​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 23 July 2011

சித்தன் அருள் - 37


நானும், ராஜ்மோகனும் அவனது தங்கை என்று கருதப்படும் பத்மஜா வீட்டிக்கு போன பொழுது, பத்மஜாவின் தந்தையே கதவை திறந்தார்.

நான், என்னைப் பற்றி சற்று அதிகமாக எடுத்துக்கூறி அறிமுகப்படுத்திக் கொண்டேன்.  ஏனெனில் அவர் என்னையோ, என் அகத்தியர் ஜீவ நாடியையோ நம்பாமல் கேவலப்படுத்தி கழுத்தைப் பிடித்து தள்ளிவிடக்கூடாதல்லவா, அதற்காகத்தான்.

என்னுடன் வந்த ராஜ்மோகனை பற்றியும் சொன்னபோது, உள்ளே வாருங்கள் என்று சொன்னார்.

தப்பித்தோம் என்று மனதில் நினைத்தேன்

பிறகு பத்மஜாவின் தந்தையே பேச ஆரம்பித்தார்.

"உங்களுக்கு என்ன வேண்டும்?"

"பத்மஜாவை பார்க்க வேண்டும்".

"எதற்கு?"

முன் ஜென்மத்தில் பத்மஜா இவனுக்குத் தங்கையாக இருந்திருக்கிறாள் என்று அகத்தியர் அருள்வாக்கில் சொன்னார்.  அந்த பாசத்தில் ராஜ்மோகன் தன தங்கையைப் பார்க்க வேண்டும் என்று மலேசியாவிலிருந்து வந்திருக்கிறான்.

நான் இதை சிறிதும் நம்பவில்லை.  வேறு எதோ நோக்கத்தில் நீங்கள் இருவரும் வந்திருக்கிறீர்கள்.  தயவுசெய்து வீட்டை விட்டு வெளியே போங்கள், என்று சட்டென்று இடை மரித்தார், கோபமும் வந்தது அவருக்கு.

"சார்! உண்மையில் நான் அகத்தியர் நாடியை நம்புகிறவன்.  என் தங்கை இங்கு பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறாள் என்பதைக் கேட்ட பொழுது அவளை ஒரு முறை பார்த்து விட்டுப் போகலாம் என்று தான் துடிதுடித்து வந்திருக்கிறேன். தயவுசெய்து தவறாக எண்ண வேண்டாம்" என்றான் ராஜ்மோகன்.

"இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க?  எனக்கு கோபம் வந்து உங்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளரதுக்குள்ள இந்த இடத்தை விட்டுக் கிளம்பிடுங்க என்று ஆக்ரோஷமாக கத்தினார்" பத்மஜாவின் தந்தை.

எனக்கு பயம் பிடித்துக்கொண்டது.  ராஜ்மோகன் பதறிப்போனான்.  இப்படி அநாகரீகமாக பேசுவார் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.  எனவே எங்களுக்கு அடுத்து என்ன பேசுவது என்றே வார்த்தைகள் வரவில்லை.

"நாடியாம்.  முன் ஜென்மத்தில் தங்கையாகப் பிறந்தாளாம்.  வந்து பார்க்க வந்துட்டாங்க.  ஏன் எங்க வீட்டில் ஒரு வயசான கிழவி இருக்கா.  படுத்த படுக்கையாக கிடக்கா.  அவதான் என்னுடைய பாட்டின்னு எந்தப் பயலாவது சொந்தம் கொண்டாட இதுவரை வந்திருக்கானா?" என்று பத்மஜாவின் அப்பா தொடர்ந்து கத்தினார்.

ஒரு வயசு பொண்ணு வீட்டில இருந்திட்டா போதும், அண்ணன் முறை கொண்டாட வந்துடுவானுங்க.  நானும் தான் இருபது வருஷமா இந்த ஊர்ல இருக்கேன்.  கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறேன், என்னுடைய சகோதரன்னு சொல்லி ஒருவனாவது இது வரைக்கும் இந்த வீட்டில கால் வச்சிருப்பானா.  ஏன் அகத்தியர் நாடியிலே இதெல்லாம் வரல? பொம்பளை புள்ள இருந்தா மட்டும் வந்துடும் போலிருக்கு... நாடி, கீடின்னு சொல்லிட்டு எவனாவது இந்த வீட்டில பத்மஜாவைத் தேடி வந்தீங்கன்ன உங்களுக்கு தர்ம அடி விழும்.  ஜாக்கிரதை, போங்க வெளியே" என்றார் உணர்ச்சி வயப்பட்டு.

இனிமேலும் இங்கே தங்கினா தர்ம அடி விழுந்தாலும் விழும்.  இனிமே ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டில இருக்க கூடாதுன்னு நினைத்து சட்டென்று எழுந்தேன்.

ராஜ்மோகனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வியர்த்துக் கொட்டியது.  கண் ஜாடை காட்டி அவனை வெளியே வரச் சொன்னேன்.

தலையைக் கவிழ்த்துக்கொண்டு அவனும் வாசலுக்கு வந்தான்.  இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவ்வளவு தூரம் அந்த மனுஷன் கரடியாகக் கத்தியிருக்கிறார்.  ஆனால் ஒருவர் கூட வீட்டிலிருந்து எங்களை எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

அப்படி எட்டிப்பார்த்தால் அதில் பத்மஜா முகம் தெரிந்தால் ஒரு திருப்தி இருக்கும், என்று எண்ணினேன்.  எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகப் போயிற்று.

அன்றைய தினம் மாலையில் இருவரும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தோம்.  அப்போது ராஜ்மோகன் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.

"இப்படி அகத்தியர் நம்மைக் கைவிடுவார் என்று நான் எண்ணவே இல்ல" என்று என்னிடம் மிகவும் வருத்தப்பட்டான்.

"என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?"

"இங்கேயே இந்த இடத்தில் ஜீவநாடி படிக்க வேண்டும்"

"எதற்கு?"

"எனக்கு என் தங்கை பத்மஜாவை எப்படியாவது ஒரு தடவையாவது பார்த்து விட்டுத்தான் ஸ்ரீரங்கம் விட்டு நகர வேண்டும்"

"இல்லாவிட்டால்?"

"நான் அகத்தியர் வாக்கை நம்பமாட்டேன்.  இதுவரை நடந்தது எல்லாம் எதோ ஒரு யுக்தி, பொய் என்று தான் ஊர் பூராவும் சொல்வேன்"

"அவ்வளவு தானே, சொல்லிவிட்டு போ.  இதில் எனக்கு என்ன நஷ்டம்?  நானென்ன அகத்தியருக்கு ஏஜென்டா? இல்லை நாடி படிப்பது என்பது எனக்குத் தொழிலா?  இதை வைத்துப் பிழைக்க வேண்டும் என்று எனக்குத் தலைஎழுத்து இல்லை.  எனக்கு வேலை இருக்கிறது அதில் வருமானமும் உண்டு" என்று கடுமையாகவே பேசிவிட்டேன் பொறுமை இல்லாமல்.

பொதுவாக யார் மனதையும் புண் படுத்தக்கூடாது என்பது தான் அகத்தியர் விருப்பம்.  அப்படித்தான் நானும் கடைப்பிடித்து வந்தேன்.  ஆனால் அன்று காலை பத்மஜாவின் வீட்டில் நடந்த அவமானம் என்னை உசுப்பிவிட்டது.

நான் சட்டென்று இப்படி எரிந்து விழுவேன் என்று ராஜ்மோகன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.  வெலவெலத்துப்போனான்.  உடனே என்னிடம் மன்னிப்பு கேட்டான்.

"இதோ பார் ராஜ்மோகன்.  நாடி எனக்கு கிடைத்த ஒரு கற்பக வ்ருக்க்ஷம்.  அது எனக்கு அகத்தியர் கொடுத்த ஒரு பரிசு, மற்றவர்களுக்குப் படித்து வழி காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.  நானாகத்தான் அகத்தியரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர் மற்றவர்களுக்கு அருள் வாக்கு தருகிறார்.  யாருக்கு அந்த பாக்கியம் இருக்கிறதோ, அவர்களுக்கு அது கிடைக்கும் என்பது உனக்குத் தெரியுமே"

தலையைத் தலையை ஆட்டினான் ராஜ்மோகன்.

"நினைத்தபடி அகத்தியர் நாடியை கண்ட கண்ட நேரத்தில், கண்ட இடத்தில் படிக்க முடியாது, படிக்கவும் கூடாது.  அகத்தியருக்கு வேறு வேலை இல்லையா?"

"மன்னிச்சுடுங்க சார்.  எதோ ஒரு ஆத்திரத்தில் அப்படி பேசிவிட்டேன்.  நான் பேசினது தப்புத்தான்.  அகத்தியர் கிட்டே மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.  அகத்தியர் சொன்னபடி என் முந்தின ஜென்மம், பெயர் எல்லாம் கனகச்சிதமாக நடந்தது.  அந்த சந்தோஷத்தில் என் தங்கையும் எனக்கு இப்போ கிடைத்திடுவாள் என்ற நம்பிக்கையிலே பேசிட்டேன்.  நீங்க எப்போ படிக்கணும்னு நினைக்கிறீர்களோ அப்பொழுது படிச்சா போதும்" என கையெடுத்துக் கும்பிட்டான், ராஜ்மோகன்.

அவன் கண்களில் நீர் வழிந்தது.  நானும் மன இறுக்கத்தை விலக்கி, கையோடு கொண்டு வந்த அகத்தியர் நாடியைப் பிரித்தேன்.

இடம் தெரியாமல் மாட்டிக் கொண்டு அவதிப்பட்டாய்.  இது போதும்.  ஒரு சிறு சோதனை செய்தேன்.  அதில் ராஜ்மோகன் அகத்தியனை அவமானப் படுத்தி விட்டான்.  இவனுக்கு முன் ஜென்மத்தைப் பற்றி எதுவும் சொல்லி இருக்கக் கூடாதோ? எனத் தோன்றுகிறது.  நேற்றைக்கு அகத்தியனை தூக்கி வைத்து கொண்டாடியவன், இன்றைக்கு அகத்தியன் மீது நம்பிக்கை இல்லை என்கிறான்.  என்ன உலகமடா இது என்றவர், எனினும் தெரியாமல் பேசியதாலும், அவன் மன்னிப்புக் கேட்டதாலும் அவனை மன்னித்தோம்.  அவன் விரும்பியபடி இன்னும் சில நாழிகையில் பத்மஜாவை ராஜ்மோகன் இதே கோவிலில் சந்தித்து ஆனந்தப் படுவான்" என்று அருள்வாக்கும் தந்தார்.

நான் ஜீவ நாடியைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது என்னச் சுற்றி ஒரு சிறு கூட்டமே கூடிவிட்டதை பின்னர் தான் உணர்ந்தேன்.  அந்த கூட்டத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும், அவளது தாயாரும் என்னை நோக்கி வந்தார்கள்.

"சார்!  நீங்க ரெண்டு பெரும் காலையிலேயே எங்க வீட்டுக்கு வந்திருந்தீங்க.  என் கணவர் ஒரு மன நோயாளி.  சந்தேகப்படும் குணத்தைக் கொண்டவர்.  உங்க ரெண்டு பேரையும் அவமானப் படுத்தி விட்டார்.  எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்" என்றார்.

"நீங்கள்......."

"நான் வீட்டினுள் இருந்தேன்.  பத்மஜா பள்ளிக்குச் சென்று இருந்தால்.  அப்பொழுது தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள்.  எனக்கு நீங்கள் யார் என்பது புரியவில்லை.  நீங்கள் வெளி ஏறிய பிறகு என்னிடம் என் கணவர் எல்லாவற்றையும் சொல்லி எப்படி விரட்டி விட்டேன் பார்த்தியா?" என்று பெருமை பட்டுக்கொண்டார்.

அடுத்த அரை மணி நேரத்தில் அவருக்கு என்ன தோன்றியதோ, தெரியவில்லை.  அகத்தியரை அவமதித்துப் பேசிவிட்டேன், என்று பலதடவை என்னிடம் கூறி, அவர்களை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து வா.  அவர்களிடம் மன்னிப்பு கேட்கணும் என்று பிதற்றிக்கொண்டு, ஜன்னிகண்டது போல் படுக்கையில் வீழ்ந்து இடக்கிறார்.  என் கூட எங்கள் வீட்டிற்கு கொஞ்சம் வர முடியுமா?  என்றார் அந்தப் பெண்மணி, அருகில் நின்ற இளம் பெண்ணை பார்த்தவாறே.

"இவள் தான் பத்மஜாவா?" என்றேன்.

"ஆமாம்" என்று தலையை ஆடினாள் இரட்டை ஜடை போட்ட இளம் பெண்.  ராஜ்மோகனுக்கு, முன் ஜென்ம தொடர்புடைய தங்கையைக் கண்டுவிட்டோம் என்ற சந்தோசம் இருந்தாலும், அந்தக் கோவிலில் கூடத்திற்கு நடுவே சட்டென்று தைரியமாகப் பேச முடியவில்லை.

பத்மஜாவும் ராஜ்மோகனைப் பார்த்தாள்.  அந்த பார்வையிலே அண்ணன், தங்கை பாசம் துளிர்விட்டதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

அந்தப் பெண்மணியோடு பத்மஜா வீட்டிற்க்குச் சென்றாலும் அந்த நபரைப் பார்த்ததும் காலையில் நடந்த சம்பவம் தான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.

இப்போது கூட அவர் தாறு மாறக்கப் பேசினால் என்ன செய்வது என்ற பயத்தில் மெதுவாகத்தான் நுழைந்தேன்.

எங்களை கண்டதும் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார், அந்த நபர்.  எதற்கு என்று கேட்ட பொழுது, எதோ ஒரு ஒளி என் கண் முன்பு தோன்றியது.  நான் அகத்தியன்.  அண்ணனையும், தங்கையையும் பிரிக்கிறாயே, இது ஞாயமா? என்றவர் மிகப் பெரிய அறையை முதுகில் கொடுத்துவிட்டு மறைந்து விட்டார்.  அப்போதுதான் நான் ஆத்திரத்தில் அகத்தியரையும், உங்களையும் ஏதேதோ பேசி வெளியே தள்ளி விட்டது மனத்தைக் குடைந்தது.  இப்போது நீங்களே என் வீடு தேடி வந்து விட்டீர்கள்.  என்னை தொட்டு ஆசிர்வதியுங்கள்.  அப்போது தான் என் மனம் நிம்மதி அடையும் என்றார்.  நானும் அப்படியே செய்தேன்.

பின்னர் அகத்தியர் ஜீவ நாடியில் வந்ததை நானும், ராஜ்மோகனும் பத்மஜாவுக்கும், அவளது பெற்றோருக்கும் சொன்னோம். அவர்கள் அகமகிழ்ந்து போனார்கள்.  இன்றைக்கு ராஜ்மோகனின் தங்கையாக பவனி வரும் பத்மஜா சிங்கப்பூரில் ஒரு கோடீஸ்வரி.  ராஜ்மோகனின் சொத்துக்கு பத்மஜா தான் வாரிசாக இருந்து வருகிறாள்.

1 comment: