​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 13 May 2017

சித்தன் அருள் - 668 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

பொதுவாக மனிதர்கள் அறிந்திட வேண்டும். நாங்கள் இப்படி கூறுவதால் மனித விஞ்ஞானம் இதனை ஏற்றுக்கொள்ளாது என்றாலும் கூட ஓரளவு புற விஞ்ஞான அறிவும், அக மெய்ஞான அறிவும் ஓரளவு புரிந்த மனிதன் புரிந்து கொள்வான். ஏனைய மனிதர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வது ஏற்புடையது. அஃதாவது எத்தனையோ விஷய ஞானங்களை ஆய்வு செய்து இறைவன் அருளால் புறத்தே தன்னை வளர்த்துக்கொண்ட மனித குலம், இந்த பிரபஞ்சம் அனைத்துமே சில விதிகளுக்கு உட்பட்டு இயங்குகிறது என்பதை அடிக்கடி மறந்து விடுகிறது. பிரபஞ்சம் மட்டுமல்லாது இந்த அண்ட சராசரங்களும் பல்வேறு விதிகளுக்கு உட்பட்டே இயங்குகிறது. இந்த விதிகளை மீறி மனிதன் எதையாவது செய்ய வேண்டுமென்றால் அதற்கும், அந்த விதிமுறைகளுக்கும் ஒரு தொடர்பும், ஒரு எதிர்சக்தியும் இருக்க வேண்டும். அந்த வகையிலே ஒரு வாகனம் சீராக ஓடவேண்டும் என்றால் அந்த வாகனம் எல்லா வகையிலும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். வாயு உருளைகள் வடிவம் மிகவும் சிறப்பான முறையிலும் நல்ல முறையிலும் இருக்க வேண்டும். வேகமாக செல்வதற்கென்று வாகனம் வடிவமைக்கப்பட்டால் அதற்குரிய வாயு உருளை அகலமில்லாமல் இருக்க வேண்டும். உதாரணமாக அதிக வேகம் என்றால் வாகனத்தின் எடை குறைவாக இருக்க வேண்டும். அதே சமயம் அந்த வாகனம் எந்தளவிற்கு விரைவாக செல்கிறதோ அந்தளவிற்கு செல்லுகின்ற பாதையிலே வாயு உருளையால் உராய்வுத் தன்மை ஏற்படும். இந்த உராய்வு எதிர்விசையை ஏற்படுத்தி வேகத்தை மட்டுப்படுத்தும். அந்த உராய்கின்ற தன்மையை குறைப்பதற்கென்று அந்த வாயு உருளைகள் வடிவமைக்கப்பட்டிருந்தால் அது எதிர்விளைவை குறைவாகத் தரும். அப்படி குறைக்கப்பட வேண்டுமென்றால் அதன் ஒட்டுமொத்த பாகத்திலே, ஓடுகின்ற தளத்திலே மிக, மிக, மிக குறைவான பகுதியே அந்த வாயு உருளை படவேண்டும். அந்த அளவிற்கு அது குறைவாக படும்பொழுதுதான் குறைவான எதிர்விளைவுகள் ஏற்படும். வேகம் மட்டுப்படாது. இதையெல்லாம் தாண்டி ஓடுகின்ற ஓடுதளம் என்பது சமச்சீராக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது பொதுவிதி. அதே சமயம் வேகம் எந்தளவிற்கு முக்கியமோ அந்த வாகனத்தை சட்டென்று நிறுத்த வேண்டுமென்ற நிலை வந்தால் அந்த சமச்சீரான தளம் அதற்கு பாதகத்தை தந்துவிடும். அதற்காக சற்றே சீரற்ற ஓடுதளத்தை உருவாக்கினால் அது ஓரளவு பாதுகாப்பைத் தந்தாலும் வேகத்தை மட்டுப்படுத்தும். இப்படி எல்லாவகையிலும் பார்த்து அதிவிரைவாக ஓடுவதற்கென்று ஒருவகையான ஓடுதளமும், அதற்கேற்ற வாகனமும் அதில் செல்ல வேண்டும். மற்றபடி சராசரியாக மாந்தர்கள் பயணம் செல்கின்ற அந்த பயண ஓடுதளமானது அதிக விரைவை ஏற்க வல்லாத நிலையில்தான் இருக்க வேண்டும். ஒரு வாகனம் அதன் உச்சகட்ட வேகத்தில் செல்கிறதென்றால் என்ன பொருள்? வாகனம் மட்டும் செல்லவில்லை. வாகனத்தில் செல்கின்ற மனிதர்களும் அதே வேகத்தில்தான் செல்கிறார்கள் என்று பொருள். சட்டென்று வாகனத்தை எஃதாவது ஒரு காரணத்திற்காக நிறுத்தவேண்டிய தருணம் வந்துவிட்டால் வாகனத்தின் உள்ளே இருக்கின்ற தடையமைப்பு உள்ளேயிருக்கின்ற மனிதர்களை தடை செய்வதில்லை என்பதால்தான் சிறு விபத்துகளும், பெருவிபத்துகளும் ஏற்படுகின்றன. எப்படிப் பார்த்தாலும் தெளிவற்ற மனிதர்கள், குழப்பமான மனிதர்கள் மூடத்தனமான மனிதர்கள் இருக்கின்ற இஃதொப்ப இந்த பரந்த பகுதியிலே அதிக வேகம் என்பது ஏற்புடையதல்ல. எதிர்நோக்கின்ற வேகத்தை விடவே 60 கல் வேகம் என்பதே அதிகம்தான். இப்படி குறைவாக செல்வதால் என்ன லாபம் வந்துவிடும்? என்றெல்லாம் பாராமல் பாதுகாப்பை மட்டும் கருதி வாகனத்தை இயக்குவதே இஃதொப்ப எம்வழி வரும் சேய்களுக்கு ஏற்புடையதாகும். ஏனென்றால் வாகனத்தின் பாகங்கள் பல்வேறு விதமான முறையிலே ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மனிதர்கள் எண்ணிக்கொண்டாலும் கூட அதிக அனலும், அதிக உராய்வும் கண்பார்வைக்குத் தெரியாத வெடிப்புகளையெல்லாம் ஏற்படுத்தி திடீர் அழுத்தத்தால் அவைகள் விலகவும், சுயகட்டுப்பாட்டை இழக்கவும் ஏற்புடையதான ஒரு சூழலில்தான் இருக்கிறது. இறைவன் கருணையும் ஒருவனின் ஜாதகப்பலனும் நன்றாக இருக்கும்வரையில் நலமே நடக்கும். எப்பொழுது ஒருவனுக்கும் பாவ வினை குறுக்கே வரும்? என்பதை மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாது. எனவே இறைவனை வணங்கி அமைதியான முறையில், சாந்தமான முறையில் குறைந்த வேகத்தில் வாகனத்தை இயக்குதலே பொதுவாக அனைவருக்கும் ஏற்புடையதாகும். ஆனால் மனித மனம் இதை எந்தளவு ஏற்கும், எந்தளவு ஏற்காது என்பது எமக்குத் தெரியும்.

1 comment:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete