​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 21 May 2017

சித்தன் அருள் - 674 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

உலக வாழ்விலே பல்வேறுவிதமான வேதனைகள், சோதனைகள் அல்லது சங்கடங்கள், துன்பங்கள் ( எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் ), அவமானத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இவையனைத்துமே சராசரி மனிதப் பார்வையில் தாங்கிக்கொள்ள பழக வேண்டும். இதனைத் தாண்டப் பழக வேண்டும். இவைகளைத் தாண்டி, தாண்டிப் பழகுவதும் ஒரு வகையான இறை உணர்தல் பயிற்சியாகும். அஃதாவது மனம் எனப்படுவது என்ன ? என்று ஆய்ந்து பார்த்தால் தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டம். எண்ணங்களின் தொகுப்பு. கண்ணை மூடி தனிமையில் அமர்ந்து சிந்தித்துப் பார்த்தால் கடந்த கால அனுபவங்கள் நிழலாடும் அல்லது எதிர்காலம் குறித்த ஆசையோ, அச்சமோ நிழலாடும் அல்லது நடைமுறையில் உள்ள சிக்கல்கள் எதிர்படும். இதுதான் தானா ? இதுதான் நம் வாழ்வா? இப்படி கவலைப்படுவதற்குதான் வாழ்க்கையா ? என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்தால் உண்மையில் மனிதன் கானல் நீர்போல் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அப்பொழுது புரிய வரும். சற்றே உலகியல் வெற்றி வந்துவிட்டால் பெரும்பாலான மனிதர்கள் இறை விலகி வெறும் இரை தேடி செல்வதிலேயே குறியாக இருப்பார்கள். மாயை அப்படி ஆழ்த்திவிடும். எனவே மாயையை புரிந்து கொள்வதும், மாயையிலே மூழ்கிவிடாமல் இருப்பதும் கடினம்தான். எல்லா மனிதர்களுக்கும் அது சாத்தியமில்லைதான். அதைப் போல் தெய்வீகத்தை சரியான முறையில் உணர்ந்துகொள்வதும் கடினம்தான். இருந்தாலும் இதற்கெல்லாம் சேர்த்து வைத்துதான் எளிமையான முறையிலே நாங்கள் தவத்தையோ, யோக மார்க்கத்தையோ கூறாமல் தர்மத்தையும் அஃதொப்ப பக்தி மார்க்கத்தையும் போதிக்கின்றோம்.காரணம் என்ன ?

ஒரு மனிதனை இறைவனை நோக்கி திசை திருப்ப விடாமல் தடுப்பது எது? இறைவன் எப்பொழுதும், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பது கருத்து அளவில் எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் முழுமையாக அந்தப் பரம்பொருளை ஒரு சராசரி நிலையில் யாராலும் உணர முடிவதில்லை. இறைவன் என்கிற அந்த மாபெரும் ஆற்றலை வரைகலையில் உள்ளது போலவோ, சிற்பத்தில் உள்ளது போலவோ ஆலயத்தில் காண்பது போலவோ தனியாக ஒரு நண்பனை பார்ப்பது போல, ஒரு உறவை பார்ப்பது போல பார்த்தால்தான் இறை என்று மனித மனதிற்கு போதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அப்படி பார்ப்பது, உணர்வது மட்டும் இறையல்ல. அதனையும் தாண்டி அந்த இறைவன் எந்தெந்த வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார் ? சம்பவங்கள் மூலம், நல்ல நிகழ்வுகள் மூலம், தன்னை சுற்றி வாழ்கின்ற நல்ல மனிதர்கள் மூலம் அந்த இறைத்தன்மை என்பது வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்பதை அறிவுபூர்வமாக புரிந்துகொள்ள முயல வேண்டும். அஃதாவது ஆறு, நதி என்றால் என்ன ? என்று கேட்டால் ஒரு மனிதன் எதைக் கூறுவான் ?. நீர் நிரம்பிய ஒரு இடமா? அல்லது நீர் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இடமா ? நீர் ஓடிக்கொண்டேயிருப்பது ஆறு என்றால் நீர் வற்றிய பிறகு அதனை என்னவென்று அழைப்பது? ஒரு நீண்ட பள்ளமான பகுதியிலே மணல் இருக்கிறது. அங்கங்கே திட்டு,திட்டாக நீர் தேங்கியிருக்கிறது. இதனையும் நதி என்று கூறலாமா? அல்லது கரைபுரண்டோடும் வெள்ளத்திலே சிக்கிக்கொண்ட மனிதன் அதனையும் நதியென்று கூறுவானா? எல்லாம் ஒரு வகையில் நதியென்றாலும் நதி வெளிப்படுகின்ற விதம் மாறுபடுகிறது. ஒரு இடத்தில் அகலமாக, ஆழமாக, நீண்டும் இன்னொரு இடத்தில் குறுகியும் செல்கிறது.

அதைப்போல அந்த இறைவன் என்கிற மாபெரும் ஆற்றல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கிறது. ஒவ்வொரு பூக்களிலும், விதைகளிலும், விருக்ஷங்களிலும், காற்றிலும், சுற்றியுள்ள அனைத்து இயற்கைத் தன்மையிலும் இருக்கிறது. ஆனால் இதனை சரியாகப் புரிந்து கொள்வது என்பதுதான் மனிதனுக்கு கைவராத கலையாக இருக்கிறது. ஏனென்றால் மனிதனுக்கு அறியாமையும், பாசமும், ஆசையும், தன்னலமும் மிகப்பெரிய எதிரியாக இருக்கிறது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஒட்டுமொத்த உலகம் ஒரு குடும்பம். இறைவன் குடும்பத்தலைவன். எல்லோரும் பிள்ளைகள் என்று பார்த்துவிட்டு அமைதியாக தன் கடமையை செய்துவிட்டு ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையோடு தன் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், தன்னை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் பார்க்கப் பழகினால் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைத்தன்மையை நன்றாகவே புரிந்து கொள்ளலாம். புரிந்து கொள்ளத் தடையாக இருப்பது பாவங்கள். பாவங்களைப் போக்க தர்மங்கள், பிராயச்சித்தங்கள், ஸ்தல வழிபாடுகள் – இவைகளெல்லாம் இருக்கின்றன. இந்த பக்தி மார்க்கத்திலும், தர்ம மார்க்கத்திலும் சென்றாலே யாரும் போதிக்காமலேயே ஆன்மீகம் குறித்த பல சந்தேகங்கள் இறைவனருளால் உள்ளே உள்ளுணர்வாக தோன்றி நீங்கி விடும். இறை ஞானம் மெல்ல,மெல்ல துளிர்க்கும்.

No comments:

Post a Comment