​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 1 November 2012

சித்தன் அருள் - 96


அந்த ஊனமுற்றச் சிறுவனுடைய வாழ்க்கையை பற்றித் தெரிந்து கொள்ளும் முன்பு ஒரு விஷயத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தலையாய சித்தர் நமக்காக இறைவனிடம் போராடிப் பெற்றுத் தருவார். இதற்கு பொது ஜனங்களும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்தால் அகத்தியர் வலிமை தெரியும்..

அந்த ஊனமுற்றச் சிறுவனின் கடந்த காலச் சம்பவங்களைக் கோபப்படாமல் அகஸ்தியர் என்னிடம் சொன்ன பொது எதிர்காலத்தில் இவன் மிகப் பெரிய ஞானியாக வருவான் என்று தோன்றிற்று.  ஏனெனில் அவனது கண்களில் கண்ட ஒளி.  அகஸ்தியரின் ஓலைச் சுவடியைப் படிக்கலாமா என்று உரிமையுடன் கேட்ட பாங்கு கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக எனக்குக் கிடைத்த சிறிய அனுபவம் தான் அப்படிப்பட்ட எண்ணம் தோன்றக் காரணம்.

நான் செய்த தவறுக்கு ஆறுமாதம் ஓலைச் சுவடியில் அகஸ்தியர் தோன்றமாட்டார் என்று சத்தியமாக நம்பியிருந்தேன்.  இந்த ஏழைச் சிறுவன் பொருட்டு அகஸ்தியரை மனமுருகி வேண்டியதன் பின், அகஸ்தியர் தன கோபத்தை மறந்து அந்த ஊனமுற்றச் சிறுவனின் கடந்த காலம், எதிர்காலம் பற்றிச் சொன்னபோது பரவாயில்லை, அகஸ்தியரின் கோபத்திலிருந்து தப்பித்துவிட்டேன்.  இனியும் அகஸ்தியரின் நாடியைத் தொடர்ந்து படிக்கலாம் என்று தைரியம்,  நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால்....

இந்த ஊனமுற்றவனின் கதையை முழுமையாகச் சொல்லி முடித்துவிட்டு ஆறுமாத காலம் என்னை நாடி படிக்கவே விட வில்லை என்பதுதான் உண்மை.  "சித்தம் போக்கு - சிவன் போக்கு" என்று அகஸ்தியரைப் பற்றி நினைத்துக் கொள்வதா - இல்லை "விட்டதடா ஆசை விளாம் பழத்தோடு" என்று மேற்கொண்டு அகஸ்தியர் நாடியைப் படிக்காமல் என் வழியைப் பார்த்துக் கொள்வதா என்ற முடிவும் அப்போது எடுக்க முடியாமல் போனது.

இனி.....

இந்த ஊனமுற்றச் சிறுவனின் கடந்த காலத்தைப் பற்றி பார்ப்போம்.

அந்தக் கோடீஸ்வரனின் முதல் மனைவி முதலில் நல்ல மனதோடுதான், தன கணவரின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு இரண்டாவது திருமணத்தை நடத்தி வைத்தார்.

அவளுக்குச் சீக்கிரமே குழந்தை பிறந்தாலும், பிறந்த குழந்தை ஒரு கால் ஊனமாகிக் காணப்பட்டதால் பலரின் துர்போதனைக்கு ஆளாகி, கோடிக் கணக்கான சொத்துக்கள் இந்தக் குழந்தைக்குப் போய் சேரக்கூடாது என்று முடிவு செய்தாள்.  கணவருக்கும் அந்தக் குழந்தையின் தாய்க்கும் தெரியாமல் அடியாட்களை வைத்து ராத்திரியோடு ராத்திரியாக அந்தக் குழந்தையைக் கூவத்தில் தூக்கி ஏறிய ஏற்பாடு செய்தாள்.

சென்னையில் ஓடும் கூவத்தில் தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ ஆனால் சேறும் சகதியும் நிச்சயம் இருக்கும்.  நன்றாக நீச்சல் அடிக்கத் தெரிந்தவர் கூட தப்பித்தவறி அந்தச் சேறும் சகதியும் உள்ள கூவத்தில் விழுந்துவிட்டால் அவர் நீச்சலில் தங்கக் கோப்பை வாங்கியிருந்தாலும் அதோ கதிதான்.

அப்படிப்பட்ட கூவம் நதியின் சேற்றில் அந்த ஊனமுற்றக் குழந்தை ஒரு கருப்புநிறக் கம்பிளியால் சுற்றி வீசப்பட்டது.

அந்தக் குழந்தையின் தாயார் செய்த புண்ணியமோ இல்லை, அந்தக் குழத்தை உயிர்பிழைத்து வாழ வேண்டிய விதியை இறைவன் நிச்சயித்து இருந்ததால் ஏற்பட்ட விளைவோ - கூவம் நதிக்கரையோரம் குடியிருக்கும் ஒரு கூலித்தொழிலாளி கண்ணில் அந்தக் குழந்தை தென்பட்டது.

முட்டியளவு சகதியைத் தாண்டி வெகு வேகமாக அந்தக் குழந்தையை நோக்கிச் செல்லும் முன் சகதிக்குள் கம்பிளியோடு அந்தக் குழந்தை மூழ்கிக் கொண்டிருந்தது.  குழந்தைக்கு மயக்கமருந்து கொடுத்திருந்தது போல் அது அரை குறை உணர்ச்சியோடு கை, கால்களை லேசாக ஆட்டிக்கொண்டிருந்ததே தவிர இன்னும் பத்து நிமிஷத்தில் அந்தச் சகதிக்குள் மூழ்கி இறக்கப் போகிறோம் என்பது அதற்குத் தெரியாது.

ஆனால்.......

தெய்வ கருணையால் கூவநதி கூலித் தொழிலாளியான அவர், விழுந்து வாரி தூக்கி விட்டார், குழந்தை தப்பித்தது.

அதிக வருமானமில்லாமல் கிடைத்த பணத்தைக் கொண்டு மது போதையில் தன வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்த அந்தக் கூலித் தொழிலாளிக்கு அந்தக் குழந்தையின் மீது ஏதேனும் நகையோ - பணமோ இல்லை என்பதால் எதற்காக அந்தக் குழந்தையைக் காப்பாற்றினோம் என்று சட்டென்று வெறுப்பு ஏற்பட்டது.

அவனுடைய வக்கிரபுத்தி மிக வேகமாக வேலை செய்ததால் தனக்கு எந்த ஆதாயமும் கிடைக்காத காரணத்தால் மறுபடியும் அந்தக் குழந்தையைத் தூக்கி வீசியெறிய முயற்ச்சித்தான்.

அப்போது ----

குடிப்பதற்காக அவனைத் துணைக்கு அழைத்துப் போக அவனுடைய "சகலை" அங்கு வந்தான்.

"இப்போ என்ன செய்யணும்ரே?"

"ஒரே பேஜாரா இருக்கப்பா.  இந்தக் குழந்தையை என்ன செய்யணும்னு தெரியல்ல.  ஒரு நகை நட்டு எதுவுமில்லை.  நொண்டிக் குழந்தையா பொறந்துட்டுது.  அதான் தூக்கிக் குப்பையிலே போட்டுடாங்க".

"இத  பாரு.  இதை ஒரு துணியிலே கட்டு.  ஓரத்துல போட்டுட்டு வா.  போய் சரக்கு போட்டுகினு அப்புறமா யோசிக்கலாம்" என்று வந்தவன், அவன் கையை பிடித்து இழுத்தான்.

இவன் மௌனமாக இருந்தான்.

"என்ன நீ?  நான் பேசிக்கினு இருக்கேன்.  நீ கம்னு குந்திகினு இருக்கே?"

"இல்லை இதை எடுத்துட்டு யார் கையிலேயாவது வித்துட்டா என்னனு யோசிக்கிறேன் பா".

"அட, நீ ஒண்ணு.  நல்ல குழந்தையையே இப்போ வாங்க மாட்டேன்கிறாங்க. இந்த நொண்டிக் குழந்தையை யார் வாங்குவா?  அட வாப்பா, அது மாட்டு ஓரத்துல கிடக்கட்டும்" னு சொல்லி, அந்த கூவத் தொழிலாளியின் கையை மட மடவென்று இழுத்துச் சென்றான், வந்தவன்.

சட்டையை கழற்றி தோளில் போட்டுக் கொண்டு தள்ளாடி தள்ளாடி திரும்பி வந்த போது அந்தக் குழந்தையைக் காணவில்லை.

கொத்தவால்சாவடியில் காய்கறியை வாங்கி, பல்லாவரம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த ஒரு காய்கறி வியாபாரி, ரோட்டோரம், அனாதையாகக் கிடந்த அந்தக் குழந்தையைத் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டது, கூவநதி கூலித் தொழிலாளிக்கு இன்று வரை தெரியாது - என்று அந்த ஊனமுற்றச் சிறுவன் கூவத்தில் உயிர்தப்பித்த கதையைச் சொல்லி " இவன் வாழ்க்கை பிற்காலத்தில் ஒரு இலக்கணம் போல் மற்றவர்களுக்கு விளங்கப் போகிறது.  நன்றாக வசதிகளைப் பெறுவான். நிறைய பேர்களுக்கு அன்னதானம் செய்வான்.  வெளிநாட்டிலும் சிலகாலம் வாழ்வான்.  பல் வேறு பொறுப்புகளும் பதவிகளும் இவனைத் தேடி வரும்.  கடைசியில் ஒரு சித்தரைப் போல் அத்தனையும் துறந்து ஆன்மீகத்தில் மிகப் பெரிய மனிதனாகி வாழ்வான்.  இவன் முற்பிறவியில் எனக்குப் பணி புரிந்தவன்" என்று சுருக்கமாக முடித்தார்.

அன்றைக்கு அந்தச் சிறுவன் இருந்த நிலையில் நான் இதைச் சொன்னால் என்னை முட்டாளாக எண்ணி முத்திரை குத்தி விடுவார்கள் அல்லது பைத்தியக்காரன் என்று ஒதுக்கி விடுவார்கள்.

அதனால் எதையும் வெளியே சொல்லாமல் முதன் முறையாக என் வாயை அடக்கிக் கொண்டேன்.  அதே சமயம் எதையும் சொல்லாமல் இருக்ககூடாது அல்லவா? எனவே லேசாகக் கோடிடிட்டுக் காட்டினேன்.

ஆனால் சத்தியமாக யாரும் இந்த வார்த்தையை நம்பவில்லை.

இங்கே இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டு விட்டால் ஒரு நிறைவு ஏற்ப்படும்.

குழந்தையை காணவில்லை என்று பறிகொடுத்த தாயார் தன கணவனிடம் அலற அவர் தன செல்வாக்கைப் பயன்படுத்தி எல்லா இடங்களுக்கும் தகவல் கொடுத்தார்.

போலீஸ், பத்திரிக்கை எல்லாம் தேடின.  வேலை ஆட்கள் இரவு பகல் என்று பாராமல் தேடினர்.  எங்கே தன குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று பயந்து கொண்டிருந்த முதல் மனைவி திருத்தணிக்குச் சென்று முருகப்பெருமானுக்குப் பரிகாரம் செய்யப் போனாள்.

மனசாட்சியும் குத்தியது.  முருகப்பெருமானும் லேசாக அவளுக்குத் தண்டனை கொடுக்க எண்ணினார் போலும்.  படிக்கட்டில் கால் வைத்து ஏறும்பொழுது கால் இடறி கீழே விழுந்தாள்.  எலும்பு நொறுங்கியது.

ஆறுமாத காலம் கட்டிலே வாசம்.  ஆனாலும் தான் செய்த தவறைத் தன கணவனிடம் சொல்லவில்லை.  இந்த மன அழுத்தம் அவளுக்கு "சித்தப்ரம்மை" யாக மாறிவிட்டது.

"நான்தான் அந்தக் குழந்தையைக் கொன்னுட்டேன்" என்று திடீர் திடீரென்று புலம்பினாள்.

பிறந்த குழந்தையின் மீது கொண்டுள்ள அதிகமான பாசம் தான் பெரியம்மாவை சித்தப்ரமையாக மாற்றிவிட்டது.  அவளாவது குழந்தையைக் கொன்று இருப்பதாவது?  அப்படி நினைத்திருந்தால் இரண்டாம் தாரமாக இன்னொரு பெண்ணை இவள் திருமணம் செய்து வைத்திருப்பாளா என்று ஜனங்கள் பலவிதமாகப் பேசினார்கள்.  ஆனாலும் - அவள் கடைசிவரை "சித்தப்ரமை" பிடித்தபடியேதான் காணப்பட்டாள்.

அகஸ்தியர் பிடிவாதம் அளவில்லாதது.  சொன்னபடியே ஆறு மாத காலம் அவர் என்னிடம் பேசவில்லை.  "சித்தர்க்கும் மனிதர்கள் போல்தான் போல் இருக்கிறது .  முன்பெல்லாம் "எந்தன் மைந்தன்" என்று என்னை அழைத்தது இப்பொழுது இல்லை.

"நாடியில் அகஸ்தியர் வரவில்லை என்றதும் - "இனிமேல் இவன்கிட்டே பேசி, பழகி என்ன லாபம்?" என்றெண்ணி நிறைய பேர்கள் என்னிடமிருந்து விலகி விட்டனர்.

இன்னும் சிலரோ "தங்களுக்கு அந்த நாடி கிடைத்துவிடாதா" என்று ஏகப்பட்ட ஆசைகளை வைத்துக் கொண்டு "சும்மா தானே இருக்கிறது நாடி.  அதனை என்னிடம் கொடுத்துவிடு" என்று நேரிடையாக கேட்டனர்.

காண்ட நாடி பார்க்கிற பல நாடி ஜோதிடர்களும் என்னை அணுகி "ஒரு முறை எங்களிடம் அகஸ்தியன் ஜீவ நாடியைக் கொடுங்கள்" என்று நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஆட்களை அனுப்பிக் கேட்டனர்.

"பணம் வேண்டுமானாலும் தந்துவிடுகிறோம்" என்று பலர் பலமுறைக் கேட்டு முயர்ச்சித்ததும் உண்டு.

இதைவிட வயத்தெரிச்சல் ஒன்றும் எங்கள் வீட்டில் நடந்தது.

என் தந்தைக்குக் கொஞ்சம் கூட நாடி படிப்பது பிடிக்கவில்லை.  ஒழுங்காக வேலைக்குச் சென்று நாலு காசு சம்பாதித்துக் குடும்பப் பாரத்தைக் குறைக்காமல் இப்படித் தெருத் தெருவாக "கட்டைத்" தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருகின்றானே என்று கடும்கோபம்.

என் தாய்க்கோ பாதி பயம்.  பாதி நம்பிக்கை.  ஏற்கனவே பலவேறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டு வருகிறோம்.  பையன் செய்வது தவறோ நியாயமோ, ஆனால் ஏதாவது சொல்லித் தெய்வக் குற்றத்திற்கு ஆளானால் அந்தப் பாவம் வேறு பிடிக்கும் என்ற அச்சம்.

நாடியில் இனி அகஸ்தியர் ஆறு மாதத்திற்கு வரமாட்டார் என்று செய்தி வீட்டிற்குத் தெரிந்ததும் என் தந்தைக்குப் படு குஷி.  தாயாரை அழைத்து இருபது ரூபாய் என்ன ஐம்பது ரூபாய் வேணுமானாலும் ஆகட்டும்.  இன்றைக்கு வீட்டில் பாயாசம் வடையோடு செய்து போடு.  ஆனந்தமாக நிம்மதியாகச் சாப்பிடலாம்" என்றார்.

தந்தையின் விருப்பபடியே தாயாரும் செய்தார்.

எப்படியோ நான் "நாடியை" தூக்கிக்கொண்டு தெருத்தெருவாக ஊர் ஊர்ரக்கச் சுற்றாமல், ராகவேந்திரரைத் தரிசனம் செய்தேன், அனுமனைப் பார்த்தேன்னு சொல்லாமல் இருந்தால் போதும்  என்பதுதான் பெற்றோரின் எண்ணமாக இருந்தது.

"ஊருக்கெல்லாம் நாடி படிக்கிறாயே நம்ம குடும்பத்திற்கு ஒரு நாள் நாடி படிக்ககூடாதா" என்று என் தாய் ஒரு நாள் கேட்ட பொழுது, அப்பொழுது அங்கிருந்த என் தந்தை "இவன் என்ன நாடி படிப்பது.  இவன் நாடியைப் பார்க்காமல் விட்டாலே போதும்.  நம் குடும்பம் உருப்படும்.  இவனும் உருப்படுவான்" என்று சட்டென்று பட்டவர்த்தமாகச் சொன்னதிலிருந்து அவர் என் மீது எவ்வளவு கோபம் கொண்டிருந்தார் என்று தெரிந்தது.

பின்னர் அவரே ஒரு சிஷ்யர் போல் முன் அமர்ந்து "நாடியை" கேட்டது ஒரு கதை.

இந்த ஆறு மாதம் நாடி படிக்காமல் இருந்தபோது, ஒரு நாள் இந்த நாடியை திருப்பதி பெருமாளின் பாதத்தில் வைத்துக் கொண்டு வா என்று ஒருநாள் அகத்தியர் உத்தரவிட்டார்.  வேறு எந்த உத்தரவும் வரவில்லை.

திருப்பதி பெருமானின் பாதத்தில் வைப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும்.  முயற்சி செய்து பார்த்தேன்.  முடியவே முடியாது என்று தான் பதில் கிடைத்தது.  பலமான சிபாரிசு கடிதம் இருந்தால் இது நடக்கும் என்றார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிடித்து அவர் கடிதம் கொடுத்தால் ஒருவேளை திருமலையில் அகஸ்தியரின் நாடியை வைத்து விடலாம் என்று யாரோ சொன்னதால், ஒருவரிடம் விஷயத்தை என் நண்பர் மூலம் சொல்லிக் கேட்டேன்.  அவரோ கடிதம் தருகிறேன்.  மற்றது உன் பொறுப்பு என்றார்.

கடிதத்தை வாங்கிக் கொண்டு திருமலைக்கு நான் சென்றபோதுதான் சென்னையில் அந்த ஊனமுற்ற சிறுவன் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது.  அதே விமானத்தில் பயணம் செய்த அந்தக் கொலைகாரர்கள் பிடிபட்ட செய்தியும் கிடைத்தது.  அதே சமயம் யாரோ ஒருவர் (!) திருப்பதி வெளி பிரகாரத்தில் நிற்கும் பொது  என் கையிலிருந்த நாடியைப் பிடுங்கிக் கொண்டு ஓடினார்.  நான் அதிர்ந்து போனேன்!

சித்தன் அருள்............. தொடரும்!

No comments:

Post a Comment