அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
ஜனகன் மன்னனாகி அரசாண்டாலும் கூட, அவனுடைய சிந்தனையானது இறைவனின் திருவடிகளில் இருந்தது. மன்னன் என்பது ஒரு வேடம், ஒரு நாடகம் என்பதை அவன் அறிந்திருந்தான். அதற்குள் அவன் லயித்துப் போய்விடவில்லை. அதைப்போல ஒரு மனிதன் இந்த உலகிலே எதை செய்தாலும், எந்த சூழலில் இருந்தாலும் "இவையனைத்தும் ஒரு நாடகம், ஒரு சொப்பனம்" என்று எடுத்துக்கொண்டு "மெய் என்பது இறைவனின் திருவடியே" என்பதை புரிந்துகொண்டு, எதைப் பேசினாலும், எதைச் செய்தாலும் ஆழ்மனதிலே ஒரு தீவிர வைராக்யம், இறைவனின் திருவடியை நோக்கி இருந்து கொண்டேயிருந்தால், அர்ஜுனனின் குறி போல அது தவறாது இருந்தால், எந்த சூழலையும் தாண்டி சென்று வெற்றி காண இயலும். ஆனால் தடைகளும், குழப்பங்களும், மன சஞ்சலங்களும் இல்லாத நிலையில் ஒருவன் தவம் செய்யலாம் என்றாலும், அது யாருக்கும், இந்த உலகில் மட்டுமல்ல, எந்த உலகிலும் சாத்தியமில்லை. ஒன்று இறை சிந்தனைக்கு மாற்றாக வந்து ஒருவனின் கவனத்தை திசை திருப்புகிறது என்றால் என்ன பொருள்? இறைவனின் சிந்தனையை விட அதிலே அவன் மனம் ஒரு ஈடுபாட்டை, ஒரு சுகத்தை உணர விரும்புகிறது என்றுதான் பொருள். எனவே அதனையும் தாண்டி இறைவனின் திருவடிகளில் ஒரு சுவையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் நாங்கள் எப்பொழுதுமே கூறவருவது.
ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
ReplyDeleteThank you so much 🙏
ReplyDelete