அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால், இஃதொப்ப பாவவினைகள் முற்றாக ஒழிந்தால் ஒழிய ஒரு மனிதனால் கூடுமானவரை பக்குவமும், நல்ல தெய்வீகம் சார்ந்த புரிதலும் அடைவது என்பது கடினம். என்றாலும் இறைவனை வணங்கி இயம்புவது யாதென்றால், அங்ஙனம் புரிதல் வரவில்லை என்பதற்காகவே மனிதர்கள் செய்கின்ற அத்தனையையும் ஏற்றுக்கொள்வது என்பது இயலாதது. புரிதல் வரவில்லை என்பதல்ல பிரச்சினை. புரிந்துகொள்ள மறுப்பதுதான் பிரச்சினையாக இருக்கிறது. இறைவன் அருளாலே ஒரு மனிதன் வினைகளுக்கு கட்டுப்பட்டு, கண்ணுக்குத் தெரியாத விதியின்பிடியில் சிக்கி அந்த விதியின் பின்னால் சென்று கடைவரையில் பாவ, புண்ணியங்களுக்கு ஆட்பட்டு அதன் பின்னாலேயே செல்வதற்குண்டான நிலைதான் பெரும்பாலும் இருக்கிறது. இந்தப் பாவங்கள் அறியாமையை தோற்றுவிக்கிறது. மாயையிலே மனிதன் சிக்கித்தவிக்க வழி செய்கிறது. பாசத்திலும், பந்தத்திலும் சிக்கித்தவிக்க வழிகாட்டுகிறது. பொய்யை மெய் போலும், மெய்யை பொய்போலும் காட்டுகிறது. இதிலிருந்து ஆத்மாவை கரையேற்றத்தான் ஞானிகளும், மகான்களும் இறைவனின் கருணையைக்கொண்டு காலகாலம் முயற்சி செய்து வருகிறார்கள். ஆயினும் கூட லகரத்தில் ஒரு ஆத்மா மேலேறி வருவதே கடினமாகத்தான் இருக்கிறது. காரணம் என்ன? பரிபூரண சரணாகதி என்பது இல்லாத நிலை. எதையும் மனிதன் தன் அறிவோடு பொருத்திப்பார்ப்பது. தன் அறிவிற்கு விளங்கவில்லையென்பதால் அனைத்தும் ஏற்புடையது அல்ல என்று ஒதுக்கி வைப்பது. எனவேதான் இறைவன் அருளாலே ஜீவ அருள் ஒலையிலே சில ஆத்மாக்களுக்கு நல்ல வழி காட்டலாம் என்று இறைவன் கருணைகொண்டு இஃதொப்ப, எம்போன்ற மகான்கள் வாயிலாக சில ஆத்மாக்களுக்கு வழிகாட்டுகின்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறார். அந்த நிலையை தொடர்ந்து நாங்கள் கடைபிடிக்கும் வண்ணம் அருளாணையிட்டாலும் கூட, ஆன்மீகம் அறியாத மனிதனை விட ஆன்மீகவாதி என்று சொல்லிக்கொண்டு இங்கு வரக்கூடிய பலரும் பக்குவமில்லாமல் இருப்பதும், புரிதல் இல்லாமல் இருப்பதும், மிக,மிக,மிக முட்டாள்தனமாக நடந்துகொண்டு, தன்னுடைய முட்டாள்தனத்தின் உச்சக்கட்டத்தால் துன்பத்திலே மாட்டிக்கொண்டு "சித்தர்கள் எஃதும் செய்யவில்லை, கைவிட்டுவிட்டார்கள்" என்று கூறுவது ஒரு விதத்திலே மனித நிலையிலே பார்த்தால் மனிதனுக்கு நியாயமாகத் தெரிந்தாலும் மகான் பார்வையில் பார்க்கும்பொழுது நகைப்புக்குரியதாகவே தோன்றுகிறது. முட்டாளை திருத்துவது கடினம். மூடனுக்கு அறிவுரை பகர்வது கடினம் என்று எமக்கும் தெரியும், இறைவனுக்கும் தெரியும். ஒரு மகானின் இனிமையான உபதேசத்தைவிட, பாவ வினையின் வழிகாட்டுதலுக்கு அதிக மதிப்பு இருக்கிறது மனிதனிடம். அதனால்தான் நல்லவை எந்த மனித மனதிலும், எக்காலத்திலும் ஏறுவதில்லை.