​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 23 July 2011

சித்தன் அருள் - 40


துபாயிலிருந்து இரவு பத்து மணிக்கு ஒரு டெலிபோன் வந்தது. பேசியவர் விஸ்வநாதன். துபாய்க்குச் செல்லும் முன்னர் அகத்தியர் ஜீவநாடியில் ஆசீர்வாதம் பெற்றவர்.  ‘தடையின்றி உந்தன் மிலேச்ச நாடு பயணம் நடக்கும் சென்றுவா’ என்று அருள் வாக்கு பெற்றுச் சென்றவர், சென்ற மறுநாள் இரவே பதறியடித்தபடி டெலிபோனில் பேசினார்.

‘என்ன விஷயம்’ என்று கேட்ட பொழுது ‘என்னுடைய பாஸ்போர்ட் விசா, ஏகப்பட்ட பணம் எல்லாம் காணவில்லை. கையில் ஒரு செப்புகாசும் இல்லை. என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் துடிக்கிறேன். அகத்தியரிடம் கேட்டு தொலைந்தது கிடைக்குமா என்று சொல்லுங்கள்’ என்று அலறினார்.

‘எங்கு தங்கியிருக்கிறீர்கள்’

‘ஒரு ஹோட்டலில். நாளைக்கு ஹோட்டலுக்கு மீதி பணம் கட்டுவதாக சொல்லியிருக்கிறேன்’.

‘எப்படி காணாமல் போயிற்று’.

‘தெரியவில்லை. ஒரு கடைக்குச் சென்று பொருட்களை வாங்கினேன். கேஷியரிடம் பில்லுக்கு பணம் கொடுக்கும் போது என் கையிலிருந்த ஹாண்ட் பேக் காணவில்லை’.  அதில்தான் அத்தனையும் வைத்திருந்தேன்.

‘கடைக்குள் நன்றாக தேடி பார்த்தீர்களா’

‘சல்லடை போட்டு சலித்துப் பார்த்தாயிற்று. ஒரு இடத்திலேயும் என் ஹாண்ட பேக்கை காணவில்லை’ என்று கண்ணீர் விட்டு அழுதார் விஸ்வநாதன்.

‘தடையின்றி வெளிநாட்டு பயணம் வெற்றியாக நடக்கும் என்றாரே அகத்தியர். ஆரம்பமே அத்தனையும் பொய்த்து விட்டதே’ என்று ஒரு குறை சொல்லியபடி அழுதும் தீர்த்தார்.

விஸ்வநாதன் சொன்னதிலோ அல்லது குறைபட்டுக் கொண்டதிலோ, எநதவிதத் தவறும் இல்லை. அகத்தியர் வாக்கு நல்லபடியாக அமைந்திருக்க வேண்டும். அது அமையவில்லை என்பது குறைதான் என்று தோன்றியது.

இதற்கு என்ன காரணம். யார் மீது தப்பு என்பது தெரியவில்லை.

அவசர அவசரமாக குளித்துவிட்டு அகத்தியரை வணங்கி விஸ்வநாதனுக்காக நாடி படிக்க ஆரம்பித்தேன்.

‘இழந்தது மீண்டும் கிடைக்கும். இன்னும் இருபது நாழிகையில். அது வரை அன்னவன் வணங்கும் புட்டபர்த்தி மைந்தனை மனதாரப் பிரார்த்தனை செய்யட்டும். பிறகு இன்னவன் குலதெய்வத்தை நோக்கியும் பிரார்த்தனை செய்யட்டும்’ என்று மிகச் சுருக்கமாக முடித்தார்.

விஸ்வநாதன் புட்டபர்த்தி சாயிபாபாவை தன் ஆன்மிகக் குருவாக வெகுநாட்களாக ஏற்றுக் கொண்டவர். நினைத்தால் சட்டென்று புட்டபர்த்திக்குச் செல்வதும் அங்கு மற்றவர்களுக்கு தன்னாலான தொண்டுகளைச் செய்வதும் வழக்கம்.

எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் அகத்தியரிடம் விஸ்வநாதனுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அடிக்கடி நாடி பார்ப்பார். அகத்தியர் சொன்னபடி அப்படியே முறையோடு பயபக்தியோடு செய்வார். அப்படிப்பட்ட ஆன்மீக உள்ளம் கொண்டவர். இப்பொழுது வெளிநாட்டில் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறாரே என்ற வருத்தம் எனக்கும் இருந்தது.

‘எதற்காக இந்த சோதனை’ என்பதை அகத்தியர் சொல்லக் கேட்க வேண்டும்’ என்று எனக்கு தோன்றியது.

‘விஸ்வநாதன் சார்பாக நான் அகத்தியரிடம் நாடி மூலம் கேட்டேன்’.

வெளிநாட்டிற்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தால் 100 பேருக்கு அன்னதானம் செய்வதாக பர்த்தி சித்தன் படத்தின் முன்பு ஒரு வியாழக்கிழமை விஸ்வநாதன் சத்தியம் செய்தான். ஆனால் ஊருக்குச் செல்லும் அவசரத்தில் அதைச் செய்யவில்லை.

இரண்டாவதாக குலதெய்வக் கோவிலுக்கு புரட்டாசி சனிக்கிழமையன்று கருட உற்சவம் செய்வதாக வேண்டிக் கொண்டிருந்தான். எட்டு வருஷம் ஆகியும் இன்றும் அந்த பிரார்த்தனையை நிறைவேற்றவில்லை.

இந்த இரண்டையும் செய்து இருந்தால் விஸ்வநாதனுக்கு இந்த தொல்லை ஏற்பட்டு இருக்காது.

இனியும் தாமதிக்காமல் பர்த்தி சித்தனையும் குலதெய்வத்தையும் இப்போதே பிரார்த்தனை செய்து வெளிநாட்டிலிருந்து வந்ததும், அந்த பிரார்த்தனையைச் செய்யச் சொல். இன்னும் பதினெட்டு நாழிகையில் இழந்தது கிடைக்கும் என்றார் அகத்தியர்.

நான் விஸ்வநாதனுக்காக கேட்ட போது நாற்பது நிமிஷம் ஆயிற்று. அதனால் தான் இருபது நாழிகையிலிருந்து பதினெட்டு நாழிகையாக இப்போது குறைந்திருந்தது.

உடனடியாக விஸ்வநாதனிடம் இந்தச் செய்தியைத் தெரிவிக்க என் மனது துடித்தது. ஆனால் அவருடைய தொலைபேசி எண் தங்கியிருக்கும் ஹோட்டல் அறை எண் எதுவும் தெரியாததால் அப்படியே விட்டுவிட்டேன். சரியாக இருபது நாழிகை கழிந்தது.

துபாயிலிருந்து விஸ்வநாதன் மறுபடியும் தொலைபேசியில் அழைத்தார்.
அகத்தியருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. நான் என் குலதெய்வக் கோவிலுக்கு சில பிரார்த்தனைகளை நேர்ந்திருந்தேன். அதில் ஒன்று புரட்டாசி மாத சனியன்று கருட உற்சவம் செய்வதாக வேண்டியிருந்தேன். பண வசதி வந்ததும் அதனை நான் அடியோடு மறந்துவிட்டேன். அது இப்போதுதான் அகத்தியரால் ஞாபகத்திற்கு வந்தது. ஊரிலிருந்து தாயகம் வந்ததும் அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றி விடுகிறேன்.

இன்னொன்று,

துபாய்க்கு வரும் முன் புட்டபர்த்திக்கு அன்னதானம் செய்வதாக மனதார வேண்டியிருந்தேன். ஆனால் செய்ய முடியவில்லை. இப்போது அதுவும் என் ஞாபகத்திற்கு வந்து விட்டது. அதையும் ஊருக்கு வந்ததும் செய்து விடுகிறேன் என்றார் விஸ்வநாதன்.

இப்போதுதான் நான் ஷாப்பிங்  செய்த கடையிலிருந்து டெலிபோன் வந்தது. என்னுடைய பாஸ்போர்ட், விசா, பணம் அத்தனையும் கிடைத்துவிட்டதாக சொன்னார்கள். நான் அங்கு புறப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். பொருட்களை பெற்றதும் மீண்டும் உங்களிடம் பேசுகிறேன் என்றார் ஆனந்தமாக.

பரவாயில்லையே இருபது நாழிகைக்குள் இப்படியொரு அதிசயத்தை துபாயில் அகத்தியர் நடத்திக் காட்டியிருக்கிறாரே என்று நானே வியந்து, விஸ்வநாதன் அடுத்து என்ன தகவல் தரப்போகிறார் என்பதற்காக டெலிபோன் பக்கம் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

சரியாக அரைமணி நேரம் கழித்து விஸ்வநாதனிடமிருந்து டெலிபோன் வந்தது.

அந்த ஷாப்பிங் கடைக்கு யாரோ ஒருவர் சாமியார் போல் வந்தாராம். அந்த சாமியாரின் அங்க அடையாளத்தை சொன்னபோது சாட்சாத் அகத்தியர் போல்தான் விஸ்வநாதனுக்கு தெரிந்ததாம். உடனே தன் சட்டை பைக்குள் இருந்த அகத்தியர் படத்தை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

அந்த கடைக்காரர் அகத்தியர் படத்தைப் பார்த்துவிட்டு இவரேதான் என் கடைக்குள் நுழைந்து கடைவாசலில் கிடந்ததாகச் சொல்லி என்னிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டார் என்று ஆச்சரியத்தோடு சொன்னாராம். இரட்டிப்பு மகிழ்ச்சியோடு இதைச் சொன்ன விஸ்வநாதன் ஒரு பைசா கூட பணம் குறையாமல் அத்தனையும் கிடைத்துவிட்டது என்று ஆயிரம் நமஸ்காரங்களை அகத்தியருக்கு துபாயிலிருந்தபடியே கண்ணீர் மல்க ஆனந்தத்தோடு சொன்னார்.

தாய் மண்ணைவிட்டு தங்க பாரதத்தைவிட்டு இதுவரை வெளிநாட்டிற்கும் செல்லாத அகத்தியர் விஸ்வநாதனைக் காப்பாற்ற துபாய் நாட்டிற்கும் சென்று அருள் பாலித்திருக்கிறார் என்பதை நான் அன்றைக்கு முதன்முதலாக உணர்ந்தேன்.

2 comments:

  1. ஓம் லோபாமுத்ரா சமேத அகத்தீசாய நமஹ ...

    ReplyDelete