[வணக்கம்! என்ன இன்று வியாழக்கிழமை இல்லையே! ஏன் ஒரு சித்தன் அருள் தொகுப்பு என்று நினைக்கலாம். இன்று இந்த சித்தன் அருள் தொகுப்பை நமக்கெல்லாம் வாரி வழங்கி, அகத்தியர் அருளையும் தந்த அந்தப் பெரியவரின் மறைவு நாள் (திதி). அவர் இந்த மனித குலத்துக்கு செய்த தொண்டை நினைவு கூறும் விதமாகவும், அந்த ஆத்மா என்றும் அகத்தியர் சித்தருடன் உறைந்து நிற்கும் என்ற நினைப்புடன், ஒரு தொகுப்பை வழங்குகிறேன். இனி சித்தன் அருளை தொடருவோம்..........]
திருப்பதி போகிறேன் என்றதும் அந்த பாராளுமன்ற உறுப்பினர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் சட்டென்று தன முகவரியுடன் கூடிய கடிதத்தைக் கொடுத்தார். நான் எதற்காக திருப்பதி செல்லப் போகிறேன் என்றதும் "அது எனக்குத் தெரியாது, இதைக் கொண்டு பேஷ்காரிடம் கொடு. மற்றது உன் பாடு, அவர் பாடு " என்று சட்டென்று முடித்துக்கொண்டார்.
அப்பொழுது இந்த மாதிரி வீ ஐ பீ கடிதத்திற்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. திருப்பதிக்குச் சென்று கோபுரவாயில் நிலையைத் தாண்டியதும் இடதுபக்கம் ஒரு சின்ன கணக்குப் பிள்ளை சாய்வு மேஜை இருக்கும். அதற்குப் பக்கத்தில் திருப்பதி ஆலயத்தின் பேஷ்கார் அமர்ந்திருப்பார்.
கோயிலின் தலைமை நிர்வாகிக்கு அடுத்தபடி பலம் வாய்ந்த அதிகாரி அவர். வேறு எங்கேயாவது சென்று இருந்தால் அவர் எப்பொழுது வருகிறாரோ அதுவரை கோயிலின் வெளியில் காத்துக் கொண்டிருக்க வேண்டும்.
சில சமயம் பேஷ்காரைப் பார்ப்பதைவிட தர்ம தரிசனம் வரிசையில் சென்றால் கூட பெருமாளைத் தரிசனம் செய்துவிட்டு வரலாம் போலத் தோன்றும்.
அன்றைக்கு நான் சென்ற போது வழக்கம் போல் "பேஷ்கார்" அந்த இடத்தில் இல்லை. பெரிய இடத்திலிருந்து கடிதம் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறோம். அதை கண்டதும் பேஷ்கார் மிகவும் மரியாதை கொடுப்பார். அதைச் சாக்காக வைத்து அகஸ்தியர் ஓலைச் சுவடியைச் சட்டென்று பெருமாள் பாதத்தில் ஒரு நிமிடம் வைத்துவிட்டு எடுத்துக் கொண்டு வந்துவிடலாம் என்ற நப்பாசை மனதைத் துரத்திக் கொண்டிருந்தது.
கோயிலுக்கு வெளியே அகஸ்தியர் ஓலைச் சுவடியோடு காத்துக் கொண்டிருக்கும் பொழுது செய்தித்தாள் ஒன்றை வாங்கிப் பார்த்தேன்.
அதில் தலைப்பு செய்தியாக "கோயிலில் கொலை செய்து கொள்ளை அடித்த கும்பல் கைது" என்று போட்டு விட்டு உதிரிச் செய்தியாக "இவர்கள் கொலை செய்த கையேடு திருப்பதி கோயிலில் கல்யாண உற்சவமும் பண்ணினார்களாம்" என்று போட்டிருந்தார்கள். அதன் கீழே கால் பக்கத்திற்கு நான்கு பேர்களுடைய படமும் போட்டிருந்தது.
அந்தப் படத்தில் காணப்பட்ட நபர்களை நினைவுபடுத்திப் பார்த்தேன். அவர்கள் முகம் முன்பு என்னோடு விமானத்தில் பயணம் செய்தவர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.
திருப்பதி பெருமாள் ஒரு போதும் இப்படிப்பட்டவர்களைக் காத்து அருள் புரிய மாட்டார் என்பதை மட்டும் உள்மனதிற்குள் உறுதி செய்து கொண்டேன்.
அதே செய்திதாளின் கடைசி பக்கத்தில் "நொண்டிப் பையனுக்கு கிடைத்த சுகவாழ்வு" என்று அன்றைக்கு சென்னை விமான நிலையத்தில் கண்ட சிறுவனின் முகத்தை மட்டும் போட்டு அவனைப் பற்றி சிறு குறிப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த இரண்டு செய்திகளும் எனக்கு யானை பலத்தைக் கொடுத்தது. அந்தச் சந்தோஷத்தை வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. காரணம் அன்றைக்கு யாரும் என்னோடு வரவில்லை.
கையிலிருந்த ஓலைக்கட்டை என்னவென்று நினைத்தானோ, யாரோ ஒருவன் (!), சட்டென்று என்னிடமிருந்து பறித்துக் கொண்டு ஓடினான். நான் பதறிப்போனேன்.
அவனோ மொட்டையடித்துக் கொண்டிருந்ததால் அவ்வளவு எளிதாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனைப் பின் தொடர்ந்து ஓடியதுதான் மிச்சம்.
அந்த மொட்டையையும் காணவில்லை. எங்கேயாவது அந்த ஓலைக்கட்டைத் தூக்கி எறிந்திருப்பானோ என்று தேடிப்பார்த்தேன். எங்கும் கிடைக்கவில்லை. மனம் உடைந்து சுக்கு நூறாகியது.
எப்படியோ என் கைக்கு வந்தது. திருப்பதியில் கைவிட்டுப் போய் விடும் என்றிருக்கிறது. விதி யாரை விட்டது> நானும் ஒரு மனிதன் தானே. என்ன தப்பு செய்தேனோ? யார் கண்டார்? ஒரு வேளை என் தந்தையின் பிரார்த்தனை பலித்துவிட்டது போலும், என்று எத்தனையோ சஞ்சலங்கள்.
"திருவேங்கடமுடையான் பாதத்தில் வைத்துவிட்டு கொண்டு வா" என்று சொன்னதால் தான் அதை எடுத்துக் கொண்டு வந்தேன். இல்லை என்றால் நான் ஏன் திருப்பதிக்கு வரப்போகிறேன்?
அப்படியென்றால் தவறு யார் பெயரில்? என்ற கவலையும் வந்தது. கோயிலை மூன்று முறை சுற்றிச் சுற்றி வந்தேன்.அங்குள்ள கடைக்காரர்களிடம் வெட்கம், மானம் எல்லாவற்றையும் துறந்து கேட்டுப் பார்த்தேன்.
போலீசில் புகார் செய்ய மனம் தோன்றவில்லை. இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன. ஒன்று எனக்கு தெலுங்கு தெரியாது. தமிழில் சொன்னால் அவர்கள் எப்படிப் புரிந்து கொள்வார்களோ என்ற சந்தேகம்.
இன்னொன்று அகஸ்திய ஜீவனாடியைக் காணவில்லை என்றால் அகஸ்தியரையே காணவில்லை என்றாகிவிடும். இதைவிடக் கேவலம் வேறு எனக்கு ஏதும் இல்லை. போலீசில் புகார் கொடுக்கவில்லை.
துக்கம் தொண்டையை அடைக்க கையிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர் கொடுத்த சிபாரிசுக் கடிதத்தை வைத்து என்ன செய்வது? என்று வெறுப்பு ஏற்ப்பட்டது.
மனம் ஒரு நிலையில் இல்லாததால் ஓரிடத்தில் உட்காராமல் இப்படியும் அப்படியும் கோயில் முன்வாசக் கோபுரம் அருகே நடந்து கொண்டிருந்தேன். லேசாக எட்டிப் பார்த்த போது;
திருமலைக் கோயிலின் பேஷ்கார் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். அவரைச் சுற்றி ஏதாவது கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். எல்லாம் என்னைப் போல் சிபாரிசுக் கடிதம் கொண்டு வந்தவர்களாகத் தான் இருப்பார்கள்.
அவர் எழுந்து போய் விட்டால் மீண்டும் அந்த இடத்திற்குத் திரும்பிவர அரைமணி அல்லது ஒரு மணிநேரமாகும். இப்போது அவரிடம் போவதா இல்லை பேசாமல் ஊருக்குத் திரும்பி விடுவதா என்ற சிந்தனையால் செய்வதறியாது துடித்தேன்.
கடைசியாக அகஸ்தியர் குடி கொண்டிருக்கும் தென் பொதிகை மலை இருக்கும் திக்கை நோக்கி மானசீகமாக நமஸ்காரம் பண்ணினேன்.
"தாங்கள் சொன்னபடி இங்கு வந்தேன். ஜீவ நாடி பறிக்கப்பட்டுவிட்டது. இது என்ன தவறால் நடந்தது என்பது எனக்குத் தெரியாது. நான் ஆறுமாத காலமாகப் பிரார்த்தனை பண்ணவில்லை என்பது மட்டும் உண்மை. எனக்கு எதிர்ப்பு இப்போது அதிகம். நண்பர்கள், உறவினர்கள் கழன்றுவிட்டனர். தந்தைக்கும் நான் நாடி படிப்பது பிடிக்கவில்லை.
தாங்கள் காட்டிய வழியில் இதுவரை சென்றேன். மகான் ஸ்ரீ ராகவேந்திரர் தரிசனத்தையும், ரண மண்டல அனுமன் தரிசனத்தையும் நான் வெளியே சொன்னதால் ஏற்பட்ட தவறா? மலைக் கோவிலில் மூன்று நாட்கள் தங்க வைத்து, சித்தர்களது மாமறைச் செவி வழியாகக் கேட்க வைத்ததைத் தெய்வ ரகசியமாக எண்ணிக் காப்பாற்றாமல் போன தவறா? இதைத் தவிர அப்போதைக்கப்போது நண்பர்கள், உறவினர்கள், வெளி மனிதர்களிடம் அடக்கமின்றி நடந்து கொண்டதற்குப் பரிசா? எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் உண்மை. எனக்கு நாடி படித்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை. இருக்கும் பணியை செய்ததால் யாரிடமும் கை நீட்டி பிழைக்க வேண்டாம். இத்தனை ஆண்டுகாலமாக தெய்வீக அருளைக் காட்டினாய். தொடர்ந்து கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுவேன். இல்லையென்றால் இதுவும் உன் சித்து விளையாட்டு என்று விட்டு விட்டுப் போகிறேன். எனவே முடிவு செய்வது உன் பொறுப்பு" என்று மனதிற்குள் சொல்லிப் பிரார்த்தனை செய்து கொண்டேன்.
கையில் ஜீவநாடி இருக்கும் பொழுது சில சமயம் அகஸ்தியர் வருவதில்லை. அவரை அழைத்துப் பதில் கேட்க்கும் அளவுக்கு நான் எந்த விதத்திலும் தகுதி பெற்றவனில்லை. இருப்பினும் எதற்காக இப்படி வேண்டினேன் என்பது எனக்குத் தெரியாது. நான் என்ன திருநாவுக்கரசரா? தாள் திறவாய் என்றதும் கோயில் கதவு திறந்து கொள்வதற்கு? என்று பலவிதமான சஞ்சலங்கள், தொலைத்துவிட்ட வெட்கம், ஊரில் பெருமையாகப் பேசமுடியாது போயிற்றே என்ற ஆதங்கம், யாரும் இனி மதிக்க மாட்டார்கள் என்பது மாத்திரமல்ல, "ஏதோ நாடியை வைத்துக் கதை விட்டுக் கொண்டிருந்தான். இப்போ உள்ளதும் போச்சே நொள்ளைக் கண்ணா" என்று கிண்டல் செய்வார்களே என்ற ஆத்திரம்.
இந்த மனப் போராட்டங்கள் வெகுநேரம் நீடித்தது. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தேன். புஷ்கரணியில் போய் ஒரு முழுக்குப் போடுவோம். பின்பு பேஷ்கார் இருந்தால் அவரிடம் அந்த லெட்டரைக் காட்டி பெருமாளைத் தரிசனம் செய்வோம். இதோடு சரி. இனிமேல் சாகிற வரை திருப்பதி பக்கமே தலையைத் திருப்பக்கூடாது என்று முடிவெடுத்தேன்.
எல்லாம் முடிந்த பின்னர் பேஷ்காரைப் பார்க்கப் போனேன். பொதுவாக கடிதத்தைப் படித்துவிட்டு "எத்தனை பேர்" என்று கேட்பார். கடிதத்தில் அதிக நபர்கள் குறிப்பிட்டிருந்தால் எண்ணிக்கையைக் குறைத்து "உள்ளே போ" என்பார்கள். சிலர் வாக்குவாதம் செய்வார். சிலர் கெஞ்சுவார்கள். பின்பு அவர் மனம் இறங்குவார். திருப்பதி பெருமாளே "அனுமதி கொடுத்தது போல் ஒரு சந்தோசம் அவர்களுக்கு ஏற்படும். பேஷ்காரை வாயார வாழ்த்திவிட்டுப் போவார்கள். இது தினமும் நடக்கின்ற நிகழ்வு.
அன்றைக்கு என்னைத்தவிர வேறு யாருமில்லை என்பதால் மெதுவாக பேஷ்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன். என் நல்ல காலம் என்று தான் சொல்ல வேண்டும்.
நான் என்ன நடந்தது என்பதை மெதுவாகச் சொன்னேன். பின்னர் "எதற்காக நான் திருப்பதிக்கு வந்தேனோ அது தான் முடியாமல் போய்விட்டது" என்றேன்.
"இப்போ என்ன செய்யவேண்டும்"
"அந்த பழமையான ஓலைக்கட்டு உங்கள் கையில் கிடைத்தால் எனக்குத் தகவல் சொல்ல முடியுமா?" என்று கேட்டேன்.
"ஆபிசில் புகார் கொடுத்துவிட்டுபோ" கிடைத்தால் சொல்கிறேன் என்றார்.
உரிய இடத்தில் சொல்லிவிட்டதாக எனக்குத் தோன்றியது. பேஷ்காரின் உதவியால் அரை குறை மனதோடு பெருமானைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தேன்.
மீண்டும் ஒரு சபலம்.
ஒரு முறை இப்படிச் சுற்றிப் பார்க்கலாமே. ஒரு வேளை அந்த "மொட்டைத் தலையன்" கிறுக்குத் தனமாக எங்கேயாவது தூக்கி எறிந்திருந்தால் என்று உள்ளுணர்வு தோன்றியது.
ஆனால் கிடைக்கவில்லை.
மன வருத்தப்படுவதா இல்லை எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்வதா என்று தெரியாமல் அங்குள்ள அஹோபில மடத்தில் சென்று தங்கினேன். ஊருக்கு உடனடியாகத் திரும்பவும் மனமில்லை என்பதுதான் உண்மை.
அஹோபில மடத்தின் பொறுப்பாளரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்து நடந்த விஷயத்தைச் சொன்னேன். அவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு "இங்குள்ள லெட்சுமி நரசிம்மப் பெருமாளிடம் மனதார வேண்டிக் கொள்! எப்படியாவது நாளைக்கு உனக்குக் கிடைக்கும்" என்று எனக்கு அருள்வாக்குச் சொன்னார்.
"சரி" என்றேன்.
"இன்னொன்று, உங்க வீட்டுல நடக்கிற திருமணத்தை இங்கே வந்து நடத்தறேன்னு வேண்டிக்கோ" என்று இன்னொரு தடா உத்தரவையும் போட்டார்.
இதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை. காரணம் திருமலையில் திருமணம் நடப்பதாக இருந்தால் மாப்பிள்ளை பெண்ணுக்கு மலர்மாலை சூடக்கூடாது. இரண்டாவது மேள தாளம் கூடாது. சாப்பாடு ஒன்றுக்கு அப்போதே இருபத்தைந்து ரூபாய். இலை மற்றும் முக்கியமானப் பொருட்களை வெளியிலிருந்து மலைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. இதெல்லாம் நினைத்தேன். சிம்ம சொரூபமாக விளங்கும் என் தந்தையை நினைத்தேன். அடிவயிற்றை பகீர் என்றது. மயக்கம் போட்டு விழாத குறைதான்.
அப்போது அஹோபில மடத்து மேலாளரை உடனடியாக பேஷ்கார் வரச் சொன்னதாக செய்திவரவே அஹோபில மேலாளருடன் நானும் சென்றேன்.
சித்தன் அருள் .................. தொடரும்!
மிகவும் அதிசயப்படத்தக்க ஆச்சரியமான பகிர்வுகள்..
ReplyDeleteநிர்ணஜநாய வித்மஹே நிரபாசாய தீமஹி
ReplyDeleteதன்னோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்!
Dear Sri Karthikeyan,
ReplyDeleteadiyen is new to this blog, went through few incidents, all are wonderful. modern scientists cannot believe such miracles through DIVINE LEAF called "JEEVA NADI". pls keep it up. adiyen