வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
சமீபத்தில், அடியேன் வீட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில், வட்டியூர்காவு என்கிற இடத்தில், நண்பர் ஒருவரின் வீட்டிற்கு செல்ல வேண்டி வந்தது.
அழைத்து செல்ல வந்த நண்பரிடம், முதலில் "வட்டியூர்காவு அகத்தியர் கோவிலுக்கு" சென்று விட்டு பின்னர் உங்கள் வீட்டுக்கு செல்லலாம் என்றேன்.
இந்த கோவில் திருவனந்தபுரத்திலிருந்து, அகத்தியர்கூடம் (பொதிகை) செல்ல வனபாதுகாப்பு அலுவலகத்துக்கு செல்லும் வழியில் உள்ளது. குருநாதரின் தரிசனம் இங்கு கிடைப்பது மிக கடினம். ஏற்கெனவே ஒரு முறை சென்று, கதவடைத்து இருந்தது. இந்த முறையும் அப்படியே நடந்தது.
அகத்தியர் மீது மிகுந்த பற்று கொண்ட ஒருவர், முதலில் விக்கிரகத்தை செய்து தன் வீட்டு மாடியில் பிரதிஷ்டை செய்து பூசித்து வந்தார். பின்னர், அகத்தியப்பெருமானின் உத்தரவின் பேரில், பக்கத்தில் இருந்த குடும்ப வீட்டை இடித்து, அங்கே அகத்தியருக்கு கோவில் கட்டி பூசித்து வருகிறார்.
அடியேன் சென்ற பொழுது, அவர் கோவிலில் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
"நமஸ்காரம்" என்றதும் சப்தம் கேட்டு எழுந்து வந்தவரிடம், கோவில் சன்னதி மாலை எத்தனை மணிக்கு திறக்கப்படும்? என்றேன்.
"சன்னதி, காலை ஒரு வேளை மட்டும்தான் திறக்கப்படும். அதுவும், காலை 9 மணிக்குள் பூசை முடித்து கதவை சார்த்திவிடவேண்டும் என்பது அவர் உத்தரவு" என்றார்.
கோவில் சிறிய இடத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும், மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது.
பொதுவாக, யார் பேசினாலும் சற்று கவனத்துடன், உன்னிப்பாக கூறுகிற விஷயங்களை உள்வாங்குவது அடியேனின் பழக்கம்.
அவர் பேச்சில், நிறைய விஷயங்களை மறைக்கிறார் என்று தோன்றியது.
"சன்னதி சார்த்தியிருந்தாலும், ஒரு நிமிடம் முன் நின்று பிரார்த்தித்து கொள்கிறேனே" எனக்கேட்டேன்.
"தாராளமாக" என்றார்.
வெகு நாட்களுக்குப் பின் அகத்தியர் சன்னதி முன் அடியேன்!
தலைமேல் கைவைத்து, விரல்களை மடித்து, குருவுக்கான முத்திரை பிடித்து, "குரு ப்ரம்மா ..." மந்திரத்தை கூறி நமஸ்காரத்தை சமர்பித்தேன்.
குருமுத்திரை நமஸ்காரத்தை கண்டவர், உணர்ந்து, சற்று இயல்பாக பேசினார்.
அகத்தியர், மஹாதேவர், பிள்ளையார், அம்பாள் போன்றவர்களுக்கு தனித்தனி சன்னதி. அனைத்தும், அகத்தியரின் உத்தரவின் பேரில் கட்டப்பட்டது.
சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, குருவுக்கு தட்சிணை சன்னதி முன் வைத்து, "உத்தரவு" என்றேன்.
அவரிடம் பின் ஒருமுறை சந்திக்கிறேன், என கூறி விடை பெற்றேன்.
எங்களுக்கு முன் கோவிலை விட்டு இறங்கி சென்றவர், தான் வசிக்கும் வீட்டின் முன் நின்று, "உள்ளே வந்து அமருங்கள்" என அழைத்தார்.
உள்ளே நுழைந்தவுடன், மேலே உள்ள படத்தை காண முடிந்தது.
ஏதோ ஒரு விதத்தில், அகத்தியப்பெருமானின் முகம், மேலும், மேலும் பார்க்க வேண்டும் என ஈர்த்தது.
சற்று நேரம் மௌனமாக அவர் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அவராகவே மௌனத்தை இடை மரித்தார்.
"இது ஒரு வித்யாசமான சூழ்நிலையில் வந்த படம்!" என்றார்.
"வேறு ஒன்றும் இல்லை! என்னவோ பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் எனத் தோன்றியது. குருநாதரின் முகத்தில் ஒரு ஈர்ப்பு உள்ளது" என்றேன்.
"ஆம் இங்கு வரும் ஒரு சிலர்தான் அப்படி கூறுகிறார்கள்! அதுதான் அவரின் கட்டளையும் கூட!" என்றார்.
அடியேன் ஆச்சரியமாக அவரை உற்றுப்பார்த்தேன். என் முகத்தில் தொக்கி நின்ற கேள்வியை உணர்ந்து, அவராகவே நடந்த விஷயத்தை கூறினார்.
ஒருநாள் பூசை முடிந்து, ஹோமம் நிறைவுற்றவுடன், அகத்தியப்பெருமானிடம் ஏதேனும் கேட்க வேண்டும் என்ற நினைவு உள்புகுந்தது.
அவரின் உருவப்படம் ஒன்றை கேட்போம்! நாம் மட்டுமின்றி இங்கு வரும் அனைவரும் அவரை தரிசிக்கட்டும். அதுவும் அவர் அருளுடன் நடந்தால், நன்றாக இருக்குமே! என தோன்றியது.
அவரும் அனுமதியளித்தார்! ஆனால் ஒரு சில கட்டுப்பாடுகளுடன்.
"விரைவில் ஒரு ஓவியர் இங்கு வருவார். அவரும் என் சிஷ்யர்தான். அவர்தான் எம் உருவப்படத்தை படைப்பார். அவருக்கு எப்படி படைக்க வேண்டும் என்கிற உத்தரவுகளை யாம் கொடுப்போம். எம் படத்தை வரையும் காலம், அவர் வேறு எந்த படைப்புக்கும் செல்லக்கூடாது. எப்பொழுதும், இறை சிந்தனையிலேயே இருக்க வேண்டும். எம் படத்தை படைக்க எந்தவிதமான ரசாயன கலவைகளையும் உபயோகிக்க கூடாது. இயற்கை இலை சாற்றை மட்டும் உபயோகித்து உருவாக்க வேண்டும். மேலும் அவர் ஒரு மண்டலம் விரதமிருக்க வேண்டும். இங்கு வந்து குளித்து, தலை துவட்டிய ஈரத்துண்டை, உடுத்திக்கொண்டு படைக்கத் தொடங்க வேண்டும். உடுத்திய அந்த ஈரத் துண்டானது, எப்பொழுது ஈரத்தன்மை போய், உலர்ந்து போகிறதோ, அப்பொழுது, அன்றைய தினம் படைப்பதை நிறுத்தி விட வேண்டும்! பின்னர், மறுநாளே தொடங்க வேண்டும்! அப்படியாயின், எம் உருவத்தை படைக்க யாம் அருள் புரிவோம்!" என்றார்.
மறுவாரமே, ஓவியர் வந்தார், அகத்தியப்பெருமானின் அனைத்து கட்டளைகளையும் சிரம் மேற்கொண்டு, 365 நாட்கள் எடுத்து உருவாக்கப்பட்டதே, மேலே உள்ள படம்!
சரி! இங்கு ஏதோ ஒரு உண்மையை அவர் மறைக்கிறார். அது என்னவென்று கூறுங்களேன்!
இத்தனை கட்டுப்பாடுகளுடன் வரையப் பெற்ற அந்த படத்தை பார்க்க கிடைத்த மூன்று நிமிடங்களே போதும். அடுத்த முறை குருநாதரை ஒரு வேளை தரிசிக்கலாம், என் நினைத்து, நன்றி கூறி விடை பெற்றேன்.
ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.................தொடரும்!