வார்த்தைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது இன்னமும் எனக்குத் தெரியாத கலை. இல்லையென்றால் "ஓசி கார்" கிடைத்த சந்தோஷத்தில் வாயை விட்டு வம்பிலே மாட்டிக் கொண்டிருக்க மாட்டேன்.
உண்மையான விஷயம் அவருக்குத் தெரியாது.
"அகஸ்தியர் எப்பொழுது மனமிரங்கி மறுபடியும் அந்த ஓலைச் சுவடியில் வருகிறாரோ அப்பொழுதுதான் என்னால் உங்கள் கேள்விகளுக்குப் படித்துப் பதில் சொல்ல முடியும்" என்ற உண்மையைச் சொல்லியிருக்கலாம். இதனால் இதை அவர் ஏற்றுக் கொள்வாரோ என்னவோ என்ற பயம்.
இன்னொன்று அதுவரையில் அவர் காத்திருக்க முடியாது. ஏனெனில் அவருக்கு வந்த நோய் அப்படிப்பட்டது.
எப்படி அவரைச் சமாளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது எனக்கு அந்த இதமான மலைக் காற்றும் வளைந்து வளைந்து இறங்கிக் கொண்டிருந்த காரின் சுகமும் கசப்பாக இருந்தது.
இப்படியொரு பீடிகையைப் போட்டு என்னைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்துவார் என்று சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை.
"என்ன ஏதாவது பிரச்சினையா நான் கேட்ட கேள்விக்குப் பதிலே இல்லையே" என்று என்னை நோக்கிச் சிரித்தார். இந்தச் சிரிப்பு என்னை என்னவோ செய்தது.
"வாய்விட்டு உளறி விட்டோம். இப்போது சரியாக மாட்டிக் கொண்டோம். எதற்கும் ஒருமுறை அகஸ்தியரிடம் கேட்டுப் பார்ப்போம். இவருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ இல்லையோ. இப்போது எனக்கு அதிர்ஷ்டம் வேண்டும். அப்படி முனிவர் இறங்கிவிட்டால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அகஸ்தியர்க்கு ஆயிரம் நன்றி சொல்லி விடுவோம். சவாரி சென்னைக்கு என்று சொல்லி ஓடிவிடலாம்" என்று மனம் எண்ணியது.
இதற்குள் அவர் வேறொன்றையும் சொல்ல ஆரம்பித்தார்.
"கீழ் திருப்பதியில் உங்களை இறக்கிவிட்டு விடலாம் என்றுதான் எண்ணினேன். நீங்கள் சென்னைக்குப் போவதாக என்னிடம் சொன்னீர்கள். நான் கோயம்பத்தூர் செல்லவேண்டும். பரவாயில்லை. இதே காரில் சென்னைக்கு நானும் வந்து உங்களை சென்னையில் இறக்கிவிட்டுப் பின்பு நான் கோயம்பத்தூர் செல்கிறேன். அது வரைக்கும் நாம் அகஸ்தியரிடம் பேசிக் கொண்டே போகலாமே" என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.
"அடடா. இது எவ்வளவு பாக்கியம்" என்று என்னால் அப்போது சந்தோஷப்பட முடியவில்லை. இதென்ன அடுத்த கட்டச் சோதனை!" என்று தான் நொந்து போனேன். எனக்கு. ஏண்டா திருப்பதிக்கு வந்தோம் என்று தோன்றியது.
என்னால் ஒலைக்கட்டைப் பிரித்து அவர் கேட்கிற கேள்விகளுக்கு எந்த பதிலையும் சொல்ல முடியாது. பொய் சொல்லவும் கூடாது. அவர் கிட்டேயே எல்லாவற்றையும் கேட்டு வாங்கிக் கொண்டு அதற்கேற்ற மாதிரி சாமர்த்தியமாகவோ அல்லது ஒரு யூகமாகவோ கற்பனை கதையோ ஏதாவது சொல்லி சமாளிக்கவும் முடியாது.
"பகவானே! இதோடு இந்த மாதிரி சோதனைகளைச் செய்யாதே! என்னால் சமாளிக்க முடியாது. ஒன்று பகவான் பேசட்டும். இல்லையென்றால் மேல் திருப்பதியில் ஓலைச்சுவடி காணாமல் போனது போல் என்னைவிட்டு இந்த ஜீவநாடி போகட்டும்" என்று வெறுப்புடன் நினைத்தேன்.
இதற்குள் கீழ்த்திருப்பதி வந்துவிட்டது.
"சார், உங்கள் கோயம்புத்தூர் விலாசம் கொடுங்கள். இரண்டு நாள் பூசையில் வைத்துவிட்டு அவர் உத்திரவு கொடுத்தவுடன் நானே நேரில் வீட்டிற்கு வந்து படிக்கிறேன்" என்றேன்.
அவர் முகம் சிறுத்துவிட்டது.
"ஏன்?"
"சில காரணங்கள் உண்டு. அதை வைத்துச் சொல்கிறேன்".
"அப்படியானால் இன்னொன்று செய்யலாமே! பேசாமல் என்னுடன் கொயம்புத்தூருக்கே வந்துவிடுங்கள். நான் ஒரு மில் அதிபர், தனி பங்களா ஒன்று இருக்கிறது. மேட்டுப்பாளையத்தில் எனக்கு வீடு உண்டு. நீங்கள் இரண்டு நாட்கள் அங்கேயே தங்குங்கள். எல்லாவித ஏற்பாடுகளையும் செய்து தருகிறேன்."
இவர் இப்படியொரு கிடுக்கிப் போடுவார் என்று சுத்தமாக நான் எதிர்பார்க்கவே இல்லை. மவனே சரியா மாட்டிக் கொண்டாய். இனிமேல் நாடி கீடின்னு ஏதாவது வாய் திறந்தே அவ்வளவுதான். பின்னிப் போடுவாங்க ஒன்னை, இன்னியோட நாடி படிக்கிற சமாச்சாரத்தை அப்படியே விட்டுவிடு. இந்த மனுஷங்கிட்ட உண்மையை சொல்லி துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிடு - என்று யாரோ என்னை எள்ளி நகையாடி எச்சரிப்பது போல் இருந்தது.
போதும் போதும் இந்த மனுஷன்கிட்டே வாயை கொடுத்து விட்டோமே! இவருக்கு வேறு யாருமே கிடைக்க வில்லையா? என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
"அகஸ்தியரே! இந்த ஒரு தடவை மட்டும் நாடியில் வந்து விடுங்கள். இனிமேல் சத்தியமா நான் யாருகிட்டேயும் நாடியைப் பற்றி மூச்சுவிட மாட்டேன் ஏன் நாடியைத் தொட்டு கூட பார்க்கவே மாட்டேன்" என்று என் மனம் துடித்துச் சத்தியம் இட்டது.
பீமா விலாஸ் ஓட்டலின் ஓரத்தில் வண்டியை நிறுத்தச் சொன்னார். பின்பு கேட்டார்.
"உங்களுக்கு வேறு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? ஆபிசுக்கு லீவு போடணுமா? இல்லை உங்கள் வீடிற்கு தகவல் சொல்ல வேண்டுமா? என்கிட்டே தைரியமாகச் சொல்லுங்கள். நான் ஏற்பாடு செய்கிறேன்" என்றார் அவர்.
"ஆபீசுக்கு தகவல் சொல்லணும். வீட்டிற்கும் சொல்லணும்"
"டெலிபோன் நம்பரை சொல்லுங்கள்"
"ஆபீஸ் டெலிபோன் நம்பரை சொன்னேன். குறித்துக் கொண்டார்"
"வீட்டில் டெலிபோன் இல்லை. விலாசம் தான் இருக்கு" என்றேன்.
"அதனால் என்ன! அதைக் கொடுங்கள். என் நண்பருக்குச் சொல்லி வீட்டிற்குத் தகவல் கொடுத்து விடுகிறேன். உங்கள் ஆபீஸ் செயர்மான் எனக்கு நெருங்கிய நண்பர். அவருக்கே டெலிபோன் போட்டுச் சொல்லி விடுகிறேன். பயப்படவேண்டாம். அப்போ நாம ரெண்டு பெரும் நேரா கோயம்பத்தூருக்கு போகலாம் இல்லையா?" நான் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. கோயம்பத்தூர் செல்ல முடிவெடுத்து "எது நடந்தாலும் நடக்கட்டும்" என்று அப்படியே விட்டுவிட்டேன்.
இரண்டு நாட்களாக மூல மந்திரத்தை விடாமல் சொல்லி விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் ஜீவநாடியை எடுத்து பிரித்துப் பார்த்தேன்.
"பூபெயதவில்லை என்றொரு காரணத்தால் வெந்து நெக்குருகிப் போன அம்மகள் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறி தன உயிரை மாய்த்துக் கொள்ளும் பொருட்டு அருகிலுல்ள்ள பாக்கு மரத் தோப்பைத் தாண்டி சிறிய வாய்க்காலைத் தாண்டி வெளியேறியதும், அருகிலுள்ள சிறு குன்றில் ஏறி அங்கு விளைந்த ஓர் விஷச் செடியைப் பிடுங்கி, மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு ஒவ்வொரு இலையாகப் பறித்து கடித்து உண்டு மயங்கிக் கிடக்கிறாள். உயிருக்கொன்றும் ஆபத்தில்லை. அவளை மருத்துவரிடம் கொண்டு சென்று காண்பித்தால் ஆச்சரியமான செய்தியை அவரே சொல்லவார். உடனடியாக ஏற்பாடு செய்க" என்று அகஸ்தியர் முடித்துக் கொண்டார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று நான் மகிழ்ந்தேன்.
அவசர அவசரமாகப் பூசை அறையை விட்டு வெளியே வந்தேன். பக்கத்திலிருந்த அந்த மில் அதிபரைச் சந்தித்து நாடியில் வந்த செய்தியைச் சொல்ல ஓடினேன்.
ஆனால் --
முதல் நாள் இரவே அவரும் அவருடைய மனைவியும் திருப்பூரில் நடக்க இருக்கும் ஒரு திருமணத்திற்குச் சென்று விட்டதாகவும் மாலையில் தான் திரும்புவதாகவும் செய்தி கிடைத்தது.
நாடியில் வந்த அந்தச் செய்தியை அந்த மில் அதிபரிடம் மட்டும் தான் சொல்ல வேண்டும். மற்ற யாரிடமும் சொல்லக் கூடாது.
என்ன செய்யலாம் என்று ஒரு நிமிஷம் யோசித்தேன்.
"ஐயாவுடைய பொண்ணு வீட்டுல இருக்காங்களா?"
"இருக்காங்களே"
"நல்ல பார்த்துவிட்டுச் சொல்லுங்க"
"அவங்க இந்த வீட்டை விட்டு எங்கும் போகமாட்டாங்க. வீட்டுலே தான் இருப்பாங்க"
"இப்போ அவங்க இந்த வீட்டுல இருக்காங்களா? தயவு செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்க"
"ஏங்க! ஏதேனும் முக்கியமானத் தகவல் இருந்தா சொல்லுங்க. அவங்க காலையிலே ஒன்பது மணிக்குத்தான் எழுந்திருப்பாங்க. தகவலைச் சொல்லிடறோம்"
"அவங்க முதல்ல வீட்டுல இருக்காங்களான்னு பார்த்துவிட்டுச் சொல்லுங்க. நான் பிறகு தகவலைச் சொல்றேன்" என்று துரிதப் படுத்தினேன்.
வேண்டா வெறுப்பாக என்னை முறைத்துப் பார்த்துவிட்டு உள்ளே போன சமையற்காரி சட்டென்று போன வேகத்தில் திரும்பி வந்தாள்.
"என்னம்மா" என்றேன்.
"சின்ன அம்மாவைக் காணவில்லை. மேசையில் ஒரு லெட்டர் இருந்திச்சு. அதுலே என்ன எழுதியிருக்காங்கன்னு தெரியலையே" என்று பதறி அடித்தபடி ஓடிவந்த அந்த அம்மாவிடம் இருந்த லெட்டரை வாங்கிப் படித்தேன்.
"என்னைத் தேட வேண்டாம். நான் தற்கொலை செய்யப் போகிறேன்" என்று நறுகென்று ஆங்கிலத்தில் கடிதம் எழுதி கிறுக்கலாக கையெழுத்துப் போட்டிருந்தாள்"
எனக்கு பகீர் என்றது.
அடுத்த நிமிடம் அவர்களைச் சமாதானப் படுத்திவிட்டு திருப்பூருக்கும் நாசூக்காகத் தகவல் கொடுத்து மில் அதிபரைக் கையோடு கூட்டிடுவர ஏற்பாடு செய்தேன்.
பின்னர் நம்பிக்கையுள்ள நான்கு வேலைக்காரரிடம் நாடியில் வந்த விஷயத்தைப் பாதி மட்டுமே சொன்னேன்.
அவர்கள் நான்கு பெரும் நாலா பக்கமும் சிதறி ஓடினார்கள்.
பாக்கு மரத் தோப்பை தாண்டி அருகில் ஓடும் வாய்க்காலைத் தாண்டி அந்தக் காலை நேரத்தில் பதறி ஓடிப் போனதில் வாய்க்காலுக்கு வெளியே கூப்பிடு தூரத்தில் சிறு மலைக் குன்று தெரிந்திருக்கிறது.
அந்தக் குன்றின் மீதேறி நோட்டம் விட்ட பொழுது அவர்கள் கண்ணில் அவர்களுடைய சின்ன எஜமானி குற்றுயிரும் குலை உயிருமாக மயங்கிக் கிடப்பது தெரிந்தது. அப்படியே அந்தப் பெண்ணைத் தூக்கிப் போட்டுக் கொண்டு மூச்சிரைக்க வீட்டிற்குக் கொண்டு வந்தனர்.
அடுத்த ஐந்தாவது நிமிடம்...........
அவர்களது குடும்ப டாக்டர் அவசர அவசரமாக ஓடி வந்தார். அந்தப் பெண்ணை மிக நன்றாகப் பரிசோதனை செய்தவர், அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தார்.
"பயப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்று கூறிவிட்டுச் சென்றதால் எல்லோரும் (நான் உட்பட) சற்றுத் தைரியமாக இருந்தோம்.
காலை பதினொன்றரை மணிகெல்லாம் திருப்பூர் கல்யாண வீட்டிலிருந்து அந்த மில் அதிபரும் அவரது மனைவியும் வந்து சேர்ந்தார்கள். ஆயிரம் "குல" தெய்வங்களுக்கு மனதால் வேண்டிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர்.
"பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. அருமையான தகவல்தான் கிடைக்கும்" என்று அவர்களோடு காரில் சென்று கொண்டிருந்தவாறு நாடியில் வந்ததை அப்படியே எழுதிக் காட்டினேன்.
கொஞ்சம் நம்பிக்கை அவர்களுக்கு பிறந்தது.
ஆஸ்பத்திரி வாசலில் நுழையும் பொழுதே அவரது குடும்ப டாக்டர் ஓடோடி வந்து எங்களை வரவேற்றார். அவர் முகத்தில் மந்தாரப் புன்னகை இருந்தது.
"அப்பாடி" என்று பெருமூச்சு விட்டோம். அந்தப் பெண் பிழைக்கவில்லை என்றால் என்பாடு அதோ கதிதான்.
அவர்களுடைய வேலைக்காரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம். இந்த ஆள் வந்த வேளை பொண்ணு உயிர் போயிடுத்து என்று கடுமையாகக் குற்றம் சாட்டலாம். நான் தான் எதோ செய்துவிட்டதாகக் கூட தவறாகப் பேசலாம். இதனால் தனிமனிதனாக இருக்கும் என்னை ஆத்திரத்தில் வெட்டிப் போட்டாலும் ஆச்சரியமில்லை.
அகஸ்தியரிடம் வேண்டிக் கொண்டு நின்று கொண்டிருப்பதை தவிர வேறு வழியே தோன்றவில்லை.
இதற்குள் குடும்ப டாக்டரோடு உள்ளே சென்ற மில் அதிபர் அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் ஓடோடி வந்தார்.
காலில் புற்ற்நோய் இருந்தாலும் அதனையும் பொருட்படுத்தாது, வேகமாக வந்த அவர் என் கையைக் குலுக்கினார். அவரது கண்ணில் "சந்தோஷம்" நீராக வழிந்தது. "பெண் பிழைத்துவிட்டாள்" என்ற சந்தோஷம் தான் இதற்க்குக் காரணம் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு ஆச்சரியமான செய்தியும் அவர் சொன்னார். "சார் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல்ல. அகஸ்தியர் சொன்னபடி ஒரு அதிசயம் நிகழும் என்று சொன்னாரே அந்த அதிசயம் நடந்திருக்கிறது. எதனால் அவள் தகொலைக்கு முயன்று ஒரு விஷச்செடியின் இலைகளைத் தின்றாளோ அந்த விஷச்செடி அவளுக்கு இத்தனை வருஷமாக ஏற்படாமல் இருந்த பருவத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. ஆமாம் சார், ஆமாம்! என் பெண் பூபெய்திவிட்டாள்" என்று சொன்ன போது
என்னாலேயே அதை நம்ப முடியவில்லை.
சித்தன் அருள் ................. தொடரும்!