​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 16 May 2017

சித்தன் அருள் - 670 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு, இயம்புவது யாதென்றால், இஃதொப்ப இறை வழியில் தன்னை, முழுமையாக தன்னை ஒப்புவித்து செல்வதற்கு அதிக, அதிக மனோதிடமும், வைராக்யமும் ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டும். இஃதொப்ப இத்தருணம், இங்கு எம்முன் அமர்ந்துள்ள சேய்கள் அஃதொப்ப வைராக்யம் பெற்று  இறை வழியில் சற்றும் கலங்காமல் தடுமாற்றம் அடையாமல் செல்ல இறைவன் அருளைக்கொண்டு நல்லாசிகளை இயம்புகின்றோம். இறை வழி, இறை வழி என்றால் எங்ஙனம் பொருளை புரிந்து கொள்வது? ஆலயம் செல்கின்றோம், மந்திரங்களை உச்சரிக்கின்றோம், இறைவன் என்று ஒரு மகாசக்தி இருப்பதாக நம்புகிறோம். மனித சக்தியால் தீர்க்க முடியாத துன்பங்களை, பிரச்சினைகளை அந்த மகாசக்தி தீர்த்து வைக்கும் என்று நம்புகிறோம். இதைத்தாண்டி இறைவழி, இறைவழி என்றால் என்ன? என்பது பெரும்பாலும் மனிதர்கள் எண்ணுகின்ற எண்ணங்களாகும். இறைவனின் கருணையாலே, அஃது, புரிகின்ற ஆத்மாவிற்கு, புரிகின்ற காலத்தில், எந்தப் பிறவியில், எத்தருணம் புரிய வேண்டுமோ அஃது புரியும் என்றாலும், இறைவன் எம்போன்ற மகான்களுக்கு இட்ட அருட்கட்டளையால் அவ்வப்பொழுது வாய்ப்புகளை விதிவழியாகவோ, விதியைத்தாண்டி இறைவனின் கருணையாலோ பெறுகின்ற சில மாந்தர்களுக்கு யாமும் இறைவன் அருளாலே உபதேசம் செய்வதும் உண்டு. இஃதொப்ப சராசரியான மன நிலையைவிட்டு மெல்ல, மெல்ல மேலே உயர்வதே இறைவழியாகும். இஃதொப்ப மேலும் ஆய்ந்து நோக்கின் வாழ்கின்ற வாழ்வினிலே ஏற்றமும், இறக்கமும், உயர்வும், தாழ்வும், இன்பமும், துன்பமும், போற்றுதலும், தூற்றுதலும் என்று இரு எதிர் நிலைகள் எந்த சூழலில் ஒரு மனிதன் எதிர்கொண்டாலும், அதற்காக மனசோர்வு அடையாமல் மனதை பக்குவப்படுத்தி வாழ்வதே இறைவழியில் செல்வதற்கு ஏற்ற மன நிலையாகும். வேறு வழியில் கூறப்போனால் எஃது நடந்தாலும், என்னதான் நடந்தாலும், வாழ்க்கையில் எப்படி நடந்தாலும், விதி, எப்படி அழைத்து சென்றாலும் மனம் தடுமாற்றம் அடையாமல் சினமோ, அதீத பற்றோ கொண்டிடாமல் அமைதியாய் வாழ்வியல் கடமைகளை நேர்மையாய் ஆற்றுவதோடு விருப்பு, வெறுப்புகளுக்கு இடமளிக்காமல் ‘இவன் நல்லவன், ஏனென்றால் எனக்கு உதவி செய்து கொண்டேயிருக்கிறான். இவன் தீயவன். ஏனென்றால் எனக்கு எப்பொழுதும் தீங்கு செய்துகொண்டே இருக்கிறான் என்று பேதம் பார்க்காமல் நல்லவனை மதிக்க எப்படி ஒரு மனிதன் எண்ணுகிறானோ அதைப்போல தனக்கு தீங்கை செய்கின்ற மனிதனையும் மதித்து அவனும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்ற உயர்ந்த மனதை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது எப்படி சாத்தியம்? என்றால் வெளிப்படையான நன்மைகளை செய்கின்றவன் பொதுவாக நல்லவன், நண்பன்  என்று கூறலாம். ஆனால் மறைமுகமாக உதவி செய்கின்ற ஒருவனை நாம் மறக்காமல் இருக்கவேண்டுமல்லவா? அப்படித்தான் எந்த மனிதன் தீங்கை செய்கிறானோ அவன் தீங்கு செய்ய வேண்டும். அதன் மூலம் துன்பத்தை அனுபவிக்க வேண்டும். அதை அனுபவித்து பாவம் தீர வேண்டும் என்ற விதி இருப்பதால், நம் பாவத்தைக் கழிப்பதற்கென்று ஒரு ஆத்மா நம் வாழ்க்கையில் வந்திருக்கிறதே என்று எண்ணி அவனையும் மதித்து போற்றி வாழ்த்த கற்றுக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் சராசரியான பார்வையில் ஏற்புடைய கருத்தாக தெரியாது என்றாலும் கூட இப்படி எல்லா நிலையிலும் உச்சநிலை கருத்தோடு வாழ முயற்சி எடுத்திட வேண்டும். எல்லா உயர்ந்த எண்ணங்களும் ஒரு தினத்தில் கைவரப்பெறாது என்றாலும் கூட இந்த உயர்ந்த எண்ணங்களையெல்லாம் அசைபோட்டு, அசைபோட்டு, அசைபோட்டு அன்றாடம் தன்னைத்தான் ஆய்வு செய்து பிறர் குற்றங்களை பாராமல் பிறரிடம் இருக்கக்கூடிய உயர்ந்த குணங்களைப் பார்த்து தன்னிடம் இருக்கக்கூடிய குற்றங்களை பொதுவில் எடுத்துரைத்து தன் குற்றத்தைக் குறைத்து பிறரிடம் இருந்து நல்லவற்றை கற்க முயல்வதே இறைவழியாகும். இப்படி எல்லாவகையிலும் மிக, மிக கீழான நிலையில் சராசரி சிந்தனையாக இல்லாமல் மிக உயர்வாக ஒரு ஞானி அந்த இடத்தில் இருந்தால் என்ன முடிவு எடுப்பான்? ஒரு சித்தன் இப்படியொரு சம்பவத்தை எதிர்கொண்டால் அவன் அதனை எப்படி எடுத்துக்கொள்வான்? என்று சிந்தித்துப் பார்த்து மிக, மிக உயர்வாக, பெருந்தன்மையாக எல்லா நிலைகளிலும், எல்லா சூழலிலும், எல்லா மனிதர்களிடமும் நடந்துகொள்ள, அவ்வாறு நடப்பதால் ஏற்படும் கசப்பான அனுபவங்களையும் ஜீரணித்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இஃது கடினம்தான். பசுக்களையும், அஃது போன்ற சாதுவான விலங்குகளையும் எதிர்கொள்வது எளிது. ஆனால் நஞ்சுள்ள பாம்பை அன்பாக அரவணைக்க முடியுமா?  என்றால் முடியாதுதான். ஆனால் சரியான முறையிலே ஒரு கடுகளவு கூட வெறுப்பின்றி நஞ்சுள்ள பாம்பை போன்ற மனிதனையும் பார்க்க, பழக எண்ணிவிட்டால் அந்த நஞ்சு கூட மாணிக்கமாக மாறி நன்மை செய்யும் என்பதை மனிதர்கள் மறந்துவிடக்கூடாது. இந்த உயர்ந்த கருத்துக்களை முடிந்தவரை பின்பற்ற இச்சேய்களுக்கு இறைவனருளால் யாங்கள் இத்தருணம் நல்லாசி கூறுவதோடு இஃதொப்ப ஸ்தல யாத்திரை அல்லது திருத்தலப் பயணம் என்பதை யாங்கள் ஒருபொழுதும் மறுக்கவில்லை. எல்லா மனிதர்களும் அவ்வாறு செல்வதும், காலத்தை அதற்காக வியம் செய்வதும், தனத்தை வியம் செய்வதும் பாவங்களை குறைப்பதற்கு ஏற்ற வழியாகும்.  ஆனால் என்ன முறையில் செல்ல வேண்டும்? சித்தர்கள் கூறுகின்ற முறையில் செல்கிறார்களா? என்பதில்தான் அதன் நல்ல பலன்கள் அடங்கியிருக்கிறது. ஸ்தல பயணம் என்ற நிலையிலே மனம் குழப்பமில்லாமல், தடுமாற்றமில்லாமல் இறை சிந்தனையோடு சத்சங்கமாக செல்வது ஏற்புடையது. கூடுமானவரை அங்கு சந்திக்கின்ற வறுமையால் வாடும் ஏழைகளுக்கு இயன்ற உதவிகளை செய்வதும் நல்லதொரு நிலையை அடைவதற்கு ஏற்றதாக இருக்கும். இஃதொப்ப நல்விதமாய் முற்காலம் போல் இல்லாமல் இக்காலத்திலே இறைவனருளால் மாந்தர்களுக்கு பல்வேறுவிதமான பயண வசதிகள் கிடைத்துள்ளன. விதவிதமான வாகனங்கள் கிடைத்துள்ளன. இவற்றைப் பயன்படுத்தி செல்வது தவறு என்று கூறவில்லை. வாகனமே இல்லாத காலத்தில் வேறு வழியில்லாமல் நடந்துபோவதை சாதனையாக யாரும் எண்ணியதில்லை. எண்ணுவதுமில்லை. ஆனால் இத்தருணம் விதவிதமான வாகன வசதிகள் இருந்தும் திருப்பதி போன்ற ஸ்தலங்களுக்கும் இன்னும் பல்வேறு ஸ்தலங்களுக்கும் பாதயாத்திரையாக பலர் செல்கிறார்கள். அவ்வாறு செல்வது கூட ஒரு வகையில் எளிதில் பாவ கர்மாவை குறைப்பதற்குண்டான வழியாகும். அது எப்படி? இப்படியெல்லாம் உடலை வருத்திக்கொண்டு இறைவனை வணங்க வேண்டுமா? என்றால் இறைவன் ஒருபொழுதும் அதனை எதிர்நோக்கவில்லை. ஆயினும் கூட கர்மவினைகளால் உடலை விதவிதமான நோய்கள் வாட்டலாம். சிறுசிறு விபத்துகள் ஏற்படலாம். அதனால் உடல் வேதனைப்பட வேண்டும் என்ற விதியிருக்கும் பட்சத்தில் முன்னதாக இறைவனுக்காக அந்த உடலை வருத்திக்கொண்டால், வேதனைப்படுத்தி விட்டால் கர்மவினையால் வருகின்ற உடல் சார்ந்த துன்பங்கள் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த நோக்கிலே உடலை வருத்தி ஸ்தல யாத்திரை செய்வதை யாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம் எல்லா மனிதர்களுக்கும் அஃது ஏற்றதல்ல என்பதும் யாங்கள் அறிந்ததுதான்.

1 comment:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete