​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Wednesday, 27 July 2011

சித்தன் அருள் - 44


இருபத்தாறு வயதுடைய ஒரு பெண்ணை, அவளுடைய தங்கை அழைத்து வந்து என் முன் நிறுத்திய பொழுது எனக்கே ஒரு வித பயம் ஏற்பட்டது.

முகத்தில் களையிழந்து எலும்பும் தோலுமாகக் காணப்பட்ட அந்த பெண் ஓரடி, ஈரடி கூட நடக்க முடியாமல் சிரமப்பட்டதும், மூச்சு வாங்கியதும் பரிதாபமாக இருந்தது.

இந்த நிலையில் யார் அந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவளது வயது இருபத்தாறு என்று சொல்ல முடியாது. காரணம் உடல் வளர்ச்சி இல்லாத நிலையில் பாவாடை, சட்டை போட்ட பன்னிரெண்டு வயது சிறுமி போல இருந்தாள். அவளால் பேசமுடியவில்லை. அப்படியே ஓரிரண்டு வார்த்தை பேசினாலும் அது கிணற்றுக்குள் இருந்து வரும் குரல் போல் கேட்டது.

‘என்ன விஷயம்?’

இவள் என் சகோதரி. வயது இருபத்தி ஆறு. இரண்டு கிட்னியும் செயலற்றுப் போய்விட்டது. தினமும் வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கிறாள். அகத்தியரை நம்பி வந்திருக்கிறோம். நல்ல வார்த்தை சொல்ல வேண்டும் என்றாள் அவளை அழைத்து வந்த தங்கை.

‘எத்தனை நாளாக இந்தப் பிரச்சினை? டாக்டரிடம் போய்க் காட்டினீர்களா?’

‘ஒண்ணரை வருஷமா இருக்கிறது. எல்லா சொத்து,  பத்து நகை,  தாலி அனைத்தும் விற்றாகி விட்டது’,  இன்னும் குணமடையவில்லை.

என்னது தாலியை விற்றீர்களா?          அப்படியென்றால் இவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?

திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இவளுக்கு இந்த நோய் வந்திருக்கிறது என்று தெரிந்ததும் எங்கள் வீட்டில் இவளைக் கொண்டு விட்டுவிட்டு இவள் கணவன் ஓடியே போய்விட்டான். இன்று வரை எட்டிக் கூடப் பார்க்கவில்லை என்றாள் அந்த நோயாளிப் பெண்ணின் தங்கை.

இந்த வார்த்தை எனக்கு சம்மட்டியால் அடித்தது போலிருந்தது. ஒரு நிமிடம் என் மனது என்னவோ போல் ஆகிவிட்டது.

கட்டின கணவனே கைவிட்டு விட்டுப் போய்விட்டானா,  என்ன கொடுமை இது?  இந்தச் சமயத்தில் தானே அவர் கூட இருக்க வேண்டும்? என்றது என் உதடு.

‘திருமணத்திற்கு முன்பு இவள் மிக அழகாக இருந்தாள். கல்லூரி வாழ்க்கை காதலில் முடிந்தது. காதல் கடைசியில் திருமணத்தில் முடிந்தது. திருமணம் ஆன ஒன்னரை மாதத்தில் ஒரு சிறுநீரகம் பழுதடைந்தது,. ஒன்றரை வருஷத்தில் மற்றொரு சிறுநீரகமும் பழுதடைந்து போயிற்று.

‘மிகவும் வருத்தமான சம்பவம்’ என்றேன்.

இதைக்கூட நாங்கள் வருத்தமாக எடுத்துக் கொள்ளவில்லை. இவள் இனிமேல் தனக்கு உபயோகப்படமாட்டாள் என்று நினைத்து கொஞ்சம் கூட ஈவு, இரக்கம் இல்லாமல் எங்கள் வீட்டில் கொண்டு விட்டுப் போய் விட்டானே இவள் கணவன். அதை நினைத்துத்தான் நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என்று சொன்னவள், அகத்தியரை நான் மிகவும் நம்பி வந்திருக்கிறேன். என் அக்காவின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வழிகாட்ட அருள்வாக்கு தரச் சொல்லுங்கள் என்று கதறிய பொழுது என் மனம்  தளர்ந்து விட்டது.

அந்தப் பெண்ணைப் பார்த்தேன். இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு வாரம் கூட உயிர் பிழைப்பாள் என்று தோன்றவில்லை.

இந்தத் தங்கை தான் அத்தனை சொத்துக்களையும் விற்று கடன்பட்டு, தான் வேலை பார்த்து கிடைக்கும் சம்பளத்தை வைத்து ஒரு வேளை சாப்பிட்டுக் கொண்டு அக்காவின் உயிரைக் காக்க மருத்துவச் செலவுகளையும் செய்து கொண்டு வருகிறாள் என்பதையும் கேட்டறிந்து கொண்டேன்.

இந்தப் பெண்ணை எப்படி அகத்தியர் காப்பாற்றப் போகிறார், என்ன அதிசயம் நிகழ்த்தப் போகிறார் என்று எண்ணிக் கொண்டு அகத்தியரிடமும், அனுமனிடமும் வேண்டிக் கொண்டு ஜீவநாடியைப் பிரித்தேன்.

‘அந்தப் பெண்ணின் முன் ஜென்மக் கதைகளை மேலோட்டமாகக் காட்டிவிட்டு உயிருக்குப் போராடும் இந்தப் பெண்மணிக்கு உயிர் நிலைக்கும். முன்பின் தெரியாத ஒருவர் மூலம் சிறுநீரகம் கிடைக்கும். அஞ்சிட வேண்டாம்’,  என்று பளிச்சென்று சொல்லி முடித்துக் கொண்டார்.
இந்த வாக்குறுதியை அகத்தியர் அளித்தாலும் இதைப் படித்த எனக்கே இதில் திருப்தி இல்லை.
எப்பொழுது உதவி கிடைக்கும்? யார் நபர்? எங்கிருந்து வருவார்? எப்படி உதவி செய்வார்? அது வரைக்கும் இந்தப் பெண் உயிர் வாழ முடியுமா? அந்த உதவி பணத்தால் கிடைக்குமா? இல்லை சிறுநீரகம் தானம் மூலம் கிடைக்குமா? என்ற கேள்விகளுக்கு அகத்தியரிடமிருந்து பதிலே இல்லை.

எத்தனை தடவை அகத்தியரைக் கேட்டுக் கொண்டாலும் இதே வார்த்தைகள் தான் திரும்பத் திரும்ப வந்ததால் அந்த தங்கைக்கும், கிட்னி பெயிலான அவளுடைய அக்காவுக்கும் தைரியம் கூறி அனுப்பி வைத்தேன்.

அன்றைக்கு முழுவதும் அந்தப் பெண்ணின் சோக நிழல் என்னைவிட்டு போகவில்லை.

நான்கு மாதம் கழிந்திருக்கும்.

அன்றைக்கு என்னவோ எனக்குக் கிடைத்த தகவல் எல்லாம் சந்தோஷத்திற்கு மாறாக இருந்தது.

எனினும் அரைகுறை மனதோடு ஜீவநாடி எடுத்த போது வாசலில் ஒரு குரல் கேட்டது. எட்டிப் பார்த்தேன். அன்றைக்கு கிட்னி இரண்டையும் இழந்த பெண்ணின் தங்கை மட்டும் நின்று கொண்டிருந்தாள்.

ஏதோ கஷ்டமான செய்தியைத் தான் சொல்லப்போகிறாள் என்று என்னை நானே தைரியப்படுத்திக் கொண்டு, ‘என்னம்மா உன் அக்காள் எப்படி இருக்கிறார்’? என்று உணர்ச்சி இல்லாமல் கேட்டேன்.

‘நன்றாக இருக்கிறார். கிட்னி ஆபரேஷன் நடந்து இரண்டு மாதமாகிறது. இதைச் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன்’ என்றாள்.

‘இன்னொரு முறை நன்றாகச் சொல்’

அதைத்தான் மீண்டும் மீண்டும் சந்தோஷத்துடன் சொன்னாள்.

என் கணக்குப்படி அந்தப் பெண் இறந்து நான்கு மாத காலம் ஆகியிருக்கும். ஆனால் அகத்தியர் சொன்னபடி பிழைத்துக் கொண்டிருக்கிறாள். இது எப்படி சாத்தியமாயிற்று? என்று பலமுறை கேட்டுக் கொண்ட நான், அந்த பெண்ணை உள்ளே அழைத்து, எப்படி இந்த ஆச்சரியமான சம்பவம் நடந்தது என்றேன். அவள் சொன்னதை அப்படியே உங்களுக்குச் சொல்லி விடுகிறேன்.

உயிர் காக்க உதவுங்கள் என்று விளம்பரப்படுத்த ஒரு பத்திரிகை ஆபீஸுக்குச் சென்று கொண்டிருந்தேன்.

போகின்ற வழியில் என் அக்காவின் கணவரின் தங்கையை எதிரில் பார்த்தேன். என் அக்காவின் நிலையை அவளிடம் எடுத்துச் சொன்னேன்., அவள் மனதில் என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அந்த அரசாங்க மருத்துவர் என் அக்காவின் கதையைக் கேட்டுவிட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரச் சொன்னார். மறுநாளே, நான் என் அக்காவை அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவர் மிக நன்றாக பரிசோதனை செய்து விட்டு யாரேனும் அகால மரணமடைந்த அவரது சொந்தக்காரர்கள் விரும்பினால் அந்த கிட்னி,  அவரது ரத்தத்தின் தன்மை உன் சகோதரிக்கு ஒத்து வந்தால் ஆபரேஷன் செய்யலாம் என்று சொன்னார்.

இது எனக்கு உற்சாகத்தைத் தந்தது.

ஆனால் ஐந்து நாட்கள் ஆகியும் டாக்டர் சொன்னபடி எதுவும் நிகழவில்லை. எனக்கோ கவலையாகப் போயிற்று. அகத்தியரிடம் பிரார்த்தனை செய்து கொண்டேன்.

ஆறாம் நாள் காலை.

ஒரு விபத்தில் அடிபட்டு மரணமடைந்த ஒரு பணக்கார இளைஞனின் பெற்றோர் சம்மதிக்கவே அந்த இளைஞனது கிட்னி என் அக்காவிற்குப் பொருத்தப்பட்டு விட்டது.

அகத்தியர் சொன்ன வாக்கும் பலித்து விட்டது. இப்போது எனது அக்காள் நன்றாக குணமாகிக் கொண்டிருக்கிறாள் என்று நடந்ததை நீண்ட கதையாக சொன்னாள் அவள்.

ஏதோ சினிமாவில் நடப்பது போல நடந்திருக்கிறது. இதை ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

எதற்கும் அகத்தியரிடம் இதுபற்றிக் கேட்டு விடலாம் என்று ஜீவநாடியைப் பிரித்த போது….

அகத்தியனிடம் நாடி கேட்டு அது நடக்க சற்று தாமதமானால் அகத்தியரை திட்டுகிறவர்களைக் கூட நான் மன்னித்து விடுவேன். ஆனால் எனது மைந்தனாக நீயே அன்றைக்கும் அகத்தியன் வாக்கு மீது சந்தேகப்பட்டாய். இன்னமும் இது எப்படி நடந்தது என்று மனதிற்குள் சந்தேகப்படுகிறாய்?

ஆகவே -

இன்று முதல் இன்னும் இருபத்தேழு நாட்கள் நான் உன் கண்ணில் தோன்றி யாருக்கும் அருள்வாக்கு தரமாட்டேன். அதோடு மட்டுமின்றி அறுபடை வீடு தன்னை சுற்றிவந்து அங்கிருக்கும் எம்மை நோக்கி நூற்றி எட்டு தடவை விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். இப்படிச் செய்யாவிடில் இனி அகத்தியன் உன்னிடம் இருக்க மாட்டான் என்று சாட்டையடி அடித்தார்.

வேறு வழியின்றி நானும் அறுபடைவீடு சென்று விட்டு நூற்றி எட்டு தடவை ஒவ்வொரு கோவிலில் காணப்படும்  அகத்தியரை வணங்கி விட்டு வந்தபின்பு தான் அகத்தியர் என்னிடம் மீண்டும் வந்தார்.

2 comments:

  1. அகத்தியர் சொல்லே மந்திரம். அவரை யார் உளமார சரண் அடைகிறார்களோ அவர்களை ஒரு நாளும் கை விட்டதில்லை

    ReplyDelete