​அகத்தியர்அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 15 November 2012

சித்தன் அருள் - 99 - நரசிம்மர் தரிசனம்!


முன்பெல்லாம் இல்லாத அளவுக்கு இப்போது அகஸ்தியர் நாடியில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்கதை போல் வந்து கொண்டிருந்தது என்பது உண்மை.

என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள தவறியதால் அகஸ்தியர் எனக்குத் தண்டனை கொடுப்பது போல் நாடி படிக்கத் தடை போட்டதும், பின்னர் அவர் உத்தரவுபடி திருமலைக்குச் சென்று நாடியைத் தொலைத்து அவதிப்பட்டதும் கொடுமைதான்.

'பீசாகி போகும் மின்சார விளக்கு போல" இனி அவரை விட்டு நான் விலகப் போகிறேன் என்ற உள்ளுணர்வு எனக்கு ஏற்பட்டது.  இதற்கும் காரணம் உண்டு.  திருமலையில், கோயில் சந்நிதானத்தில் ஓலைச் சுவடியைப் படிக்கும் வாய்ப்பினால் ஏற்பட்ட மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.  "போகர்" சித்தர் வந்ததை அகஸ்தியர் சொல்லித்தான் எனக்கே தெரிய வந்தது.  இந்த ஆச்சரியத்தை மென்று முழுங்குவதர்க்குள்,  அஹோபில மேலாளர் என்னையும் நம்பவில்லை.  நான் சொன்ன நாடி செய்தியையும் நம்பவில்லை என்பது வெகு நேரத்திற்குப் பின்பு தான் எனக்குத் தெரியவந்தது. இது எனக்கு ஒரு பெரும் குறை தான்.

பொதுவாக எல்லோருக்கும் நல்லவனாக யாரும் இருக்க முடியாது என்பதைப் போல, எல்லோரும் நாடியை நம்ப வேண்டும் என்று நான் எதிர்பார்க்க முடியாது.

"நான் நம்பறேனோ இல்லையோ லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் மூலம் உனக்கு நாடி கிடைத்துவிட்டது.  அவருக்கு செய்ய வேண்டிய பிரார்த்தனைகளை மறக்காமல் செய்திடு" என்று அஹோபில மேலாளர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியது எனக்கு என்னவோ போலிருந்தது.  பல்லைக் கடித்துக்கொண்டேன்.

" இன்று  இரவு  மடத்தில் தங்குகிறேன்.  நாளைக் காலையில் ஊருக்குக் கிளம்புகிறேன்" என்று சொன்னதும் "சரி" என்றார்.  "பின் ஒரு விஷயம்" என்றார்.  என்ன பீடிகை போடப் போகிறாரோ என்று பயந்தேன்.

"இன்னிக்கு நிறைய கூட்டம் இருக்கு.  படுக்கறப்போ கை கால் அலம்பிட்டு சுத்தமா படுத்துக்கோ.  "ரூம்ல" இடமில்லை.  மடத்தின் பிரகாரத்திலே படுத்துக்கோ.  தப்பித்தவறி கூட பிரகாரத்தின் நடுவிலே உருண்டு, புரண்டு வந்திடாதே" என்றார்.

என்னையும் அறியாமல் தூக்கத்தில் புரண்டு படுத்தால் ராத்திரியில் யாராவது வந்தால் அவர்கள் கால் பட்டுவிடும் என்று நினைத்துத்தான் சொல்வதாக முதலில் தோன்றியது.

"நான் எதற்காகச் சொல்றேன்ன ராத்திரி பன்னிரண்டு மணிக்கு லக்ஷ்மி நரசிம்மர், இந்த பிரகாரத்தை தினமும் உலா வருவார்.  குறுக்கே யாரும் இருக்கக்கூடாது.  அதனால் தான் சொன்னேன்."

இதைக் கேட்டு நான் மனதளவில் ஆச்சரியப்பட்டேன்.  இவர் சொல்வது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள ஆவல்.  அகஸ்தியரிடம் கேட்டால் பதில் கிடைக்கும்.  ஆனால் அவர் எங்கு சொல்லப் போகிறார் என்று அவநம்பிக்கை மற்றவர்களைப் போல் எனக்கும் வந்தது.

"சரி சரி!" என்று தலையை ஆட்டிக்கொண்டு அஹோபில மடத்திற்குத் திரும்பினேன்.

ராத்திரி அங்கு ஒரே கொசுக்கடி.  மின்விசிறி கிடையாது.  யாரோ எப்போதோ பயன்படுத்திய பழைய ஓலை விசிறியை எடுத்து "உஷ்" "உஷ்" என்று பெரு மூச்சு விட்டபடி வீசிக் கொண்டேன்.  என்னதான் சுத்தமாக கை, கால் அலம்பிக் கொண்டு படுத்தாலும், புழுக்கம் காரணமாக வியர்வை கொட்டியது.

இப்படி சுத்தம் இல்லாமல் அதுவும் அகஸ்தியர் நாடியைத் தலைமாட்டில் வைத்துக் கொண்டு லக்ஷ்மி நரசிம்ஹரின் சந்நிதியில் "தேவுடு" காக்கிரோமே.  இது தேவையா? பேசாமல் ராத்திரியோடு ராத்திரியாக நடந்தோ அல்லது ஏதாவது பஸ்ஸைப் பிடித்தோ கீழ் திருப்பதிக்கே போய்ச் சேர்ந்திருக்கலாம்.  தப்பு பண்ணி விட்டோமோ? என்று நினைத்துக்கொண்டேன்.

இப்படி பலவிதத்தில் மனது குழம்பியதால் தூக்கமில்லாமல் தவித்தேன்.  நரசிம்ஹர் சுவாமி வருவார்.  அந்தக் காட்ச்சியைப் பார்க்க முடியுமா?  தனியா வருவாரா லக்ஷ்மியோடு வருவாரா என்று நினைத்த எனக்கு, முன்பு பல அற்புதக் காட்ச்சிகளைக் காட்டிய அகஸ்தியர், லக்ஷ்மியோடு கூடிய நரசிம்மரையும் காட்டாமலா போய் விடுவார் என்று அசட்டுத்தனமான நம்பிக்கை வந்தது.

ஒரு வேளை  என்னைப் பயமுறுத்துவதற்காக அஹோபில மேலாளர் சும்மா வாச்சும் இப்படிச் சொல்லியிருப்பாரோ என்ற சந்தேகமும் வந்தது.  எந்த வித வசதியும் அதிகமாக இல்லாத, பலவித சட்டதிட்டங்களுக்குட்பட்ட இந்த மடத்தில் எப்படி எனது தங்கைகளுக்குத் திருமணம் செய்யப் போகிறேன் என்ற பயமும் ஏற்பட்டது.

லக்ஷ்மி நரசிம்மர் சந்நிதியில் திருமணம் என்பது விசேஷம் தான் என்றாலும் காணாமல் போன அகஸ்தியர் நாடி கிடைத்ததற்காக என் வீட்டுத் திருமணத்தை இங்கே தான் நடத்தணம்னு அஹோபில மேலாளர் அன்புக் கட்டளை இட்டதை நினைத்துக் கொஞ்ச நஞ்ச தூக்கமும் போயிற்று.  ஒரு வேளை அப்படிச் செய்யவில்லை என்றால் பகவான் லக்ஷ்மி நரசிம்மர் கூட மன்னித்து விடுவார்.  ஆனால் மடத்து மேலாளர் லக்ஷ்மியாக அல்லது நரசிம்மராக அவதாரம் எடுத்து விடுவார் போலிருந்தது.

இரவு நேரமாக அமைதி அதிகமாயிற்று.  திருமலையின் வெளி வீதியில் யாரோ ஒருவர் தெலுங்கில் வேங்கடவனைப் பற்றிக் கதா காலட்சேபம் செய்து கொண்டிருந்தது லேசாகக் கேட்டது.

பதினொன்றரை மணியைத் தாண்டியதும் எனக்கு ஒரு துடிப்பு.  சட்டென்று அகஸ்தியர் நாடியை எடுத்து அவரிடம் பிரார்த்தனை செய்து பிரித்துப் பார்த்தேன்.

"அந்தச் சந்நிதானத்தில் ராத்திரி நேரத்தில் இரண்டாம் ஜாம இறுதியில் மூன்றாவது ஜாம ஆரம்பத்தில் நரசிம்மர் ஒய்யாரமாக பலமுறை பிரகார வலம் வருவது உண்மை.  அன்னவரின் ஆனந்தமான தரிசனத்திற்காக அகத்தியனும் இன்று காத்துக் கிடக்கிறேன்.  ஆனால் பகவான் உன் கண்ணில் தென்படமாட்டார்" என்று சட்டென்று முடித்துக்கொண்டார்.

"பரவயில்லையே.  இதாவது அகஸ்தியர் சொன்னாரே" என்ற சந்தோஷம்.  அதே சமயம் பகவான், பிரகாரத்தில் உலாவருவதைக் காற்றினாலோ அல்லது வாசனயினாலோ உணர முடியுமா என்று நினைத்தேன்.  இது பற்றி என் வேண்டுகோளை அகஸ்தியரிடம் வைத்த போது " எங்கு தன அவதாரத்தைப் பகவான் எடுத்தானோ அங்கு சென்றால் அவனை உணர முடியும்" என்று பதில் வந்தது.  இது எனக்குச் சந்தோஷத்தைத் தந்தது.

அப்படியென்றால் நான் அதிஷ்டசாலிதான்.  ஏனெனில் அஹோபிலம் ஹிரண்யனைக் கொன்ற இடத்தில் நரசிம்மரைக் காணப் போகிறோம் அல்லது வாசனையால் சூட்சுமத்தால் உணரப் போகிறோம் என்பது ஒன்று. இன்னொன்று, என் மீது பலவாறு கோபப்பட்டுப் பேச மறுத்த அகஸ்தியர் இப்பொழுது பேச ஆரம்பித்திருக்கிறார் என்பது.

இதை விட முக்கியமானது.  அன்றிரவே நான் திருமலையிலிருந்து ஊருக்குப் புறப்பட்டிருந்தால் இத்தகைய அரிய வாய்ப்பு எனக்கு அஹோபில மடத்தில் ஏற்பட்டிருக்காது.  எனவே ஒன்றே ஒன்று மட்டும் மிக நன்றாகத் தெரிந்தது.

நமக்குத் தெரியாமல் தினமும் ஏதோ ஒன்று நடக்கிறது.  எது நடந்தாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கிறது.  அது நமது கண்ணில் தென்படுவதில்லை.  எல்லாம் நடந்து முடிந்த பின்புதான் நம் அறிவுக்குப் புரிகிறது.  அப்படிப்பட்ட சம்பவங்களில் இதுவும் ஒன்று என எண்ணிக்கொண்டேன்.

மணி பன்னிரெண்டைத் தாண்டியது.

மனது துடி துடிக்கக் கை கூப்பி லக்ஷ்மி நரசிம்மரையே மனப்பூர்வமாகப் பயந்து பயந்து த்யானித்துக் கொண்டிருந்தேன்.  கண்ணை திறக்கவில்லை.

"பகவானே உன்னைத் தரிசிக்க அஹோபிலம் வருகிறேன்.  அதே சமயம் என் தலைவன் அகஸ்தியனுக்கு இன்று இங்கு காட்சி கொடுக்கும் நீ, அருள் கூர்ந்து எனக்கு உன் வாசனையாவது உணர அருள் புரியமாடாயா?  நான் உனது சிஷ்யன்.  உன்னை ஆராதித்து வரும் மடத்து சிஷ்யன்.  இது வரையில் முறைப்படி உன்னைத் தினமும் தொழுதுவரும் பக்தனாக இல்லாவிட்டாலும் எனக்குக் கருணைக் கொண்டு, இந்த அறிய வாய்ப்பை நல்லபடியாகக் காட்டுங்கள்" என்று தான் பிரார்த்தனை செய்தேன்.

சில வினாடிகள் கழிந்தன.

திடீரென்று காற்று ஒன்று மெதுவாக நடந்து போனது போன்ற உணர்வு.  சந்தனமணம், துளசி மனம் இந்த இரண்டோடு பச்சைக் கற்பூர பெருமாள் தீர்த்தம் ஒன்று ஒரு துளி என் நாவில் விழுந்தது போல் உணர்வு.  யாரோ அமைதியாக அந்தச் சிறு பிரகாரத்தை அழுத்தமாக நடந்து போவது போன்ற உணர்வு.  பன்னீர் மணம், பவளமல்லியின் வாசனை, மகிழம்பூவின் தூக்கல் தெரிந்தது.  பிறகு ஒன்றுமே இல்லை.  மெய் சிலிர்த்துப் போனேன்.  சொல்ல வார்த்தைகளே இல்லை!  கண்ணைத் திறந்து பார்த்தேன்.  அந்த இருட்டில் என் கண்ணில் ஒன்றும் படவே இல்லை.  ஆனால் புஷ்பங்களின் நறுமணம் மட்டும் எப்படியோ அந்த இடத்தை வியாபித்திருந்தது.

புழுக்கமாக இருந்த அந்த மடத்திற்குள் முழுமையான காற்று வாசனை எப்படி வந்தது?

அப்படியானால் நரசிம்மர் உலா வந்து சென்றுவிட்டாரா?  பலமுறை அங்கு உலா வருவதாக அகஸ்தியர் சொன்னாரே.அப்படியென்றால் மறுபடியும் தரிசனம் கிடைக்குமா? என்று ஒரு துடி துடிப்பு சட்டென்று ஏற்பட்டது.

எனக்கு இது கிடைத்ததே பெரிசு.  ஆனாலும் அல்பத்தனம் இருக்கத்தானே செய்யும்?  மறுபடியும் கண்ணை மூடி கொண்டு நரசிம்மரைப் பிரார்த்தனை செய்தேன்.  ஆனால் இந்த அரிய காட்ச்சியோ நறுமணமோ மறுபடியும் தெரியவில்லை.  அரை மணி நேரம் கழிந்தது.

என் மடியில் வைத்திருந்த அகஸ்தியர் நாடியைப் பிரித்துப் பார்த்தேன்.  "அகஸ்தியனை மடியில் வைத்துப் ப்ர்ரர்த்தனை செய்ததால் நரசிம்மர் உனக்கு வாசனையால் உணர வைத்தார்.  மறுபடியும் உனக்கு நரசிம்மர் அருள் வேண்டுமானால் அவர் அவதாரம் எடுத்த அஹோபிலம் செல்க.  இது அகஸ்தியனுக்குக் திருமால் கொடுத்த தரிசனம்.  லட்சத்தில் ஒன்று மட்டும் உனக்கு வாசனையோடு கிடைத்தது.  அதுவும் நீ எந்தன் மைந்தன் என்பதால்" என்று சொல்லி முடித்தார்.

அவ்வளவு பெரிய பாக்கியசாலியா என்று பெருமைப் பட்டுக் கொண்டேன்.  அடுத்த கால் மணி நேரத்தில் தன அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அஹோபில மேலாளர், கலைந்த குடுமியோடும், அவிழ்ந்து தொங்கி கொண்டிருந்த பஞ்சகச்ச வேஷ்டியோடும் பரபரப்பாக என்னைத் தேடி வந்தார்.

எதற்காக இப்படி வருகிறார் என்று நான் எண்ணி முடிக்கும் முன்பே, "உங்ககிட்ட இருக்கிற நாடியைப் பத்தி நான் தப்பா நெனச்சுட்டேன்.  அதை நாளைக்கு காலையிலே நரசிம்ஹர் சன்னதியிலே வச்சு அர்ச்சனை பண்ணித்தரேன்.  அப்புறம் அதை எடுத்துண்டு போ" என்றார்.  இதற்கு என்ன காரணம் என்பது எனக்கு மறுநாள் காலையில் விடை கிடைத்தது.  அது என்னைப் பிரமிக்கவும் வைத்தது.

சித்தன் அருள் ............. தொடரும்!

No comments:

Post a Comment