​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 22 May 2017

சித்தன் அருள் - 675 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப நலமான வாழ்வும், நலத்தோடு நலமான பொருளாதார நிலைமையும், நலமும், நலத்தோடு நலமான எண்ணங்களும், நலமான உறவுகளும் நலமான சகல சூழலும் நாள் நாளும் நலமாய் மாந்தர்களை தேடி வரவேண்டும் என்றுதான் நாள் நாளும்  மாந்தர்கள் எண்ணுகிறார்கள். இறைவனை நோக்கி வேண்டுகிறார்கள். ஆயினும் கூட ஒவ்வொரு மனிதனையும் "நீ நலமா ?, அது குறித்து  மெய்யாக, மெய்யாக, மெய்யாகக் கூறு"  என்று கூறினால் ‘நலமில்லை. எனக்கு இஃது, இஃது பிரச்சினை. வாழ்க்கையில் இஃது, இஃது உளைச்சல்' என்றெல்லாம் கூறுகிறான். இறைவனின் கருணையாலே இஃதொப்ப முன்னர் உரைத்தது போல் ‘ நலமா? ‘ என்று யாரை வினவினாலும் ‘ நலமில்லை ‘ என்று கூறுவதின் உட்பொருளை ஆய்ந்து பார்த்தால் பல்வேறு தருணங்களில் ஒவ்வொரு மனிதனின் விதி அவ்வாறு இருப்பது புரியும். ‘விதியைக் காரணம் காட்டியே வாழ்ந்து கொண்டிருந்தால் மனித அறிவுக்கு ஆங்கு என்ன வேலை ? ‘ என்று அடுத்த ஒரு வினா வரும். யாங்கள் விதி என்று ஏன் கூறுகிறோம் என்றால், விதியைப் புறக்கணித்து விட்டு ஒரு மனித வாழ்க்கையில் எதனையும் கூற இயலாது என்பது மெய்தான் என்றாலும் கூட அந்த விதி ஒரு மனிதனுக்கு அவ்வாறு ஏற்படுவது அந்த மனிதனின் முந்தைய, முந்தைய, முந்தைய பிறவிகளின் செயல்பாடுகள். அதனால் ஏற்படக்கூடிய பாவ, புண்ணிய விளைவுகள். இவற்றால் அவன் அடுத்தடுத்து பிறவிகள் எடுக்க வேண்டிய நிலை. அந்தப் பிறவி எங்கு?, எப்பொழுது?, எவ்வாறாக?, எந்த சூழலில்?, எந்த வகையாக? என்றெல்லாம் முந்தைய வினைகள் தீர்மானிக்கப்பட்டு அதன் மூலம் அடுத்தடுத்த பிறவிகள் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தரப்படுகின்றன. இங்கே மனிதன் கூர்ந்து கவனிக்க வேண்டியது யாதென்றால், இயம்பிடுவோம், ஒரு மனிதனுக்கு திடகாத்திரமான தேகம், தேவையான பொருளாதாரம், நல்ல கல்வி, உயர் பதவி, இன்னும் இஃது போன்று இந்த உலக வாழ்விற்கு தேவையான அனைத்தும் தரப்பட்டாலும், ஏதோ ஒன்று அவன் மனதிற்கு நிம்மதியைத் தராமல் வேதனையைத் தந்து கொண்டிருக்கிறது. பொதுவாக பலருக்கும் இஃதே நிலைமை. மிகக் கடுமையான வறுமையில் வாடும் மனிதனுக்கு அதிகபட்சம் அடிப்படைப் பொருளாதாரம் இருந்தால் போதும் என்று எண்ணுகிறான். அடிப்படை பொருளாதாரம் கிடைத்து விட்டாலோ அல்லது ஏற்கனவே கிடைத்தவனோ இன்னும் அடுத்த நிலை பொருளாதாரம் வேண்டும் என்று எண்ணுகிறான். இன்னும் அடுத்த நிலை வந்த பிறகு, நிறை செல்வம் இஃது அல்ல, இன்னும் செல்வம் வேண்டும் என்று எண்ணுகிறான். இவையெல்லாம் பிறவியிலே கொடுக்கப்பட்ட ஒரு மனிதன் இந்த செல்வம் தன்னை விட்டு சென்றுவிடக் கூடாது. நாள், நாளும் பெருக வேண்டும் என்று போராடுகிறான். இஃதொப்ப வேறு வகையில் நல்ல பதவி, நல்ல நிலைமை இருக்கின்ற மனிதனுக்கு, நல்ல கல்வி இருக்கின்ற மனிதனுக்கு அஃது நிறைவைத் தராமல் வேறு, வேறு (அவனுடைய) எண்ணங்களும், ஆசைகளும் நிறைவேறாமல் போகிறதே?' என்று அஃதொப்ப ஒரு உளைச்சலாக, வேதனையாக அவன் மனதிற்கு தோன்றுகிறது. இதிலிருந்து மனிதன் புரிந்து கொள்ள வேண்டியது, ஒரு மனிதனுக்கு எவையெல்லாம் கிடைத்திருக்கிறதோ, எவையெல்லாம் இயல்பாக அமைந்திருக்கிறதோ, எவையெல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவற்றில் நிறைவும், நிம்மதியும் காண இயலவில்லையென்றால் அங்கேயும் விதி விளையாடுகிறது என்பதே பொருள். எஃது கிடைக்காமல் கையைவிட்டு நழுவுவது போல் தோன்றுகிறதோ, அதன் மீது ஆசையும், ஈர்ப்பும் மனிதனுக்கு அதிகமாகிவிடுகிறது. ஒட்டுமொத்தமாக மனித ஆத்மாக்களுக்கு எம் போன்ற ஞானிகள் கூற வருவது,  இந்த உலக வாழ்விலே நீ வெற்றி பெறு அல்லது உலகியல் ரீதியாக நீ தோல்வியை அடைந்து கொள். அஃதல்ல. மறந்தும் பாவங்களை எந்த வகையிலும் சேர்த்துக் கொள்ளாமல் விழிப்புணர்வோடு வாழ்வதே வாழ்வாகும். அதற்கு வழிகாட்டுவதே ஜீவ அருள் நாடியில் யாங்கள் கூறும் வாக்காகும். ஆனாலும் கூட, இதனை மட்டும் யாங்கள் இயம்பிக் கொண்டே இருந்தால் கேட்கின்ற மனிதர்களுக்கு பக்குவம் இல்லாததால், சலிப்பும், அயர்வும் தோன்றிவிடுகிறது. எனவே அவ்வப்பொழுது வாழ்வியல் என்று எதையாவது நாங்கள் கூற வேண்டியிருக்கிறது. அதனையும் இறைவனின் அருள் அனுமதியை வைத்தே, விதியின் அமைப்பை வைத்தே கூற வேண்டியிருக்கிறது. இஃதொப்ப நிலையிலே இதழ் ஓதுகின்ற இன்னவன் எம்மிடம் முன்னரே அருள் அனுமதியைப் பெறாமலும், இவனாகவே ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டதும் இஃதொப்ப விதியின் போக்கில் நடந்திட்டாலும் கூட இஃதொப்ப அட்டமி கலையும், உகந்ததில்லாத ஒரு நிலைமையும், பல்வேறு தடைகளை இன்னும் இந்த வாக்கினை கேட்கின்ற இன்னவனுக்கு வருவதை விதி வழியாக சுட்டிக்காட்டுவதையே குறிக்கிறது. இஃதொப்ப நிலையிலே மனிதர்களுக்கு புரிவதற்காக சுபதினம் என்று கூறுகிறோம். எம்மைப் பொறுத்தவரை எல்லா தினமும் சுபதினம்தான். பொது நலமும், சத்தியமும், இறை சிந்தனையும் கொண்டு வாழ்கின்ற மனிதனுக்கு எல்லா நாழிகையும் சுப நாழிகைதான். அந்த வகையிலே திட்டமிட்டு ஒரு சுப தினத்தைத் தேர்ந்தெடுத்து வாசித்திருந்தால் ஒரு வேளை உகந்த வாக்கை இன்னவனுக்கு கூறியிருக்கலாம் என்று எண்ணலாம். அப்படியும் கூறுவதற்கில்லை. ஏனெனில் அவனுடைய விதி அமைப்பு எந்த நாழிகையில் இதனை கேட்க வேண்டும்? எந்த தினத்தில் கேட்க வேண்டும்? எவ்வாறு, எந்த அளவு கேட்க வேண்டும்? என்றெல்லாம் இருக்கிறதோ, அவ்வாறுதான் இஃதொப்ப  விதி ஒரு அமைப்பைக் கூட்டுவிக்கிறது.

1 comment: