​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 23 July 2011

சித்தன் அருள் - 35


"என் வீட்டுக்காரர் உருப்படுவாரா?  மாட்டாரா? வயது வந்த பெண் வீட்டில் இருக்கிறாள்.  அவளுக்கு எப்போது கல்யாணம் நடக்கும்?  இல்லை இப்படியே தான் காலம் கழியுமா? இதை மாத்திரம் அகத்தியரிடம் கேட்டு சொல்லுங்கள்". என்று கண்ணீர் மல்க ஓர் ஐம்பது வயது பெண்மணி என்னிடம் கேட்டார்.

ஜீவ நாடிக்கட்டை பிரித்து பார்க்கும் முன்பு காலண்டரைப் பார்த்தேன்.  கார்த்திகை நட்சத்திரம்.  கூடவே அஷ்டமி திதியும் இருந்தது.  இப்படிப்பட்ட நாளில் நான் கூடுமானவரை நாடி பார்ப்பதில்லை.  காரணம் நல்ல பலன் கிடைக்காது.  அதோடு அகத்தியரின் கோபத்திற்கும் ஆளாகக் கூடும்.

அந்தப் பெண்மணியைப் பார்த்தேன்.  துக்கத்தினால் அவரது கண்கள் வரிவரியாகச் சிவந்திருந்தது.  கழுத்தில் தாலிக் கயிறு மட்டும்தான் இருந்தது.  சாதாரண நூல் புடவை.  ரவிக்கை கூட கசங்கி அழுக்காக இருந்தது.  நெற்றியில் குங்குமம் - விபூதி.  அரை குறையாக நரைத்த முடி.  காதில் தோடுக்குப் பதிலாக ஈர்குச்சியைக் குத்திக் கொண்டிருந்தார்.

கையில் கண்ணாடி வளையல் பெயருக்கு போடப்பட்டிருந்தது.  செருப்பு வாங்க வசதி இல்லை போலும்.  அவளது பாதங்கள் செருப்பைத் தொட்டு பல வருஷங்கள் ஆகியிருக்கும் போல் தோன்றியது.

இப்படிப்பட்ட ஏழ்மையான அந்த பெண்மணிக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.  அதனால் அந்தப் பெண்மணியை சமாதானப்படுத்துவது என்று யோசித்தேன்.

அகத்தியரிடம் மனமார வேண்டினேன்.

அஷ்டமி, நவமி, பரணி, கார்த்திகையில் தாங்கள் நல்வாக்குச் சொல்லக்கூடாதா?  இறைவனுக்கு எல்லா நாட்களும் நல்ல நாட்கள் தானே.  இந்த பூலோகத்து மக்கள் என்ன பாவம் செய்தார்கள்?  இனியாவது தாங்கள் திரு உள்ளம் இறங்கி இந்தப் பெண்மணிக்கு அருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்.  நாடியைப் புரட்டிப் பார்த்தேன்.  இத்தனை வேண்டியும் அகத்தியர் இறங்கவில்லை என்றதும் எனக்கு சற்று வெறுப்பு ஏற்ப்பட்டது.

முன்பெல்லாம் செந்தமிழில் சொல்லெடுத்து வாக்கு தந்த அகத்தியர், பின்னர் நாம் பேசக் கூடிய இயல்பான தமிழ் மொழியால் அருள் வாக்கு தந்ததை எண்ணி, இனி, அஷ்டமி, நவமி, பரணி, கார்த்திகை எனத் தினத்தன்றும் இப்படிப்பட்ட ஏழை அப்பாவிகளுக்கு கட்டாயம் இறங்கித்தான் ஆகவேண்டும் என்று மறுபடியும் வேண்டினேன்.

அகத்தியர் என்ன நினைத்தாரோ தெரியாது.  சட்டென்று அருள் வாக்கு தர முன் வந்தார்.  அதோடு சில நிபந்தனைகளையும் போட்டார்.

அருள் வாக்குதனை நான் சொன்னாலும், இதற்க்கு பிரம்மாவும் அனுமதி தர வேண்டும்.  அதற்காக அகத்தியன் மைந்தனாகிய நீ, அஷ்டமி, நவமி, பரணி, கார்த்திகை நட்சத்திரம் தோறும் யாருக்காவது நாடி படிக்க வேண்டி இருந்தால் அன்றைக்கு விடியற்காலையில் பிரம்மாவிடம் இருபத்தி ஐந்தாயிரம் தடவை குறிப்பிட்ட மந்திரங்களை சொல்லி அவருடைய சம்மதத்தைப் பெற்று விட்டால், அகத்தியன் அருள் வாக்கு தருவதில் ஆட்சேபணை இல்லையென்று ஒரு பெரிய கிடுக்கிப்பிடியை வைத்தார்.

முதலில் இதைக் கேட்டு நான் அசந்து போனேன்.  ஒன்றா இரண்டா, இருபத்தி ஐந்தாயிரம் தடவை மந்திரங்கள் சொல்ல வேண்டும் என்றால் சும்மாவா?  அதுவும் பிரம்ம முகூர்த்த வேளையில்  எப்படிச் சொல்லி முடிக்க முடியும்?

யோசித்து பார்த்தேன், இது என்னால் முடியுமா?  என்பது தெரியவில்லை.

மறுபடியும் அகத்தியரிடம் வேண்டி இந்த மாதிரியான மந்திரங்களை ஆயிரம், அல்லது இரண்டாயிரம் தடவை சொன்னால் போதாதா?  விடியற்காலை நேரத்தில் சொல்லக் கூடிய அளவுக்கு மந்திரங்களின் எண்ணிக்கையைக் குறைக்க அருள் பாலியுங்கள் என்றேன்.

முதலில் "முடியாது" என்று மறுத்த அகத்தியர் பின்னர், அஷ்டமி, பரணி, கார்த்திகை, நவமி நாளில் அருள்வாக்குத் தருகிறோம்.  ஆனால் பத்தாயிரம் முறை அந்த தேவ மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் என்று முடிவாக கூறினார்.

"அப்பாடி, தப்பித்தோம், பிழைத்தோம்" என்று அகத்தியருக்கு நன்றிச் சொல்லி உடனே அந்த பெண்மணிக்காக ஜெபிக்க ஆரம்பித்தேன்.

பத்தாயிரம் முறை அகத்தியர் அருளிய தேவ மந்திரத்தை ஜெபித்து பின்னர், அந்த ஏழைப் பெண்மணிக்கு பிரம்மா அனுமதியுடன் அகத்தியர் வாக்கு சொல்ல ஆரம்பித்தார்.

தஞ்சாவூரின் ஒரு சிறிய கிராமத்தில் குடி கொண்ட அம்பாள் கோயிலுக்கு குருக்களாக இருந்தார், இந்த பெண் மணியின் கணவர்.  நன்கு படிக்கவில்லை.  தெய்வத்தை மட்டும் நம்பி சிறிய வருமானத்தோடு அந்த சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்த அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

அதிஷ்டத்தோடு பிறக்க வேண்டிய அந்த குழந்தை வறுமையில் பிறந்ததால் எல்லோரும் அந்தக் குருக்களை கை விட்டனர்.  அவரைச் சேர்ந்தவர்கள் எல்லோரும், அந்தக் கிராமத்தை விட்டு பிழைப்புக்காக வெளியூருகுக் கிளம்பி விட்டனர்.

வருமானம் இல்லை.  கோவிலிலும் சம்பளம் இல்லை.  நிலம், மனை எதுவும் இல்லை.  கோவிலுக்குச் சொந்தமான ஒரு மண் வீட்டில் வாழ்ந்து வந்த குருக்கள், அந்த கோவில் அம்மனையே முழுக்க முழுக்க நம்பி என்றைக்காவது ஒரு நாள் அம்பாள் கண் திறந்து பார்க்க மாட்டாளா?  விடியல் கிடைக்காதா? என்று நாட்களைக் கழித்துக் கொண்டு வந்தார்.

யார் என்ன சொல்லியும் கேட்க்காமல், அதே கிராமத்திலேயே தங்கிவிட்ட குருக்களுக்கு அன்றாடம் ஒரு வேளை கஞ்சி தான் சாப்பாடு.  அதுவும் அந்த ஊர் குடியானவர்கள் மனது வைத்தால் தான்.

இதற்குள் அவரது மகள் வளர்ந்து பெரியவளாகிட, குறைந்த பட்ச கல்வி தான் கொடுக்க முடிந்தது.  இப்போது அவளுக்கு வயது முப்பத்திரண்டு.  இளமையின் அழகெல்லாம் வற்றி, எலும்பும் தோலுமாக மாறிவிட்டாள்.  குருக்களின் மனைவி எப்படியோ இந்த ஜீவநாடியைப் பற்றி கேள்விப்பட்டு ஒரு முறை எப்படியாவது அகத்தியர் வாக்கைக் கேட்டு விடுவோம்.  நல்ல வாக்கு சொன்னால் ஊருக்குத் திரும்பி போவோம்.  இல்லையெனில் ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்வோம்" என்ற எண்ணத்தோடு வந்திருக்கிறாள்" என்று இரத்தின சுருக்கமாக அகத்தியர் எனக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

வறுமை ஒரு பக்கம் இருந்தாலும் இன்னமும் தெய்வத்தையே நம்பி, அந்த சிற்றூரில் இருக்கும் குருக்களுக்கு எதாவது நல்ல வழியைக்காட்டி, அவரது மனைவியின் உயிரையும் காப்பாற்றி, அவர்களது மகளுக்கும் ஓர் திருமணத்தை நடத்தி தங்கள் அருள் புரிய வேண்டும், என்று என் மனம் அகத்தியரை வேண்டியது.

"உடனே சொந்த ஊர் செல்க, உனது மகளுக்காக ஓர் அருமையான வரன் காத்திருக்கிறது.  அவளுக்கு இன்னும் தொண்ணூறு நாட்களில் கல்யாணம் நடக்கும்" என்றார் அகத்தியர்.

இது எப்படி நடக்கும்? மந்திரத்தில் மாங்காய் விழுந்தாலும் விழுமே தவிர இந்தப் பெண்மணியின் மகளுக்கு, இன்னும் தொண்ணூறு நாட்களில் திருமணமா? என்று நான் ஆச்சரியப்பட்டேன்.

சித்தன் போக்கு சிவன் போக்கு, என்பது போல் எதாவது ஒன்றைச் சொல்லி அஷ்டமியும் அதுவுமாக இந்தப் பெண்மணியை நாசூக்காக அனுப்புகிறாரா என்று நானே சந்தேகப்பட்டேன்.

அடுத்த வேளை சாப்பாட்டிற்கே வழியில்லை.  எப்படி திருமணம் ஜாம் ஜாம் என்று நடக்கும்? அந்தக் குருக்களின் மனைவி நம்பிக்கை இல்லாமலேயே புறப்பட்டுச் சென்றார்.

அன்று அகத்தியர் அப்படிச் சொல்லவில்லை என்றால் இந்தப் பெண்மணி தற்கொலை செய்து கொண்டிருப்பாள் என்று எல்லோரும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

இரண்டு நாட்கள் கழிந்திருக்கும்.

ஒரு நாள் அதிகாலையில் ஒரு இளம் வயது போல் தோற்றமளித்த வாலிபன் என் வீட்டிற்கு வந்தான்.  அவன் கை நிறைய பழங்கள் இருந்தன.

"அய்யா! என் பெயர் சுப்ரமணியன்! தஞ்சாவூரைச் சேர்ந்தவன்.  சிங்கப்பூரில் வேலை பார்க்கிறேன்.  கல்யாண விஷயமாக உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன்" என்றான்.

என்னைத் தேடி வருவதற்கு காரணம்?

"எங்க மாமி தான் இங்கே போன்னு சொல்லி அனுப்பி வெச்சா.  மாமா கோவில் குருக்களாக இருக்கிறார்.  எங்க அப்பா, அம்மா எல்லோரும் சின்ன வயசிலே சிங்கப்பூருக்கு போனாங்க.  அங்கேதான் நான் பொறந்தேன்.  இப்போ என் அப்பா, அம்மா உயிரோட இல்லை. எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை" என்று சொன்னான்.

நான் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

எங்க அப்பாவுக்கு, நான் உயிரோடு இருக்கும் பொது, கூடப் பிறந்தவளுக்கு ஒண்ணுமே செய்யல என்கிற குறை இருந்திருக்கும் போலிருக்கு.  அதை ஒரு கடிதாசியிலே எழுதி, மாமி பெயரையும், விலாசத்தையும் குறிப்பிட்டு அவளுக்கு என்ன உதவி செய்ய முடியுமோ அதைச் செய்.  அப்படிச் செய்தால் தான் என் ஆத்மா சாந்தி அடையும்னு உயில் மாதிரி எழுதியிருந்தார்.  இது இப்போதுதான் என் கண்ணில் தென்பட்டது.

இதைப் படிச்சதும் நான் இந்தியாவுக்கு புறப்பட்டு வந்துட்டேன்.  நல்ல வேளை.  மாமி இன்னும் அதே ஊர்ல இருந்ததினால, கஷ்டமில்லாம அவாளைக் கண்டுபிடிச்சேன்.  எல்லா விஷயத்தையும் அவா கிட்ட சொன்னேன்.  கடைசியிலே அவா பொண்ணையும் கல்யாணம் பண்ணிகிறதா முடிவும் செய்துட்டேன்.  ஆனால்.....

"என்ன ஆனால்?"

எங்க மாமாவோ ஒரே பிடிவாதமாக தன் கையால் ஒரு மாங்கல்யம் பண்ணி போட்ட பிறகு தான் கல்யாணம் செய்ய ஒத்துப்பேன்.  அது வரைக்கும் பொறுமையா இரு என்கிறார்.  அவர் நிலைக்கு எப்போ சம்பாதித்து, எப்போ திருமாங்கல்யம் பண்ணறது?  ஒரே குழப்பமாக இருந்தது.  அதான் மாமி சொல்லி உங்ககிட்டே வந்திருக்கேன்.  இந்தக் கல்யாணம் நடக்குமா, நடக்காதா?  அகத்தியர் கிட்டே கேட்டுச் சொல்லுங்கோ?" என்றான் அந்தப் பையன்.

இந்த அருமையான சந்தர்ப்பத்தை எதுக்காக அந்த குருக்கள் நழுவ விடுகிறார் என்று யோசித்துக் கொண்டே நாடியைப் பிரித்துப் படித்தேன்.

"அன்னவன் குடியிருக்கும் வீட்டின் பின்புறத்தில், மாட்டுத் தொழுவத்தில் வடகிழக்குப் பகுதியில் பூமிக்குள் ஒரு தகரப்பெட்டி இருக்கும்.  அதைத் திறந்தால் ஒரு மாங்கல்யமும், நான்கு தங்க வளையல்களும் இருக்கும்.  இது அந்த குருக்களுடைய அம்மாவுக்குச் சொந்தமானது.  தன் வருங்கால மருமகளுக்காக ஆசைப்பட்டு சேர்த்து வைத்திருந்த நகை.  அவள் கண்ணை மூடும் வரை குருக்களுக்கு கல்யாணம் ஆகாததால் மாட்டுத் தொழுவத்தில் புதைத்து விட்டார்.  அதனைத் தோண்டி எடுத்து திருமணத்தை நடத்தச் சொல்" என்று அகத்தியர் உத்தரவிட்டார்.

இரண்டு நாட்கள் கழித்து, அந்த குருக்கள், அவரது மனைவி, மகள், அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் சிங்கபூர் மருமகன் ஆகியோர் என்னைத் தேடி வந்தார்கள், அந்த திருமாங்கல்யம் மற்றும் தங்க வலயல்களோடு.

பின்னர் அவர்களுக்கு திருமணம் நடந்தது!  நானும் வாழ்த்தினேன்!

வறுமையில் வாடிய மகள் சிங்கப்பூரில் இப்பொழுது மிக மிக வசதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக பின்னர் எனக்குத் தகவல் கிடைத்தது!

1 comment: