​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 27 July 2011

சித்தன் அருள் - 43


அந்த விடியற்காலை வேளையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் என் வீட்டுக் கதவைத் தட்டிய போது லேசாக அதிர்ச்சியடைந்தேன். அவர் என் முன்னாள் நண்பர் என்றாலும் உள்ளே உட்கார வைத்து விட்டு என்ன விஷயம்,  இந்த விடியற்காலை நேரத்தில் என்று கேட்ட போது தன் கையிலிருந்த ஒரு ஆர்டரைக் காட்டினார்.

தன் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் ஜீப்பில் இருக்கும் மைக் காணாமல் போனதற்காக உங்களது பொறுப்பின்மையைக் கருத்தில் கொண்டு இன்று முதல் தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறீர்கள் என்ற சஸ்பெண்ட் ஆர்டரைக் காட்டினார்.

எனக்குத் தெரிந்து, மிகச் சிறந்த நல்ல அதிகாரிகள் போலீஸ் துறையில் இருக்கிறார்கள். அவர்களில் இவரும் ஒருவர். இப்படிப்பட்டவருக்கு ஏன் இந்த சோதனை? என்று வருந்தினேன். இதற்குள் அவரே பேசினார்.

‘நான் சஸ்பெண்ட் ஆனதைப் பற்றிக்கூட கவலைப்படல. ஆனால் காணாமல் போன அந்த ஜீப்பில் இருக்கும் மைக் செட் இப்போது எங்கிருக்கின்றது. அது மீண்டும் என் கைக்கு கிடைக்குமா? என்று கேட்கத்தான் விடியற்காலை என்றும் பாராமல் உங்களிடம் ஓடி வந்திருக்கின்றேன்’ என்றார் தேவராஜ்.

‘எதற்காக உங்களுடைய ஜீப்பின் மைக் செட்டை எடுக்கணும்? இதனால் என்ன லாபம் அவர்களுக்கு கிடைக்கப் போகிறது?’ என்று சாதாரணமாக இன்ஸ்பெக்டர் தேவராஜிடம் கேட்டேன்.

‘அதுதான் எனக்கும் புரியவில்லை. இதனால் பொது மக்களுக்கோ வேறு யாருக்கோ எந்தவித லாபமும் இல்லை. ஆனால் எதற்காக எடுத்துச் சென்றார்கள், என்பதும் தெரியவில்லை’, என்று தேவராஜ் பதில் சொன்னார்.

‘சரி….. அது போல வேறொன்றை வாங்கி ஜீப்பில் பொருத்திக் கொள்ள முடியாதா?’ என்றேன்.

‘முடியாது. இது போலீஸ் டிபார்ட்மெண்டிற்காக பிரத்யேகமாகச் செய்யப்பட்டது. சட்டென்று வேறு கிடைக்காது. ஆர்டர் கொடுத்துத்தான் செய்ய வேண்டும்’ என்று விளக்கினார் இன்ஸ்பெக்டர்.

இனியும் விவாதம் செய்வதில் பயனில்லை என்று அகத்தியர், நாடியைப் பிரித்தேன்.

‘இழந்ததை மீண்டும் பெறுவாய் இன்னும் முப்பது நாளில்! அதுவரை பொறுத்திரு’ என்று அகத்தியரிடமிருந்து பதில் வந்தது.

எப்படி கிடைக்கும், எங்கே கிடைக்கும்? என்று ஒரு விவரமும் சொல்லாமல் சட்டென்று இரண்டே வரிகளில் அகத்தியர் சொன்னது இன்ஸ்பெக்டர் தேவராஜுக்கு மன வருத்தம்.

பொறுமையில்லாமல் வந்த வேகத்தில் அப்படியே வெளியேறினார். நான் எவ்வளவோ வேண்டிக் கேட்டும் அவரால் பொறுமையைக் காக்க முடியவில்லை.

ஏதோ, அகத்தியர் சொன்னபடி நடக்கிறதென்று எல்லோரும் சொன்னதினால் நான் வந்தேன். மொட்டையாக இப்படி அகத்தியர் சொல்வார்னு நான் நினைக்கல்லே. இது நீங்களா சொல்றதா, இல்லை அகத்தியர் வாக்கா? என்று என்னையே சந்தேகித்துக் கேட்டார். இவரா இப்படிக் கேட்பது? என்று ஆச்சரியப்பட்டேன்.

இதற்கு நான் பதில் சொல்லவில்லை. மவுனம் காத்தேன்.

நான்கு நாள் கழித்து தேவராஜ் மீண்டும் வந்தார். முகத்தில் சந்தோஷக் களையில்லை.

‘எட்டு பவுன் நகையை வீட்டில் காணவில்லை. வீட்டில் வேலைக்காரி இல்லை. போலீஸ் குவார்ட்டர்ஸ் வீடு என்பதால் வெளி மனிதர் யாரும் வீட்டிற்குள் வரமுடியாது. வீட்டில் என் மனைவியைத் தவிர வேறு யாரும் இல்லாத நிலையில் அந்த எட்டு பவுன் நகை எங்கு காணாமல் போயிருக்கும்?  இதையாவது அகத்தியர் அருள் வாக்கு மூலம் எனக்குச் சொல்வாரா?’ என்று ஒரு மாதிரியாகக் கேட்டார்.

‘இன்றைக்கு உங்களுக்கு சந்திராஷ்டமம். நல்ல பதில் கிடைக்காது. இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள். நல்ல பதில் கிடைக்கும்’ என்றேன்.

‘இந்த விஷயங்கள் எல்லாம் அகத்தியரால் சொல்ல முடியாது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் அகத்தியர் ஜோதிடர் அல்ல. இருந்தாலும் ஒரு சந்தேகத்திற்காக இதைக் கேட்டேன் என்று நெருஞ்சி முள் குத்துவதைப் போல் ஒரு வார்த்தை சொல்லி விட்டு நாசூக்காக வெளியேறினார்.

இது எனக்கு சம்மட்டி அடி போல் விழுந்தது.

இனிமேல் அந்த மனுஷன் நாடி பார்க்க வந்தால் ஐயா….. ஆளை விடுங்கள்.     வேறு எந்த நாடியையாவது பார்த்துக் கொள்ளுங்கள். இங்கே எதுவும் கேட்காதீர்கள் என்று கையைக் கூப்பிச் சொல்லிவிட வேண்டும் என்று தீர்மானமாக எண்ணிக் கொண்டேன்.

அந்த தேவராஜ் இருபத்தைந்து நாட்களாக என் பக்கம் எட்டிக் கூட பார்க்கவே இல்லை. அப்பாடி என்று மனதிற்குள் சந்தோஷப்பட்டேன்.

அன்றைக்கு முப்பதாவது நாள்.

ராத்திரி பத்து மணிக்கு வேகமாக வந்த இன்ஸ்பெக்டர் தேவராஜ். ‘சாரி சார். ஏதோ மன வருத்தத்திலே என்னவெல்லாமோ சொல்லி உங்கள் மனசைப் புண்படுத்திட்டேன். எப்படியோ காணாமல் போன என்னுடைய ஜீப் மைக் செட் சிடைச்சிடுச்சு’ என்றார்.

மௌனமாக நிதானமாக நான் கேட்டேன். ‘எப்படி?’

‘வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கிற கூவம் நதிக்குள்ளே கிடந்தது’.

‘யார் கண்டு பிடிச்சது?’

‘நான் தான் கண்டுபிடிச்சேன்’. கூவத்துலே உள்ள மண்ணை அள்ளி ரோட்டிலே போட்டிருக்காங்க. காலையிலே வாக்கிங் போறப்போ, இந்த வயர்லஸ் மைக் அதனுடைய உதிரி பாகம் எல்லாம் சாக்கடையோடு சாக்கடை மண்ணாக் கிடந்தது. எனக்கு ஒரு சந்தேகம். எதற்கும் அந்த மண்ணைத் தோண்டிப் பார்க்கும்போது மொத்தமும் கிடைச்சது.

‘யார் அங்கே தூக்கிப் போட்டிருப்பாங்க’

‘அது அகத்தியர் தாங்க சொல்லணும்’

‘இதை உங்க டிபார்ட்மெண்டுக்குச் சொல்லிட்டீங்களா?’

‘சொல்லிட்டேன். ஆனா அந்த ஒயர்லெஸ் மைக்கால எந்த விதப் பயனும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. சஸ்பெண்ட் ஆர்டரை அனேகமாக நாளைக்கு கேன்சல் செய்திடுவாங்க’,

‘ரொம்ப சந்தோஷமான செய்தி’.

‘இந்த ஒயர்லெஸ் செட்டை யாரு என் ஜீப்பிலிருந்து திருடி இந்தக் கூவத்திலே வீசியிருப்பாங்கன்னு சொல்லுங்க. அது போதும்’ – இன்ஸ்பெக்டர் தேவராஜ் அவசரப்படுத்தினார். இது எனக்குப் பிடிக்கவில்லை.

வேண்டா வெறுப்பாகத்தான் நாடி படிக்க ஆரம்பித்தேன். ஏனெனில் இவர் ஒரு ஏடா கூடமான ஆளு. வேண்டுமென்றே எதையாவது சொல்லி, என்னை வம்பில் சிக்க வைக்கிறாரோ என்னவோ என்று பயம். இரண்டாவது அவர் அகத்தியர் மீதோ என் மீதோ துளியும் நம்பிக்கை வைக்கவில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு நான் ஏன் நாடி படிக்கணும் என்று நினைத்தேன்.

அகத்தியர் சொன்னார்.

ராஜாங்க உத்தரவுப்படி அரசு வாகனங்களை இரவு நேரத்தில் தன் வீட்டில் எந்த போலீஸ் அதிகாரியும் வைத்துக் கொள்ளக்கூடாது. அவசியம் ஏற்பட்டால் மேலதிகாரியின் உத்தரவு கேட்டு வாகனங்களை வைத்துக் கொள்ளலாம். தேவராஜ் இந்த உத்தரவை மதிப்பதில்லை. மாறாக எதையும் தன்னிச்சையாக செய்து வந்தான்.

தேவராஜ் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் விவேக். இவர் ஒரு மோசமான பேர் வழி. விவேக் மீது கோபம் கொண்ட ஒரு சமூக விரோதி விவேக்கை பழிவாங்க விரும்பினான். அதற்காக அவர் குடியிருக்கும் வீட்டை நோட்டமிட்டான்.

விவேக் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப்பையே நள்ளிரவில் நான்கு பேருடன் சேர்ந்து அதைக் கூவத்தில் தள்ள முயற்சித்தான் அந்த சமூக விரோதி. அது முடியாமல் போகவே கடைசியில் அந்த ஜீப்பிலுள்ள ஒயர்லெஸ் செட்டை பிடுங்கி கூவத்தில் எறிந்து விட்டான். ஆனால் அந்த ஜீப் விவேக் உடையது அல்ல. இது தேவராஜுக்கு உரியது என்பது அவனுக்குத் தெரியாது.

விவேக் தப்பித்துக் கொண்டார். ஆனால் தேவராஜ் மாட்டிக் கொண்டு சஸ்பெண்ட் ஆனார்.

எதற்காக தேவராஜுக்கு இந்த சஸ்பெண்ட் என்றால் தேவராஜுக்கு ஒரு கெட்ட குணம் உண்டு. தனக்குப் பிடிக்காத மேலதிகாரிகளை பழிவாங்க மேலிடத்திற்கு நிறைய மொட்டைக் கடிதம் எழுதுவதுண்டு. இதனால் பல அதிகாரிகள் சஸ்பெண்ட் ஆகி பின்னர் மீண்டும் பதவியில் சேர்ந்து இருக்கிறார்கள்.

தேவராஜின் மொட்டைக் கடிதத்தினால் பல அதிகாரிகளின் வீட்டிலுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் விட்ட கண்ணீர் தான் தேவராஜுக்கு கிடைத்த சஸ்பெண்ட் என்று மிகவும் விலாவாரியாகச் சொன்ன அகத்தியர் ‘இதை முன்பே யாம் சொல்லியிருப்போம். ஆனால் இருக்கிற நகையை, காணாமல் போனதாக அகத்தியனிடமே பொய் சொன்ன தேவராஜ் சிறிது காலம் அதற்குரியத் தண்டனையை அனுபவிக்கட்டும் என்று கூறாமல் விட்டோம். இல்லையேல் இருபத்தாறு நாட்களுக்கு முன்பே இந்த விஷயத்தைச் சொல்லி, தேவராஜைக் காப்பாற்றியிருப்போம். இனியாவது இதுபோன்ற பொய்களைச் சொல்லி அகத்தியனைச் சோதிக்க வேண்டாம் என்று நீண்டதோர் அறிவுரையையும் அப்படியே வழங்கினார்.

இன்றைக்கும் தேவராஜ் இருக்கிறார். மிக உயர்ந்த பதவி பெற்று ஓய்வு பெற்றிருக்கிறார் என்பது பெரிய விஷயமல்ல. இப்போது தினமும் அகத்தியர் படத்தை வைத்து பூஜை செய்து சிவப்பழமாகக் காட்சி தருகிறார். இன்ஸ்பெக்டர் பதவியில் தற்காலிகமாக நீக்கப்பட்டு மேல் விசாரணையின் போது, அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எழுதிய கடிதத்தின் வாசகம், தேவராஜ் குற்றமற்றவர் என்று எப்படி மாறிற்று என்பதுதான் இன்று வரை புரியாத புதிர்.

அகத்தியர் லீலைகளில் இதுவும் ஒன்று என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

1 comment: