​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 23 July 2011

சித்தன் அருள் - 34


பத்தொன்பது வயதுடைய ஒரு பையனை கூடவே கூட்டி வந்து என் முன் அமர்ந்த, வசதி மிக்க குடும்பத்தை சேர்ந்த ஒரு பெற்றோர், தன் மகனுக்கு அகத்தியர் அருள் வேண்டும்.  நாடி படிக்க முடியுமா? என்று கேட்டனர்.

அவர்கள் வந்த நேரம் ஒரு ஞாயிற்றுகிழமை பகல் பொழுது.  இன்னமும் சொல்லபோனால் நல்ல எமகண்டம்.  இந்த நேரத்தில் சுபகாரியங்களை விலக்குவது நல்லது.  பொதுவாக யாரும் எமகண்டம், ராகு காலத்தில் எதுவும் செய்ய முன்வர மாட்டார்கள். இது ரத்தத்தோடு ஊறிய விஷயம்.

வந்திருக்கும் நபருக்கு இப்படிப் பட்ட விஷயத்தில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ!  ஆனால் எனக்கு நம்பிக்கை இருப்பதால் அதை மனதில் வைத்துக் கொண்டு பேசினேன்.  "உங்களுக்கு நாடி பார்க்கலாம், ஆனால் இன்னும் ஒன்றரை மணி நேரம் கழித்துப் படிக்கிறேன்.  அதுவரை பக்கத்தில் வேறு எங்கேயாவது சென்று விட்டு வாருங்களேன்" என்று நாசூக்காக சொன்னேன்.

ஆனால், அவரோ, நான் சொன்னதை கண்டு கொள்ளாமல் "உடனே பார்த்தால் நன்றாக இருக்குமே.  இல்லையெனில் இதுவே ஓர் அபசகுனமாக இருந்துவிடும்" என்று சொன்னார்.

"ஆமாம், ஆமாம்" என்று அவரது மனைவியும் இதனை ஆமோதித்தார்.  

"என்னது, இவர்கள் இருவரும் விஷயம் தெரியாமல் பேசுகிறார்களே.  இதையே அபசகுனமாக எண்ணுபவர்கள், எமகண்டத்தில் நாடி பார்க்க வந்து இருக்கிறோம் என்பதை மட்டும் ஏன் நினைத்துப் பார்க்கவில்லை" என்று எண்ணிக்கொண்டேன்.

"எமகண்டம் கழியட்டும், பிறகு நாடி பார்க்கலாம்" என்றேன்.

இதைகேட்டு அவர் கட கடவென்று சிரித்தார்.  "என்ன சார் இது, அகத்தியருக்கு எமகண்டம் எது?  ராகு காலம் எது?  தைரியமாக படியுங்கள்" என்று சொன்னதோடு இல்லாமல் "பணத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்" என்று ஏளனமாகச் சொன்னார்.

ஆரோக்யமும், பணமும் ஒருவருக்கு இருந்து விட்டால், என்ன மாதிரியெல்லாம் நாக்கில் பேச வைக்கிறது என்று கவலைப்பட்டேன்.  ஒரு மகா முனிவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற முறை கூட இவருக்குத் தெரியவில்லையே" என்ற வருத்தத்தை உண்டு பண்ணியது.

"தாங்கள் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கலாம், எனக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை.  பணத்தைக் காட்டி என்னையோ, அகத்தியரையோ ஒரு போதும் பணிய வைக்க முடியாது.  அப்படியொரு எண்ணம் உங்களுக்கு இருக்குமேயானால், இப்போதே இந்த இடத்தை விட்டுக் கிளம்புங்கள், என்று நாடியை மூடி வைத்தேன்.

இதை அவர் என்னிடம் எதிர்பார்க்கவில்லை.  அதிர்ந்து போனார்.  சில நிமிடங்கள் பேச்சே வரவில்லை.  பிறகு நானே பேச ஆரம்பித்தேன்.

"இந்த நாடி எனக்கு மட்டும் படிக்க அகத்தியப் பெருமான் கொடுத்தது.  மற்றவர்களுக்கும் பயன்படட்டுமே என்று தான் அகத்தியரை வேண்டி அவர் அனுமதி அளித்ததின் பேரில் அனைவருக்கும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.  இனிமேலாவது பணத்தைக் காட்டி பேசாதீர்கள்.  வேறு நாடியைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தீர்க்கமாக சொன்னதும் வெல வெலத்துப்போனார்.

சட்டென்று என் பாதத்தில் விழுந்து எல்லா நாடிக்கரர்களும் பெரும் பணத்தைப் பிடுங்குகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.  நீங்களும் அப்படித்தான் என்றெண்ணி அதனால்தான் அப்படிப் பேசிவிட்டேன்.  மன்னித்துவிடுங்கள் என்றார்.  கூடவே அவரது மனைவியும் கெஞ்சினார்.  இருந்தாலும் அகத்தியர் அருள்வாக்குச் சொல்லவில்லை.

அரை மணி நேரப் போராட்டத்திற்கு பின் மறுபடியும் குளித்து விட்டு பூசித்து பொறுமையோடு நாடி படிக்க ஆரம்பித்தேன்.
 
"பையனுக்கு படிப்பு ஏறவில்லை.  கெட்ட நண்பர்களோடு சேர்ந்து போதை வஸ்துவுக்கு அடிமையாகி இருக்கிறான்.  அந்தப் பொல்லாக் கூட்டத்திலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறான்.  இல்லையா?" என்று அகத்தியர் அந்த நபரைப் பார்த்துக் கேட்டார்.

"ஆமாம்" என்றவர்கள் கண்களில் நீர் வந்தது.  அதோடு அகத்தியர் இப்படி புட்டு, புட்டு வைப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.  ஒரு வினாடி ஸ்தம்பித்துப் போனார்கள்.  மறுபடியும்.

"ஆமாம், அகத்தியர் சொல்வது அத்தனையும் உண்மை" என்றார் குரல் தழுதழுக்க.

கல்வி கற்கின்ற இந்த வயதில் கல்வியைத் தவற விட்டு விட்டு இப்படி கஞ்சாவுக்கு அடிமையாகலாமா?  அந்த பொல்லாத கூட்டத்தில் சேர்ந்து கெட்டுப்போகலாமா? இதற்கு பெற்றோர் ஆகிய இவர்களும் ஒரு முக்கிய காரணம்.  பணம் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற பழக்கத்தை இவனது மைந்தனும் பழக்கமாக்கியதால் மைந்தனும் கெட்டு விட்டன என்பது தானே உண்மை?" என்றார் அகத்தியர்.

"ஆமாம்" என்று தலையை ஆட்டினார் அவர்.

எனினும் அகத்தியனை நோக்கி வந்ததால் உன் மைந்தனை அந்த கொடிய பழக்கத்திலிருந்து விடு பட வைப்போம்.  இதனை உடனடியாகச் செய்ய முடியாது.  மூன்று மாதங்கள் ஆகும்.  பொறுத்திரு" என்றார் அகத்தியர்.

"அது வரையில் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்" என்று கேட்டாள், அந்த பையனுடைய தாயார்.

"மூன்று மாதம் வெளியூரில் தங்கி இருக்கவேண்டும்.  பிறகு தான் வீடு திரும்ப வேண்டும்" என்று நாடியிலிருந்து பதில் வந்தது.

"அதெப்படி முடியும்?  காலேஜுக்கு செல்ல வேண்டும்.  படிப்பு கெட்டு விடுமே?" என்று கவலைப்பட்டார் அவனது தந்தை.

"உள்ளூரில் இருந்தால் பல்வேறு சிக்கலில் மாட்டிக் கொள்வான்.  பிறகு வருந்துவதில் பயனில்லை" என்று சட்டென்று முடித்துக் கொண்டார் அகத்தியர்.

சில நிமிட மவுனத்திற்குப் பிறகு "சரி அப்புறமாக வருகிறோம்" என்று சொல்லி விட்டு கிளம்பினார்கள்.

என்னைத்தேடி வந்தது, அகத்தியர் சொன்னது எதுவுமே அவர்களுடன் வந்த அவரது மகனுக்கு பிடிக்கவில்லை போலும்.  கடைசி நிமிடம் வரை ஒரு வார்த்தை கூடப் பேசாமல் "ம்ம்" என்று முகத்தை வைத்துக் கொண்டிருந்ததையும் கவனித்தேன்.

வந்தார். கேட்டார்.  அகத்தியர் சொன்னதை அப்படியே சொன்னோம்.  அவ்வளவுதான்.  நம்பினால் நம்பட்டும்.  நம்பாவிட்டால் போகட்டும் என்று விட்டு விட்டேன்.

சில மாதம் கழிந்திருக்கும்.  விடியற்காலை ஐந்து மணிக்கு அதே நபர் என் வீட்டு வாயிற்கதவைத் தட்டினார்.  கதவை திறந்து பார்த்த போது கண் கலங்க நின்று கொண்டிருந்தார்.

"என்ன?" என்று கேட்டேன்.

பையனைக் காணவில்லை.  காலேஜுக்குப் போனவன் மூன்று மாதமாயிற்று.  வீடிற்கு திரும்பவில்லை.  எல்லா இடத்திலேயும் தேடித் பார்த்து விட்டோம்.  அவன் உயிரோடு இருக்கின்றானா இல்லையா என்றே தெரியவில்லை.  தாங்கள் தான் அகத்தியரைக் கேட்டுச் சொல்ல வேண்டும் என்று கதறினார்.  அவரை ஆச்வாசப்படுத்தி நாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.

அகத்தியன் சொன்னதை அடியோடு ஏற்காததால் ஆபத்தில் மாட்டிக் கொண்டு முழிக்கிறான்.  அன்றே ஊரை விட்டு ஊர் இடம் மாறியிருந்தால் போதைக் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு திண்டாட வேண்டியிருக்கதே? என்று எடுத்த எடுப்பிலே ஒரு அதிர்ச்சிச் செய்தியை கொடுத்தார்.  நான் அந்த நபரின் முகத்தைப் பார்த்தேன்.

தலை குனிந்து கொண்டே சொன்னார்.  "எவ்வளவோ சொல்லியும் பையன் கேட்கவில்லை.  வெளியூருக்குச் செல்ல மாட்டேன் என்று மறுத்து விட்டான்.  பழைய நண்பர்களை விட்டுப் பிரிய மனமில்லை என்று எங்களை எதிர்த்துப் பேசிவிட்டு மோட்டார் சைக்கிளை சென்றவன்தான் இன்னும் திரும்பவில்லை" என்று உண்மையை ஒப்புக் கொண்டார்.

"உங்கள் மகன் உயிரோடு தான் இருக்கிறான்.  மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு அறையில் மயங்கிக் கிடக்கிறான்.  விரைந்து சென்று கண்டுபிடித்து, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்ப்பது நல்லது" என்று அவசரப்படுத்தினார் அகத்தியர்.

"பையன் உயிரோடு இருக்கிறான் என்ற செய்தியும், தற்சமயம் கூடா நட்பினால் போதை மாத்திரையை உண்டு சுயநினைவு இல்லாமல் மயங்கிக் கிடக்கிறான் என்ற செய்தியும் அவருக்கு அதிர்ச்சியை தந்தாலும், மகன் உயிரோடு இருக்கிறான் என்பது ஓரளவு நிம்மதியை உண்டு பண்ணியது.  தன் பையனை கண்டு பிடித்துக் காப்பாற்ற வேண்டும் என்ற அவசரத்தில் என்னிடம் விடைபெறாமல் கூட பதற்றத்தில் ஓடினார் அவர்.  நானும் அகத்தியரைப் பிரார்த்தனை செய்து கொண்டேன்.

மறுநாள் மதியம் அவரிடமிருந்து தகவல் வந்தது.  மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் உள்ளவர்கள் அவனைத் தூக்கி கொண்டு அசுபத்ரியில் சேர்த்திருக்கிறார்கள்.

அவனது தந்தையும் இந்த தகவலை எப்படியோ விசாரித்து அறிந்து தன் பையனைச் சேர்த்திருந்த அசுபத்ரிக்குச் சென்று பார்த்திருக்கிறார். நல்ல வேளை.  அவன் உயிருக்கு ஆபத்து இல்லை.  இரண்டு நாளில் குணமாகி வீடு திரும்புவான் என்று எனக்கு விவரத்தை சொன்னார்.

அகத்தியர் வாக்கினை நம்பி அவனை வெளியூருக்கு அனுப்பி இருந்தால் இப்படிப்பட்டத் தொல்லை அவனுக்கு ஏற்ப்பட்டிருக்கது, என்று புலம்பிய அவனது தந்தை, பின்னர் வெளியூருக்கு தன் கூடவே அழைத்துச் செல்லப் போவதாகச் சொன்னார்.

நான்கு மாதம் கழித்து என்னிடம் அவர் வந்தார்.

படிப்பு போனால் போகிறது, போதை பழக்கத்திலிருந்து அவன் மீண்டு விட்டான்.  வெளியூரில் தங்கி அவனுக்கு முழுநேர மருத்துவ சிகிர்ச்சையும் கொடுத்து விட்டேன்.  இப்போது அவனை பார்த்தால் ஒரே சிவப்பழமாக காட்சி தருகிறான்.  அவனுடன் சேர்ந்து போதைப் பொருள் உட்கொண்ட நண்பர்கள் இப்போது போலீசில் பிடிபட்டு உள்ளே இருக்கிறார்கள்.

வெளியூரில் அவன் என்னுடன் தங்கி இருந்ததால் தப்பித்து விட்டான்.  இல்ல என்றால் இவனும் காவல் துறையிடம் மாட்டிக் கம்பி எண்ணிக் கொண்டிருப்பான்.  எல்லாம் அகத்தியர் காட்டிய அருள் வழி என்று சந்தோஷமாகச் சொன்னார்.

பின்னர், இருந்தாலும் எமகண்டத்தில் அகத்தியர் நாடி பார்க்க வந்திருக்ககூடாது.  என் பணத்திமிரும், அகத்தியரைக் கட்டயப்படுத்தியதும் என் மகனை இப்படியொரு பாடு படுத்தி விட்டது.  இனி நான் ஒரு சாதாரண மனிதனாகவே அடக்கி வாசிக்கப் போகிறேன்.  என்னையும் என் குடும்பத்தையும் வாழ்த்துங்கள் என்றார் அந்த செல்வந்தர்.

1 comment: