​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 15 September 2020

சித்தன் அருள் - 913 - ஆலயங்களும் விநோதமும் - தாணுமாலயன் கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு!


அத்திரி முனிவரும், அவருடைய இல்லத்தரசியும் கற்புக்கரசியுமான அனுசுயாவும் ஞானாரண்யம் எனும் பழம்பெயர்பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். இந்நிலையில், அத்திரி முனிவர் இமயமலைக்குச் சென்றார். அப்போது சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து, அவருடைய ஆசிரமத்திற்கு வந்து உணவு தருமாறு வேண்டினர். அனுசுயாவும் உணவு படைக்கத் தொடங்கினார். அப்போது மூவரும், ”ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது” என்று கூறினர். இதைக் கேட்டு திடுக்கிட்ட அனுசுயாதேவி, தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளித்தார். அவர்கள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு அந்தப் பச்சிளங்குழந்தைகளுக்கு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டித் தூங்கச் செய்தாள். தங்கள் கணவர்கள் பச்சிளங்குழந்தையாக மாற்றப்பட்டதை அறிந்த மூவரின் தேவியரும் அங்கு வந்து அனுசுயாவிடம், தங்கள் கணவர்களை பழைய உருவிற்கு மாற்றித் தர வேண்டினர். தேவியர்கள் வேண்டுகோளுக்கிணங்கிய அனுசுயா முப்பெரும் கடவுளுக்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்திரி முனிவரும் அனுசூயாவோடு சேர்ந்து, மும்மூர்த்திகளின் காட்சியைப் பெற்றார். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டுள்ளது என்கிறது இதன் தல வரலாறு.

அத்திரி முனிவரும், அனுசுயாவும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர். இதைக் குறிக்கும் விதமாக மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளனர். சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார்.

தாணுமாலயன் கோயில் அமைந்துள்ள இடம் சுசீந்திரம் என அழைக்கப்படுகிறது. அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது. சுசீ என்றால் தூய்மை என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று.

மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தைத் தோண்டும்போது அனுமன் சிலை ஒன்று கிடைத்தது. 18 அடி உயரமுடைய இந்தச் சிலை 1929 ஆம் ஆண்டில் இராமபிரானின் கருவறைக்கு எதிரில் இருக்குமிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

சுசீந்திரம், நாகர்கோவிலிருந்து 5 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 14 கிமீ தொலைவிலும் உள்ளது.

சரி! இங்கு நமெக்கென என்ன உள்ளது?

முதலில் சென்றதும் நாம் காண்கின்ற கணபதியாக இருப்பது சிவபெருமான். அவரது நாமமே "நீலகண்ட கணபதி". சிவபெருமானின் உக்கிரத்தை குறைப்பதற்கென்றே பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.

மற்ற கோவில்கள் போல் அல்லாமல், இங்கு நவகிரகங்கள், கணபதி சன்னதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் மேல் விதானத்தில் இருப்பார்கள். நவகிரகங்களை கட்டுப்படுத்துவதற்காக இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைவு.

இங்கு லிங்கத்தில், மும்மூர்த்திகளும் அமர்ந்துள்ளனர். இது ஒரு அபூர்வ அமைப்பு.

22அடி உயர ஆஞ்சநேயருக்கு பூசை செய்த பிரசாதத்தை உட்கொண்டால், எந்த உடல் பிரச்சினையும் விலகிவிடும்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்......................தொடரும்!

3 comments:

  1. ஓம் அகத்தியர் திருவடிகள் சரணம் சரணம் சரணம்
    🙏🙏🙏

    ReplyDelete
  2. திரிம்பகேஸ்வரர் தாணுமாலய சுவாமி மூவரும் ஒன்றாக இருக்கும் திருத்தலங்கள் கொடுமுடியில் போ திருச்செங்கோடு மோரூர் கிராமத்தில் மூன்று பேர் தனித்தனியாக இருந்தாலும் தாணுமாலய சுவாமி மகாராஷ்டிர மாநிலம் ஜோதிர் லிங்கத்தில் ஒன்றான பெற திரியம்பகேஸ்வரர் நம் சுசீந்திரம் தாணுமாலய சாமி ஒன்றாக இருக்கின்றார்கள் அருள்பாலித்து வருகிறார்கள் ஓம் நமசிவாய ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமக🙏🙏🙏

    ReplyDelete