இவன் தலை குனிந்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.

எனக்கு இப்போது தான் உண்மையிலேயே பதற்றம் ஏற்பட்டது.

"இன்னும் போகவில்லையா, உடனே போ" என்று பல்வேறு வகையில் சமாதானம் சொல்லி அவனை வலுக் கட்டாயமாக அனுப்பி வைத்த பிறகு தான் எனக்கே நிம்மதி வந்தது.

அகத்தியர் சொன்னபடி நடக்கும் என்றாலும் ஒருவேளை தப்பித்தவறி ஏதாவது ஏடாகூடமாக ஆகிவிட்டால் இப்படிப்பட்ட கிராமத்து மக்கள் கலாட்ட செய்து விடுவார்கள்.  இதில் போய் மாட்டிக் கொள்ளக் கூடாதே என்ற பயத்தோடு மூன்று நாட்கள் தூக்கமின்றித் தவித்தேன்.

நான்காம் நாள் காலை.

அந்தக் கிராமத்தான் மகிழ்ச்சியோடு என்னை நோக்கி வந்தான்.  அவன் கையில் கிராமத்தில் சுட்ட தயாரிக்கப்பட்ட ஜிலேபி, வாழைப்பழங்கள், வெற்றிலை, பாக்கு இருந்தது.

"என்ன ....... நல்ல படியாக மனைவிக்கு பிரசவம் ஆயிடுத்து போலிருக்கு.  தாயும், குழந்தையும் சவுகரியம் தானே என்றேன் - தெம்போடு.

அவன் இதெயெல்லாம் விட்டு விட்டு ஒன்றை மட்டும் கேட்டான்.

"சாமி அகத்தியரைப் பற்றி என்ன நினைக்கறீங்க?"

"ஏன் இந்த சந்தேகம் திடீரென்று வந்தது.  அவர் சிவ மைந்தன் சித்தர், தலையாயச் சித்தர்" என்றேன் நான்.

"இல்லைங்க.  இவரையும் விட தெய்வம் தான் ஒசந்தது என்று எண்ணினேன்.  ஆனால் என்னைப் பொறுத்தவரை அவருதாங்க தெய்வம்" என்று தொடர்ந்து பேசினான்.

"அன்னிக்கு நான் உங்க கிட்ட வந்த போது என் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டு துடிச்சு போயிருக்க.  அப்போ யாரோ ஒரு சன்யாசியும், அவரது மனைவிய்ம் வீட்டுப் பக்கம் வந்திருக்காங்க.  என் குழந்தைகளை தள்ளி போகச் சொல்லி, அந்த சந்நியாசி மனைவி என் பெண்டாட்டிக்கு பிரசவம் பார்த்திருக்காக.  அந்த அம்மா கையைக் தொட்டதும் என் மனைவிக்கு பிரசவ வலி தெரியவில்லை.  எந்த விதமானக் குறையும் இல்லாம ஒரு பிள்ளைக் குழந்தை பிறந்திடிச்சு.  என் மனைவி உயிருக்கும் ஆபத்தில்லை.

இன்னொரு அதிசயத்தை கேளுங்க.

வாசலில் உட்கார்ந்து ஜெபம் பண்ணின அந்த சந்நியாசி சில பிரசவ மருந்துகளைப் பொட்டலம் பொட்டலமாகக் கட்டி கொடுத்திருக்காரு.  பிரசவம் முடிஞ்சதும் அந்த அம்மாவும், சந்நியாசியும் எந்த வித பிரதி உபகாரமும் வாங்காம போயிட்டாங்களாம்.  இப்போ சொல்லுங்க வந்தவங்க அகத்தியரும், லோப முத்திரையும் தானுங்களே" என்றான் மிக்க சந்தோஷத்துடன்.

முதலில் இதை என்னால் அவ்வளவு சீக்கிரமாக நம்ப முடியவில்லை.  எந்தவித முகாந்திரமும் இல்லாமல் ஒரு வித வசதியும் இல்லாத அந்தக் கிராமத்திருக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு சன்யாசித் தம்பதிகள் வருவானேன்? பிறகு எதையும் எதிர்பார்க்காமல் செல்வானேன்?

 யோசித்து பார்த்த பொழுது அகத்தியர் தான் என்ற எண்ணம் ஆணித்தரமாகத் தோன்றியது.  மானசீகமாக அந்த அகத்தியத் தம்பதிகளுக்கு நன்றி சொன்னேன்.

என்னைத் தேடி வந்து அகத்தியர் நாடி பார்க்கின்ற அத்தனை பேர்களுக்கும் இப்படியொரு அதிசயத்தை அகத்தியர் தம்பதிகள் செய்தால் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்?  செய்யக்கூடாதா? என்று என் உள்  மனம் வேண்டியது.

Wednesday, 27 July 2011

சித்தன் அருள் - 46


எங்க வீட்டிலே தோஷம் இருக்க? என்று அகத்தியரால் சொல்ல முடியுமா? என்ற படி ஒருவர் வந்தார்.

கேட்டு பார்க்கிறேன்.  இதற்கு சிலசமயம் பதில் வரும்; சில சமயம் பதில் வராது, என்றேன்.

இது சரியான பதிலாகத் தெரியல்ல.  ஹ்ம்ம். எதற்கும் கேட்டுப் பாருங்கள், என்றார் முரட்டு சுபாவம் கொண்ட அந்த நபர்.

எதோ அகத்தியரும் நானும் இவருக்கு அடிமை போலவும், இவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அகத்தியரிடம் கேட்டு நான் உடனடியாக பதில் சொல்ல வேண்டும் என்பது போலவும் அந்த நபர் நடந்து கொண்டது எனக்கு துளியும் பிடிக்கவில்லை.

இருப்பினும் பொறுமை காத்தேன்.  பிரித்து படித்தேன்.

"இன்னவன் செல்லப் போகும் புது வீட்டின் ரேழியில் உத்திரதிருக்கு நேர் அடியில் சிறிது தோஷம் உண்டு.  அங்கு செல்வதற்கு முன்பு சுதர்சன யாகம் ஒன்றைச் செய்துவிட்டு தான் செல்ல வேண்டும்.  இல்லையேல், பின்னால் அகத்தியன் மீது பழி போடுவது நல்லதல்ல, என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

என்னங்க அந்த வீட்டில் தோஷம் இல்லைன்னு வாஸ்து நிபுணர் சொல்றாரு. நீங்க இப்படி சொல்றீங்க.  எது உண்மை, எது பொய்னு தெரியவில்லையே? என்று முணுமுணுத்தார் வந்தவர்.

நான் கொஞ்சம் நிதானமிழந்தேன்.  "சார்!........ இதில் ஏதாவது ஒன்றை நம்புங்க.  இல்லைனா நம்பாம போங்க.  எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை.  நான் அகத்தியருக்கு ஏஜெண்டும் இல்லை" என்றேன்.

அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.  சட்டென்று கோபத்தோடு எழுந்தார்.  "வாஸ்து தோஷம் என்கிறது பொய் சார்.  இதெல்லாம் சும்மா பயமுறுத்தி பணம் பிடுங்கிற விஷயம் தான்.  இப்போ நீங்க வீட்டுல வஸ்து தோஷம் இருக்குன்னு சொல்றீங்க.  நான் நம்பவில்லை.  இருந்தாலும் மத்தவங்க சொல்றாங்கன்னுதான் உங்களைப் பார்க்க வந்தேன்" என்றார்.

நான் ஒன்றும் பேசவில்லை.  அமைதி காத்தேன்.

"சரிங்க....... இப்போ நான் உங்க வழிக்கே வரேன்.  எப்படி வாஸ்து தோஷம் வந்திருக்குன்னு சொல்ல முடியுங்களா?" என்றார் பின்பு.

"அந்த வீட்டுல துஷ்ட தேவதை இருக்கும்.  ஏதாவது அகால மரணம் நடந்து, அதுக்கு சாந்தி செய்திருக்க மாட்டாங்க.  இல்லைனா பூமி தோஷம் இருந்திருக்கும்.  அதனால் அந்த வீட்டுல வாஸ்து தோஷம் ஏற்பட்டிருக்கும்னு அகத்தியர் சொல்றாரு" என்றேன்.

"இதெல்லாம் நீங்களும் நம்பாதீங்க சார்.  இப்போ தினமும் ரோட்ல நிறைய பேர் விபத்துல சாகிறாங்க.  அதுக்காக அங்கே யாராவது சுதர்சன ஹோமம் பண்ண முடியுங்களா? என்னங்க நீங்க என்றவர்" தன மீசையை முறுக்கி விட்டு கொண்டார்.

இவரிடம் பேசிபயனில்லை என்று மேற்கொண்டு பேசாமல் இதில் நம்பிக்கை இருந்தால் நாடி பார்க்க வரட்டும்,  இல்லையேல் அப்படியே ஒதுங்கி விடவேண்டியது தானே.  இதை விட்டு விட்டு இப்படி இங்கே வந்து என்னை இழுத்தடிப்பனேன் என்று என் உள்மனம் அந்த நபரைத் திட்டியது.

இரண்டு மாதம் சென்று இருக்கும்.  ஒருநாள் மாலை மிகுந்த சோர்வோடு அந்த நபர் என்னை நோக்கி வந்தார்.  வந்தவர் ஒன்றும் பேசாமல் வருத்தப்பட்டு அழுதார்.  நான் என்னவென்று கேட்கவே இல்லை.  அமைதியாக அவரை பார்த்துக் கொண்டே இருந்தேன்.

"சார் என்னை மன்னிச்சுருங்க.  அகத்தியரை ரொம்பவும் சோதித்துப் பார்த்துட்டேன்.  அதன் பலன் நன்றாக இருந்த என் ஒரே ஒரு ஆண் குழந்தை சட்டென்று இறந்துவிட்டது.  அதுவும் அந்த புது வீட்டில் நீங்க சொன்ன அதே ரேழியில், உத்தரத்திற்கு அடியில்" என்றவர் மேற்கொண்டு பேச முடியாமல் தவித்தார்.

அவரை ஆச்வாசபடுத்தி "என்ன நடந்தது?" என்று கேட்டேன்.

உங்க கிட்டே சவால் விட்டுவிட்டு மூணு நாள்ல வீடிற்கு குடி போனேன்.  அன்னிக்கு ராத்திரி சரியாக பன்னிரண்டு மணிக்கு அந்த ரேழியில் படுத்திருந்த என்னுடைய குழந்தை சட்டென்று அலறியது.  அடுத்த நிமிடம் மூச்சு பேச்சு வராமல் இறந்து விட்டது" என்றார்.

அகத்தியர் சொற்படி சுதர்சன ஹோமம் செய்து விட்டு போனீர்களா?

இல்லை.

வேறு எந்த பரிகாரமும் செய்யவில்லையா?

இல்லை.  எனக்கு சாஸ்திரம், சம்ப்ரிதாயம் எதுவும் தெரியாது.  நம்பவும் மாட்டேன்.  அதன் விளைவுதான் இது என்பதை அறிந்துகொண்டேன்.

அப்படி நம்பிக்கை இல்லாதபோது எதற்காக அன்றைக்கு நாடி பார்க்க வந்தீர்கள்? என்று சூடாகவே கேட்டேன்.

எல்லோரும் சொல்றாங்களேனு நெனச்சுதான் வந்தேன்.  அதோடு விட்டுட்டுப் போயிருக்கலாம்.  உங்களையும் அகத்தியரைப் பற்றி ரொம்பவும் கேவலமாகப் பேசிவிட்டேன்.  என்னை மன்னிச்சுருங்க.  சரி அதனை விட்டு விடலாம்.  எதற்காக என் செல்லக் குழந்தை சட்டென்று இறக்கணும்?  அதை நினைச்சுத்தான் தாங்க முடியாமல் துடிக்கிறேன்.

காரணமில்லாம எதுவும் நடந்திருக்காது.  அகத்தியர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம் என்று அவரைச் சமாதானப் படுத்தினேன்.

அகத்தியர் மீது பழி சுமத்தி கேவலப்படுத்துவதர்க்காகத்தான், நான் அப்படி நடந்து கொண்டேன்.  உண்மையில் வீட்டில் தோஷம் இருந்தது என்பது எனக்கு முன்னமே தெரியும்.  ஆனால் நம்பவில்லை.  என் குழந்தை இறந்து அதே இடத்தில் தான், இதற்கு முன்பு குடியிருந்த ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.

இதற்க்கு பின்னால் குடி வந்த மற்றொருவர் அதே உத்திரத்தில், கடன் தொல்லை தாங்காமல் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளார்.  இதற்கு பிறகு அந்த இடத்தில் ஒரு தீ விபத்தில் ஏழு வயது குழந்தை கொல்லப்பட்டிருக்கிறது.  இதெல்லாம் தெரிந்தும் அதே இடத்தில் தான் என் குழந்தையை ஒரு வீம்புக்காக படுக்க வைத்தேன்.  நான் ஒரு பகுத்தறிவுவாதி.  ஆனால் என் பகுத்தறிவால் இளம் மகனை இழந்து விட்டேன்.  நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து எதற்காக இப்படி நடக்கிறது என்பதை அறிய ஆசைப்படுகிறேன்" என்றார் அந்த நபர்.

நான் ஒன்றும் சொல்லாமல் நாடியைப் புரட்டினேன்.

அந்த குறிப்பிட்ட இடத்தில் தேவையல்லாத ஒரு பொருள் இருந்தது.  அந்த வீட்டிற்கு குடியிருக்க வருபவர்கள் சந்தோஷமாக வாழக்கூடாது என்பதற்காக அதர்வண வேதத்தின் துணை கொண்டு பூமியில் ஒரு யந்திரத் தகடு வைக்கப்பட்டிருக்கிறது.  இது வெகு நாட்களாக அந்த வீட்டில் குடியிருந்த ஒருவரால் செய்யப்பட்டிருக்கிறது.

எதற்காக இப்படியொரு தவறான காரியத்தில் அந்த நபர் இறங்கினார் என்றால், அவர் வாடகை தராமல் இருந்தார்.  எனவே வீட்டுக்காரர் அவரைக் காலி செய்ய சொன்னார்.  ஆத்திரத்தோடு காலி செய்யும் பொழுது தனக்குப் பிறகு அந்த வீட்டுக்கு குடிவரப் போகிற குடித்தனக்காரர்கள்,  இருந்த வீட்டுக்காரர் துன்பப்பட வேண்டும் என்பதற்காக செய்யப்பட அந்த யந்திரத்தை, வீட்டு ரேழியில், உத்தரத்திற்கு கீழே பூமியில் புதைத்து வைத்து விட்டு அவர் வீட்டைக் காலி செய்திருக்கிறார்.

அந்த யந்திரம் முறைப்படி செய்யாமல் தவறான மந்திரத்தைப் பயன்படுத்தியதால் அங்கு குடிவந்த ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனை ஏற்பட்டது.  இந்த பகுத்தறிவுவாதியின் குழந்தையின் உயிரைப் பறித்த போது, கொஞ்ச நஞ்சமிருந்த அந்த யந்திரத்தின் தீய சக்தி அத்தனையும் விலகி விட்டது.  இந்த பகுத்தறிவுவாதி அகத்தியன் சொன்னபடி அன்றைக்கே அந்த இடத்தில் ஒரு சுதர்சன யாகம் செய்திருந்தால் இந்த தவறு ஏற்பட்டிருக்காது, என்று சொன்ன அகத்தியர், யார் எந்த வீடிற்கு குடி போனாலும் முதலில் யாகம் செய்து விட்டுப் போவது தான் நல்லது.  இது எல்லோருக்கும் உகந்தது.  அதோடு மற்ற மதத்தினர் அவரவர் நம்பிக்கைகேர்ப்ப பிரார்த்தனை செய்வது உத்தமம் என்றார்.

இன்னொன்றையும் சொல்ல மறந்து விட்டேன்.  இப்படியொரு துயரச் சம்பவம் உனக்கு நடந்ததற்கு காரணம், முன் ஜென்மத்தில் நீயும் இதே மாதிரி ஒரு குழந்தையைக் கொன்று இருக்கிறாய்.  அதுவும் இப்போது கூட சேர்ந்திருக்கிறது, என்று முடித்துக் கொண்டார் அகத்தியர்.

இந்தச் செய்தி அந்த பகுத்தறிவு வாதியைப் புண்படுத்தி இருக்கலாம்.  அல்லது எதோ சமாதானம் ஒன்றை நானே சொன்னதாகக் கூட எண்ணியிருக்கலாம்.  கர்ம வினை என்பதை யாராலும் அழிக்க முடியாது.  அதிலிருந்து குறைந்த அளவு தண்டனையைப் பெற்று தப்பித்துக் கொள்ளத்தான் அகத்தியர் இப்படியொரு வழியைக் கட்டுகிறார், என்பது தான் உண்மை.  ஆனால் இதை எத்தனை பேர் புரிந்து கொள்கிறார்கள் என்பது தான் கேள்விக்குறி.  அதே சமயம் இந்த நாடி பார்க்கும் பாக்கியம் கூட எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

இப்படி பல அறிவுரைகளை வழங்கிய அகத்தியர், பொதுவாக அகத்தியன் யாம், இப்படி பட்ட அதர்வண விஷயங்களை சொல்வதில்லை.  எமக்கும் அதில் பூரண நம்பிக்கையும் இல்லை.  ஏனெனில் பிரார்த்தனையை விட சக்தி எதுவுமில்லை.  அதர்வண வேதம் தான் உலகளாவிய சக்தி என்றால் கோவில், மசூதி, தேவாலயம் எதற்கு?  தேவையே இல்லை.  பெரும்பாலோரே இந்த மாதிரியான செய்வினை செய்வதில்லை.  அப்படி மீறிச் செய்பவர்களது குடும்பத்தினர் உருப்படியாக வாழ்வதில்லை, என்று சொன்னார்.

மேலும் அதர்வண வேதத்தைப் பற்றியும் அந்த யந்திரத் தகடு பற்றியும் தகவல் சொன்னதால் நாற்ப்பத்தைந்து நாட்களுக்கு தீட்டு வந்து விட்டது.  எனவே, நாற்ப்பத்தைந்து நாட்கள் தீட்டு முடியும் வரை யாருக்கும் எந்த விதப் பலனும் சொல்லப் போவதில்லை என்றார்.

நாற்ப்பத்தைந்து நாட்கள் ஓலைச்சுவடியை சோட்டனிக்கரை பகவதி ஆலயத்தில் கொண்டு வைக்குமாறும் எனக்கு ஆணை இட்டார்.  இதனைக் கேட்ட பிறகு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

எப்பொழுதும் மங்களகரமான செய்திகளைச் சொல்லி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அகத்தியர் அருள் பாலிப்பது வழக்கம்.  இப்படிச் செய்வினைப் பற்றி பலர் கேட்ட பொழுது தனக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றும் சொல்லியும் இருக்கிறார்.

அப்படிப்பட்ட அகத்தியர் அந்த பகுத்தறிவுவாதிக்கு இவ்வளவு பெரிய விளக்கத்தை தருவார் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. 

நாற்ப்பது நாட்கள் கழிந்திருக்கும்.

பட்டை பட்டையை திரு நீறு பூசி நெற்றியின் நடுவில் காலணா அளவுக்கு குங்குமம் வைத்து பழுத்த சிவ பழமாக வந்த அந்த பகுத்தறிவுவாதி ஒரு ஆச்சரியாமான செய்தியை என்னிடம் சொன்னார்.

எவன் அந்த வீட்டிற்கு மந்திரித்து யந்திரத் தகட்டினை வைத்தானோ அவனது பேரக்குழந்தை நாடு ரோட்டில் விபத் ஆகி இப்பொழுது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது.  இந்த செய்தியை அந்த நபரே இந்த பகுத்தறிவுவாதியிடம் வந்து சொல்லி நான் அன்றைக்குச் செய்த பாவம் என்று கதறியிருக்கிறான்.

அந்தக் குழந்தையை எப்படியாவது காப்பாற்ற அகத்தியரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.  என் குழந்தை தான் இறந்து விட்டது.  ஆனால், அவரது குழந்தை இறந்து விடக்கூடாது.  அந்தக் குழந்தைக்காக பழனி முருகனுக்கு மொட்டை போடுவதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன்.  என் பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்றார் கண்ணீர் மல்க.  நான் நெகிழ்ந்து போனேன்.

சில நாட்கள் கழித்து அந்த பகுத்தறிவுவாதியான சிவனடியார் என் முன் வந்து நின்றார்.

மொட்டை அடித்து அதில் சந்தானம் பூசியிருந்த அவரது கையில் ஒரு குழந்தை இருந்தது.  கூடவே அந்தக் குழந்தையின் தாத்தாவும் இருந்தார்.  விபத்து ஆனா குழந்தை பிழைத்துக் கொண்டு விட்டதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?  அகத்தியரை மானசீகமாகப் ப்ர்ரர்த்திதுக் கொண்டேன்.

சித்தன் அருள் - 45


ஒரு இளம் வயது வாலிபன் வெகு வேகமாக ஓடிவந்தான். உடலெங்கும் வியர்வை. கண்களில் துக்கம். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். காலில் செருப்பு கூட அணியாமல் கடும் வெயிலில் ஓடி வந்திருக்கிறான்.

அவனது நிலையை உணர்ந்த நான் ஆசுவாசப்படுத்தி உட்கார வைத்து குளிர்ந்த நீர் கொடுத்து எதற்காக இந்த அவசரம்? என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன்.

என் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை. அம்மா உயிரோடு இருப்பாரா? இல்லை போய் விடுவாரா? அகத்தியரிடம் கேட்டுச் சொல்லுங்கள்? என்றான்.
அம்மாவுக்கு பேச்சு மூச்சு இல்லை என்றால் இவன் அம்மாவின் பக்கம் தானே இருக்க வேண்டும். எதற்காக அம்மாவைத் தனியாக விட்டு விட்டு இங்கு ஏன் ஓடோடி வரவேண்டும் எனறு எனக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது.

‘சரி,  எதற்கும் ஜீவநாடியைப் படித்துப் பார்ப்போம்  என்று நாடியை பிரித்தேன்.
அகஸ்தியர் சொல்ல ஆரம்பித்தார்…
.
‘இவன் தாய்க்கு ஒரே மகன். இளம் வயதில் தந்தையை இழந்தவன். பிறந்திட்ட இந்த மகனை, நன்றாகப் பாடுபட்டு படிக்க வைத்து மிக உயர்ந்த நிலையில் கொண்டு வரவேண்டும் என்பதற்காக மிகவும் கடுமையாகப் பாடுபட்டு படிக்க வைத்தாள்.

ஆனால் இவனோ -

தந்தை இல்லாத பையனாக செல்லமாக வளர்ந்ததினால், எந்தெந்த பழக்கங்கள் கூடாதோ, அந்தந்தப் பழக்கங்களைக் கற்றான். படிப்பில் நாட்டமில்லாமல் எங்கெங்கோ கூடாத நட்போடு சுற்றினான்.

அந்த தாய்க்குக் கவலையும், வருத்தமும் ஏற்பட்டது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் இவன் திருந்துவதாகத் தெரியவில்லை என்பதால் அப்படியே விட்டுவிட்டார்.

பருவம் அடைந்த வாலிபனாக இவன் உலா வரும் பொழுது திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவான் என்று யாரோ சொல்ல, பலரிடம் சென்று கெஞ்சி கூத்தாடி பல்வேறு பொய்களைச் சொல்லி ஒரு அழகான இளம் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தாள்.

திருமணம் செய்து முடிக்கும் வரை பொறுமையாக இருந்த இவன், திருமணத்திற்கு பின், மேலும் பல்வேறு தீய நண்பர்களோடு சேர்ந்து கெட்டுப் போக ஆரம்பித்தான். போலீஸ் இவனைத் தேடி அடிக்கடி வீட்டிற்கு வர ஆரம்பித்தது.

கேடி என்பதை உணர்ந்த அவனது இளம் மனைவி ஒரு நாள் சொல்லாமல், கொள்ளாமல் தன் பிறந்த வீட்டிற்கே போய் விட்டாள். தன் கணவன் சரியான 
இதற்கெல்லாம் காரணம் தன் தாய் என்று தவறாகப் புரிந்து அவளைத் தாயென்றும் பாராமல் கண்ணை மூடிக் கொண்டு அடிக்க ஆரம்பித்தான். அதன் உச்சகட்டம் தான் இன்று காலை நடந்திருக்கிறது. ஒரு இரும்புக் கம்பியைக் கொண்டு தன் தாயை இவன் தாக்கியிருக்கிறான். அவள் இப்போது ஆஸ்பத்திரியில் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறாள்.
தன் தாயை இப்படித் துன்புறுத்தி விட்டோமே, கட்டிய மனைவியும் கண் கலங்கி ஓடிவிட்டாளே என்ற கவலையில் இப்போதுதான் இவனுக்கு ஞானம் பிறந்திருக்கிறது. யாரோ சொல்ல அதைக் கேட்டு அகத்தியனிடம் வாக்கு கேட்க வந்திருக்கிறான் இவன் என்று  வந்திருப்பவனது வாழ்க்கை வரலாற்றைச் சொன்ன அகத்தியர் இனி மேல் இவன் திருந்துவான் என்று சொல்லி, தன் தாய் உயிர் பிழைக்க இன்று முதல் குடிப் பழக்கத்தை ஒழிக்க வேண்டும். தினமும் முருகன் சன்னதிக்கு சென்று ஐந்து முகம் தீபம் ஏற்ற வேண்டும். வேலை செய்து பிழைக்க வேண்டும். பிரிந்து போன இவன் மனைவி மீண்டும் திரும்பி வர, கெட்ட சகவாசம் உள்ள நண்பர்களை விட்டுப் பிரிந்து வர வேண்டும். அதோடு குல தெய்வ கோவிலுக்கு வாராவாரம் சென்று நெய்விளக்கு ஏற்ற வேண்டும். செய்வாயா? என்றார் அகஸ்தியர்.

‘கண்டிப்பாக’  என்றான்.

அகத்தியன் வாக்குப் பொய்யாகாமல் இருக்க வேண்டுமானால், மேற்கூறிய பிரார்த்தனைகளைத் தவறாது செய்க. இல்லையெனில் உன் தாய் ஆயுளுக்கு அகத்தியன் உத்திரவாதம் அளிக்க முடியாது. பிரிந்து போன உன் மனைவி மீண்டும் திரும்பி வரமாட்டாள். என்ன சொல்கிறாய்? என்று கண்டிஷன் போட்டார்.

ஐயா,  அப்படிச் சொல்லாதீகய்யா,  இப்போ தான் எனக்கே புத்தி வந்தது. போலீசுக்குப் பயந்து மறைந்து வாழ்வதைக் காட்டிலும் அகத்தியர் சொற்படி நல்லவனாக நடந்து காட்டுகிறேன். எனக்கு பெண்டாட்டி வேணும். குழந்தை குட்டிகள் வேணும் என்று கைகூப்பி கண்ணீர் மல்க வேண்டி என்னிடம் அனுமதி பெற்று மீண்டும் தன் தாயைப் பார்க்க ஓட்டம் பிடித்தான்.

இரண்டு மாதம் ஆயிற்று.

அகத்தியர் சொன்னபடி அத்தனைக் காரியங்களையும் செய்து முடித்த பிறகு ஒரு நாளில் பிரிந்து போன அவனது மனைவி மனம் திருந்தி வந்தாள். இதற்குள் அவன் ஒரு பெரிய கம்பெனியில் கூலி வேலையாளாக சேர்ந்து விட்டான். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவன் தாய் பிழைத்துக் கொண்டாள். இருந்தாலும் முன்பு மாதிரி இல்லை. எனினும் அகத்தியர் சொற்படி தன் பையன் நடந்து கொண்டு வருகிறானே என்பதைக் கண்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார்.

ஒரு நாள் அவன், தன் தாய்,  மனைவியோடு மீண்டும் என்னிடம் ஜீவ நாடி பார்க்க வந்தான்.

‘மூன்று வருஷமாச்சு. எங்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லை’ என்றான். அப்போது இவன் முற்றிலும் மாறுபட்டிருந்தான். ஒரே சிவப்பழமாக காட்சி அளித்தான். இன்னும் ஒன்பது மாதத்திற்குள் உன் மனைவி கர்ப்பம் தரிப்பாள். பயப்படாதே என்று அகத்தியர் அருள்வாக்கு கொடுத்தார்.

ஆனால் டாக்டர்களோ அவனுக்கு ஆண்மைக் குறைவு இருப்பதால் அவனால் தந்தையாக முடியாது என்று சொல்லியிருந்தார்கள். இதனால் மனமுடைந்து போய்த்தான் கேட்டான் அவன்…. என்பது எனக்கே பின்புதான் தெரிந்தது.

அப்போது அவன் தாய் என்னிடம் சொன்னாள். ‘என் மகனுக்கு வாரிசு வேணும். அகத்தியர் அருள் கிடைக்குமானால் என் உயிரைப் பரித்துக் கொள்ளட்டும். என் மகனுடைய வயிற்றில் நான் பிறக்க வேண்டும்’ என்று கண்ணீர் விட்டுக் கேட்டாள்.

அந்த தாயின் வேண்டுகோளை அகத்தியர் ஏற்றார். இதனைக் கேட்டு மிக்க மனநிறைவோடு சென்றாள் அந்த தாய். ஒரு செவ்வாய். அன்றைக்கு சஷ்டியும் கூட.

அந்த இளைஞன் ஓடோடி வந்தான். அம்மாவுக்கு திடீரென்று உடல் நலம் சரியில்லை. நீங்கள் தான் என் தாயைக் காப்பாற்ற வேண்டும் என்றான் பதறியபடி.

உடன் வீட்டிற்குச் செல். சஷ்டி கவசத்தை மூன்று முறை படி. தாய் தலையை உன் மடியில் வைத்துக்கொள். அவள் ஆத்மா சாந்தியடைய. இன்றிலிருந்து பத்தாவது மாதம் உனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும். அது உன் தாயின் மறு பிறவியாக இருக்கும் என்றார் அகத்தியர்.

அகத்தியர் வாக்குபடியே அவனுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இப்போது அவன் தன் தாயை குழந்தையின் வடிவத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறான்

சித்தன் அருள் - 44


இருபத்தாறு வயதுடைய ஒரு பெண்ணை, அவளுடைய தங்கை அழைத்து வந்து என் முன் நிறுத்திய பொழுது எனக்கே ஒரு வித பயம் ஏற்பட்டது.

முகத்தில் களையிழந்து எலும்பும் தோலுமாகக் காணப்பட்ட அந்த பெண் ஓரடி, ஈரடி கூட நடக்க முடியாமல் சிரமப்பட்டதும், மூச்சு வாங்கியதும் பரிதாபமாக இருந்தது.

இந்த நிலையில் யார் அந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவளது வயது இருபத்தாறு என்று சொல்ல முடியாது. காரணம் உடல் வளர்ச்சி இல்லாத நிலையில் பாவாடை, சட்டை போட்ட பன்னிரெண்டு வயது சிறுமி போல இருந்தாள். அவளால் பேசமுடியவில்லை. அப்படியே ஓரிரண்டு வார்த்தை பேசினாலும் அது கிணற்றுக்குள் இருந்து வரும் குரல் போல் கேட்டது.

‘என்ன விஷயம்?’

இவள் என் சகோதரி. வயது இருபத்தி ஆறு. இரண்டு கிட்னியும் செயலற்றுப் போய்விட்டது. தினமும் வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கிறாள். அகத்தியரை நம்பி வந்திருக்கிறோம். நல்ல வார்த்தை சொல்ல வேண்டும் என்றாள் அவளை அழைத்து வந்த தங்கை.

‘எத்தனை நாளாக இந்தப் பிரச்சினை? டாக்டரிடம் போய்க் காட்டினீர்களா?’

‘ஒண்ணரை வருஷமா இருக்கிறது. எல்லா சொத்து,  பத்து நகை,  தாலி அனைத்தும் விற்றாகி விட்டது’,  இன்னும் குணமடையவில்லை.

என்னது தாலியை விற்றீர்களா?          அப்படியென்றால் இவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?

திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இவளுக்கு இந்த நோய் வந்திருக்கிறது என்று தெரிந்ததும் எங்கள் வீட்டில் இவளைக் கொண்டு விட்டுவிட்டு இவள் கணவன் ஓடியே போய்விட்டான். இன்று வரை எட்டிக் கூடப் பார்க்கவில்லை என்றாள் அந்த நோயாளிப் பெண்ணின் தங்கை.

இந்த வார்த்தை எனக்கு சம்மட்டியால் அடித்தது போலிருந்தது. ஒரு நிமிடம் என் மனது என்னவோ போல் ஆகிவிட்டது.

கட்டின கணவனே கைவிட்டு விட்டுப் போய்விட்டானா,  என்ன கொடுமை இது?  இந்தச் சமயத்தில் தானே அவர் கூட இருக்க வேண்டும்? என்றது என் உதடு.

‘திருமணத்திற்கு முன்பு இவள் மிக அழகாக இருந்தாள். கல்லூரி வாழ்க்கை காதலில் முடிந்தது. காதல் கடைசியில் திருமணத்தில் முடிந்தது. திருமணம் ஆன ஒன்னரை மாதத்தில் ஒரு சிறுநீரகம் பழுதடைந்தது,. ஒன்றரை வருஷத்தில் மற்றொரு சிறுநீரகமும் பழுதடைந்து போயிற்று.

‘மிகவும் வருத்தமான சம்பவம்’ என்றேன்.

இதைக்கூட நாங்கள் வருத்தமாக எடுத்துக் கொள்ளவில்லை. இவள் இனிமேல் தனக்கு உபயோகப்படமாட்டாள் என்று நினைத்து கொஞ்சம் கூட ஈவு, இரக்கம் இல்லாமல் எங்கள் வீட்டில் கொண்டு விட்டுப் போய் விட்டானே இவள் கணவன். அதை நினைத்துத்தான் நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என்று சொன்னவள், அகத்தியரை நான் மிகவும் நம்பி வந்திருக்கிறேன். என் அக்காவின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வழிகாட்ட அருள்வாக்கு தரச் சொல்லுங்கள் என்று கதறிய பொழுது என் மனம்  தளர்ந்து விட்டது.

அந்தப் பெண்ணைப் பார்த்தேன். இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு வாரம் கூட உயிர் பிழைப்பாள் என்று தோன்றவில்லை.

இந்தத் தங்கை தான் அத்தனை சொத்துக்களையும் விற்று கடன்பட்டு, தான் வேலை பார்த்து கிடைக்கும் சம்பளத்தை வைத்து ஒரு வேளை சாப்பிட்டுக் கொண்டு அக்காவின் உயிரைக் காக்க மருத்துவச் செலவுகளையும் செய்து கொண்டு வருகிறாள் என்பதையும் கேட்டறிந்து கொண்டேன்.

இந்தப் பெண்ணை எப்படி அகத்தியர் காப்பாற்றப் போகிறார், என்ன அதிசயம் நிகழ்த்தப் போகிறார் என்று எண்ணிக் கொண்டு அகத்தியரிடமும், அனுமனிடமும் வேண்டிக் கொண்டு ஜீவநாடியைப் பிரித்தேன்.

‘அந்தப் பெண்ணின் முன் ஜென்மக் கதைகளை மேலோட்டமாகக் காட்டிவிட்டு உயிருக்குப் போராடும் இந்தப் பெண்மணிக்கு உயிர் நிலைக்கும். முன்பின் தெரியாத ஒருவர் மூலம் சிறுநீரகம் கிடைக்கும். அஞ்சிட வேண்டாம்’,  என்று பளிச்சென்று சொல்லி முடித்துக் கொண்டார்.
இந்த வாக்குறுதியை அகத்தியர் அளித்தாலும் இதைப் படித்த எனக்கே இதில் திருப்தி இல்லை.
எப்பொழுது உதவி கிடைக்கும்? யார் நபர்? எங்கிருந்து வருவார்? எப்படி உதவி செய்வார்? அது வரைக்கும் இந்தப் பெண் உயிர் வாழ முடியுமா? அந்த உதவி பணத்தால் கிடைக்குமா? இல்லை சிறுநீரகம் தானம் மூலம் கிடைக்குமா? என்ற கேள்விகளுக்கு அகத்தியரிடமிருந்து பதிலே இல்லை.

எத்தனை தடவை அகத்தியரைக் கேட்டுக் கொண்டாலும் இதே வார்த்தைகள் தான் திரும்பத் திரும்ப வந்ததால் அந்த தங்கைக்கும், கிட்னி பெயிலான அவளுடைய அக்காவுக்கும் தைரியம் கூறி அனுப்பி வைத்தேன்.

அன்றைக்கு முழுவதும் அந்தப் பெண்ணின் சோக நிழல் என்னைவிட்டு போகவில்லை.

நான்கு மாதம் கழிந்திருக்கும்.

அன்றைக்கு என்னவோ எனக்குக் கிடைத்த தகவல் எல்லாம் சந்தோஷத்திற்கு மாறாக இருந்தது.

எனினும் அரைகுறை மனதோடு ஜீவநாடி எடுத்த போது வாசலில் ஒரு குரல் கேட்டது. எட்டிப் பார்த்தேன். அன்றைக்கு கிட்னி இரண்டையும் இழந்த பெண்ணின் தங்கை மட்டும் நின்று கொண்டிருந்தாள்.

ஏதோ கஷ்டமான செய்தியைத் தான் சொல்லப்போகிறாள் என்று என்னை நானே தைரியப்படுத்திக் கொண்டு, ‘என்னம்மா உன் அக்காள் எப்படி இருக்கிறார்’? என்று உணர்ச்சி இல்லாமல் கேட்டேன்.

‘நன்றாக இருக்கிறார். கிட்னி ஆபரேஷன் நடந்து இரண்டு மாதமாகிறது. இதைச் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன்’ என்றாள்.

‘இன்னொரு முறை நன்றாகச் சொல்’

அதைத்தான் மீண்டும் மீண்டும் சந்தோஷத்துடன் சொன்னாள்.

என் கணக்குப்படி அந்தப் பெண் இறந்து நான்கு மாத காலம் ஆகியிருக்கும். ஆனால் அகத்தியர் சொன்னபடி பிழைத்துக் கொண்டிருக்கிறாள். இது எப்படி சாத்தியமாயிற்று? என்று பலமுறை கேட்டுக் கொண்ட நான், அந்த பெண்ணை உள்ளே அழைத்து, எப்படி இந்த ஆச்சரியமான சம்பவம் நடந்தது என்றேன். அவள் சொன்னதை அப்படியே உங்களுக்குச் சொல்லி விடுகிறேன்.

உயிர் காக்க உதவுங்கள் என்று விளம்பரப்படுத்த ஒரு பத்திரிகை ஆபீஸுக்குச் சென்று கொண்டிருந்தேன்.

போகின்ற வழியில் என் அக்காவின் கணவரின் தங்கையை எதிரில் பார்த்தேன். என் அக்காவின் நிலையை அவளிடம் எடுத்துச் சொன்னேன்., அவள் மனதில் என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அந்த அரசாங்க மருத்துவர் என் அக்காவின் கதையைக் கேட்டுவிட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரச் சொன்னார். மறுநாளே, நான் என் அக்காவை அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவர் மிக நன்றாக பரிசோதனை செய்து விட்டு யாரேனும் அகால மரணமடைந்த அவரது சொந்தக்காரர்கள் விரும்பினால் அந்த கிட்னி,  அவரது ரத்தத்தின் தன்மை உன் சகோதரிக்கு ஒத்து வந்தால் ஆபரேஷன் செய்யலாம் என்று சொன்னார்.

இது எனக்கு உற்சாகத்தைத் தந்தது.

ஆனால் ஐந்து நாட்கள் ஆகியும் டாக்டர் சொன்னபடி எதுவும் நிகழவில்லை. எனக்கோ கவலையாகப் போயிற்று. அகத்தியரிடம் பிரார்த்தனை செய்து கொண்டேன்.

ஆறாம் நாள் காலை.

ஒரு விபத்தில் அடிபட்டு மரணமடைந்த ஒரு பணக்கார இளைஞனின் பெற்றோர் சம்மதிக்கவே அந்த இளைஞனது கிட்னி என் அக்காவிற்குப் பொருத்தப்பட்டு விட்டது.

அகத்தியர் சொன்ன வாக்கும் பலித்து விட்டது. இப்போது எனது அக்காள் நன்றாக குணமாகிக் கொண்டிருக்கிறாள் என்று நடந்ததை நீண்ட கதையாக சொன்னாள் அவள்.

ஏதோ சினிமாவில் நடப்பது போல நடந்திருக்கிறது. இதை ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

எதற்கும் அகத்தியரிடம் இதுபற்றிக் கேட்டு விடலாம் என்று ஜீவநாடியைப் பிரித்த போது….

அகத்தியனிடம் நாடி கேட்டு அது நடக்க சற்று தாமதமானால் அகத்தியரை திட்டுகிறவர்களைக் கூட நான் மன்னித்து விடுவேன். ஆனால் எனது மைந்தனாக நீயே அன்றைக்கும் அகத்தியன் வாக்கு மீது சந்தேகப்பட்டாய். இன்னமும் இது எப்படி நடந்தது என்று மனதிற்குள் சந்தேகப்படுகிறாய்?

ஆகவே -

இன்று முதல் இன்னும் இருபத்தேழு நாட்கள் நான் உன் கண்ணில் தோன்றி யாருக்கும் அருள்வாக்கு தரமாட்டேன். அதோடு மட்டுமின்றி அறுபடை வீடு தன்னை சுற்றிவந்து அங்கிருக்கும் எம்மை நோக்கி நூற்றி எட்டு தடவை விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். இப்படிச் செய்யாவிடில் இனி அகத்தியன் உன்னிடம் இருக்க மாட்டான் என்று சாட்டையடி அடித்தார்.

வேறு வழியின்றி நானும் அறுபடைவீடு சென்று விட்டு நூற்றி எட்டு தடவை ஒவ்வொரு கோவிலில் காணப்படும்  அகத்தியரை வணங்கி விட்டு வந்தபின்பு தான் அகத்தியர் என்னிடம் மீண்டும் வந்தார்.