அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
மனதிற்கும், ஆன்மாவிற்கும் உள்ள வேறுபாடு என்ன? மனம்தான் ஆத்ம ஸ்வரூபமா? இதில் புத்தி என்பது எங்கே வருகிறது?
இதை வேறு விதமாகக் கூறலாம். ஒரு மின் சக்தியை எடுத்துக் கொண்டால், மின் சக்தி என்பது இதுதான், இங்குதான் இருக்கிறது என்று கூற இயலுமா? காற்றின் ஆற்றல் இங்குதான் இருக்கிறது என்று கூற இயலுமா?. இயலாது. ஆத்மா என்பது நீக்கமற நிறைந்துள்ள ஒரு சக்தி என்று வைத்துக்கொள். அது அறியாமையிலே, பாவ மாயையிலே சிக்கி இந்த உடலுக்குள் சிறைபட்டிருக்கிறது. சிறைபட்டிருக்கிறது என்றால் கண்ணிலே மட்டும் இருக்கிறதா? கையிலே மட்டும் இருக்கிறதா? அல்லது வயிற்றிலே மட்டும் இருக்கிறதா ? என்றால், இல்லை. அப்படி எடுத்துக்கொள்ளக் கூடாது. உடல் எனப்படும் ஒரு கூடு. அந்தக் கூடு இயங்குவதற்கு வேண்டிய ஆற்றலை ஆத்மாவிடமிருந்துதான் இந்தக் கூடு பெறுகிறது. இந்த ஆத்மாவானது தன்னை உணராமல் தன் உடலை ‘ தான் ‘ என்று எண்ணிக்கொண்டிருக்கிறது. அதாவது ஒரு மனிதன் தன் உடலின் மானத்தை மறைக்க ஆடை அணிகிறான். அந்த ஆடை கிழிந்து விட்டால் ‘ நான் கிழிந்து விட்டேன் ‘ என்று அந்த மனிதன் கூறமாட்டான். ‘ என் ஆடை கிழிந்து விட்டது. என் ஆடை அழுக்காகி விட்டது. என் ஆடை பழுதடைந்து விட்டது ‘ என்று வேறு ஆடை மாற்றிக்கொள்வான். மனிதன் தன் உடலுக்கு ஆடை போடுகிறான். ஆன்மாவிற்கு போடப்பட்ட ஆடைதான் இந்த உடல். விதவிதமான ஆடைகள். சிங்கம், புலி, ஆடு, மாடு என்று விதவிதமான ஆடைகளை ஆத்மாவிற்கு போட்டு இறைவன் அனுப்புகிறான். இந்த உடல் வேறு, இந்த உடலுக்குள் இருக்கின்ற ஆத்மா வேறு என்பதை புரிந்து கொள்வதற்கு ஒரு மனிதன் பல நூறு, பல கோடி பிறவிகளை எடுக்க வேண்டும். நிறைய புண்ணியங்களை, பிரார்த்தனகளை செய்ய வேண்டும். அப்படி செய்யும்பொழுதுதான் நீ கூறிய ஆத்மா என்பது என்ன ? என்பது உன் உள்ளத்திற்கு தெரிய வரும். மனம் என்றால் என்ன ? மனம் என்பது ஒரு தனியான ஒரு பொருள் அல்ல. ஹ்ருதயம் என்பது இயங்குகின்ற ஒரு தன்மை. அதை குறிப்பாக ஹ்ருதயம் இருக்கிறதா ? என்று மனிதர்கள் கேட்கிறார்கள். ஆனால் இங்கே உள்ளே இயங்குகின்ற ஹ்ருதயத்திற்கும், இதயம் இருக்கிறத? என்று மனிதன் கேட்பதற்கும் வேறுபாடு உண்டு. இரண்டும் ஒரு பொருளல்ல. உனக்கு நல்ல மனம் இருக்கிறதா? என்பதைத்தான் மனிதன் இதயம் இருக்கிறதா? என்று கேட்கிறான். தொடர்ந்த எண்ண ஓட்டங்களின் தொகுப்புதான் மனம். அந்த மனம் எங்கே விழிப்பு நிலை பெறுகிறதோ, அப்பொழுது நீ ஆத்மாவை உணரலாம்.
ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
ReplyDelete