​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 17 November 2012

மஹா சஷ்டி - அவர்கள் வாக்கு - 4

முருகப்பெருமானை நம்பி வணங்கி வந்தோர் கை விடப்படார்  அவரை அடைந்து உயர் நிலை பெற்று அழியாத புகழை அடைந்த ஒரு சிலரை அறிவோம்.

அகத்தியர்: முருகன் அருள்பெற்ற அடியார்களின்  முதன்மையானவராகப் போற்றப்படுபவர் அகத்தியர். செந்தமிழ்நாடான இப்பகுதியை அகத்தியமுனிவரே முருகனிடம் பெற்று பாண்டிய மன்னனுக்கு கொடுத்ததாக திருநெல்வேலி தலபுராணம் கூறுகிறது. பொதிகை மலையில் முருகனிடம் உபதேசம் பெற்று அகத்தியம் என்னும் இலக்கணத்தை எழுதியதாகக் கூறுவர்.

நக்கீரர்: கடைச்சங்கப்புலவராய் மதுரைநகரில் இருந்து தமிழை வளர்த்த புலவர் நக்கீரர். முருகப்பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். திருப்பரங்குன்றத்தில் பூதங்களிடம் சிக்கிக் குகையில் கிடந்த போது, முருகனே காப்பாற்றியதாகக் கூறுவர். அப்போது முருகன் மீது பாடிய பாடலே திருமுருகாற்றுப்படையாகும்.

அவ்வையார்: முருகனை வழிபட்ட பெண் அடியார்களில் அவ்வையார் குறிப்பிடத்தக்கவர். பசு மேய்க்கும் பாலகனாக வந்த முருகப்பெருமான், இவரிடம்""பாட்டி, சுட்டபழம்வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?'' என்று கேட்டு ஞானத்தை அருளினார் என்பர். இவர் பாடிய இனியது, புதியது, அரியது, பெரியது ஆகிய பாடல்கள் நம் சிந்தைக்கு விருந்தளிப்பவையாகும்.

குமரகுருபரர்: திருச்செந்தூர் அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த இவர், ஐந்து வயதுவரை பேசும் திறனற்றவராய் இருந்தார். முருகனருளால் பேசும் ஆற்றல் பெற்றார். கந்தர் கலிவெண்பா என்னும் பாடலைப் பாடிஅனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் இவர் எழுதிய நூல்களில் சிறப்பானதாகத் திகழ்கிறது. காசியில் மடம் ஒன்றை அமைத்தார். 

தேவராய சுவாமிகள்: பட்டி தொட்டிகளில் எல்லாம் முருகனுக்குரிய பாராயண நூலாகத் திகழும் கந்தசஷ்டிக் கவசத்தைப் பாடிய அருளாளர் தேவராய சுவாமிகள் ஆவார். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களை சூட்சுமமாகக் கொண்ட நூல் இதுவாகும். படிப்போரைக் கவசம் போல் காப்பதில் ஈடுஇணையற்ற நூல் இதுவாகும். இவர் சென்னிமலை என்னும் ஊரில் வாழ்ந்தவர் என்பது இவரது பாடல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

ராமலிங்க வள்ளலார்: "அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை!' என்று கடவுளை கருணைவடிவில் கண்டு போற்றியவர் வள்ளலார். சிறுவனாக இருக்கும்போது கண்ணாடியின் முன்னர் தியானம் செய்யும்போது மயில்வாகனத்தில் முருகப்பெருமான் இவருக்கு காட்சி அளித்தார் என்பர். கந்தகோட்டத்தில் வளர்ந்தோங்கும் கந்தப்பெருமானின் இவர் கேட்கும் வரங்கள் நம் ஒவ்வொருவருக்கும் தேவையானவை என்றால் மிகையில்லை.

பாம்பன் சுவாமிகள்: யாழ்ப்பாணத்தில் சைவமரபில் தோன்றியவர் பாம்பன் சுவாமிகள். குமரகுருதாசசுவாமிகள் என்னும் பெயர் கொண்டிருந்த இவர், ராமேஸ்வரம் அருகிலுள்ள பாம்பனில் வாழ்ந்ததால் "பாம்பன் சுவாமிகள்' என்று அழைக்கப்பட்டார்.முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள் பாடியுள்ளார். பல அற்புதங்களைச் செய்தார். இவர் பாடிய சண்முக கவசம் பாராயணத்திற்கு மிகவும் உகந்ததாகும்.

No comments:

Post a Comment