​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 19 September 2020

சித்தன் அருள் - 917 - ஆலயங்களும் விநோதமும் - திருமறைநாதர் கோயில், திருவாதவூர், மதுரை!


தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி
அல்லலறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்.

வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்டமுழுதுந் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்  கரியோய் நீ 
வேண்டிஎன்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும்அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்றுண்டென்னில் 
அதுவும் உன்றன் விருப்பன்றே.

என திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் பிறந்து, வளர்ந்து, இறைவனிடம் தீக்ஷை பெற்ற ஊர்.

திருமறைநாதர் கோயில் திருவாதவூர், மதுரையிலிருந்து வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவிலும், மேலூரிலிருந்து மேற்கே எட்டு கி.மீ., தொலைவிலும் உள்ள திருவாதவூரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வேதநாயகி அம்மன் உடனுறை திருமறைநாதர் மூலவராக காட்சி அளிக்கிறார்.

சிவபெருமான் சனி பகவானின் வாத நோயைத் தீர்த்த தலம் என்பதால், இந்தத்தலம் 'வாதவூர்' என்று பெயர் பெற்றது. இத்தல ஈசனை வழிபட்டால் கை, கால் முடம், பக்கவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான வாத நோய்களும் தீரும் என்று கூறப்படுகிறது.

ஒரு சமயம் திருக்கயிலையில் பைரவரின் வாகனமான சுவானத்தை (நாய்) சிவபெருமான், மறைக்கச் செய்தார். இதனால் பைரவர், ஈசனிடம் தனது நாய் வாகனத்தை வேண்டினார். 'திருவாதவூர் சென்று வழிபட, தொலைந்த வாகனம் கிடைக்கும்' என்று இறைவன் அருளினார். கயிலாய மலையில் இருந்து திருவாதவூர் வந்த பைரவர், இங்கு ஒரு தீர்த்தம் அமைத்தார். அது பைரவர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள பைரவர் தீர்த்தத்தில் நீராடி திருமறை நாதரை வழிபட்டு தனது நாய் வாகனத்தை மீட்டார். இத்தல பைரவரைத் தொடர்ந்து 8 அஷ்டமி தினங்களில் வழிபட்டு வந்தால் தொலைந்து வாகனங்கள் மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தல சனி, பைரவர் மற்றும் திருமறைநாதரை 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான தோஷங்களும் அகன்றுவிடும்.

மகாவிஷ்ணுவின் காவல் தெய்வமாக ஸ்தாபிக்கப்பட்ட புருஷ மிருகத்துக்கு இங்கு சிலை உள்ளது. ஆலயத்தின் கிழக்கே நூற்றுக்கால் மண்டபம் உள்ளது.

இங்கு தான் சிவபெருமான் தனது கால் சிலம்பொலியை மாணிக்கவாசகரை கேட்கச் செய்தார். இந்த மண்டபத்தை அமைத்தவர் மாணிக்கவாசகர். இங்கு மாணிக்கவாசகருக்கு தனி சன்னிதி உள்ளது. கரத்தில் திருவாசக சுவடி ஏந்தி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன உள்ளது?

ஒருமுறை, பெருமாளுக்கு, பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கவே, அவர், தாயாரை பிரிந்து, இது விலகுவது எப்பொழுது, எப்படி என தேடி, பல இடங்களுக்கும் சென்ற பின், கடைசியாக இங்கு வந்தார். அவர் உணர்வுகள் ஒன்றி, மனம் அமைதியாகிவிடவே, இவ்விடத்திலென்ன உள்ளது என அறிய விரும்பினார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, ஒரு வண்டானது பறந்து வந்து, அருகிலுள்ள தடாகத்தில் பூத்திருந்த ஒரு தாமரையின் உள்ளே அமர்ந்தது. உடனேயே தாமரை தன் இதழ்களை மூடி அந்த வண்டை தன்னுள் அணைத்துக் கொண்டது.

இதைக்கண்ட பெருமாள், அந்த தடாகத்தில் இறங்கி, நீருடன் நீராக கலந்து, தவமிருக்கலானார். அவரின் தவ சக்தி நாளுக்கு நாள் பெருகி கொண்டே சென்றது. ஒரு நிலையில் பெருமாளின் தவசக்தியை தாங்க முடியாமல், தாமரையில் அமர்ந்த வண்டானது, சிவபெருமானாக வெளிவந்து, பெருமாளை "நாராயணா! வெளியே வா!" என்றழைத்தார். "நாரம்" என்றால் நீர். "அயணம்" என்றால் கலந்திருத்தல். நீரோடு நீராக கலந்திருந்ததால் "நாராயணன்" என சிவபெருமான், பெருமாளை அழைத்தார். பெருமாளை "நாராயணா" என்று முதல் முதலாக அழைத்த இடம், திருவாதவூர்.

சிவபெருமானுக்கு, பெருமாளே கட்டிய கோவில் இது. அதற்கு "நாராயண சேனை" அவருக்கு உதவியாக இருந்தது.

சிவபெருமான் தவத்தில் இருந்த இடம் ஆதலால், தவத்தில் திளைப்பவர்களுக்கு, மிகுந்த அமைதியை, தியானத்தின் பொழுது கொடுக்கு இடம். மீண்டும், மீண்டும் அங்கு செல்ல வேண்டும் என ஒருவரை கவர்ந்திழுக்கும் இடம்.

த்யானத்தில் அமர்ந்தால், எந்தவித சப்தமும், உள்ளே நுழையாது. அப்படி ஒரு அமைதியை தரும் கோவில்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....................தொடரும்!

7 comments:

  1. Om lobha mudra thayar samedha agastiya peruman thiruvadigale potri.

    ReplyDelete
  2. 🙏ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    படிக்கும்போதே பரவசம்

    ஓம் அகத்தியர் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  3. ஓம் ஸ்ரீ மாதா லோபமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்

    ReplyDelete
  4. நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🙏🙏🙏ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

    ReplyDelete