​அகத்தியர்அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Wednesday, 27 July 2011

சித்தன் அருள் - 42


வெகு வேகமாகவும், கோபமாகவும் வந்தார் அவர்!

எனக்கு அகத்தியர் நாடியின் மீது நம்பிக்கையே இல்லை. நீங்கள் சொன்னது எல்லாம் பொய். ஒன்று கூட நினைத்தபடி நடக்கவில்லை. எல்லாப் பரிகாரங்களும் செய்தேன். தொழில் மேலும் நஷ்டமடைந்ததே தவிர ஒரு பைசா கூட ஆதாயம் கிடைக்கவில்லை என்று பொரிந்து தள்ளினார்.

ஆத்திரமாகவும், கோபமாகவும், ஏமாற்றம் காரணமாகவும் அவர் பேசியதை மவுனமாகக் கேட்டுக் கொண்ட நான், ‘அது சரி. பின் எதற்கு மீண்டும் அகத்தியரைத் தேடி இங்கு வந்தீர்கள்’ என்றேன்.

‘எனக்கு எதிர்பாராத சொத்து வரும். ஜமீன்தார் போல் வாழ்வேன் என்று அகத்தியர் அன்றைக்கு சொன்னார். ஒண்ணு கூட நடக்கவில்லையே என்றுதான் எனக்கு வருத்தம்’ என்று குரலைத் தாழ்த்தினார்.

‘எங்கேயோ தவறு நடந்திருக்கிறது. அகத்தியரிடம் இது பற்றி மீண்டும் கேட்டுப் பார்க்கிறேன். அகத்தியர் வாக்கு பலித்தால் எனக்கும் சந்தோஷம். அப்படி பலிக்காமல் போனால் நீங்கள் மீண்டும் வந்து எதுவும் கேட்கக் கூடாது. சரியா?
‘எதற்காக இப்படி கண்டிஷன் போடுகிறீர்கள்?’

ஒரு டாக்டரிடம் உடல் ஆரோக்கியக் குறைவைச் சொல்லி மருந்து கேட்கிறீர்கள். அந்த டாக்டரும் மருந்து கொடுக்கிறார். அந்த மருந்து சாப்பிட்டும் உடல் நலம் சரியாகவில்லையென்றால் வேறு டாக்டரிடம் போவது நியாயம் தானே. அதே போல் தான் அகத்தியர் அருள்வாக்கு’ என்றேன்.

‘சரி. சரி. இப்போது எனக்கு மறுபடியும் பாருங்கள்’ என்று ஒரே குறியாக இருந்தாரே தவிர நான் சொன்ன விளக்கங்களைத் துளி கூட கேட்கத் தயாராக இல்லை. எனக்கு வெறுப்புத்தான்….. என்ன செய்வது.

அந்த நபருக்காக மறுபடியும் அகத்தியர் ஜீவநாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.

இந்த மாணிக்கவாசகனும் இவனுடன் கூடப்பிறந்தத் தம்பியான கோபால்சாமியும் இணைந்து தொழில் நடத்த ஆரம்பித்தனர். முதலில் ஒற்றுமையாக இருந்த அண்ணன், தம்பிகள் நல்ல ஆதாயம் அடைந்து, தனித்தனியாக வீடு, மனை, வாகனம் வாங்கி ஆனந்தப் பட்டனர்.

இடையில் -

தம்பியின் மனைவிக்கு தன் கணவர் தனியே பிரிந்து தொழில் செய்தால் பல்வேறு வகையில் கோடீஸ்வரராகி விடலாம் என்ற ஆசை ஏற்பட்டது. இதை தன் கணவரிடம் தினமும் சொல்லிச் சொல்லித் தூபம் போட்டாள். முதலில் மனைவியின் பேச்சுக்கு இடம் கொடுக்க மறுத்த கோபால்சாமி, பின்னர் அண்ணனிடமிருந்து விலகிக் கொண்டார்.

மாணிக்கவாசகன் தம்பியின் செய்கைக்கு வருந்தினார். அவரால் தம்பி இல்லாமல் தொழில் செய்ய முடியவில்லை. இதனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. பல லட்சத்திற்கு கடனாளி ஆனார்.

அதே சமயம் குறுக்கு வழியில் தொழில் நடத்த ஆரம்பித்த கோபால்சாமி ஆறே வருஷத்தில் இருபது கோடிக்கு அதிபதியானார். தம்பியின் அபார வளர்ச்சி, மாணிக்கவாசகத்தை ஆச்சரியப்பட வைத்தது. தானும் தன் தம்பி போல வளர்ச்சி அடைந்து கோடீஸ்வரராக வேண்டும் என்று ஆசையில் நாடி பார்க்க வந்தார்.

‘அகத்தியர் சொன்ன பரிகாரங்களை அவசர அவசரமாக செய்து விட்டு, அடுத்த நாளே எப்படி கோடீஸ்வரனாக முடியும்? அந்தக் கோபத்தில் அகத்தியனை திட்டுகிறான்? என்று நாடியில் அகத்தியர் சொன்னார்.

இதைப் படித்து விட்டு நான் மவுனமானேன். ஒன்றும் சொல்லவில்லை. அவசர அவசரமாகப் பிரார்த்தனைகளைச் செய்திருக்கிறீர்கள் என்று மட்டும் சொன்னார் என்றேன்.

‘எப்போது என் கடன் அடையும்?’ எப்போது என் தம்பியைப் போல் கோடீஸ்வரனாக ஆக முடியும்? என்று கேட்டுச் சொல்லுங்கள’ என்று வலியுறுத்தினார் அவர்.

அகத்தியன் சொன்னபடி பக்தியோடு செய்து வந்தால், தானாக சொத்து சுகம் கிடைக்கும் என்று பதில் வந்தது.

இந்த பதில்  அவருக்குத் திருப்தியை அளிக்கவில்லை. கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாமலேயே வெளியேறினார். இதில் எனக்கும் உள்ளூர வருத்தம் தான்.

ஏதோ சொன்னோமா நல்லபடியாக நடந்ததா என்று இல்லாமல், இப்படி வருவோர் போவோருக்கெல்லாம் நாடி படித்து அது சரியாக நடக்காமல் போனால், அவர்களுடைய கோபத்துக்கும், ஏளனத்துக்கும் ஆளாக வேண்டியிருக்கிறதே, என்று அவமானம் வேறு என்னைப் பிடுங்கித் தின்றது.

நாடி படிப்பது என்பது என்னுடைய தொழிலே இல்லை. வேண்டுமென்றால் படிப்போம். இல்லாவிடில் விட்டு விடுவோம். நாம் யார் இவர்களுடைய தலையெழுத்தை மாற்றுவதற்கு? என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டேன்.

நானும் மனிதன்தானே.

என் கையிலிருந்த நாடிக்கட்டைப் பார்க்கும் பொழுது எனக்கே எரிச்சல் வந்தது. தேவையில்லாத நட்பு, தேவையில்லாம பகை, இந்த இரண்டும் எனக்குத் தேவை தானா? பேசாமல் மற்றவர்களைப் போல அமைதியாக இருந்து விட்டுப் போகலாமே, என்று மனதை கசக்கிக் கொண்டேன்.

ஒண்ணறை வருஷம் ஆகியிருக்கும். திடீரென்று ஒரு நாள் மாலை ஏகப்பட்ட பழங்களோடு என்னைப் பார்க்க வந்தார். அன்றைக்கு முகத்தில் அறைகிற மாதிரி பேசிவிட்டுப் போன அந்த மாணிக்கவாசகம்.

‘என்ன?’ என்று நான் கேட்பதற்கு முன்பே சட்டென்று என் காலில் விழுந்தார்.
இது எனக்கு பகீர் என்றது. இது நல்லதுக்கா அல்லது கெட்டதுக்கா? என்று எனக்குப் புரியவில்லை.

‘அகத்தியர் வாக்கு பலித்தது’ என்று சந்தோஷமாகச் சொன்னவர் திடீரென்று மவுனமானார். அவரது கண்கள் கலங்கியது. இதைப் பார்த்ததும் இவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று அடிவயிற்றைக் கலக்கியது.
மாணிக்கவாசகமே நடந்ததைச் சொன்னார்.

உண்மையில், என் தம்பி என்னை விட்டு தனியாகத் தொழில் நடத்த ஆரம்பிச்ச போது எனக்கு அடிவயிற்றைப் பற்றிக் கொண்டுதான் வந்தது. இவன் உருப்படக்கூடாது, அந்தத் தொழிலில் நிறைய நஷ்டம் ஏற்பட்டு, எங்கிட்ட வந்து காலில் விழணும்னுதான் நினைச்சேன். இன்னும் சொல்லப் போனா மிகப் பெரிய தப்பு காரியம் கூடச் செய்ய விரும்பினேன். ஒரு மலையாள மந்திரவாதி கிட்டே பணத்தைக் கொடுத்து என் தம்பியின் தொழிலை அப்படியே நசுங்கிப் போகணும்னு சொன்னேன்.

அந்த மலையாள மந்திரவாதியும் ஏதேதோ செய்தான். தாயத்து கொடுத்தான். மந்திரிச்சு கயிறும் கொடுத்தான். இன்னும் நாற்பது நாட்களில் உங்க தம்பி ஒங்க கால்ல வந்து விழுவான்னு என்னவெல்லாமோ சொல்லி, எங்கிட்டயிருந்து பணத்தை வாங்கிட்டு ஓடிவிட்டான். ஆனா -
நாற்பது நாட்களிலே நான்தான் தொழில்லே கீழே விழுந்தேன். என் தம்பி நல்லாவே பிசினஸ் செய்துட்டிருந்தான். என்ன செய்தும் என் தொழிலும் உருப்படல. என் தம்பியின் தொழிலிலும் நஷ்டம் வரல்ல. அப்போதுதான் நான் உங்ககிட்டே நாடி பார்க்க வந்தேன்.

சொந்த தம்பிக்கு எதிராக நான் செய்த கொடுமையை அகத்தியர் தெரிந்தும் என்னைத் தண்டிக்காம நல்வாக்கு அருளினார். என் தப்பை அகத்தியர் கண்டு, எப்படி என்னை மன்னித்தார், என்று தெரியாமல் ஆச்சர்யப்பட்டேன். உண்மையிலே அகத்தியருக்கு எல்லாமே தெரியும் என்றால் ஏன் என் தப்பை எனக்கு எடுத்துக் காட்டலை? என்று நினைச்சேன். இப்படி எடுத்துக் காட்டாததினால் அகத்தியர் ஜீவநாடி பொய்னு நெனைச்சேன். ஆனால் யார் செய்த புண்ணியமோ? எனக்கு என் சொந்த தம்பி கோபால் சாமியே பத்து கோடிக்கு சொத்து எழுதி வெச்சிருக்கான். இது அவன் மனைவிக்குக் கூடத் தெரியாது.

ஏன் என் பெயருக்கு பாதி சொத்தை எழுதி வெச்சான்னு எனக்கு முதல்ல புரியல்ல. முதலில் நான் இதை நம்பவும் இல்லை. ஆனால் ஒரு வாரத்துக்கு முன்னால தம்பி கூப்பிட்டதாலே அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். படுத்த படுக்கையிலே இருந்தான் அவன். பதறிப்போனேன்.
எனக்கு ரத்த புற்றுநோய் நான்காவது ஸ்டேஜ். இனிமே ஒரு மாசமோ, இரண்டு மாசமோ தான் தாங்கும். என் சொத்தை பாதி என் மனைவிக்கும், பாதியை உனக்கும் எழுதி வைச்சுட்டேன். எனக்கோ குழந்தை இல்லை. நான் போயிட்டா என் மனைவியை உன் சொந்த சகோதரியா கடைசி வரை காப்பாத்து என்று கதறி அழுதபடி பாசத்தால் கண்ணீர் விட்டான்.

‘எப்படிப்பட்ட உள்ளம் அவனுக்கு? இவனுக்குப் போய் துரோகம் செய்தேனே என்று புழுவாத் துடிதுடித்துப் போனேன். இப்போ எனக்கு அந்த சொத்து பெருசா தோணல. என் தம்பி உயிர் வாழணும். அவனுக்காக அகத்தியர் கிட்டே பிரார்த்தனை கேட்டு வந்திருக்கேன்’  என்று நெஞ்சம் துடிதுடிக்க கதறி அழுதார்.

எனக்கும் ஒரு மாதிரியாக இருந்தது.

அகத்தியரிடம் இது பற்றிக் கேட்ட பொழுது, இன்னவனின் தம்பி பொல்லாப்புற்று நோயால் அவதிப்பட்டாலும் இன்னும் மூன்று ஆண்டுகள் தப்பிப்பான். திருக்கடையூர் சென்று அங்கே ஒரு யாகம் செய்யட்டும் என்று சொன்னவர், அகத்திய நாடியப் படிக்க வரும் அனைவருடைய எதிர்காலம் பற்றிய சில விஷயங்களை வெளிப்படையாக விதிமகன் எனக்கு சொல்வான். ஆனால் முன் கூட்டியே யாம் அதை உனக்கும் சொல்லவில்லை. ஏனெனில் நீயும் உளறிவிடுவாய் என்றார்.


1 comment: